மக்களை அணிதிரட்டாத, சமூகச் செயற்பாட்டின் பெயரில் தம்மைத் தாம் முன்னிறுத்திய விதை குழுமத்துக்குள், ஆணாதிக்க வக்கிரங்கள் புளுத்து நெளிகின்றது. சுயவிளக்கத்தில் அமைந்த தர்க்கங்களுடன் அமைந்த ஆணாதிக்கக் கோட்பாடுகளுடன் தம்மைத்தாம் மூடிமறைக்க, ஆணாதிக்க பெண் ஒழுக்கத்தை முகமூடியாக்கிக் கொள்ள முனைகின்றது.
இத்தகைய ஆணாதிக்க வக்கிரங்கள், மீண்டும் மீண்டும் சமூகத்தை முன்னிறுத்திக் கொண்டு நடத்துகின்ற பொறுக்கித்தனமான ஆணாதிக்க பாலியல் சுரண்டல்கள் தொடருகின்றது.
இந்தப் பொறுக்கித்தனம் ஆணாதிக்கச் சமூக அமைப்பில் வாழ்ந்தபடி, தம்மை அதற்கு வெளியில் முன்னிறுத்தி வாழ்வதாக பாசாங்கு செய்கின்றது. சுரண்டல் சமூக அமைப்பிற்கு ஏற்ப பெண்ணைப் பாலியல் ரீதியாக சுரண்டுவதும், அதை மூடிமறைக்க ஒன்றுக்கு மேற்பட்ட காதல் குறித்து கோட்பாடுகளையும் தர்க்கங்களையும் முன்வைக்கின்றனர். இதன் மூலம் பெண்ணின் இணங்கிய பாலியல் நடத்தைகள் மூலம், தங்கள் ஆணாதிக்க பாலியல் புலம்பல்களை - வக்கிரங்களை தீர்த்துக் கொள்வதும் தொடருகின்றது.
பெண்ணின் தேர்வுச் சுதந்திரம், பெண்ணின் காதல் சுதந்திரம், சுதந்திரமான பெண்ணின் பாலியல் நடத்தை என்று வகுப்பெடுக்கும் ஆணாதிக்கத்தின் குறிக்கோள் என்பது, விதவிதமான பெண்களை நுகர்வதுதான். ஆணாதிக்கத்தால் மறுக்கப்படும் பெண்ணின் சுதந்திரம், ஜனநாயகத்தை, சுதந்திரமான நுகர்வுக்குத் தயார் செய்து கொண்டு வந்து, இரையாக்கிய தங்களது வக்கிரத்தை விதை குழுமம் பூசி மெழுக விரும்புகின்றது.
காதல் என்பது என்ன?
ஆணுக்கு - பெண்ணுக்கு (இது ஆண் - ஆண், பெண் - பெண், தொடங்கி அனைத்துக்கும்) இடையிலான பாலியல் நடவடிக்கையா!? இப்படி குறுக்கிக் காட்டுகின்ற ஆணாதிக்கக் கண்ணோட்டமே, இன்று வரைமுறையற்ற பாலியல் நுகர்வுக் கலாச்சாரமாகும். இது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காதலை முன்மொழிகின்றது. அதாவது ஒரே நேரத்தில் பல பெண்களுடன் பாலியல் தொடர்பை முன்மொழிகின்றது. இதை நியாயப்படுத்த முற்போக்கு முகமூடிகள்.
காதல் என்பது என்ன? இருவர் தம்மைத்தாம் இணைத்துக் கொள்ளும் சமூக நடவடிக்கை. இருவரும் இணைந்த சமூகத்தன்மை கொண்ட, முன்னோக்கிய சமூகச் செயற்பாடு. தம்மைத் தாம் இணைத்துக் கொள்வதன் மூலம், தமது முந்தைய தன்னிலைவாத இருப்பை மறுத்து முன்னேறிய சமூகப் படிநிலைக்கு தம்மைத்தாம் உயர்த்திக் கொள்வது. இது தான் காதல். இத்தகைய இயற்கையான மனிதனின் இயங்கியல் வளர்ச்சி விதியை, பாலியல் தூண்டுகின்றது. இந்தச் சமூக நடிவடிக்கையின் போது குழந்தை பெறும்போது, தாயும் குழந்தையும் புதிய சமூகப் பரிணாமத்தை எட்டிக்கொள்வது நடக்கின்றது. இந்த மனிதத்தன்மைக்கான இயங்கியல் வளர்ச்சி, காதல் மூலம் தான் நிகழ்கின்றது.
இயற்கை தூண்டும் இயங்கியல் வளர்ச்சிக்கு ஏற்ப மனிதன் முன்னேறிப் பயணிப்பதை காதல் தூண்டுகின்றது. உற்பத்திக்கு வெளியில் மனிதத்தன்மையின் வளர்ச்சி விதி, காதலில் தான் அடங்கி இருக்கின்றது.
தனிமனிதன் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து விலகி, சமூகமாக தன்னை உணர்வது - வாழ்வது காதல் மூலமே சாத்தியமாகின்றது. தனிச்சொத்துடமை என்ற தன்னலமான குறுகிய வட்டத்தை, காதல் - குழந்தை பெற்றுக்கொள்ளும் போது சமூகச் செயற்பாடாக மாறி தனியுடமையிலான குறுகிய கண்ணோட்டத்தை தகர்க்கின்றது.
இதை விடுத்துக் காதலை வெறும் பாலியல் நடத்தையாக குறுக்குகின்ற கண்ணோட்டம், பாலியல் சுரண்டலாக மாறுகின்றது. இதுதான் பாலியல் நவீன ஆணாதிக்க கோட்பாடாகும். விதவிதமாக வரைமுறையின்றி நுகரக் கோருகின்ற சந்தை அமைப்பில், விதவிதமாக பெண்ணை வரைமுறையின்றி நுகரக் கோருகின்றது ஆணாதிக்க சமூக அமைப்பு. விதை குழுமத்தில் இதுதான் நடந்தது.
வரைமுறையற்ற ஆணாதிக்க நுகர்வுக்கு பெண்களைச் சம்மதிக்க வைக்க, அதற்கான இடமாக விதை குழுமம் இருந்துள்ளது. ஆணாதிக்க ஆண்கள் இந்தச் சூழலை தமக்கு வாய்ப்பாக்கிக் கொள்வதன் மூலம், தங்கள் ஆணாதிக்க நுகர்வு வக்கிரங்களை தீர்த்துக் கொள்கின்றனர். இதற்குப் பெண்ணியம், சமூகச் செயற்பாடு, மரபுகளைத் தேடுதல் என்று, ஆணாதிக்கவாதிகள் பல வர்ண வேசங்களை போட்டுக்கொண்டு கும்பலுடன் கும்பலாக களத்தில் இறங்குகின்றனர். கம்யூனிசம், முற்போக்கு, பெண்ணியம் என்ற முகமூடிகளை அணிந்து கொள்ளவும் இவர்கள் தயங்குவதில்லை.
இந்த ஆணாதிக்கமானது மக்களுடன் இணைந்த சமூக நடைமுறையில் இருந்து விலகியே தன்னை முன்னிறுத்துகின்றது. தம்மை நடைமுறைவாதிகளாகக் காட்டிக்கொள்ள இத்தகைய குழுக்கள், தன்னார்வ வரைமுறைக்குள் தங்கள் முகமூடிகளை அணிந்து கொள்வதன் மூலம் தம்மை உண்மையானவர்களாக காட்டிக்கொள்கின்றனர். இந்தப் போலித்தனமானது வெளிப்படையானது. இந்தப் போலி நடைமுறை என்பது மக்களை அணிதிரட்டும் நடைமுறைகளில் இருந்து தங்களை விலக்கி கொள்வதுடன், மக்களில் இருந்து விலகி இருக்கும் கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். இந்தப் போலி நடைமுறை மூலம், மக்களை ஏமாற்றுவது நடக்கின்றது. இதை சமூக நடைமுறை என்று நம்பி விட்டில்பூச்சிகளாக சிக்குகின்றவர்கள் பலியாடாக்கப்படுவது நடந்தேறுகின்றது. இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் வாய்திறக்க முடியாத வண்ணம், ஆணாதிக்க ஒழுக்கக் கோட்பாட்டைக் காட்டி அடங்கிப் போ என்று கூறுவது ஆணாதிக்கத்துக்கு ஆதரவான விதை குழுமத்தின் தர்க்கமாக முன்வைக்கப்படுகின்றது.
ஒன்றுக்கு மேற்பட்ட காதல்
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் என்பது, நவீன ஆணாதிக்க சுரண்டல் வடிவத்தின் வக்கிரமே. நவீன சுரண்டல் வடிவம் என்பது, வரைமுறையற்ற நுகர்வைத் தூண்டுவது தான். விதவிதமான நுகர்வை – ரசனையைத் தூண்டி, வரைமுறையின்றி நுகரக் கோரும் இன்றைய சமூக அமைப்பில், பாலியலைக் கூட நுகர்வுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அணுகக் கோருகின்றது.
இந்த வகையில் ஆணாதிக்கம் மட்டுமின்றி - முதலாளித்துவ பெண்ணியக் கண்ணோட்டம் கூட இதற்கு அமைவாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு செயற்படும் போது, அதை மூடிமறைக்க ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காதலை முன்மொழிகின்றது.
சமூகத் தன்மையற்ற இந்தக் காதலில், எந்தச் சமூக அறமும் இருப்பதில்லை. பாலியல் நுகர்வு, சுரண்டல் தொடங்கி மோசடி வரை அரங்கேறுவது தான், இந்தக் காதலின் பின்னிருக்கின்ற உணர்வும் - குறிக்கோளுமாகும்.
பெண்ணை மையப்படுத்தி ஆதிச்சமூகத்தில் பெண்ணின் தேர்வாக இருந்த வரைமுறையற்ற பாலியல் உறவு, ஆணாதிக்கச் சமூக அமைப்பில் பெண்ணை அடிமைப்படுத்தி பாலியல் சுரண்டலாக மாறிய போது, இதற்கு எதிராக பெண் தேர்ந்தெடுத்த பாலியல் உறவுமுறை தான் காதல். இது ஆணாதிக்கத் தனியுடமையை மறுக்கின்ற, சமூக உறவை அடிப்படையாகக் கொண்ட காதல்.
இந்தக் காதல் பெண்ணின் தேர்வாகவும் - சமூக உறவாகவும் பரிணமித்தது. இங்கு பெண் மட்டும் தான் சமூக உறவாக்கத்திற்கான இயற்கையான தன்மையை, தன் உடல் சார்ந்து கொண்டிருந்தாள். இது தனியுடமையிலான ஆணாதிக்கச் சுரண்டல் சமூக அமைப்பில், சமூகத் தன்மையைப் பேணுகின்றது.
இந்தச் சமூகத் தன்மையை அழித்துவிடுகின்ற ஆணாதிக்கச் சுரண்டல் கண்ணோட்டம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காதலை முன்மொழிகின்றது. காதலைக் கொண்டு தனது ஆணாதிக்க நுகர்வை அடையத் துடிக்கின்றது.
இந்தக் காதல் பெண்ணுடனான உறவின் போது பல பெண்களுடன் உறவில் இருப்பதை முன்மொழிவதில்லை. அதை மூடிமறைக்கின்றது. அதேநேரம் பெண் பல ஆண்களுடன் உறவில் இருப்பதை அங்கீகரிப்பதில்லை. அப்படிப்பட்ட பெண்ணுக்கு பட்டம் கொடுக்கின்றது.
இத்தகைய பாலியல் சுரண்டல்கள் தான் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் விதை குழுமத்தின் தர்க்கங்களாகும். இதைத்தான் தனது சுயகோட்பாடாக விதை குழுமம் முன்தள்ளுகின்றது.
17.03.2024
ஒன்றுக்கு மேற்பட்ட காதலும் - ஆணாதிக்கச் சுரண்டலும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode