Language Selection

சமூகவியலாளர்கள்

Ambedkar எனது காலத்தில் ஓர் அமைச்சரிடமிருந்து மற்றொரு அமைச்சருக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன. நான் எப்போதுமே ஒதுக்கப்பட்டே வந்தேன். பல அமைச்சர்களிடம் இரண்டு அல்லது மூன்று துறைகள் கொடுக்கப்பட்டன. என்னைப் போன்றே மற்றவர்களும் கடும் பணிகளை செய்யக் காத்திருந்தனர். யாரேனும் ஓர் அமைச்சர் சில நாட்களுக்கு வெளிநாடு சென்றிருக்கும்போது, அவரது துறை தற்காலிகமாகக் கூட எனக்குத் தரப்படுவதில்லை, அரசாங்கப் பணிகளை அமைச்சர்களிடம் பகிர்ந்தளிப்பதில் என்ன அடிப்படைக் கோட்பாட்டை பிரதமர் பின்பற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதே எனக்கு கடினமாக இருந்தது. அது திறமையா? நம்பிக்கையா? நட்பு முறையா? செல்வாக்கா? வெளியுறவுத்துறைக் குழு அல்லது பாதுகாப்புத் துறைக் குழு போன்ற அமைச்சரவையின் முக்கியமான குழுக்களில் ஓர் உறுப்பினராகக்கூட நான் நியமிக்கப்படவில்லை.

 

பொருளாதார விவகாரக் குழு அமைக்கப்பட்ட போது பொருளாதாரம் மற்றும் நிதித் துறைகளில் நான் குறிப்பாகப் பெரிதும் தேர்ச்சிப் பெற்றவன் என்ற கண்ணோட்டத்தில், இக்குழுவில் எனக்குப் பணி தரப்பட்டு அமர்த்தப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். பிரதமர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோதுதான் நான் அப்பணியில் அமைச்சரவையில் அமர்த்தப்பட்டேன். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அவர் என்னைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பின்னர் நடைபெற்ற புனரமைப்பில் எனது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நான் எதிர்த்ததால்தான் கிடைத்தது.

 

இது தொடர்பாக நான் ஒருபோதும் பிரதமரிடம் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பதை அவரே ஒப்புக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அமைச்சரவைக்குள் நடைபெறும் அரசியல் அதிகாரப் போட்டிகளிலோ, காலி இடங்கள் ஏற்படும்போது அத்துறைகளை அபகரித்துக் கொள்ளும் விளையாட்டிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த விஷயத்தில் எனக்கு தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உணராதிருப்பது, மனிதத் தன்மையற்றதாக இருந்திருக்கும்.

 

அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளச் செய்த மற்றொரு விஷயத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பானதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக அரசாங்க சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்து சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை. நான் பதவியிலிருந்து வெளியேறிய 1946ஆம் ஆண்டு எனக்கும், பட்டியல் சாதியினரிலே தலைமையை ஏற்றிருந்த உறுப்பினர்களுக்கும் மிகப் பெரிய கவலையை அளித்த ஓர் ஆண்டாக அது இருந்தது.

 

பட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்த விஷயத்தில், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து பிரிட்டிஷார் பின்வாங்கி விட்டனர். மேலும் தங்களுக்காக அரசியல் நிர்ணய சபை என்ன செய்யும் என்பது பற்றி பட்டியல் சாதியினர் எதையும் அறிந்திருக்கவில்லை. கவலையளித்த இக்காலகட்டத்தில் அய்க்கிய நாடுகள் அவைக்கு வழங்குவதற்காக, பட்டியல் சாதியினரின் நிலை குறித்து ஓர் அறிக்கையை நான் தயாரித்திருந்தேன். ஆனால் அதை நான் அய்.நா. அவையில் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் நிர்ணய சபையும் வருங்கால நாடாளுமன்றமும் இந்த விஷயம் குறித்து ஒரு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பது உகந்தது என்று நான் உணர்ந்தேன்.

 

பட்டியல் சாதியினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்கு நிறைவளிக்கவில்லை. இருப்பினும் அரசாங்கம் அவற்றை பயனுறுதியுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். பட்டியல் சாதியின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? எனக்குத் தெரிந்தவரை அது பழைய நிலையிலேயே இருக்கிறது. அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்பு இருந்தது போலவே, இன்றளவும் இருந்து வருகின்றன. டில்லி மற்றும் பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, சாதி இந்துக்கள் தங்களுக்கு இழைத்து வரும் கொடூரங்கள், இது தொடர்பான தங்களது புகார்களைப் பதிவு செய்ய மறுத்து வரும் காவல் துறையினரின் விபரீத போக்கு குறித்தும் உள்ளம் உருக்கும் சோகக் கதைகளைக் கூறினர். இத்தகைய நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை என்னால் கூற முடியும்.

 

- தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1318

Ambedkar மனித சமூகத்தின் அரசாங்கம், மிகவும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை அடைந்துள்ளது. கொடுங்கோல் மன்னர்களின் எதேச்சதிகாரத்தை, மனித சமூகத்தின் அரசாங்கம் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. நீண்ட நெடிய ரத்தப் போராட்டத்திற்குப் பிறகு இந்த அமைப்பு தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற புதிய அரசமைப்பு அமர்ந்தது. அரசாங்கக் கட்டமைப்பில் இதுதான் முடிந்த முடிவு என்றும் கருதப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும், சுதந்திரத்தையும், சொத்துரிமையையும், நல்வாழ்வையும் அளிக்கும் புத்துலகத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தியது. இத்தகைய நம்பிக்கைகளுக்குப் போதிய ஆதாரங்களும் இருந்தன.நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களின் குரலை எதிரொலிக்க சட்டமன்றம் இருக்கிறது. அந்தச் சட்டமன்றத்திற்குக் கீழ், அதன் ஆணைக்கு உட்பட்டதாக நிர்வாகத் துறை இருக்கிறது. சட்டமன்றத்திற்கும், நிர்வாகத் துறைக்கும் மேல் அவை இரண்டையும் கண்காணிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அவற்றை வைத்திருக்கவும் நீதித்துறை இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்திற்குரிய எல்லா அம்சங்களையும் பெற்றுள்ளது. அதாவது, மக்களால் மக்களைக் கொண்டு மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற தன்மையை அது கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகம் உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு நூற்றாண்டு முடிவதற்குள்ளாகவே அதனை எதிர்த்துக் குரல் எழுப்பப்பட்டு வருவது, ஓரளவு வியப்புக்குரிய செய்தியாகவே இருக்கிறது.

 

இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக அதிருப்தியடையாத நாடுகள் வெகு குறைவாகவே உள்ளன என்றுகூடச் சொல்லலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய அதிருப்திக்கும், மனக்குறைவுக்கும் காரணம் என்ன? இது, ஆய்வுக்குரிய கேள்வியாகும். இப்பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டிய அவசர அவசியம், வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் அதிகம் உணரப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. “நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வெளியே தெரிவதைப் போல, அது சிறப்பான ஒன்றல்ல” என்று இந்தியர்களிடம் சொல்வதற்கு, மிகுந்த துணிச்சலுடன் ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார்.

 

நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியுற்றது ஏன்? சர்வாதிகாரிகள் உள்ள நாட்டில் அது தோல்வி அடைந்ததற்கு, அது மெதுவாக இயங்கியதே காரணம். எத்தகைய விரைவு நடவடிக்கையையும் அது தாமதப்படுத்துகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், நிர்வாகத் துறைக்கு சட்டமன்றம் முட்டுக்கட்டைப் போடக்கூடும். நிர்வாகத் துறையின் பாதையில் சட்டமன்றம் குறுக்கிடாமல் இருந்தாலும், நீதித்துறை குறுக்கிட்டு, அதன் சட்டங்களைச் செல்லாதவை என்று அறிவிக்கக் கூடும்! அதே நேரம், சர்வாதிகாரம் சுதந்திரமாகச் செயல்படவும், நாடாளுமன்ற ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இதனால்தான் சர்வாதிகாகள் ஆளும் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் மதிப்பிழந்த ஒரு கோட்பாடாகக் கருதப்படுகிறது.

 

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சர்வாதிகாரிகள் மட்டுமே எதிர்த்தால், அது பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான அவர்களது சாட்சியம் உண்மையில் ஒரு சாட்சியமே அல்ல. உண்மையில், நாடாளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்திற்கு ஒரு வலிமையான தடை அரணாக இருக்கும் என்பதால், அது வரவேற்கப்படவே செய்யும். எனினும், சர்வாதிகாரத்தை எதிர்க்கும் மக்கள் வாழும் நாடுகளில்கூட, கெட்ட வாய்ப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக மிகுந்த அதிருப்தியே நிலவுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து பெரிதும் வருத்தத்திற்குரிய செய்தி இது.

 

ஒன்றை மட்டும் பொதுவான முறையில் கூறலாம். சுதந்திரத்திற்கும், சொத்துரிமைக்கும், நல்வாழ்வுக்குமான உரிமையை பெருந்திரளான மக்களுக்கு உறுதி செய்ய அது தவறிவிட்டதே இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இது உண்மை எனில், இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தத் தோல்விக்கு தவறான சித்தாந்தமோ அல்லது தவறான அமைப்பு முறையோ அல்லது இவை இரண்டுமே காரணமாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்து. நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்துச் சீர்குலைத்துவிட்ட தவறான சித்தாந்தத்திற்கு, இங்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறினால் போதும் என்று நினைக்கிறேன்.

 

தொடரும்

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.

பல்வேறு வகையான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, மக்களாட்சி என்பவற்றுடன் சர்வாதிகார ஆட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவது ஜனநாயகம். இருப்பினும், ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றிய கருத்தொற்றுமை இல்லை. ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தவிர வேறொன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மூன்று தவறுகளை செய்கிறார்கள்.

 

 முதல் தவறு : அரசு என்பது சமூகத்திலிருந்து முற்றிலும் வேறானது, தனிப்பட்டது என்று நம்புவது. உண்மையில் அரசு, சமூகத்திலிருந்து வேறானதும், தனிப்பட்டதும் அல்ல. அரசு என்பது சமூகத்தின் பல அமைப்புகளில் ஒன்று. சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளில் சிலவற்றைச் செய்யுமாறு சமூகம் அரசுக்கு குறிப்பிட்டுக் கொடுக்கிறது.

 

இரண்டாவது தவறு, ஓர் அரசு சமூகத்தின் இறுதி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அரசு வேரூன்றியிருக்கும் சமூகம் ஜனநாயக சமூகமாக இருந்தாலன்றி இது நடவாது என்பதையும் உணரத் தவறுவது. சமூகம் ஜனநாயக முறையில் இல்லையென்றால், ஓர் அரசு ஜனநாயக அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. சமூகம் இரண்டு வர்க்கங்களாக, ஆளுவோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் பிரிக்கப்பட்டிருந்தால், அரசு ஆளும் வர்க்கத்தின் அரசாகத்தான் இருக்கும்.

 

மூன்றாவது தவறு! அரசு நல்லதாக இருக்குமா, கெட்டதாக இருக்குமா, ஜனநாயகமாக இருக்குமா, அல்லது ஜனநாயகமற்றதாக இருக்குமா என்பது, சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை, குறிப்பாக சிவில் சர்வீஸ் அமைப்பைப் பொறுத்தது என்பதை மறந்துவிடுவதாகும். சிவில் சர்வீஸ் பணியில் உள்ளவர்கள் எத்தகைய சமூகச் சூழலில் வளர்ந்தார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். சமூகச் சூழல் ஜனநாயகமற்றதாக இருந்தால், அரசும் ஜனநாயகமற்றதாகவே இருக்கும்.

 

ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் ஜனநாயக வடிவிலான அரசு ஆபத்தான அரசாக மாறிவிடக்கூடும்.

 

ஒரு சமூகத்தில் உள்ள தனி நபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தால், ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய விசுவாசம் வேறெதையும் விட, முதன்மையாகத் தன் வகுப்புக்கே அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், தனிமைப்பட்ட தன் வகுப்பில் வாழ்ந்து கொண்டு, வகுப்பு உணர்வு பெற்று, தன்னுடைய வகுப்பின் நலனை மற்ற வகுப்புகளின் நலனுக்கு மேலாகக் கருதினால், தன்னுடைய வகுப்பின் நலனை முன்னேற்றுவதற்காக சட்டத்தையும் நீதியையும் வக்கிரமாகப் பயன்படுத்துவதற்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இந்த நோக்கத்துக்காகத் தன்னுடைய வகுப்பைச் சாராத மற்றவர்களுக்கு எதிராக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் எப்போதும் பாரபட்சத்துடன் செயல்பட்டால், ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய முடியும்? வகுப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு, சமூக விரோத உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் அதிகமாக இருந்தால் அரசு நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்யும் கடமையை நிறைவேற்றுவது கடினம்.

 

இப்படிப்பட்ட சமூகத்தில், அரசு தன் வடிவத்தில் மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாக இருந்தாலும், ஒருபோதும் மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. அது ஒரு வகுப்பால், ஒரு வகுப்புக்காக நடத்தப்படும் அரசாகவே இருக்கும். ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால் தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும்.

 

இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர்கள் சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும். நல்ல அரசின் பணி எந்த அளவுக்கு அதன் குடிமக்களின் மனப்பான்மையையும், அறநெறிப்பண்பையும் பொறுத்துள்ளது என்பது உணரப்படாதது வருந்தத்தக்கது. ஜனநாயகம் ஓர் அரசியல் எந்திரம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக அமைப்பு மட்டும் கூட அல்ல; அது ஒரு மனப்பான்மை அல்லது வாழ்க்கைத் தத்துவம் ஆகும்.

 

ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால்தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர் ஜனநாயக சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும்.

 

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 4, பக்கம் : 282

நன்றி:தலித்முரசு

Ambedkar மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். திரண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கம் அரசியலே வேண்டாம் என்று சபதம் எடுத்துக் கொள்வதால், அந்த வர்க்கமே அழிந்து போகும் என்றுதான் சொல்வேன். நாம் இதுவரை சமூக சீர்திருத்தத்தை நோக்கியே நமது முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அவற்றைப் பொருளாதாரச் சீர்திருத்தம் நோக்கியும் செலுத்த வேண்டிய அவசியத்தை நாம் மறந்திருந்தோம் அல்லது அரைகுறையாகக் கருத்தில் கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் அனுபவித்த எல்லா கொடுமைகளுக்கும் மூல காரணம் பொதுவானது. நம்மீது சமூக, பொருளாதார ஆதிக்கம் செலுத்துபவர்கள் நமக்குச் சொந்தமான, நம் கையில் இருக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டதுதான் அந்த மூல காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அரசியலுக்கு வருவெதன்றால் கட்சி அமைத்துக் கொள்வது என்று பொருள். கட்சிப் பின்னணி இல்லாத அரசியல் வீண் வேலை. சுயேச்சையாக இருப்பேன் என்று சில அரசியல்வாதிகள் சொல்லலாம். அவர்கள் தங்கள் நிலத்தை தனிமையில் உழுது கொண்டு இருக்க வேண்டியதுதான். அத்தகைய அரசியல்வாதிகளை நான் எப்போதுமே நம்புவது இல்லை. யாரோடும் சேர முடியாத ஓர் அரசியல்வாதி, எந்தப் பயன் நடைமுறை நோக்கத்துக்கும் பயன்பட மாட்டான். அவனால் எதையும் சாதிக்க முடியாது. அவனுடைய நிலத்தில் ஒரு புல்கூட முளைக்காது. பெரும்பாலான அரசியல்வாதிகள் சுயேச்சையாக இருக்க நினைப்பது, அவர்களுடைய அறிவு நேர்மையால் அல்ல; தங்களுக்கு அதிக விலை நிர்ணயித்துக் கொண்டு, தங்களைத் தாங்களே விற்றுக் கொள்வதற்காகத்தான். இதற்காகத்தான் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுதந்திரமாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அரசியலில் சுயேச்சை பற்றிய என் மதிப்பீடும், அனுபவமும் இதுதான்; கட்சியில்லாமல் அர்த்தமுள்ள அரசியல் நடத்த முடியாது என்பதே என் கருத்து.

 

எந்தக் கட்சியில் சேருவது என்பது அடுத்த கேள்வி. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. காங்கிரசில் சேரலாமா? அப்படிச் சேர்ந்தால் தொழிலாளி வர்க்கத்துக்கு உதவிகரமாக இருக்க முடியுமா? காங்கிரஸ் அல்லாத ஒரு தனி அமைப்பு, சுதந்திரமான அரசியல் அமைப்பு தொழிலாளர்களுக்குத் தேவை. இக்கருத்தைத் தொழிலாளர் தலைவர்கள் சிலர் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்பவர்கள், சோஷலிஸ்டுக்கான தொழிலாளர்கள் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும் என்னும் கருத்துடையவர்கள். அந்தத் தொழிலாளர் அமைப்பு காங்கிரசுக்குள்ளேயே செயல்படலாம் என்று அவர்கள் நினைக்கலாம். அதே போல் இன்னொரு பிரிவு, தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்கிறது. அவர்களின் பிரதிநிதி திரு. ராய் அவர்களின் கருத்துப்படி, காங்கிரசுக்குள்ளேயும் சரி வெளியிலேயும் சரி, சொந்தமாகத் தனி அமைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பவர்கள் அவர்கள். இந்த இரண்டு பிரிவினரோடும் நாம் முற்றாக மாறுபட வேண்டும் எனக் கருதுகிறேன்.

 

நிறைய பேருக்கு திரு. ராய் ஒரு புதிர். எனக்கும் அப்படித்தான். ஒரு கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்குத் தனி அரசியல் அமைப்பு இருக்கக் கூடாது என்கிறார்! எத்தகைய மோசமான முரண்பாடு இது! இந்தக் கருத்து நிலையை கேள்விப்பட்டால், கல்லறையில் இருக்கும் லெனின்கூட புரண்டு படுப்பார். இந்திய அரசியலின் முழு முதல் நோக்கம், ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது என்று சொல்லும் ராய் – இப்படி ஒரு கருத்து நிலைக்கு எப்படிதான் நியாயம் கற்பிப்பாரோ? அவரது கருத்தில் எந்தப் பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏகாதிபத்தியம் மறைந்தால், இந்திய முதலாளித்துவமும் அடையாளம் தெரியாமல் நொறுங்கிவிடும் என்பதை நிரூபித்தால், ராயின் கருத்தை நாம் ஏற்க முடியும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுப் போய் விடுகிறார்கள் என்றாலும் இங்கிருக்கும் நிலப்பிரபுக்களும், ஆலை முதலாளிகளும் வட்டி வணிகர்களும் மக்களைச் சுரண்டுவது நின்று விடவா போகிறது? இந்த அடிப்படை எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை. வெள்ளைக்காரன் போன பிறகும் தொழிலாளி தன்னுடைய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடித்தான் தீர வேண்டும். அதற்காக அவன் அமைப்பு அடிப்படையில் திரள்வது அவசியத்திலும் அவசியம். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் இதைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

 

ஏகாதிபத்தியத்தைப் போலவே முதலாளித்துவத்தோடும் போரிட வேண்டும். அதற்காக ஒன்று திரள வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படித் திரளும் தொழிலாளர் அமைப்பு, காங்கிரசின் உள் அமைப்பாகத்தான் இயங்க வேண்டும் என்னும் நிபந்தனையை யும் அவர்கள் விதிக்கிறார்கள். காங்கிரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தக் கட்டாயக் கூட்டணியின் அவசியம்தான் எனக்குப் புரியவில்லை.

 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)

நன்றி:தலித்முரசு

1936 ஆம் ஆண்டு லாகூர் “ஜாத்பட்தோடக் மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட -

ஆனால், பேசப்படாத உரை

இம்மாநாட்டுக்கு டாக்டர் அம்பேத்கர் தயாரித்த உரை, மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாததால், இக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டது

“உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்”
- புத்தர்

“பகுத்தறியாதவன் ஒரு மூட நம்பிக்கைவாதி
பகுத்தறிய முடியாதவன் ஒரு முட்டாள்
பகுத்தறியத் துணியாதவன் ஓர் அடிமை”
- எச். டிரம்மண்ட்

சாதியை ஒழிக்கும் வழி என்ன?
இரண்டாம் பதிப்பின் முன்னுரை

லாகூர் ஜாத்பட்தோடக் மண்டலுக்காக நான் தயாரித்த உரை, இந்துக்களை மனதில் இருத்தியே தயாரிக்கப்பட்டது. அதற்கு இந்துக்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் அச்சிட்ட 1500 படிகளும் இரண்டே மாதத்தில் தீர்ந்து விட்டன. குஜராத்தியிலும் தமிழிலும் உரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் பதிப்புக்கான தேவை இன்னும் குறையாமல் உள்ளது. இந்தத் தேவையை நிறைவு செய்வதற்காக, இரண்டாம் பதிப்பை வெளியிடுவது அவசியமாயிற்று. உரையை ஒரு வரலாற்றுப் பதிவு என்ற முறையிலும் உத்வேகத்துடன் வெளிப்பட்டுள்ள அதன் வடிவத்தைப் பாதுகாக்கவும், ஏற்கனவே இருந்த சொற்பொழிவு அமைப்பிலேயே வெளியிட்டு விட்டேன். பலரும் கேட்டுக் கொண்டது போல் நேரடி விவரண அமைப்புக்கு மாற்றவில்லை.

 

இந்தப் பதிப்பில் இரு பிற்சேர்க்கைகளை இணைத்துள்ளேன். முதல் பிற்சேர்க்கையில் என் உரையை மதிப்பிடும் முகமாக ‘அரிஜன்’ இதழில் திரு. காந்தி எழுதிய இரண்டு கட்டுரைகளையும், ஜாத்பட்தோடக் மண்டலைச் சேர்ந்த திரு. சான்ட் ராமுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் சேர்த்துள்ளேன். இரண்டாம் பிற்சேர்க்கையில், திரு. காந்தியின் மேற்படி கட்டுரைகளுக்கு என் கருத்துரைகளைப் பதிலாகத் தந்துள்ளேன்.

 

திரு. காந்தியைப் போலவே பலரும் என் உரையில் உள்ள கருத்துக்களை, எதிர் நிலையில் நின்று விமர்சித்துள்ளனர். ஆனால், திரு. காந்திக்கு மட்டும் நான் பதில் தந்துள்ளேன். ஏன்? பதில் தந்தாக வேண்டிய அளவுக்கு அவரது கட்டுரையின் செய்தி கனமுள்ளது அல்ல. ஆனால், இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிக்கிறார்கள். அவர் தன் வாயைத் திறந்ததுமே எல்லோருமே தம் வாயை மூடிவிட வேண்டும்; தெருவில் போகும் நாய் கூட குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு - அவரது வார்த்தைகள் பொய்யா மொழியாக இந்துக்களால் கொள்ளப்படுகிறது.

 

ஆனால், கடவுளாக இருந்தாலும், அவன் குற்றமற்றவன் அல்ல என்று நேருக்கு நேர் நின்று வாதிடத் துணியும் கலகக் காரர்களுக்கு இந்த உலகம் கடமைப்பட்டுள்ளது. முற்போக்கான எந்தவொரு சமுதாயமும் தன் கலகக்காரர்களுக்கு தர வேண்டிய மதிப்பு குறித்து எனக்குக் கவலை இல்லை. இந்துக்கள் - இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் மற்ற இந்தியர்களின் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது. இதை அவர்கள் உணரும் படிச் செய்துவிட்டால், அதுவே எனக்குப் போதும்.

 

1937 பி. ஆர். அம்பேத்கர்

மூன்றாம் பதிப்பின் முன்னுரைஇந்த உரையின் இரண்டாம் பதிப்பு, 1937 இல் வெளியிடப்பட்டது. அது, மிகக் குறுகிய காலத்தில் தீர்ந்து போனது. புது பதிப்பு வெளியிட வேண்டிய தேவை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. 1917 ஆண்டு மே மாதத்தில், இந்திய அரும்பொருள் ஆய்வேட்டில் வெளியான என்னுடைய ‘இந்தியாவில் சாதிகள் : அவற்றின் அமைப்பியக்கம், தோற்றுவாய், வளர்ச்சி’ என்ற கட்டுரையையும் இதனுடன் இணைத்து - அதற்கேற்ப இந்த உரையை மாற்றி அமைக்க எண்ணி இருந்தேன். ஆனால், அதற்குரிய நேரமும் கிட்டவில்லை; செய்து முடிக்கும் நிலையிலும் நான் இல்லை. இந்நூலை உடனடியாக வெளியிடக் கோரி, பொது மக்களின் கோரிக்கை அதிகரித்து வந்தது. எனவே, இந்தப் பதிப்பு, இரண்டாம் பதிப்பின் மறுபதிப்பாகவே வெளிவருகிறது.இந்த உரையின் செய்தி, இவ்வளவு தூரத்துக்குப் பரவியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த உரை வெளியிடப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு இது உதவும் என்று நம்புகிறேன்.22, பிருதிவிராஜ் சாலை பி. ஆர். அம்பேத்கர்
புது டெல்லி

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE