Language Selection

புதிய ஜனநாயகம் 2010

புதுவை வடமங்கலத்திலுள்ள இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து நிலவிவரும் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர் அய்யனார் 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் குறைகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு வழங்கப்பட்ட 10 நாட்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் 15.09.2010 அன்று ஆலைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் எழில் தலைமை உரையாற்றினார். தோழர் முத்துக்கிருஷ்ணன், தோழர் லோகநாதன் கண்டன உரையாற்றினர். பு.மா.இ.மு. புதுவை மாநில அமைப்பாளர் தோழர் கலை மற்றும் பு.ஜ.தொ.மு. புதுவை மாநிலப் பொருளாளர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருவதையும் நமது வரிப்பணத்தில் கொழுத்து வருவதையும் அதற்கு துணைநிற்கும் ஓட்டுக்கட்சித் துரோகிகளையும் அம்பலப்படுத்திப் பேசினார்கள்.

மாற்றுத் தொழிற்சங்கத்தை அம்பலப்படுத்தியும், சாதிரீதியாக தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் தோழர்கள் பேசியதும், தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கமாய் அணிதிரண்டு நக்சல்பாரிப் பாதையில் போராட வேண்டும் என்று அறைகூவி அழைத்ததும் தொழிலாளர் மத்தியில் புதுத்தெம்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ.தொ.மு., புதுவை.

""விலைவாசி உயர்வு, பன்னாட்டுத் தொழில் கழகங்களின் ஆலைகளில் தொழிற்சங்கங்கள் நிறுவும் உரிமை, 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு போன்ற உரிமைகள், ஒப்பந்த வேலைமுறை ஒழிப்பு, ஊக வாணிபத்துக்குத் தடை, தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலைக் கைவிடுதல்'' முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு.; எச்.எம்.எஸ்., உள்ளிட்ட எட்டு மையத் தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 7ந் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

 

அயோத்தியில் இந்துவெறியர்களால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இத்தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது, சமரசத் தீர்வு காண்பதற்கு இன்னும் ஒரு வாய்ப்பளிக்கலாம் என்று கூறி, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட ஒரு வாரம் தடைவிதித்து உத்தரவிட்டு மீண்டும் இழுத்தடித்தது, உச்ச நீதிமன்றம்.

 

விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

ஈராண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாடே குலுங்குகிறது. பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஏறத்தாழ 20 லட்சம் பேர் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் அன்று செயலிழந்து முடமாகிப் போயின. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு நாடெங்கும்  220-க்கும் மேற்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டங்களை  நடத்தியுள்ளனர்.

1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?

பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப்   போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்களில் ஒன்றான ‘இந்தியத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry) ‘2025-இல் தமிழகம்’ -(Tamilnadu Vision 2025) என்றொரு அறிக்கையை 2008-இல் வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (Price Water Coopers) என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.

தன்னுடைய சாதனைகளையும் தகுதியையும் இந்த தேசம் நியாயமாக மதிப்பிட்டுப் பார்த்திருக்கும் பட்சத்தில், காந்தி – நேரு வரிசையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவராகத் தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்து. இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக அவர் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன் ஒன்றையே தனது நலனாகக் கருதுகின்ற, ஏகாதிபத்தியத்தின் கையாள்தான் நாம் அறிந்த காங்கிரசு.

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள்  முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

இந்தியாவின் முக்கியமான தொழில்துறையும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுமான ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பருத்தி நூலிழையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதே இந்த நெருக்கடிக்குக் காரணம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கேண்டி (350 கிலோ) 23,000 ரூபாயாக இருந்த பஞ்சின்  (சங்கர் 6 என்ற பருத்தி ரகம்)சந்தை விலை, இன்று 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

உ.பி. மாநிலத்தின் காசியாபாத் மாவட்டக் கருவூல அதிகாரிகளும் நீதிபதிகளும் கூட்டுச் சேர்ந்து,  கடைநிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து  ரூ.34.56 கோடியைச் சட்டவிரோதமாக மோசடி செய்து சுருட்டி ஏப்பம் விட்டனர். கருவூல அதிகாரியான அஷுடோஷ் அஸ்தானா என்பவனுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து,  நீதிபதிகளும் கருவூல அதிகாரிகளும் இம்மோசடிக்கு உடந்தையாக இருந்து பணத்தைப் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர். 2001-இலிருந்து 2008-வரை நடந்துள்ள இந்த மோசடி மெதுவாகக் கசிந்து ஏப்ரல் 2008-இல் அஸ்தானா கைது செய்யப்பட்டான். அவனுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பயங்கரவாத ராஜபக்சே கும்பல், இப்போது ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களை நிறுவி சிங்களக் குடியேற்றத்தை நடத்தி வருகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்படவில்லை. சிறையிடப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் ஊடகவியலாளர்களும் இன்னமும் விடுவிக்கப்படவுமில்லை.


ஐ.நா. அவையின் அறிக்கையின்படி, பசியால் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65- ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 37 கோடி நபர்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 40 சதவீதத்தினர் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாக உள்ளனர். இவை இந்திய மக்களின் ஏழ்மையையும், அவல நிலையையும் காட்டும் புள்ளி விவரங்கள்.


தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் - அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.


முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த போலீசு எஸ்.பி பிரேம்குமாரை, 2.8.2010 அன்று, மாரக்கண்டேய கட்ஜு, சி.பி.தாகுர் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விடுதலை செய்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நீதிபதிகளுக்குக் கும்பிடு போட்டார், பிரேம்குமார்.


‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!", "இப்பொழுதே வேண்டும் விடுதலை!" என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. "இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது" என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.