வர்க்கப் போராட்டத்தைக் கோரும் மார்க்சியவாதிகள், சுயநிர்ணயம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் என்ன என்பதை விளக்கி, அதை அரசியல்ரீதியாக முதலில் முன்னிறுத்த வேண்டும். இதன்பின் இன்றைய சமூக அமைப்;பில் சுயநிர்ணயம் இலங்கைக்கும், உலகுக்கும் பொருந்தாது காலாவதியாகிவிட்டது என்றால், அதை அரசியல்ரீதியாக நிறுவி நிராகரிக்க வேண்டும். இதன் மூலம் தான் "சுயநிர்ணயம்" பற்றிய இன்றைய விவாதங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் சரியாக அணுக முடியும்.
இலங்கையில் இனமுரண்பாட்டை கடந்து செல்லும் வர்க்கப் போரட்டத்துக்கான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயல்தந்திரம் என்ன? செயல்தந்திரமாக சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இலங்கை முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சியே இன்னமும் அரசியல் கூறாக இருக்கவேண்டும். முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை இலங்கை கடந்து விட்டதா இல்லையா என்பது தான், சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது. அதேநேரம் இலங்கையில் உள்ள நவகாலனிய தரகுமுதலாளித்துவமும், தேசங்கடந்த பன்நாட்டு முதலாளித்துவமும், இலங்கையில் பூர்சுவா ஜனநாயக புரட்சியை நிறைவுசெய்து அதை இல்லாதாக்கிவிட்டதா என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.
முதலாளித்துவத்தின் (உதாரணமாக தேசிய முதலாளித்துவம், தரகு முதலாளித்துவம், பன்நாட்டு முதலாளித்துவம்...) வேறுபட்ட வர்க்க நலன்களையும், அதன் முரண்பாடுகளையும் பொதுமைப்படுத்தி விடுவது, பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு பாதகமானது. அன்னிய மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தை ஏகாதிபத்தியதுக்கு எதிரானதாக நடத்தப்படும் போது, அதை அனைத்து முதலாளித்துவதற்கு எதிரானதாகக் குறுக்கக் கூடாது. உள்நாட்டு சிறு மூலதனம் அன்னிய மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு, பாட்டாளி வர்க்க செயல்தந்திரம் அமைந்து இருக்க வேண்டும். முதலாளித்துவ புரட்சி நடைபெறாத நாடுகளில், அன்னிய மூலதனத்துக்கு எதிரான முரண்பாடு அரசியல் ரீதியாக கூர்மை பெற்று காணப்படுகின்றது. இலங்கை தேசம், தேசியம் சார்ந்த இந்த அரசியல் கூறை, சர்வதேசியக் கூறாக பாட்டாளி வர்க்கம் தன் தலைமையில் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசியல் அடிப்படையில் முதலாளித்துவத்தின் வேறுபட்ட வர்க்கக் கூறுகளை, அரசியல் ரீதியாக வேறுபடுத்தி அணுக வேண்டும். இலங்கை என்ற தேசம், தேசியத்துக்கான சுயநிர்ணயத்தைக் கோரும் வண்ணம், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டம் அமைய வேண்டும்.
இலங்கைக்கான சுயநிர்ணயம் என்பது, பெரும்பான்மை இனம் சார்ந்த சிங்கள இனத் தேசியமல்ல. பெரும்பான்மையான சிங்கள இனம், சுயநிர்ணயத்தைக் கொண்டு சுதந்திரமாக வாழும் இனமல்ல. பேரினவாதம் என்பது, இலங்கைத் தேசியமல்ல. தேசியம் என்று கட்டமைக்கின்ற இனவாதம் தேசியமல்ல.
இலங்கை தேசம் சார்ந்த தேசியம் என்பது, தமிழ் - சிங்கள இனங்கள் பரஸ்பரம் தமக்குள்ளான சுயநிர்ணயத்தை அங்கீகரித்துக் கொண்டு, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுயநிர்ணயத்தைக் கோரிப் போராட வேண்டும். இது தான் சர்வதேசியம். இதன் மூலம் தான், தேசியத்தைச் சுற்றி இயங்கும் பிற வர்க்க விரோத கூறுகளுக்கு எதிரான, வர்க்கப் போராட்டத்தை அரசியல் ரீதியாக பாட்டாளி வர்க்கம் நடத்த முடியும்.
சுயநிர்ணயம் இலங்கைக்கு பொருந்துமா பொருந்தாதா என்ற வாதமும், சுயநிர்ணயம் என்றால் என்ன என்பதையும் குறிப்பாக ஆராய்வோம்.
சுயநிர்ணயம் என்பது ஜனநாயக மையத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சுதந்திரம் தான். மார்க்சியம் முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இதை அணுகுகின்றது. லெனின் சுயநிர்ணயம் பற்றி கூறும் போது .. தேசீய இனங்கள் அரசியல் ரீதியில் பிரிந்து சுதந்திரமான தேசிய அரசு ஓன்றை அமைத்தல் என்பதே தேசீய இனங்களின் சுயநிர்ணயத்தின் பொருள் என்ற முடிவுக்குத்தான் நாம் வந்து தீருவோம்" என்றார். இது தோன்றுவதற்கு அரசியல் அடிப்படைக்கான காரணத்தை லெனின் விளக்கும் போது "... தேசீய அரசு ஒன்று அமைப்பதற்குத் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள்தான் அடிப்படையானவை என்ற தவிர்க்க முடியாத முடிவை.."யாகும் என்றார்.
பொருளாதார ரீதியான முரண்பாடுகள், வர்க்க ரீதியான முரண்பாடுகளாக மாறி அரசியல் சுதந்திரத்தைக் கோருகின்றது. தேசிய இன முரண்பாடு என்பது, தேசிய முதலாளித்துவ (பூர்சுவா) வர்க்கத்தின் பொருளாதார நலன்கள் தான். இது தன் சொந்த பொருளாதார சந்தையைக் கோரி நடத்தும் போராட்டம் தான் தேசியம். இது இன முரண்பாடாக மாறி, தனியான அரசு ஓன்றுக்கான அரசியல் சுதந்திரத்தைக் கோருகின்றது. இது தமிழர்கள் தனித்து கோரினாலும் சரி, தமிழ்- சிங்க மக்கள் இணைந்து இலங்கை என்ற நாடு தேசியத்தைக் கோரினாலும் சரி, சாராம்சத்தில் ஒன்றுதான்.
இலங்கையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறாத சூழலில் இருந்து தான், இன முரண்பாடு தோன்றுகின்றது. இது எப்படி பின்னால் மாறுகின்றது என்பதில் இருந்து, முடிவுக்கு வரக் கூடாது. மாறாக ஏன், எப்படி எங்கிருந்து தோன்றுகின்றது என்பதற்கான அரசியல் அடிப்படை என்ன என்பதை ஆராய்வதன் மூலம்தான், பாட்டாளி வர்க்கச் செயல் தந்திரத்தை உருவாக்க வேண்டும். ஒரு முரண்பாடு சார்ந்து பூர்சுவா ஜனநாயகக் கோரிக்கை எழுகின்ற போது, பாட்டாளி வர்க்கம் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை மூலம் அதை முறியடித்து அதை அணிதிரட்ட வேண்டும்;.
இன்று இலங்கையில் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு எந்த சமூக கட்டமைப்பில் இருக்கின்றது.
1.இலங்கையில் விவசாயத்தை எடுத்தால் சிறு விவசாய உற்பத்தியும், சிறு உடமையும் காணப்படுகின்றது. இதற்கு வெளியில் பெரும் பண்ணை விவசாயம் (அன்னிய மூதலீடுகள்) காணப்படுகின்றது. இலங்கையில் நிலவிய நிலப்பிரபுத்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ விவசாயம் என்பது உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளில் சிதைந்து போக, பண்பாட்டு கலச்சாரக் கூறுகள் மட்டும் எஞ்சிக் காணப்படுகின்றது.
2.முதலாளித்துவத்தை எடுத்தால் அன்னிய மூலதனம் சார்ந்த தரகு முதலாளித்துவமும், தேசங் கடந்த பன்நாட்டு மூலதனமும் காணப்படுகின்றது.
3.தேசிய முதலாளித்துவத்தை எடுத்தால் நலிவுற்ற வண்ணம், மீண்டும் மீண்டும் இடைவிடாது உயிர்ப்பிக்கின்ற வர்க்கக் கூறாகக் காணப்படுகின்றது.
இந்த உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகள் அடிப்படையில் தான் இலங்கையில் வர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் காணப்படுகின்றது.
சிறு உடமை விவசாயமும், தேசிய மூலதனமும் சார்ந்து தேசியம் சார்ந்த முரண்பாடு, அன்னிய மூலதனத்துடன் காணப்படுகின்றது. பெருமளவிலான குட்டிபூர்சுவா வர்க்க முரண்பாடாக, சாராம்சத்தில் பூர்சுவா வர்க்கம் சார்ந்து வெளிப்படுகின்றது. இலங்கையில் உழைப்பிற்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்க முரண்பாடாக மட்டும் இருப்பதில்லை. இலங்கையின் விசேட தன்மையாக இது காணப்படுகின்றது. (இது பற்றி விரிவாகவும், தனியாகவும் வேறு ஒரு இடத்தில் பார்ப்போம்)
அதாவது இலங்கையில் பெருமளவில் சிறுவுடமை சார்ந்து உருவாகியுள்ள உழைக்கும் வர்க்கம், தன் உழைப்பை மட்டும் நம்பி இருப்பதில்லை. தன் சிறுவுடமையையும் சார்ந்து வாழ்வதால், இதன் வர்க்கக் கண்ணோட்டம் என்பது இரண்டு வர்க்கக் கண்ணோட்டத்தைக் கொண்டது. இது வர்க்க ஊசலாட்டம் கொண்டதுமாகும். கிராமப்புறங்களில் பெரும்பான்மையானோர் மத்தியில் இரட்டை உழைப்பு (கூலி உழைப்பும், தங்கள் சிறு உடமை சார்ந்த உழைப்பும்) காணப்படுகின்றது. நகர்ப்புறங்கள் மத்தியில் உழைக்கும் வர்க்கங்கள், கிராமப்புறங்களில் தனது குடும்பங்கள் சார்ந்து இரட்டை உழைப்பை சார்ந்து வாழ்வது கணிசமாகக் காணப்படுகின்றது. இப்படி இலங்கையில் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கம் இப்படித்தான் இருக்கின்றது. இரட்டை வர்க்கத் தன்மை கொண்ட இந்த அரசியல் கூறை, கடந்த வர்க்கப் போராட்ட வரலாறுகள் அரசியல் ரீதியாக இனம் கண்டு அணுகவில்லை. இன்னும் இதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இது பூர்சுவா வர்க்கக் கூறுகளை பாட்டாளி வர்க்க கோரிக்கையாக மாற்றி, பூர்சுவா வர்க்கக் கூறுகளை மறுத்து விடுகின்றது. இதன் மூலம் வர்க்கப் போராட்டம் சிதைந்து போனதும், மார்க்சியத்தை செயலற்ற கோட்பாடாக மாற்றி வரட்டுவாதமாக போனதுமே, இலங்கை வரலாறு.
இலங்கை உழைக்கும் வர்க்கம் தன் உழைப்பு சார்ந்து, கொண்டிருக்கின்ற குட்டி பூர்சுவா மற்றும் பாட்டாளி வர்க்க தன்மையை இனம் காணவேண்டும். இந்த இரண்டையும் பாட்டாளிவர்க்கம் தன் கருத்தில் எடுத்து போராடாத வரை வர்க்கப் போராட்டம் குறுகித் தனிமைப்படும் அல்லது குட்டி பூர்சுவா போராட்டம் வர்க்கப் போராட்டமாக மாறி சீரழியும். இலங்கையில் கடந்தகால போராட்டங்களின் சிதைவுகள், இந்தத் தவறான வர்க்கப் பார்வையில் இருந்து தான் தோன்றியது. இதே அடிப்படையில் இருந்து தான் தேசிய இனமுரண்பாட்டைப் பற்றிய ஓட்டிய வர்க்க கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது.
ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இலங்கை தழுவிய தேசிய முரண்பாடாக மாறுவதைத் தடுக்க, இலங்கை ஆளும் வர்க்கங்களும் ஏகாதிபத்தியங்களும் அதை இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றுகின்றனர். இதை இலங்கை தழுவிய சர்வதேசிய முரண்பாடாக மாற்ற பாட்டாளி வர்க்கம் முனைய வேண்டும். இலங்கையில் இனமுரண்பாடாகிவிட்ட இன்றைய சூழலை, சர்வதேசிய வர்க்கப் போராட்டமாக மாற்ற இனங்கள் பற்றிய தெளிவு அவசியம்.
இலங்கை இன்று ஒரு நாடாக இருக்கும் எதார்த்தத்தில், அங்கு இரண்டு தேசிய இனங்களைக் (தமிழ், சிங்கள) கொண்டும், குறைந்தது வேறு இரு தேசிய சிறுபான்மை இனங்களைக் (மலையகம், முஸ்லிம்) கொண்ட ஒரு நாடாகக் காணப்படுகின்றது. இதை முரணற்ற ஜனநாயகம் மூலம் அங்கீகரித்துப் போராடுவதன மூலம், இதற்குள்ளான இன முரண்பாட்டைக் களையமுடியும்.
இன்று கற்பிப்பது போல், இலங்கையில் சிங்கள இனத் தேசியம் ஒன்று மட்டும் காணப்படவில்லை. தமிழ்தேசியமும் காணப்படுகின்றது. அது மட்டுமல்ல தமிழ் தேசியம் என்ற ஒன்று மட்டும் காணப்படவில்லை, இரு தமிழ் தேசிய சிறுபான்மை இனங்களும் காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் புரிந்து கொள்ளாமல், இதை அங்கீகரிக்காமல், இந்த இன முரண்பாட்டைக் கடந்து, பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்திவிட முடியாது.
இரண்டு தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காணவும், தேசிய சிறுபான்மை இனங்களுக்கு தன்னாட்சி அடிப்படையில் தீர்வு காணவும் வேண்டும்;.
இந்த அடிப்படையில் இதை புரிந்து விளங்கிக் கொள்ளும் போது லெனின் கூறுவது போல் "பல்வேறு தேசிய இனங்களும் ஒர் அரசாய் இருக்கும் போதும், இருக்கின்ற வரையிலும் மார்க்சியவாதிகள் எந்த நிலைமையிலும் கூட்டரசுக் கோட்பாட்டையோ, அதிகாரப் பரவலையோ ஆதரித்து நிற்க மாட்டார்கள்." என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதற்கு மாறாக லெனின் கூறியது போல் "முழுக்க முழுக்க ஜனநாயக மையத்துவத்தையே ஆதரித்து" நிற்கவேண்டும். அதாவது லெனின் விளக்குவது போல் "ஜனநாயக மையத்துவத்தை வட்டார சுயாட்சியையும் அதனுடன் விசேசப் பொருளாதார, சமுதாய நிலைமைகளையும் வாழும் மக்களது திட்டவட்டமான தேசிய இன இயைபினையும் இன்ன பிறவற்றையும் கொண்ட பிராந்தியங்களுக்குத் தன்னாட்சியையும் மறுக்கவில்லை என்பது மட்டுமல்ல, முன்னதையும் பின்னதையும் அத்தியாவசியமெனக் கூறி இரண்டையும் கோருகின்றது." என்றார். இந்த வகையில் சுயநிர்ணயத்தை முன்வைக்கவேண்டும். ஜனநாயக மையத்துவம் அல்லாத தீர்வுகளை எதிர்த்து, ஒன்றுபட்ட சர்வதேசியத்தை முன்னிறுத்தி பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும்.
தொடரும்
1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)
2. இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும்? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 2)
3. லெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம்!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)
4.முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானதே சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 4)