துரோகிகள், சிங்களவன் காலை நக்குகின்றவர்கள்…என்று தாமல்லாத எதிர்த்தரப்பைக் கூறிக் கொண்டு, நாங்கள் உணர்ச்சியும் அறிவும் மானமுமுள்ள தமிழர்கள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களே தமிழினவாதிகள். இவர்கள் வேறு யாருமல்ல. அரசு மூலம் சொகுசு வாகனங்களை, மதுபான பெமிற்றுக்களை, பாராளுமன்ற சலுகைகளை, … பெற்றுக்கொண்டு வாழ்பவர்கள். அனைத்து இனவாதிகளும் கூடிக் கும்மியடிக்கும் கடந்தபோன வரலாறு, இந்த தேர்தலில் கணிசமாக இழந்து போனதால் புலம்புகின்றனர். தமிழினத்தின் ஒற்றுமை பற்றி வகுப்பெடுக்கின்றனர்.
இப்படி தோற்றுப் புலம்பும் இந்தத் தமிழினவாதிகள், புலம்பெயர் தமிழினவாதிகளின் பினாமிகள். புலம்பெயர் தமிழினவாத பிழைப்புவாதக் கும்பல்களின் பிளவுகளுக்கேற்ப, கும்மி அடித்த மற்றும் அடிக்கின்ற பிளவுவாதிகள்.
புலம்பெயர் தமிழினவாதிகளுள் பிளவு என்பது, கொள்கைரீதியானதல்ல. புலிகளுடன் உருவான இந்த அணியின் பிளவு, புலிச் சொத்துகளை ஆட்டையைப் போடவும், புலியை சொல்லிப் பிழைக்கவும்.. யாருக்கு உரிமையுண்டு என்ற மோதலே, பல புலம்பெயர் தமிழினவாத அணிகளை உருவாக்கியது.