Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெரும்பான்மை சார்ந்த பௌத்தமத அடிப்படைவாதத்தையும், இன அடிப்படைவாதத்தையும், நாம் வெறும் மதம் இனம் சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்ளக்கூடாது. இது ஏன், எந்தக் காரணங்களில் இருந்து தோற்றம் பெறுகின்றது என்ற தெளிவும் புரிதலும் இன்றி, இதை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாது. இதை வெறும் மதம் இன சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்வது, சிறுபான்மை சார்ந்த அதே அடிப்படைவாதம் தான்.

ஜெர்மனியில் நாசிகளையும், அது முன்தள்ளிய பாசிசத்தையும், வெறும் கிட்லரின் தனிப்பட்ட செயலாக, சர்வாதிகாரத்தின் ஆசையின் வெளிப்பாடாக புரிந்து கொள்கின்ற எல்லைக்குள் தான், மனித அறிவை முடமாக்கும் வண்ணம் கல்வி முதல் ஊடகங்கள் வரை செயலாற்றுகின்றன. இந்த அடிப்படையில் தான் இலங்கையில் மத மற்றும் இன அடிப்படைவாதங்களின் பின்னுள்ள, அதன் அரசியலை மூடிமறைக்கின்றனர். அதை மகிந்த மற்றும் கோத்தபாயவின் தனிப்பட்ட செயலாகக் குறுக்கி விடுகின்றனர். இதன் மூலம் இதன் பின்னுள்ள அரசியலை நீக்கி விடுகின்றனர்.

ஜெர்மனியில் நாசிகள் முதல் இலங்கையில் பொதுபல சேன வரையான அரசியல் என்பது ஒன்று தான். அது வலதுசாரிய அரசியல் அடிப்படையைக் கொண்டதாக இருப்பதுடன், அது தோன்றுவதற்குரிய அடிப்படையும் ஒன்று தான். வர்க்கப்போராட்டம் கூர்மையாகின்ற போது, மக்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையில் முரண்பாடு கூர்மையாகின்ற போது, அடிப்படைவாதம் தோன்றுகின்றது. மக்கள் போராடுவதைத் தடுக்கவும், மக்களை பிளவுபடுத்தவும், அவர்களை மிரட்டி அடிபணிய வைக்கவும், மூலதனத்தின் சொந்தத் தெரிவுதான் அடிப்படைவாதம். சுரண்டலை நடத்தவும், சுரண்டுவதை மறைக்கவும், தான் அல்லாதவனை ஒடுக்குவதன் மூலம், தன் தேவையைப் பூர்த்தி செய்யக் கோரும் வன்முறையிலான அரசியல். சட்டம் ஒழுங்கு என்ற அரசியல் கட்டமைப்பைக் கடந்து, இதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் மக்கள் சார்ந்த ஒன்றாக இதை விஸ்தரிப்பது. இது முதலில் பொது ஜனநாயகக் கட்டமைப்பை, தான் அல்லாதவருக்கு மறுக்கின்றது. பொதுச் சட்டம், பொது நீதியை அனைவருக்கும் மறுதலிக்கின்றது. எந்தளவுக்கு அரசு இதனுடன் தன்னை வெளிபடுத்துகின்றது என்பதைப் பொறுத்து, பாசிசமாக்கல் வெளிப்படும்.

இலங்கையில் யுத்தம் இருந்த வரை, யுத்தம் தான் நாட்டை ஆள்வதற்குரிய ஆளும் வர்க்க கருவியாக இருந்தது. யுத்தத்தின் பின் நாட்டை ஆள்வதற்கு, இன மத அடிப்படைவாதங்கள் முன்தள்ளப்படுகின்றது. அரசினால் பெரும்பான்மை சார்ந்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்ற இந்த அடிப்படை வாதம், மற்றைய அடையாளங்கள் மீதான வன்முறையையும் தாக்குதலையும் கூர்மையாக்கி வருகின்றது.

இன்று உலக நெருக்கடியுடன், உலகெங்கும் இது போன்ற வலதுசாரிய அடிப்படைவாத வன்முறைக் குழுக்கள் தீவிரமாக வளர்ச்சிபெற்று வருகின்றது. மக்களின் வாழ்வாதாரங்கள் மூலதனத்தினால் சிதைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடிப்படைவாதம் மூலம் மக்களின் கவனத்தை, செயற்பாட்டை முடக்க முனைகி;ன்றனர்.

மேற்கில் நாசிக் குழுக்களாகவும், இலங்கையில் பொதுபல சேன போன்ற அடிப்படைவாதக் குழுக்களாகவும் இது இன்று வெளிப்படுகின்றது. அரசுகள் இதைக் கண்டும் காணாது இருப்பது முதல் திட்டமிட்டு உருவாக்குகின்ற பல தளத்தில், உலகில் எல்லா நாடுகளிலும் இன்று இவற்றைக் காண முடியும்.

இதன் வெளிப்பாட்டுத் தன்மை நாட்டுக்கு நாடு, மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான வர்க்க முரண்பாட்டுக்கு ஏற்ப வேறுபடுகின்றது.

இந்த வகையில் இன்று இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மீதான வன்முறை இரண்டு தளத்தில் நடந்தேறுகின்றது.

1.இனவொடுக்குமுறை ஊடான அதன் இராணுவ பலத்தில் நின்று, பெரும்பான்மை மதத்தை சிறுபான்மை மதங்கள் கொண்ட பிரதேசங்கள் மீது திணிப்பதன் மூலம், மற்றைய சிறுபான்மை மதங்கள் மீதான வன்முறையை அரசே திட்மிட்டு ஏவுகின்றது.

2.பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான ஒடுக்குமுறையை ஏவுவதற்காக, பௌத்த அடிப்படைவாதக் குழுக்களை அரசு உருவாக்கி செயற்படுத்துகின்றது.

இலங்கையில் இந்த இரு போக்கையும் காணமுடியும். அடையாளங்கள் மீதும், காரணத்தைச் சொல்லியும், வன்முறையையும் பலாத்காரங்களையும் அத்துமீறல்களையும் செய்கின்ற அரசியல் பின்புலத்தில், அரசு திட்டமிட்டு இயங்குகின்றது.

வலதுசாரிய அடிப்படைவாதங்கள் மூலம், மக்களை அணிதிரட்டுவதற்கு எதிராக கட்டமைக்கின்ற அரசியல் பின்புலத்தில், எண்ணை ஊற்றி வளர்ப்பதில் எதிரான அடிப்படைவாதங்கள் துணை போகின்றது. இன்று தமிழகத்தில் பௌத்த துறவிகளைத் தாக்குவதும், சிங்கள மக்களைத் தாக்குவதும், இதில் இருந்து வேறுபட்டதல்ல.

மக்களை திசை திருப்புகின்றதும், வன்முறையை சமூகம் மீது திணிக்கின்றதன் மூலம் மக்களை செயலற்று ஒடுங்கி இருக்குமாறு கோருகின்றது. இந்த வலதுசாரிய அடிப்படை வாதத்தின் பின் அரசும், ஆளும் வர்க்கங்களும், அவர்களின் வர்க்க நலன்களும் செயற்படுவதை; இனம் கண்டு, அதற்கு எதிராக அணிதிரண்டு போராடுவது அவசியம்.

 

பி.இரயாகரன்

25.03.2013