Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.

புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.

அரசாங்கத்திற்கு சொந்தமான தபால் திணைக்களம் எங்களைத் தவிர சகல இலங்கை மக்களுக்கும் அவர்களது விலாசத்திற்கு கடிதங்களைக் கையளிக்கின்றன. தமக்குரிய வீட்டில் இருந்தாலும், வாடகை வீட்டில் குடியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் விலாசம் உண்டு. தபால் திணைக்களம் அந்த ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயருக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும் அவர்களதுகைகளிலேயே ஒப்படைக்கின்றது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்கு விலாசம் இல்லை. ஆகவே, எமது பெயருக்கு வரும் கடிதங்கள் தோட்ட நிர்வாகியின் மூலம் அவரது விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

விலாசமும் கிடையாது, இலங்கையில் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் குறைந்தபட்ச சிவில் உரிமைகளும் கூட தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்குக் கிடையாது. எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அந்த உரிமைகளில் எதையும் எங்களுக்கு வழங்காதது மாத்திரமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் முழுமையான சிவில் உரிமைகளை இலங்கை அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவுமில்லை.

ஆகவே, துன்பப்பட்டது போதும். இது, எமது உரிமைகளுக்காக போராட வேண்டிய காலம். தனித் தனியாக அல்ல சேர்ந்து போராட வேண்டும். அதற்காக தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையத்தோடு இணையுங்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியும் வீடும் மாதாந்த சம்பளமும் வென்றெடுக்கப் போராடுவோம்! 

தோட்டத் தொழிலாளர்களுக்கான சிவில் உரிமைகளை வழங்கு! 

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர மாதச் சம்பளத்தை வழங்கு!

தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!

அன்புத் தோழரே, தோழியரே,

சுகாதார நல உதவியாளர், பணிவிடையாளர், சிறு சேவைகள் நிர்வாகி என்ற ரீதியில் எமது சேவைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான எம் அனைவரினதும் வாழ்வு ஒரேவிதமாகத்தான் கழிகின்றது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை. இனிய கனவுகளுடன் நாம் பணி செய்ய வந்தாலும், கனவுகளுடனேயே முதுமையடைந்து ஓய்வுபெறும் வரை வாழ்வில் நிம்மதியடைந்த ஒருவரை காண முடியாது. எதிர்வரும் வருடங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும்.

இந்த வாழ்க்கை தானாகவே மாறிவிடுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? காலம் கடத்திக் கொண்டிருந்தால் இந்த நிலையும் இல்லாமலாகி மோசமான நிலை உருவாகிவிடும். அப்படியானால், தற்போதைய வாழ்க்கை நிலையை மாற்றுவதற்காக போராடத்தான் வேண்டும். கடந்த வரலாற்றில் எந்தவொரு வெற்றியையும் போராடித்தான் பெற்றுள்ளோம். ஆட்சியாளர்களின் கருணையால் கோரிக்கைகள் கிடைக்கப் போவதில்லை. அதனை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். தனித்தனியாகப் போராடுவதற்குப் பதிலாக சேர்ந்து போராடுவோம். அதேபோன்று அந்த வரலாற்றில் நடந்த தவறுகளையும், காட்டிக் கொடுப்புகளையும் நாம் அறிந்திட வேண்டியுள்ளது. அந்த நிலைமையை உணர்ந்து எமது வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய பயணத்தை தொடங்குவோம்.

அதற்காக நாம் கையாளக்கூடிய பல வழிமுறைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு தொழிற் சங்கத்துடனாவது செயற்பட்டு பொது தொழிலாளர் அமைப்பொன்றில் நாம் செயற்பட வேண்டும். அது மட்டுமல்ல, தனித் தனியாக போராடுவதனால் நாம் பிளவுபடுவோமேயன்றி வெற்றி பெற முடியாதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சகல தொழிற் சங்கங்களும், சகல அலுவலர்களும் ஒன்றிணைந்து போராடுமாறு நாம் வேண்டுகின்றோம். அதற்காக எமது தொழிற்சங்கத்தின் தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு நாம் தயாராக இருப்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். 

ஆகவே, அதற்காக எமது புதிய அமைப்போடு இணையுமாறு வேண்டுகின்றோம். அதனூடாக எடுக்கப்படும் பொது நடவடிக்கைகளுடன் இணையுமாறு வேண்டுகின்றோம். அதற்காக உங்களை அழைக்கின்றோம்.

அமைப்பாக ஒன்றுபடுவோம்! எழுந்து நிற்போம்! வெற்றி பெறுவோம்!

தோழமையுடன், 

அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் - தொடர்பாளர்- டொக்டர் ஆர்.எம்.டப்.ரணசிங்க- 0718046175

 

உயரும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவின்படி ஊழியர் சம்பளத்தை உடனே உயர்த்து!

மேலதிக வேலையை ரேட் முறையில் வழங்கு!

சகல பதிலீடான மற்றும் சமயாசமய சுகாதார ஊழியர்களையும் ஓய்வூதியத்தடன் உடனே நிரந்தரமாக்கு!

ஓய்வூதியத்தில் கை வைக்காதே – பங்களிப்பு ஓய்வூதிய ஏமாற்று வேண்டாம்!

சகல சுகாதார ஊழியர்களினதும் வேலை நாளை 6 மணித்தியாலங்களாக்கு!

சகல சுகாதார ஊழியர்களுக்கும் 5 நாள் வாரத்தை பெற்றுக்கொடு!

வைத்தியசாலை சேவைகள் விற்பனையை நிறுத்து!

   

----- அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம்

இலண்டன் இலங்கைத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட இலங்கையின் 70வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது, இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிராக, இலங்கையின் சுதந்திரதினம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கறுப்புதினம் என்றும், தமிழீழம் எங்கள் தேசம், பிரபாகரன் எங்கள் தலைவர் என்றும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஒன்றினை இலண்டன் புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடிகளையும் பிரபாகரனின் உருவப்படம் கொண்ட பதாகைகளையும் தாங்கிய வண்ணம் நடாத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலண்டன் இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான பிரியங்க பர்னான்டோ தூதரக வளாகத்தின் முன்னால் கூடியிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என்பதாக சைகை காட்டிச் சென்றது மீண்டும் தொடர்ந்து வந்த நாட்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்களை உருவாக்கியிருந்தது.

இலங்கையின் «நல்லாட்சி» அரசு காணாமலாக்கப்பட்டோர் பற்றியோ, அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை பற்றியோ, கேப்பாப்புலவு போன்ற இடங்களில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட குடிமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது பற்றியோ எழுந்த உள்ளுர் மக்களின் போராட்டங்களுக்கு உரியமுறையில் என்றும் செவிசாய்க்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, 

தமிழீழக் கொடியும் பிரபாகரனின் உருவப் படமும் காற்றிலாட ஒரு புறத்தாரும், இலங்கையின் சுதந்திரதினத்தில் இலங்கையரசின் தேசியக் கொடியின் கீழ் நின்று இராணுவப் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பர்னான்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என சைகை செய்ததன் மூலம், ஒடுக்குமுறை அரசு என மறுபுறத்தினரும் நடந்து கொண்டமை ஊடகங்களுக்கு இனவாத செய்தியாக மட்டுமல்ல அதன் மூலம் சிங்கள, தமிழ் இனவாத அரசியல் சக்திகளுக்கும் தீனிபோட்டு உருவேற்றியிருந்தது.

இந்தக் குறிப்பிட்ட தூதரக பாதுகாப்பு இராணுவ அதிகாரியின் செயலைக் கண்டித்து தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து நலிந்த குரலாயிருந்தாலும் உறுதியான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. ஆனால் அவைகளை என்றும் இனவாதச் சகதி ஊடகங்கள் பிரபலப்படுத்துவதில்லை, முன்னிலைப்படுத்துவதில்லை.

இனவாத மற்றும் சாதியவாத(சில சந்தர்ப்பங்களில் மதவாத) சக்திகள் தம்மை வலுப்படுத்தும் களமாக நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சித் தேர்தல்- 2018 வடக்கு -கிழக்கில் அமைந்திருந்தது.  வேட்பாளர்கள் தெரிவு தொடக்கம், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் யாருக்கு அதிகாரங்களை - பதவிகளை வழங்குவது போன்ற விடயங்களில் இனவாத- சாதியவாத "தகமைகளே"  அடிப்படையானiவாயக கொள்ளப்பட்டதென்பது வெளிப்படையான விடயமாக விளங்கியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தாம் தான் நேரடிப் போட்டியாளர்கள் என எல்லாக் கட்சிகளும் அறிவித்துக் கொண்டாலும், பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திரகுமார் மற்றும் குதிரை கஜேந்திரன்  தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசு கட்சியே(தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இந்தத் தேர்தலில் அந்தத் தகமையைக் கொண்டிருந்தது. புலிகளுக்குப் பின்னான அரசியற் தளத்தில் தம்மை "ஏகப்பிரதிநிதிகளாக" அறிவித்துக் கொண்ட- குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது சொந்த முன்னணியாகப் பாவிக்கும் தமிழரசுக் கட்சியை, அகில இலங்கை தமிழ் காங்கிரசு(அ.இ.த.கா) தமிழ் தேசிய மக்கள் முன்னணி - சயிக்கிள்காரர்கள் அனைத்துவிதமான வாதங்களையும் முன்வைத்துத் தோய்த்துக் காய விட்டார்கள். துரோகிப்பட்டங்கள் சர்வ சாதரணமாக அ.இ.த.கா மேடைகளில் வாரி வழங்கப்பட்டது. சுமந்திரன் தமிழ் தேசிய இனத்தின் தலைமைத் துரோகியாக முன்னிறுத்தப்பட்டார். மாவை சேனாதிராசா மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுயதேவைக்கு பாவிப்பவராகவும், மகனை அரசியலில் இணைத்ததன் மூலம் வாரிசு அரசியலை முன்னெடுப்பவராகவும் முத்திரை குத்தப்பட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட தாம் அதிதீவிர தேசியவாத சக்திகள் என நிரூபிப்பதற்காக- இந்திய சீமானின் பேச்சுமுறையை கொப்பி பண்ணி பேசினார்கள். "தமிழரின் பாரம்பரியம்".... "தமிழர் உலகத்தை கட்டியாண்ட திறமை" பற்றிய பேச்சுகளும் ..... மிருகத்தின் வாரிசுகள் சிங்களவர்கள், சிங்களர்கள் தமிழர் நிலத்தைக் கொள்ளையடிக்கின்றனர், யாழ்ப்பாணத்தின் வளங்கள்- செல்வங்கள் சிங்கள வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றது, முஸ்லீம்கள் துரோகிகள், முஸ்லீம்கள் கிழக்கில் தமிழ்த்தேசியத்தின் முக்கிய எதிரிகள் போன்ற இனவாத அர்ச்சனைகளும் பரவலாக சயிக்கிள் காரர்களின் மேடைகளில் தெறித்தது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை முன்னிலை சோஷலிஸக்கட்சி 11.02.2018 அன்று நடத்தியது. இதன்போது அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, இந்திரானந்த சில்வா மற்றும் புபுது ஜயகொட ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் முடிவுகள் சம்பந்தமாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சார்பில் அதன் கல்விச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம்:

சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. என்றாலும் அந்த உள்ளுராட்சி சபைகளில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார் என்பது குறித்து தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி 42 வீத வாக்குகள் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பது தெரிகின்றது.

ரணில்-மைத்திரியின் கொள்கைகளின் தோல்வி

2015ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை நிராகரித்து வாக்களித்த மக்கள் ரணில் - மைத்திரி கூட்டணியிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள். இப்போது இந்த கூட்டரசாங்கம் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போவதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை மிகப் பாரதூரமான நிலைமையாகவே நாம் காண்கிறோம். 2015ல் மஹிந்த ராஜபக்ஷவை படுதோல்வியடையச் செய்த மக்கள்தான் தற்போதைய அரசாங்கத்தையும் அதிகாரத்திற்கு கொண்டுவர வாக்களித்தார்கள். நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அந்த அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. மூன்று இளைஞர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ரத்துபஸ்வல மக்களின் போராட்டம், ரொஷான் சானக என்ற தொழிலாளர்- தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய தனியார்துறை தொழிலாளர்களின் போராட்டம், சிலாபத்தில் அந்தோனி என்ற மீனவத் தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவ மக்களின் போராட்டம், சானக மற்றும் சிசித ஆகிய இரு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட கல்வி உரிமைகளை பாதுகாக்கும் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டம் ஆகியவற்றை ராஜபக்ஷ அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கியதை நீங்கள் அறிவீர்கள்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற தினமாக 1948 பெப்ரவரி 4ம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்தாகக் கூறப்படும் அந்த சுதந்திரம் இந்த பெப். 4ம் திகதி 70 வருடங்களை நிறைவு செய்கின்றது. அன்றிலிருந்து கடந்த ஒவ்வொரு வருடத்திலும் இதனை பெருமையுடன் நினைவு கூர அரசாங்கம் தவறவில்லை. இம்முறையும் பூரண அரச அனுசரணையுடன் சுதந்திரத்தை நினைவு கூர அரசாங்கம் தயாராகி வருகின்றது. மறுபுறம், இலங்கையானது ஜனநாயக நாடென்ற ரீதியில் குடிமகனுக்குரிய ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாகவும் பரவலாக பேசப்படுகின்றது. மனித உரிமைகள் சம்பந்தமாக நிறைவேற்றிக் கொண்ட பிரகடனங்களும் அவற்றில் அடங்குகின்றன. பேசும் மொழி, வழிபடும் மதம், ஆண் பெண்  என்ற ரீதியில் பாகுபாடு காட்டமாட்டாதென அரசாங்கம் உறுதி செய்துள்ளது. சட்டப் புத்தகத்தில் எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஏனைய குடிமக்கள் நடைமுறையில் அனுபவிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் கூட பறிக்கப்பட்ட மக்கள் மலையகத்தில் வாழ்கிறார்கள். இது விடயம் பெரும்பாலானோரின் கவனத்திற்கு வருவதில்லை என்பதோடு அநேகமானோருக்கு இந்த விடயம் தெரியாது.

மலையகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத, இலங்கையின் சனத்தொகையில் தோட்டத்தை அண்டி வாழும் சுமார் 10 இலட்சம் மக்கள் 145 சதுர அடிக்கும் குறைந்த வரிசை வீடுகளின் வாழ்கிறார்கள். இலங்கை மண்ணில் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட உரிமையில்லாத அவர்களுக்கு தமக்கான வீடோ, கடிதங்கள் நேரடியாகக் கிடைக்கக்கூடிய விலாசமோ கிடையாது. பெயரளவில் பிரஜாவுரிமை கிடைத்திருந்தாலும் அரசாங்கத்தின் எந்தவொரு நிர்வாக நிறுவனத்திலும் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கில்லை. அரசியல் விஞ்ஞான அகராதியின்படி சிவில் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக அவர்களைக் கருத முடியும். ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் குறித்த சரியான அர்த்தத்துடன் உலக சமூகத்தில் அவர்கள் தோட்டக் கம்பனிகளின் கீழ் தோட்டத் துரைமாரின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு தேயிலைத் தோட்டத்தோடு கட்டப்பட்டு பாதி அடிமைகளாக, பாதி சம்பள உழைப்பாளிகளாக வாழ்கிறார்கள். அரசாங்கம் 70 வதாவது சுதந்திரத் தினத்தை நினைவுகூர தயாராகும் இத்தருணத்தில் தோட்டத் தொழிலாளருக்கு குறைந்தபட்சம் முழுமையான குடியுரிமை கிடைத்திருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 70வது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் அரசாங்கம் இத்தருணத்தில் தோட்டத் தொழிலாளருக்கு குடிமக்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளாவது கிடைத்திருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆண் உறுப்பின் தேவையை முன்வைத்துச்  சிந்திக்கின்ற ஆணாதிக்கமானது, அதிகாரத்தின் உறுப்பாக மாறி பெண்ணை அடிமைப்படுத்துகின்றது. உடை குறித்த மதவாதம், ஆண் உறுப்பை தூக்கி திரிகின்ற மதவெறி பிடித்த நாய்களின் இழிந்த பண்பாடே ஒழிய, மனிதப் பண்பாடல்ல. மனிதப் பண்பாடு பெண்ணை சதையாகப் பார்ப்பதில்லை. தன் ஆண் உறுப்பால் புணரும் சதையாக யார் பெண்ணைப் பார்க்கின்றனரோ, அவர்கள் தான் பெண்கள் மீதான வன்முறையாளர்கள். பெண்ணிடம் ஒழுக்கத்தைக் கோருகின்ற அனைவரும், பாலியல் வன்முறையாளர்களே. "ஒழுக்கத்திற்காக" இதைத் தான் நீ அணியவேண்டும் என்று கூறுகின்ற போது, உனது பார்வையும் - நடத்தையும் பாலியல் வன்முறை கொண்டதே.

இன-மதவாத சக்திகள் "அபாயா" குறித்து தத்தம் குறுகிய சிந்தனைக்கும் - சுய மன வக்கிரத்துக்கும் ஏற்ப, "அபாயா" அணிவது குறித்தும் - அணியக் கூடாது என்பது குறித்துமான மனிதவிரோத கருத்தையும், வன்முறையையும் கட்டமைத்து மக்களைப் பிளந்து வருகின்றனர்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் "அபாயா" அணிவது தொடர்பான இன-மதவாத சர்ச்சைக்குள், ஆணாதிக்க வக்கிரங்கள் தம் பங்குக்கு பெண்களைத் புணரத் தொடங்கி இருக்கின்றது. சதைகளைக் கண்டாலே கண்ட கண்ட இடத்தில் புணருகின்ற நாய்கள் எல்லாம், மக்களைப் பிரிக்கும் தங்கள் மத வக்கிரம் மூலம் புணரகின்றனர்.

ஆசிஃபாவைக் குதறிய இந்துத்துவ பார்ப்பனியமும் இதைத்தான் காஸ்மீரில் செய்தது. இந்தியாவை ஆளும் இந்துத்துவ – பார்ப்பனிய ஆட்சியாளர்கள், "இந்துத்துவ" குற்றவாளிகளைப் பாதுகாக்க முன்வைத்த எல்லா பாசிசக் கருத்துகளும் - செயல்களும் போல், இஸ்லாமிய அடிப்படைவாதமும் பெண்களை தங்களின் நுகர்வுக்குரிய சதையாகவே பார்க்கின்றது, அணுகுகின்றது. இதைத்தான் இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொண்டு அடிப்படைவாதிகள், குழந்தைகள் உள்ளிட்ட பல ஆயிரம் அரேபியப் பெண்களை குதறினர். இதைத்தான் எல்லா அடிப்படைவாத மதவாதிகளும் தம் பங்குக்கு கோருகின்றனர்.

அண்மையில் கொடூரமான பாலியல் வன்முறை மூலம் கொல்லப்பட்ட வித்தியா "அபாயா"  அல்லாத உடையை அணிந்த போட்டோவில் வெளித்தெரியும் சதையை, பாலியல் வக்கிரத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத ஆணாதிக்கமானது குதற வெளிக்கிட்டு இருக்கின்றது. எப்படிப்பட்ட பாலியல் வன்முறையாளர்களைக் கொண்ட குற்றவாளிகள், மத சமூகத்தில் புரையோடிப் போய் இருப்பதை இவை எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மேல் இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கம் திணிக்கும் சாறியும், அதில் வெளியில் தெரியும் சதையை பாலியல் பொருளாக இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிம் மக்களுக்கு காட்டுகின்றது. இதன் மூலம் வெளித் தெரியும் சதை பெண்ணின் "ஒழுக்க கேட்டின்" அடையாளமாகக் காட்டி, முஸ்லிம் பெண்ணுக்கு "அபாயா"யை இஸ்லாமிய அடிப்படைவாதம் திணிக்கின்றது.

உலக தொழிலாளர்களின் போராட்ட தினமான மே 1ம் திகதியை, இலங்கை அரசு வேறு ஒரு திகதிக்கு மாற்றி இருக்கின்றது. பௌத்த மதத்தின் கொண்டாட்டத்தை முன்னிறுத்திய இந்த திகதி மாற்றமானது, இலங்கையை பௌத்த நாடாக பிரகடனம் செய்திருக்கின்றது. இலங்கை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க பௌத்த சிந்தனை முறையையே, அரசும் - ஆளும் வர்க்கமும் கையாள்வது வெளிப்படையாக இதன் மூலம் அம்பலமாகி இருக்கின்றது.

இலங்கையில் ஆட்சியாளர்களும் - ஆளும் வர்க்கமும் காலகாலமாக பௌத்த – சிங்கள மக்களின் பெயரில், இன-மத ரீதியாக மக்களை ஒடுக்கிய வரலாற்றின் ஒரு அரசியல் நீட்சியாகவே, பௌத்த கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றது. இதன் மூலம் மதம் - இனம் கடந்த, போராடும் உழைக்கும் மக்களின் மேதின போராட்டத்தையும், அதன் பாரம்பரிய வர்க்க வரலாற்றையும் மறுதளித்திருக்கின்றது. அதேநேரம் மதரீதியாக உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி இருக்கின்றது.

உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தி சுரண்ட உதவுகின்ற எல்லா இனவாத-மதவாத தேர்தல் கட்சிகளும், இதனை எதிர்க்கவில்லை. குறிப்பாக இன-மத ஒடுக்குமுறையை  முன்னிறுத்தி செயற்படும் தமிழ் - முஸ்லீம் இனவாத-மதவாத கட்சிகள், பௌத்த ஆதிக்கம் மூலம் முன்னிறுத்தும் நவீன ஒடுக்குமுறையை எதிர்க்காத பின்னணியில் இருப்பது, அக்கட்சிகளின் வர்க்கக் குணாம்சமே. 

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் - ஆசிரியர்கள் -  பெற்றோர்கள் உள்ளடங்கிய ஒரு பகுதியினர், முஸ்லிம் ஆசிரியைகள் "அபாயா" அணிந்து வருவதற்கு எதிரான இன-மதவாத போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இன-மத அடிப்படைவாதங்களுக்கு ஏற்ப பாடசாலைகள் சிந்திக்க வேண்டும் என்ற பொது உள்ளடக்கத்தை, இலங்கையளவில் கொண்டு சென்று இருக்கின்றனர்.

பௌத்த - இந்து - முஸ்லீம் - கிறிஸ்துவ.. பாடசாலைகளாக கல்விக்கூடங்களை வகைப்படுத்தவும், அவர்கள் அல்லாத பிற மத மாணவர்கள் - ஆசிரியர்கள் தம் மத பண்பாட்டை திணிக்கவும் கோருகின்ற, மனிதவிரோத வக்கிரத்தை போராட்டம் மூலம்  முன்னிறுத்தி இருக்கின்றனர்.

இந்த இன-மதம்  சார்ந்த போராட்டம் சமூகத்துக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் இன-மதவாதத்தை விதைப்பது எளிது என்பதையும், இனம்-மதம் கடந்த மனித பண்பாட்டை உருவாக்குவது தொடர்ந்து கடினமாகி வருவதையே எடுத்துக் காட்டுகின்றது.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வானது, இலங்கை கல்விக் கூடங்களை மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றுகின்ற பொதுப்பின்னணியிலேயே நடந்தேறி இருக்கின்றது. அரசு பாடசாலைகள் மதம் சார்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்  வண்ணம், மக்களை பிரித்தாளும் அரசினதும் - ஆளும் வர்க்கத்தினதும் கொள்கைகளே வழிநடத்தியிருக்கின்றது. இந்த வகையில் இலங்கை தளுவிய அளவில் பாடசாலைகளில் மதம் சார்ந்த கோயில்களைக் கட்டுவது, பாடசாலை முகப்புகளை மத அடையாளங்களாக மாற்றுவது, பாடசாலைப் பெயர்களை மதம் சார்ந்து நிறுவுவது.. என்று, இன்று பல்வேறுவிதமான மதச்செயற்பாடுகள் பாடசாலைகளில் அதிகரித்து வருகின்றது.

பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக சொகுசாக வாழும் பணக்கார பெண்கள் முதல் உழைக்கும் பெண்கள் வரை பேசுகின்றனர்; போராடுகின்றனர். மேற்தட்டு முதல் அடித்தட்டு வரை உள்ள பெண்கள் லேடிஸ் கிளப்புகள், மாதர் சங்கங்கள், மகளிர் குழுக்கள், உழைக்கும் பெண்களுக்கான புரட்சிகர பெண்கள் அமைப்புகள் என பல அமைப்புகளில் பங்கெடுத்து அவர்களின் உரிமைகளை பற்றி பேசுகின்றனர். பெண்களின் அமைப்புகளிலும் உரிமைகள் கோருவதிலும் கூட நாம் வர்க்க வேறுபாடுகளை தெளிவாக பார்க்கமுடிகிறது.

லேடிஸ்கிளப்பில் பெண்ணடிமைத்தனத்திற்கெதிராக பேசும் பணக்கார பெண்களின் உரிமை என்பது அவர்கள் அணியும் ஆடை மற்றும் அழகைப் பராமரிப்பது என்கிற எல்லையை தாண்டி வேறெந்த உரிமைகளைப் பற்றி பேசப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பெண்ணுரிமை என்றாலே அது உடைகளைப் பற்றியும் அழகைப்பற்றியுமே மட்டுமே.

இவர்கள் அதற்காக போராடவும் செய்கின்றனர். இவர்களின் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் வைத்துத்தான் மதவாதிகள் “பெண்கள் ஆபாசமாக உடையலங்காரம் செய்துகொள்ள உரிமைக்கோருகிறார்கள். பெண்ணுரிமை என்பது முட்டாள்தனம். பெண்களை அம்மணமாக பார்க்க ஆசைப்படுபவர்களே பெண்ணுரிமைப்பற்றி பேசுவார்கள்” என்று ஒரே போடாய் போட்டு பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பேசும் உழைக்கும் பெண்களின் சார்பாக பேசுவோரையும் சேர்த்து விமர்சிக்கின்றனர்.

எட்டு மணி நேர வேலை கோரிப் போராடிய அமெரிக்காவின் சிக்காக்கோத் தொழிலாளர்களின் இரத்தத்திலும் உயிர்த் தியாகத்திலும் உதித்ததே உலகத் தொழிலாளர்களின் சர்வதேசப் போராட்டத்தினமான மே தினமாகும். போராட்டத்தில் பிறந்து மீண்டும் உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் போராட்ட உத்வேகம் அளித்து வரும் மேதினத்திற்கான முதலாம் திகதியினை மறுப்பதற்கோ, மாற்றுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ முதலாளிய ஆட்சியினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. மைத்திரி - ரணில் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியானது மேதினத்தை முதலாம் திகதிக்குப் பதிலாக மே ஏழாம் திகதியில் நடாத்த வேண்டும் என எடுத்துள்ள முடிவு தொழிலாளர் விரோத முடிவேயாகும். இதனை நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் அவர்களது கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் நிராகரித்து எதிர்ப்பது அவசியமாகும். எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் ஆட்சியினரது மேற்படி முடிவை மிக வன்மையாக கண்டித்து எதிர்க்கிறது. அதே வேளை மே முதலாம் திகதியே மேதினத்தை நடாத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. 

இவ்வாறு புதிய ஜனநாயக மாச்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மேதினத் திகதி மாற்றம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையில் கொலனிய காலத்திலிருந்தே தொழிலாளர் இயக்கங்கள் தோன்றி வளர்ந்து வந்த சூழிலிலே பல்வேறு அடக்கு முறைகளுக்கு மத்தியில் மேதினம் சர்வதேசப் போராட்டத்தினமாக நினைவு கூரப்பட்டு வந்திருக்கிறது. 1956ம் ஆண்டுக்குப் பின்பே மேதினம் பொது விடுமுறைத் தினமாக்கப்பட்டது ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில் பௌத்த தினங்களான வெசாக் தினங்களைச் சாட்டாக வைத்து மேதினங்களைத் தடுப்பதிலும் பொலிஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதிலும் முன்னின்று வந்துள்ளது. அவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்களும் இடதுசாரிக் கட்சிகளும் போராடி வந்துள்ளன. அதன் வழியிலேயே இன்றைய மைத்திரி-ரணில் தலைமையிலான கூட்டு ஆட்சியானது தொழிலாளர்களின் மேதினத்தை அதற்குரிய நாளில் இருந்து ஏழாம் திகதிக்கு மாற்றியுள்ளது. இத்தகைய தொழிலாளர் விரோத முடிவின் மூலம் மேதினத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்து முதலாளிய வர்க்க சக்திகளை மனம் குளிர வைத்தும் உள்ளது. எனவே நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும்  மக்களும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு எதிர்வரும் மேதினத்தை மே முதலாம் திகதியில் நடாத்துவதற்குத் தயாராக வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்

31-03-2018

"ஒழுக்கமாகவும் - புனிதமாகவும்" பெண்கள் மேல் திணிக்கப்படும் ஆணாதிக்கமானது, மாறாத ஒற்றைப் பண்புவடிவம் கொண்ட ஆணாதிக்க வாழ்வியல் நெறியல்ல. ஆணாதிக்க பாலியல் வாழ்வியலானது மதத்தின் அல்லது மதங்களால் கட்டியமைக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமுதாய பண்பாட்டு எச்சமுமல்ல. மாறாக தனியுடமை சமூகப் பொருளாதார அடிப்படையில் தோன்றிய ஆணாதிக்கமானது, அதற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளுகின்றது. இந்த வகையில் நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் ஆட்சி முறையானது பாசிச வடிவத்தை எடுக்கும் போது, ஆணாதிக்கமானது வீரியமடைகின்றது.

நவீன நவதாராளவாத ஆணாதிக்கமே ஆசிஃபாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று போட்டு இருக்கின்றது. தைமாதம் நடந்த இந்தப் பாலியல் குற்றத்தையும், கொலையையும் மூடிமறைக்க, இந்தியாவை ஆளும் பார்ப்பனிய - இந்துத்துவ அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. குற்றத்தை சட்டரீதியாக முன்னெடுக்க பொலிசார் மறுத்தனர். குற்றத்தை பிறர் மீது சுமத்தி, திசைதிருப்ப முனைந்தனர். அப்பாவி ஒருவரை குற்றவாளியாக்கி, சட்டத்தின் முன் கொண்டு வந்தனர். குற்றத்தை மூடிமறைக்கும் வண்ணம், சாட்சியங்களையே பொலிஸ் அழிக்கிறது. நடந்த குற்றத்துக்கு எதிராக நாடு தளுவிய மக்களின் போராட்டம், சட்டத்தை அமுல்படுத்தக் கோரிய சூழலில், குற்ற வழக்கு தாக்கல் செய்வதை இந்துத்துவ –பார்ப்பனிய வழக்கறிஞர் கும்பல் தடுக்க முனைகின்றது. இந்த குற்றவாளிக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞர் மிரட்டப்படுகின்றார்.

அதேநேரம் இந்தக் குற்றத்தை செய்த கும்பலைப் பாதுகாக்க, இந்துத்துவ தேசபக்தியும் - ஒடுக்கும் பார்ப்பனிய சாதி உணர்வும் ஆளும் தரப்பால் முடுக்கிவிட்ப்பட்டது. ஒடுக்கும் தங்கள் சாதிய உணர்வுடன், குற்றவாளிகளுக்காகக் குலைப்பது நாடு தளுவிய அளவில் பா.ஜ.க கட்சியின் அரசியல் உணர்வானது. பா.ஜ.க சட்டசபை உறுப்பினர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். பார்ப்பனிய ஊடகங்களின் துணையுடன், தங்கள் குற்றத்தை மூடிமறைக்கும் தொலைக்காட்சி விவாதங்களில் இறங்கினர். இந்திய தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள், இந்துத்துவ தேசபக்தி கோசங்களை எழுப்பினர்.

சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்க போவதாகக் கூறி, வரிந்துகட்டிய வலிந்த யுத்தப் பிரகடனத்தை அமெரிக்கா – பிரான்ஸ் - பிரிட்டன் செய்திருந்தனர். இதையடுத்து சிரியா மீதான மேற்கின் வலிந்த எந்தத் தாக்குதலையும் முறியடிக்கப் போவதாகவும், தாக்குதல் நடத்தும் ஏவுதளங்களை அழிக்கப் போவதாகவும் ருசியா எச்சரிக்கையை விடுத்தது. ஆக மூன்றாவது உலக யுத்தத்தின் விளிம்பிற்கு, வலிந்த தாக்குதல் அறிவிப்புகள் இட்டுச் சென்று இருந்தது.

பொருட்களை வரைமுறையின்றி நுகர்ந்து கொண்டு இருந்த சந்தைச் சூழலில், மூலதனத்தை குவிப்பதில் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருந்த முதலாளித்துவத்தின் அமைதியான சூழலுக்கு, இந்த யுத்த அறிவிப்பு முரண்பாடாக வெளிவந்தது. அதாவது பதற்றமற்ற உலக சூழலில், ஏகாதிபத்திய தலைவர்களின் தனிப்பட்ட உள்நாட்டு அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள விடுத்த இந்த தாக்குதல் அறிவிப்பு, பெரும் யுத்தமாக மாறும் நிலைக்கு இட்டுச் சென்றது. இதன் பின் விழித்துக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், யுத்தத்தை தவிர்க்கும் பேரத்தை முரண்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடத்தியது. இறுதியில் எப்படி எங்கு எந்த நேரத்தில் தாக்குவது என்ற பேரத்தை ருசியாவுடன் செய்ததன் மூலம், வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தி முடித்தனர். அதாவது  தங்கள் "மீசையில் மண் படவில்லை" என்ற வீறாப்பு பேசி மேற்கு மக்களை ஏமாற்றும் வண்ணம், இரு தரப்பு ஓப்புதலுடன் தாக்குதல் வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டது.

உலகை உலகமயமாக்கி கொழுக்கும் முதலாளித்துவமானது, சந்தையைக் கைப்பற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கடந்த சுதந்திர சந்தையல்ல. மூலதனத்தை விரிவாக்க முனையும் மேற்கு முதலாளித்துவத்தின் வன்முறை தான், சிரியா யுத்தம். அதாவது ருசிய ஏகாதிபத்திய மூலதனச் செல்வாக்கில் இருந்து சிரியாவைக் கைப்பற்றும் மேற்கு ஏகாதிபத்தியத்தின் வலிந்த தாக்குதலுக்கு, இன்று சிரிய மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கின்றனர்.

சிரிய அரசை தேர்தல் "ஜனநாயகமற்ற" சர்வாதிகார நாடாக சித்தரிக்கும் மேற்கு ஏகாதிபத்தியமும் - ஏகாதிபத்திய ஊடகங்களும், சவூதி அரேபியாவின் மன்னர் ஆட்சியை அப்படி அழைப்பதில்லை. சர்வாதிகார சவூதி மன்னரை அமெரிக்கா - பிரான்ஸ் - பிரிட்டன் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதை சமகாலத்தில் காண முடியும்;. மேற்கு நாடுகள் தமது  மூலதன நலனுக்கு முரணான நாடுகளையே, மனித குலத்தின் எதிரியாக காட்டி அழிப்பதே இதன் வரலாறாக இருப்பதுடன், அதுவே சிரியாவில் நடந்து வருகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிரியாவில் தேர்தல் "ஜனநாயகத்தை" கொண்டு தேர்ந்தெடுக்கும் முறைமையைக் கொண்டுள்ள அதேநேரம், சவூதியில் அது கூட கிடையாது. இங்கு ஜனநாயகம் குறித்தும், தேர்தல் ஜனநாயகம் குறித்துமான மேற்கின் அளவீடுகள் எல்லாம், தங்கள் நாட்டு மூலதனத்தின் நலன்களை முன்வைத்தே அளக்கப்படுகின்றதே ஒழிய முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அல்ல என்பதே உண்மை.

மூலதனத்தைக் குவிக்கும் வரைமுறையற்ற சந்தைப் பொருளாதாரத்தில் திவாலாகும் மூலதனங்கள், மீள கையில் எடுத்திருக்கும் தற்காப்பு ஆயுதம் தான் எல்லைக்குட்பட்ட ஏகாதிபத்தியப் பொருளாதாரம். அதாவது உலகமயமாதலுக்கு எதிரான, ஏகாதிபத்திய தேசியவாதம்.

முதலாளித்துவத்தின் பொது முரண்பாடானது, உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முதல் இரு நாடுகளான அமெரிக்கா – சீனாவுக்கு இடையில் முற்றி வருகின்றது. அதாவது உள்ளார்ந்த உள்ளடக்கமென்பது உலக மூலதனத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகும். மூலதனங்கள் ஒன்றையொன்று அழித்து கொழுக்கும் உலகமயமாக்கலுக்குப் பதில், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தமாக அதை மாற்றி விட முனைகின்றனர்.

தேசங்களின் எல்லைகள் இன்றி மக்களையும் - இயற்கையையும்  வரைமுறையின்றி சுரண்டுவதற்காக மூலதனங்களால் உருவாக்கப்பட்ட உலகமயமாக்கமானது, ஒன்றையொன்று அழித்து கொழுக்கும் தனக்குள்ளான போட்டியில், முன்னேற முடியாத தேக்கத்தை அடைந்து இருக்கின்றது. தேக்கத்தைக் கடக்க உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைத்து சந்தையை தக்க வைக்கவும், இலாபத்தை அடையவும் முனைந்தனர். அந்தப் போட்டியால் சந்தையில் பொருட்கள் குவிந்துவிட, பொருட்கள் விற்க முடியாது தேங்கி விடுகின்றது. விலைக் குறைப்பு, பொருள் தேக்கமானது வேலை இழப்புகளாகவும், கூலி குறைப்பாகவும், அதிக நேர வேலையாகவும், குறைந்த கூலி உள்ள நாடுகளை நோக்கி மூலதனத்தின் பாய்ச்சலாகவும் மாறியது. மொத்தத்தில் உழைக்கும் வர்க்கம் மீதான மூலதனத்தின் ஒடுக்குமுறைகள் மூலம், சந்தையை தொடர்ந்து தக்கவைக்க முனைந்த மூலதனத்தின் போராட்டமானது, உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை இல்லாதாக்கி வருகின்றது. இது சுழற்சியாக மூலதனத்திற்கு எதிரான புதிய நெருக்கடியாக மாறும் அதேநேரம், மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைக் கூர்மையாக்குகின்றது.

நடந்த உள்ளூராட்சியில் பங்குகொண்ட தேர்தல் கட்சிகள் அனைத்தும், வடக்கில் தேர்தலை வெல்வதற்கு சாதியையே முதன்மைப்படுத்தினர். வடக்கில் கிராமங்கள் - வட்டாரங்கள் அனைத்தையும் சாதிரீதியாக பிரித்து, அந்தந்த சாதிய வாக்குகளைப் பெறுவதற்கு அந்தந்த சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தியது. இதன் மூலம் சாதி அடிப்படையில் வாக்குகளை, ஓவ்வொரு தேர்தல் கட்சியும் பெற்;றது. இதுதான் வடக்கின் தேர்தல் முடிவுகளை தீர்மானித்தது.

உள்ளூராட்சி தேர்தலானது, வடக்கு சமூகத்தை சாதியாக அணிதிரட்டியுள்ளது. "தமிழன்" என்ற இனவாத "தேசிய" அடையாளமானது, வெள்ளாளியச் சாதியக் சமூகக் கட்டமைப்பு என்ற அடிப்படை உண்மையை, இந்தத் தேர்தல் வெளிப்படையான சாதி மூலம் தன்னை தகவமைத்திருக்கின்றது. ஒவ்வொரு சாதிக்கும் அதிகாரத்தில் பங்குகொடுத்ததன் மூலம், வெள்ளாளிய சாதிய சமூக ஓடுக்குமுறையிலான சமூக அமைப்பை, தேர்தல் ஜனநாயக வடிவம் மூலம் பலப்படுத்தி இருக்கின்றது. இதன் மூலம் "தேசம் - தேசியம் - தன்னாட்சி" என்று கூறி வந்த "தமிழனின்" இனவாத அரசியலானது, நடந்த உள்ளூராட்சி தேர்தல் மூலம் வெளிப்படையான வெள்ளாளிய சாதிய அரசியலாகியது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE