கடந்த காலத்தில் போட்டுத் தள்ளியவர்கள் முன்வைத்த அரசியல் அவதூறுகளான பிரச்சார அரசியல். அன்று அவதூறுகள் மூலம் யாரை, ஏன், எதற்காக போட்டுத் தள்ளினர் என்பதை ஆராய்ந்தால், இன்றைய அவதூறு அரசியலை இனம் கண்டு கொள்ளமுடியும்.
முன்வைக்கும் அவதூறுகளுக்கு ஆதாரம் கோட்டால், ஒருநாளும் பதில் இருக்காது. கிட்லரின் பிரச்சார மந்திரி கோயபல்ஸ் கூறியது போல், ஒரு பொய்யை மீள மீளக் கூறுவதன் மூலம் பொய்யை உண்மையாக்குவது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு இப்படித்தான் மக்களை தயார்ப்படுத்தினார்கள். ஜெர்மனிய பாராளுமன்றத்தை எரித்த நாசிகள், அதை பிறர் மீது குற்றம் சாட்டி ஒடுக்கினர்;. இது வரலாறு.
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியபடி அன்னிய சக்திகளின் கைப்பொம்மையாக இயங்கிய இயக்கங்கள், தாம் அல்லாத மற்றைய இயக்கங்கள் பற்றியும், தம் இயக்கத்திற்குள் கேள்வியை எழுப்புபவர்களுக்கு எதிராக, பிரச்சார அரசியலாக செய்தது அவதூறுகளே. அதில் ஊறித் திளைத்தவர்கள், இன்றும் அதையே அரசியலாக கட்டமைக்கின்றனர்.
தமிழ் தேர்தல் அரசியலில் "துரோகி" என்று, தாம் அல்லாத மாற்று அரசியலை அவதூறு மூலம் முத்திரை குத்திய அரசியலே, இன்று வரை காணப்படுகின்றது. இது எமது சமூகத்தில் ஜனநாயக மறுப்பிற்கான அரசியல் சிந்தனைமுறையாக காணப்படுகின்றது. அன்று தமிழ் தேசிய தேர்தல் அரசியலில் தமது போட்டியாளரை ஒழித்துக்கட்ட கையாண்ட அரசியல் "துரோகி" என்ற, அவதூறு அடையாளம். இதுதான் பின்னால் இயக்க அரசியலிலும் கையாளப்பட்டது. இன்றுவரை தமிழ் அரசியலை வழிநடத்துவதும், இந்த அரசியல் தான். தமிழ் ஊடகவியல் கூட இப்படித்தான் புளுத்துக் கிடக்கின்றது.