Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் பேரினவாதம் புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இதற்கு தமிழகத்தில் நடந்தேறும் இனவாத போராட்டங்கள் மேலும் உதவுகின்றது. தமிழகத்தில் நடந்தேறும் வன்முறைகள் மட்டுமல்ல, தமிழக மாணவர்களின் இனவாதமும் இதைத் தான் இன்று செய்கின்றது. இந்தவகையில் தமிழக அரசும், அதே அரசியல் அடிப்படையிலான மாணவர்களின் இனவாதப் போராட்டங்கள் வரை, மீண்டும் இலங்கையில் இனவழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.

இன்று இவ்விரண்டு இனவாதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி செயற்படுகின்றது. இலங்கை வாழ் மக்களுக்கும், அங்கு ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானதாக இந்த இனவாதம் செயற்படுகின்றது. தமிழகத்தில் மீண்டும் கட்டமைக்கும் இனவாதத்தை, இலங்கை வாழ் மக்களின் போராட்டமாக காட்டுகின்றனர். இதன் மூலம் மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அகற்றுகின்ற அரசியல் செயற்பாடு இந்தியாவில் நடந்தேறுகின்றது. 1983 இல் நடந்த அதே இனவாத அரசியல் செயற்பாடுகள். அன்று இந்த இனவாதப் போராட்டங்கள் மக்கள் போராட்டத்தை அழிக்கவும், ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. இன்று அதே அரசியல் பின்னணியில், மீண்டும் வேறு வடிவில் இன்று அரங்கேறுகின்றது.

இது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான இனவாதமும், அவர்களுக்கு எதிரான போராட்டமுமாகும். இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான போராட்டம் தான். இன்று தமிழக மாணவர்களின் இனவாத போராட்டங்கள், பேரினவாதத்துக்கு நிகரான மற்றொரு அரசியல் செயற்பாடாக மாறி இருக்கின்றது.

இன்று தமிழகத்தில் அப்பாவி சிங்கள மக்கள் தாக்கப்படுவது, இலங்கை வீரர்களின் விளையாட்டுக்களை தடை செய்வது முதல் தமிழக மாணவர்கள் ஐ.நா தீர்மானத்தை கோரியும் முன்னிறுத்தியும் நடத்துகின்ற இனவாத அரசியல் செயற்பாடுகள் அனைத்தும், இலங்கை சிறுபான்மை மக்களின் வாழ்வை மீண்டும் அழிக்கின்ற அரசியல் செயற்பாடாகும்.

இலங்கையில் இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை, இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் இணைந்து முன்னெடுப்பதன் மூலம் தான் இனவாதத்தையும் இனவொடுக்குமுறையையும் முறியடிக்க முடியும். இந்த அரசியல் முன்முயற்சியை ஊக்கமளிக்கும் வண்ணம் அமையாத இன்றைய இனவாத செயற்பாடுகள், இலங்கை அரசுக்கு உதவுகின்றது.

இந்த வகையில் தமிழகத்தில் நடந்தேறும் இனவாத செயற்பாடுகள், இலங்கையில் பேரினவாதத்தை தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றது. இலங்கையில் இனவாதம், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராட முனையும் சக்திகளுக்கு எதிராக இருப்பதன் மூலம், இவர்கள் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக உதவுகின்றனர். யுத்தம் நடந்த போது ஆயுதமும், ராஜதந்தர ரீதியாக உதவிய இந்தியா, இன்று தமிழகத்தில் கட்டமைத்துள்ள இனவாதம் மூலம் இலங்கை அரசுக்கு உதவுகின்றது.

தமிழக போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கும் எதிராகவும் இருக்க வேண்டும். அதாவது அரசுக்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரட்டுவதாக அமைய வேண்டும். அனைத்து மக்களைச் சார்ந்ததாக போராட்டங்கள் அமைய வேண்டும்;.

மக்கள் சம்மந்தப்படாத அனைத்து தலையீட்டையும், போராட்டங்களையும் நிராகரித்து போராட வேண்டும். மக்கள் சம்மந்தப்பட்ட, அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் சுயநிர்ணயத்தைக் கோரிப் போராட வேண்டும். இதுவல்லாத இனவாத தீர்வுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

 

இந்திய புரட்சிகர சக்திகளே!

இலங்கையில் இனவாதத்துக்கு எதிரான, இனவொடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகர சக்திகளின் போராட்டத்தைக் கோருங்கள்! அதை ஆதரித்து முன்னிறுத்துங்கள்!!

சுயநிர்ணய அடிப்படையில் போராட்டத்தை முன்னிறுத்தி, இனவாதத்தை தனிமைப்படுத்துங்கள்;!

இனவாத செயற்பாடுகள் அனைத்தையும் கண்டியுங்கள்! எதிர்த்தும் போராடுங்கள்!!

போர்க்குற்றங்களை விசாரிக்க மக்கள் நீதிமன்றத்தைக் கோருங்கள்! ஏகாதிபத்திய தலையீடு இல்லாத சுயாதீனமான சர்வதேச விசாரணையைக் கோருங்கள்!!

தமிழக மாணவர்களே!

இனவாதத்துக்கு பதில் இலங்கை வாழ் மக்களின் சொந்த போராட்டங்களை ஆதரியுங்கள்!

அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாட்டை எதிர்த்துப் போராடுங்கள்!

இலங்கை மக்களுக்கு எதிரான அன்னிய தலையீட்டை எதிர்த்துப் போராடுங்கள்!

மூலதனங்களின் நலன் பேணும்; இந்தியக் கொள்கை தான், இலங்கையில் இனவாத நலனுடன் இணைந்து செயற்படுவதை எதிர்த்து, இலங்கையில் உள்ள இந்திய மூலதனத்துக்கு எதிராகப் போராடுங்கள்!

இந்திய இலங்கை மூலதனச் செயற்பாட்டை தமிழகத்தில் முற்றாக முடக்குங்கள்!

தமிழகத்தின் குரலை மத்திய அரசு கேட்கும் நிலைக்கு கொண்டு வர, மூலதனச் செயற்பாட்டில் தலையிட்டு முடக்குங்கள்!

பி.இரயாகரன்

28.03.2013