பிரிட்டிஸ் காலனியவாதிகள் இலங்கை மக்களை பிரித்தாளக் கையாண்ட ஆட்சியதிகாரப் பகிர்வுமுறை என்பது, இனரீதியானது. இனரீதியான பிரதிநிதித்துவம் மூலம், இலங்கை மக்களைப் பிரித்தாண்டனர்.
காலனிக்கு பிந்தைய காலனிய கறுப்பு அடிமைகளின் ஆட்சி, அதே இனரீதியான ஆட்சியமைப்பு முறையையே தொடர்ந்தனர். ஆட்சியை தமக்குள் இனரீதியாக பிரித்துக் கொண்டவர்கள், தத்தம் பங்குக்கு தம் இனம் சார்ந்து இனவாதத்தை விதைத்தனர். இதில் யாரும், சளைத்தவர்களல்ல.
இப்படி உண்மை இருக்க, இனவாதத்தையும் - இனவொடுக்குமுறையையும் சிங்கள ஒடுக்கும் வர்க்கம் கண்டுபிடித்ததல்ல, மாறாக காலனிய காலத்தில் காலனியவாதிகளால் வித்திடப்பட்டது. காலனிய காலத்திலும், காலனியத்துக்கு பின்னும், தமிழ் - சிங்கள ஒடுக்கும் வர்க்கங்கள், அதே இனவாதத்தையே அரசியலாக்கினர். இனவாதத்தை விதைப்பதில் எந்தவகையிலும் ஒன்றுக்கொன்று குறைந்ததாக கருதுவது, ஒன்றைக் குற்றஞ்சாட்டுவது வரலாற்றுத் திரிபு. இப்படிப்பட்ட வரலாற்று சூழலிலும், நீட்சியிலும் தமிழ்மக்கள் மத்தியில் இனவாதத்தை வீரியமாக்கவே, இனவாத தமிழ் பல்கலைக்கழகம் முன்வைக்கப்பட்டு கோரப்பட்டது.