ஊடக ஜனநாயகம் என்பது பாசிசத்தை ஆதரிப்பதல்ல. மக்களை ஒடுக்கும் அதிகாரத்தை தொழுவதல்ல. பாசிசத்துக்கும், ஒடுக்கும் அதிகாரத்துக்கும் ஜனநாயகம் உண்டு என்பது, கடைந்தெடுத்த ஒடுக்குமுறையை மூடிமறைத்து நியாயப்படுத்துவதே.
புலிகள் பாசிச இயக்கமல்ல, ஜனநாயக இயக்கம் என்றால், அதை ஊடகவியலாளர் பிரஸ்நொவ் (Breesnove), சுவாஸ்திகாவிடம் கேள்வியாக முன்வைத்திருக்க முடியும். ஆனால் புலிகள் ஜனநாயக இயக்கமல்ல என்பதால், ஊடகவியலாளர் பிரஸ்நொவ் ஜனநாயக அரசியல் சார்ந்து கேள்வியை முன்வைக்க முடியவில்லை.
மாறாக புலிப் பாசிசத்தை பாதுகாக்கும் குதர்க்கத்தில், தர்க்கத்தில் இருந்துதான் கேள்விகள் அனைத்தும் கேட்கப்பட்டது. ஆனால் சுவாஸ்திகாவிடம் அவைகள் தோற்றுப் போனது.
தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்று சுற்றிச்சுற்றி கூறுகின்ற தர்க்கமும், குதர்க்கமும், புலிகளின் முன்னைய பித்தலாட்டத்தை தூசு தட்டி எடுத்து தர்க்கமாக வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தனர் என்பது உண்மையென்றால், எதற்காக புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயகத்தைப் பறித்து பாசிசத்தை முன்வைத்தனர்? தமிழ் மக்களின் ஜனநாயகம் என்பது, புலிப் பாசிசத்துக்கு எதிரானதாகவிருந்தது. மாற்றுக் கருத்தைத் தடுக்க, மாற்றுக் கருத்துள்ள அனைவரையும் கொன்று குவித்தனர். இது தான் வரலாறு.
1986 இல் இதே யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
1."மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்",
2."மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்று கோரிய போது,
இது "புலிகளை அரசியல் அனாதையாக்கும் கோரிக்கை" என்று தங்கள் துண்டுப்பிரசுரம் மூலம் கூறியதுடன், மக்களின் ஜனநாயகத்தை மறுத்து ஒடுக்கினர். இதை முன்வைத்த மாணவர் போராட்டங்களை ஒடுக்கி, மாணவர் தலைவர்களைக் கொன்றதல்லவா வரலாறு.
அரசியல் அனாதையான புலிப் பாசிட்டுகளையா தமிழ்மக்களும், மாணவர்களும் ஆதரித்தனர்!? தமிழ்மக்களை துப்பாக்கி முனையில் ஒடுக்கி, தமிழ் மக்களை மந்தைகளாக்கி மேயவிட்டு, அதைக் காட்டி தமிழ்மக்களின் ஆதரவு என்று கூறினர். இதை ஊடகவியலாளர் என்ற போர்வையில் முன்வைத்து தர்க்கிக்கின்ற கருத்து, அதே பாசிசத்தின் சிந்தனை வழிவந்தது தான்.
சரி, இன்று தமிழ்மக்கள் புலிகளை ஆதரிக்கின்றனர் என்ற விதண்டவாதம் தர்க்கரீதியாக உண்மையென்றால், புலிகளைப் பாசிஸ்டுக்கள் என்று சொல்லிவிட்டால் எதுவும் நடந்துவிடாதல்லவா! எதற்காக கருத்துச் சுதந்திரத்தை தடைசெய்கின்றீர்கள்? எதற்காக குதர்க்கமான தர்க்கங்கள்? மக்களைக் கண்டு அஞ்சுகின்ற அதே பாசிச சக்திகள், தமிழ் மக்களைச் சிந்திக்க முடியாத முட்டாள்களாக வைத்திருக்கவும் - பாசிசக் கருத்தியலை தொடர்ந்து தக்கவைக்கவும் விரும்புகின்றனர்.
ஜனநாயகத்தின் பெயரில் இயங்கும் ஊடகவியலும், கருத்தியலும் …., பாசிசத்தையும், அதன் ஜனநாயக விரோதக் கூறுகளையும் தக்க வைக்க முயல்வது தர்க்கமுமல்ல குதர்க்கமே. புலிகள் பாசிச இயக்கமல்ல என்றால், உங்கள் தர்க்கவியலின்படி புலிகள் ஜனநாயக இயக்கமென்றால், அதை முன்வைத்து பேசும் அறமும் - கேள்விகளும் முக்கியமானது.
இந்த அறமும் கேள்வியும் ஊடகவியலாளருக்கே இருக்காத போது, பாசிச சமூகத்தில் கிணற்று தவளைகளாகப் பிறந்து வளர்ந்த இன்றைய தலைமுறை தொடர்ந்து சிந்திக்காமல் இருக்க, ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கின்றனர். இதைத்தான் பல்கலைக்கழக மாணவர்களின் பெயரில், தமிழினவாத லும்பன்கள் மூலம் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றுகின்றனர்.
05.11.2023