Language Selection

சிறப்பு கட்டுரைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நியூட்டன் மரியநாயகம்

வரலாற்றுப் புரிதலும் நானும்

“இன்று சமூகத்தில் ஆளுமை /ஆதிக்கம் செலுத்தும் கடந்த காலம் பற்றிய கதைகளையும், அது சார்ந்த, ஆதிக்க சக்திகளின் வரலாற்று உருவங்களையும்/ வேடங்களையும்/ பாத்திரங்களையும், கலையின் குரூரமான பக்கங்களையும் அம்பலப்படுத்தி – ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை வெளிக்கொணர்வதே உண்மையான வரலாற்றுப் பதிவாளனின் கடைமையாகும்…”

இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன் எங்கோ வாசித்ததாக நினைவு. இந்த வரிகள் வரலாற்றைப் பதிவதை “தொழிலாக” கொண்ட ஒருவரின் கடைமையைப் பற்றியே சொல்லப் படுகிறதென்பதே எனது விளக்கம். இந்த வகையில் நான் தொழில் முறை சார் வரலாற்று ஆய்வாளன் அல்லன்.

ஆனாலும், இந்த வரிகள் சொல்லவரும் உள்ளடக்கம் என்னை கவர்ந்ததற்கான காரணம், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை பதிவு செய்ய நினைப்பவர் செய்ய வேண்டியதென்ன என்பதை துல்லியமாக கூறிநிற்கிறது.

வரலாறென்பது; “வென்றவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களால் வடிவமைக்கப்பட்டு, அவர்களின் நலன்களை முன்நிறுத்துவதற்குத் தகுந்தபடி, அவர்கள் பற்றிய வரலாற்று விம்பங்களை உருவாக்குவது” என்பதே இன்று வரையான வரலாற்றுப் பதிவுகளின் உள்ளடக்கமாக இருந்து வருகிறது. இப்படி வரலாறு பற்றிக் கூறுவது இன்று தேய்வழக்கான ஒரு விடயமென்றும் கூறலாம்.

கடந்த காலனிய காலத்துக்குப் பின்னான காலகட்டத்தில்; அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும் ஓரளவுக்கேனும் தங்கள் சுய வரலாறைப் பதிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. உண்மையான ரோமப்பேரசின் வரலாறு அதன் ஆதிக்கசக்திகளைப் பற்றி மட்டுமல்ல; அதன் கீழ் அடிமைகளாக இருந்தோரின் வரலாறாகவும் தான் இருக்க முடியும். அதேபோலவே, தாச்மஹாலின் முழுமையான வரலாறென்பது அதை கட்டிய அடிமைகள் பற்றியதும் தான்.

ஆதிக்கம்-அதிகாரம் சாராத மக்கள்; ஒடுக்குமுறைக்கு ஆளான சமூகக்குழுக்கள் தமது வரலாறைப் பெரும்பாலும் பதிவிடுவதில்லை என்ற விடையம், இயல்பானதொரு அறிவு.
இப்போ, அவர்கள் தமது வரலாறையும் பதியமுனையும் போது, அவர்களுக்கு அதிகாரத்தில் உள்ள கட்டமைப்புகள் மற்றும் அதன் நிறுவனங்களால் பாரிய தடைகள் முன்னெழும். இதெல்லாவற்றையும் உடைத்து; மேலே கூறியது போல ஆதிக்க சக்திகளின் வரலாறுகளை அம்பலப்படுத்தியே ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு எழுதப்பட முடியும்.

அதேவேளை, வரலாறென்பது 100 வீதம் அப்பட்டமான விஞ்ஞானமுமல்ல. அத்துடன், வரலாறு கூறுபவரின் அகநிலை சார்ந்தும்; அவரின் சமுக, பொருளாதார, கலாச்சார , புவியியல் ரீதியான இருத்தல் சார்ந்தும் வரலாற்றுப் பதிவின் தன்மை வெளிப்படும. இதுவே எனக்கு தெரிந்த வரலாற்று பதிவுகள் பற்றிய அறிவின் சாரமும்; எனது நிலைப்பாடும்.

” 1950 – 80 முற்பகுதி வரையான நாட்களில் சாதிக் கொடுமைக்கு எதிரான பல போராட்டங்கள் தீவுப்பகுதியில் நடந்தன. எனக்குத் தெரிந்த தகவல்கள் – நேரடி அனுபவத்தின்படி; தீவுபகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களே தமது பிரச்சனைகளுக்காகச் சுயமாகப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இடதுசாரிய இயக்கங்களின் -கட்சிகளின் சாதி எதிர்ப்பு போராட்டங்கள் போல, தீவக ஒடுக்கபட்ட மக்களின் போராட்ட வரலாறுகள் எழுதப்படவுமில்லை. பதியப்படவுமில்லை. வாய்வழியாக கூறிவந்த சாதியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறுகள்; 80-களின் தேசியப்போராட்ட எழுற்சியுடன் மறக்கடிக்கபட்டன.

தீவகத்திலிருந்து 90-களின் இடப்பெயர்வு, போர், அது கொடுத்த அவலங்கள், இறப்புகள் அந்த வரலாறுகளை கிட்டத் தட்ட முற்று முழுதாக அழித்து விட்டதென்றே கூறலாம். இன்று அந்த வரலாறுகள் சார்ந்து கூறப்படுபவை பேசப்படுபவை அதிகாரத்தின் பக்கமாக சாய்ந்து நின்றோர் பார்வையில், அனுபவத்தில் கூறப்படும் வரலாறுகளாகும். மற்றயது, ஒடுக்கப்ட்ட மக்களுடன் சேர்ந்து நின்ற ஒடுக்கும் சாதிகளை சேர்ந்த “முற்போக்கானவர்களின்” பார்வையில் கூறப்படும் வரலாறாகும். இந்த இரு பகுதியினரும் அந்த காலத்திலே பத்திரிகை, மற்றும் அன்றிருந்த தொடர்பு சாதனங்கள், சாதியத்துக்கு எதிராகத் தீவகத்துக்கு வெளியில் போராடிய கட்சிகள்- இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். சமூக நிறுவனகளுடன் தொடர்பில் இருந்தார்கள். ஆதலினால், இவர்களின் வரலாறுகள் – அவர்களின் சுய பார்வையில் -கண்ணோட்டத்தில் -கோட்ப்பாடுகள் சார்ந்து பதியப்பட்டுள்ளது.

நீங்கள் ஒடுக்குவீர்கள், நீங்கள் தான் அதற்கெதிராக போராடுவீர்கள், நீங்கள் தான் எங்களை விடுவிக்க உயிர் கொடுத்த தியாகிகள்… இது உங்கள் வரலாற்றுப் பார்வை….. அப்போ, ….. நாங்கள் யார்?

இன்று, மேற்க்கூறிய இரு பகுதியினரின் போராட்டக் கதைகளே வரலாறாக கூறப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு ஆதரவாக நின்றோர் இன்று தமிழ் தேசிய ஆதரவாளர்களாக, 80-களின் பின் உருவெடுத்தார்கள். குறிப்பாக அன்று தமிழரசுக் கட்சி, பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களாக, உறுப்பினர்களாக அவர்கள் இருந்ததனால் அது அவர்களுக்கு சுலபமாகியது. ஒடுக்கும் சாதிகளைச் சேர்ந்த “முற்போக்கானவர்களின்” வரலாறு; அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களின் மேய்ப்பர்களாக, தியாகிகளாக , சிந்தனையாளர்களாக, விடுதலையாளர்களாகக் கட்டமைப்பதில் இன்று வந்து நிற்கிறது. இவ்வாறு கட்டமைக்கும் நிலையில் ஒடுக்கப்பட்ட நாம் மந்தைகளாக, அடிமைகளாக, சிந்தனையற்ற மூடர்களாக, உணர்ச்சியற்ற சடலங்களாக இந்த சமூகத்தில் நடமாடியதா எங்கள் வரலாற்றுப் பாத்திரம்?!!!

தளையசிங்கமும் தண்ணீர் கிணறும்

எனது இந்த இணையப் பதிவீயில் 19.03.2021 அன்று நான் வெளியிட்ட “கிணற்றுக் கதையும், சாதிய எதிர்ப்பு போராளி தளையசிங்கமும்” என்ற சிறு பதிவு https://raseriart.wordpress.com/2021/03/18/கிணற்றுக்-கதையும்-சாதிய/ தமிழ் இலக்கியப் பரப்பை சேர்ந்த சிலரால் விமர்சிக்கப்படுகிறது. நன்று. ஆதாரம் கோரபடுகிறது. என்னைப் பற்றிய அவறூறுகளும், தவறான கருத்துக்களும் பரப்பபடுகிறது. மன்னிப்புக் கோரி- கட்டுரையை அகற்றும் படியும் சில இடைத் தரகர்கள் மூலம் கோரப்பட்டுள்ளது. இல்லையேல், இன்னும் சில நாட்களில் வீடியோ- ஆடியோ ஆதாரங்களும் வெளியிட்டு என்னை “அம்பலபடுத்த” போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

என்னைக் கட்டுரை சார்ந்து விமர்சிப்போர்; ஏதோ அவர்களிடமிருந்து நான் அவர்களுக்கு விரும்பியதொன்றை பறித்து விட்டதுபோல பதிவிடுகின்றார்கள். பலருக்கு சுந்தர ராமசாமி எழுதிய சில வரியிலான தளையசிங்கத்தின் வாழ்கை வரலாறு – பின் விக்கிப்பீடியாவில் மேலும் குறுக்கிப் பதியப்பட்ட வரலாறே என்மீதான விமர்சனத்தின் அடிப்படையாக உள்ளது. மிகச் சிலர் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சு. வில்வரத்தினம் சில தகவல்களை கூறியதாகவும் பதிவிடுகின்றனர்.

//புங்குடுதீவில் பல ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஆன்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 1972ல் ‘மெய்யுள்’ என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மறைந்தார். // – மு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம் (1984)

மேலே உள்ள சுந்தர ராமசாமியின் வரிகளுடன் எனது கட்டுரை பெரிதும் முரண்படவில்லை. எனது கட்டுரையில் அடிநாதமே “உண்மையாகவே போராடியவர்கள்- போராடிய மக்களின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வது முறையான காரியமல்ல. நல்லதண்ணீர்க் கிணற்றுப் போராட்டத்தின் “நாயகன்” தளையசிங்கமும் அல்ல. போராடிய மக்களே” என்பதாகும் . அதேவேளை, அவரைச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய போராளியாக தளையசிங்கத்தை சித்தரித்து, சாதிய, சமூக விடுதலைக்காக வாழ்வையே அர்பணித்தவர்களை சிறுமைப் படுத்துவதையே விமர்சனத்துக்கு உட்படுத்துகிறேன்.

இதனை முன்நிறுத்தியே எனது கட்டுரையில் கூடுமான அளவுக்கு அந்த நல்லதண்ணீர்க் கிணற்றுப் போராட்ட காலத்தின் அரசியல், சமுகப் பின்னணியையும், அதுசார்ந்த வரலாறையும் பதிவிட்டேன். சுந்தர ராமசாமி மற்றும் விக்கிப்பீடியாவை விட விரிவானதே எனது பதிவு. அதில், எந்த இடத்திலும் தளையசிங்கம் அந்த போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என்று நான் மறுக்கவில்லை. அவர் பொலிஸாரினால் தாக்கபட்டார் என்பதையும் மறுக்கவில்லை.

எங்களின் மீட்பர்கள் நீங்கள் என்று கூறுகிறீர்கள்…. அதை நான் மறுக்கிறேன்…. !

எனது கட்டுரையை விமர்சிப்போரின் அடிப்படைப் பிரச்சனை என்னவெனில் நான்; அவர்கள் இவ்வளவு காலமும் தளையசிங்கம் பற்றி வைத்திருந்த “சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி – தன் உயிரையே தியாகம் செய்த தியாகி” என்ற- இவர்கள் பலர் சுந்தர ராமசாமியின் வரிகளை வாசித்து கட்டமைத்த விம்பத்தை விமர்சித்ததேயாகும்.

எனது ஒடுக்கப்பட்ட சகோதர சமுகத்தின் போராட்ட வரலாற்றை; உங்களுக்கு தகுந்தாற்போல எழுதுவீர்கள். உங்களை கதாநாயகர்களாக விம்பப்படுத்தி- எங்களை உங்களின் பின்னால் உலவிய மந்தைகளாக சித்தரிப்பீர்கள், அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமோ?? என்னிடம் ஆதாரம் தா எனக் கேட்க்கும் நீங்கள்; எந்த ஆதாரத்தைக் கொண்டு எனது மக்களின் போராட்டத்தை உங்கள் தலைமையில் – உங்கள் வழிகாட்டலில் நடந்ததாக கூறுகிறீர்கள் ????

சுந்தர ராமசாமியின் வரிகளை முன்னிறுத்தி; எங்கள் போராட்டங்களுக்கு நீங்கள் தான் தலைவர்கள் எனக் கூறுவீர்கள். தவித்த விடாய்க்கு தண்ணீர் மறுக்கும் போது போராடக்கூட சுரணையில்லாத மக்கள் நாம் என சித்தரிப்பீர்கள். விலாசமில்லாத எங்கள் சமுகத் தலைவர்களை மேலும் மேலும் இருட்டடிப்பு செய்து, உங்களை மேன்மைப் படுத்துவீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள கொள்ள வேண்டும்?? அப்படித்தானே??!நாங்கள் உங்கள் பங்கை மறுக்கவில்லை. ஆனால், எங்கள் போராட்ட குணத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். எங்கள் வரலாறை நாங்களே எழுத விடுங்கள். எங்கள் வரலாற்றை நாம் எழுதும்போது உங்கள் விம்பங்கள் உடையத்தான் செய்யும். அதற்காக நாங்கள் பேசாதிருந்து விட முடியுமோ????

தளையசிங்கம் அவர்களின் வரலாற்றுப் பாத்திரம் எதுவோ, அதை ஒருவராலும் குறைத்து விட முடியாது. அவர் உண்மையிலே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார் என்றால் அதை வரலாறு என்றும் மறந்தோ- மறுத்தோ விடப்போவதில்லை. அதேவேளை, எங்கள் வரலாறை எழுதும் எமது உரிமையையும் நான் விட்டுத்தரப் போவதில்லை. திகதிகள், ஆண்டு, எப்படி இறந்தார் என்ற விடையங்களை நீங்கள் யாரவது துல்லியமாக முன்வைத்தால்; அதை என் பதிவிலிருந்து மாற்றுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அதேவேளை, மறுபடியும் கூறுகிறேன்! எனது ஒடுக்கப்பட்ட சகோதர சமுகத்தின் போராட்ட வரலாற்றை; உங்களுக்கு தக்கது போல எழுதுவதையும், உங்களை கதாநாயகர்களாக விம்பப்படுத்தி- எங்களை உங்களின் பின்னால் உலவிய மந்தைகளாக சித்தரிப்பதையும் விமர்சிக்கும் பகுதியை நான் நீக்கப்போவதில்லை.

வீடியோ பதிவுகளாயோ, தனிமனிதர்க்களின் சாட்சியங்களோ எனது பதிவுக்கு எதிராக முன்னிறுத்துவது உங்கள் உரிமை. இதற்கு மேல் இவ் விடையம் பற்றி கூற மேலதிகமாக ஒன்றுமில்லை என்னிடம்.

நிறைவாக;

எனது பதிவின் உள்ளடக்கத்தை – நோக்கத்தை சரியாக கணித்த நிர்மலா ராஜசிங்கம் அவர்களின் முகபுத்தக பதிவு .

//தளையசிங்கம் சாதிப்பிரச்சினை சம்பவம் ஒன்றில் போலிசிடம் அடி வாங்கியது பற்றி யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவர் மாத்திரமல்ல. அவ்விடத்தில் நினற இளைஞரான வில்வரத்தினமும் குறிப்பாக தலித் மக்களூம் தான் அடிக்கப்பட்டனர் என்ற விடயம் இப்பொழுது தான் எனக்கு தெரிந்தது. போலிஸ் தலித் மக்களுக்கு எவ்வளவு அடித்திருப்பார்கள்? இதை ஒரு பொருட்டாக யாருமே பேசுவதில்லை. தளையசிஙகம் அடி விழுந்தபிறகு இரண்டு வருடங்களாக மரணப்படுக்கையிலிருந்து அதன் காரணமாக இறந்து போனார், என்பதையே நான் சிலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அவரைச் சுற்றி ஒரு ஹேலோ ஒளிவட்டம் பிரகாசித்துக் கொண்டிருந்த மாதிரி அதாவது தனது வாழ்க்கையை சாதீயத்துக்கெதிராகப் போராடி, மாய்த்துக் கொண்டவர் மாதிரியும் ஒரு பிம்பம் வளர்க்கப்ட்டிருந்தது.

ஆனால் நண்பர் ஒருவர் தளையசிங்கம் சாவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பும் பத்திரிகை நடத்திக்கொண்டும் கொழும்பில் தன்னோடு ஒரு மேடையில் பேசியதாகவும் அண்மையில் எனக்கு கூறியிருந்தார். ஜீவமுரளி தளையசிங்கத்தின் எழுத்திலிருந்து எடுத்துக்காட்டிய பகுதி நான் நினைத்திருந்ததை விட மிக மோசமான சாதீய மனோ பாவத்திலிருந்துள்ளார் என்பதைக் காட்டுகின்றது. இது ஒன்றும் வரலாறெழுதும் முனைவு கிடையாது. இது நேரடி ஆதாரம், அவரின் எழுத்திலிருந்தே வருகிறது. அத்துடன் நியூட்டன் மரிய நாயகம் எழுதிய கட்டுரையில் இது ஒரு சம்பவம் தான். தீவுப்படுதியில் தலித் மக்கள் எத்தனையோ தரம் ப கிளர்ந்தெழுந்து போராடியிருக்கிறார்கள் எனக் கூறுகிறார். அது நம்பக் கூடியதாகவிருக்கின்றது, காரணம் அது உலக வரலாற்று நியதி.

உலகமுழுவதும் வறிய நிலமற்ற விவசாயிக்ள் மில்லெனியா காலமாக கிளர்ந்தெழுந்த்திருக்கிறார்கள். கடைசி நூறு வருடமாக இயங்கும் கம்மியுனிஸ்ட் கட்சிகள் தாம் தாம் இந்தப் போராட்டங்களை வழி நடாத்தியவர்கள் எனககூறி அந்த வரலாற்றெல்லாவற்றுக்கும் குத்தகை எடுக்கமுடியாது. அத்துடன் தளைய‌சிங்கம் கைலாசபதி பற்றி அவர் ஒரு ‘பேய்’ போனறு ஆட்டிப்படைத்தார் என்று கூறியதை மேற்கோள் காட்டி இந்த நிகழ்வுக்கு பப்ளிசிட்டி செய்திருந்ததை நான் பார்த்தேன். கைலாசபதி நவீன தமிழிலக்கிய வரலாற்றில் முக்கிய ஆய்வாளரும் கோட் பாட்டாளர் விமர்சகர். மிக மதிப்பும் அன்பும் அவருக்கிருந்தது, இத்தகைய ஒருவர் பற்றி இடதுசாரி இயக்கத்திள்ளேயே காத்திரமான விமார்சனமும் இருந்துள்ளது. ஆனால் தளையசிங்கத்தின் இந்த வாசகங்கள் அவர் கைலாசபதியின் பிம்பத்தினால் ஏற்பட்ட ஒரு காழ்ப்புணர்விலேற்பட்டது மாதிரியும் அவர் தான் இதனால் ஆட்டிப்படைக்கப் பட்ட மாதிரியும் தெரிகின்றது, இவற்றையெல்லாம் ஒன்று சேர வைத்தே மதிப்பீடுகள் செய்ய வேண்டும். அத்துடன் ‘திண்ணை’ போன்ற ‘கொஸிப்’ பதிவுகளை ஆதாரமாக எடுத்தால் பிழையான முடிவுகளில் தான் தான் கொண்டு போய்விடும். சும்மா ‘அவன் சொன்னான்’ ‘இவன் சொன்னான்’ என்ற அளவில் தான் அத்தகைய தகவல்கள் உள்ளன.// 19.03.2021


தமயந்தியின் பதிவொன்று


வாழத்தான் போராடினோம்
பட்டோலை
எழுதி வைக்கவல்ல…
=================

ஒடுக்கியவர் யார்?
ஒருக்கப் பட்டவர் யார்?
ஒடுக்குமுறைக்கு எதிராகப்
போராடவேண்டிய தேவை யாருக்கு?

போராட்ட வரலாறுகளையெல்லாம்
எழுத வேண்டியது யார்?
எழுதிக் கொண்டிருப்பவர்கள் யார்?

எங்கள் எலும்புகளை
நீங்களே உடைப்பீர்கள்,
நீங்களே எங்களை ஒடுக்குவீர்கள்,
நீங்களே எங்களை
விடுதலையும் செய்வீர்கள்.
நீங்களே எங்கள்
வரலாறுகளையும்
உங்களுக்கு உகந்ததாக
எழுதுவீர்கள்.

வரலாற்றை
எழுதி வைக்கவென்றா
திரண்டெழுந்து போராடினோம்?
வாழத்தான் போராடினோம்.

எங்கள்
கலைகளின் வரலாறுகளையும்,
போராட்ட வரலாறுகளையும்
நீங்கள்தானே எழுதி வருகிறீர்கள்….?

வாழப் போராடியதை
குறித்து வைக்கத்தானும்
கல்வி கற்க விட்டீர்களா எம்மை?

ஒரு சமூக, பொருளாதார,
பண்பாட்டு வரலாற்று ஆய்வுகளைச்
செய்வது எப்படி என்ற
அடிப்படை அறிவுகூட
வேண்டாமோ உமக்கு?

ஓம்,
நீங்கள் அருகில் வந்து
எட்டிப் பார்த்தீர்கள்தான்,
எங்களுக்கு விழுந்த அடிகளில்
ஒன்றிரண்டு
உங்கள் முதுகிலும் விழுந்ததுதான்.
யார் மறுத்தார்?

அதற்காக…?
நீங்களே எங்கள்
மீட்பர்களாக இருந்து
மாய்ந்தீர்கள் என்பதை
எங்கள் வாய்களுக்குள் திணிப்பதில்
என்ன நியாயம்?

ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள்
ஒரு கட்டத்தில் தங்களை
மீட்கவெனத் தன்னெழுச்சியாக
எழுவார்கள் என்ற
சர்வசாதாரண அறிவுகூடவா
இல்லாமற் போயிற்று.

தீயை முதல் கண்டவனென்ன
தீட்டி வைத்துவிட்டா போனான்
யாழ்ப்பாணத்துப் பனைவடலியில்?

யார் நீ என நீங்கள் என்னை
விசாரிப்பது கேட்கிறது.
காலகாலமாகத் தண்ணிக்காகவும்,
கல்விக்காகவும்,
உழைப்புக்குரிய கூலிக்காகவும்,
சாமிக்காகவும் போராடிய
கூட்டத்தாரிலிருந்து
வந்தவன் தான் நான்.

நாங்கள் ஒடுக்கப் பட்டதையும்,
நாங்கள் போராடியதையும்
நாங்கள்தானே சொல்ல முடியும்?
எங்களை ஒடுக்கியவர்களை
சாட்சிகளென
பல்லக்கில் தூக்கிவைத்து
வருவதென்ன நீங்கள்?

அவர்களை வைத்து
நீங்களே கோயில்கள் கட்டுங்கள்,
திருவிழாக்கள் நடாத்துங்கள்,
கடைகள் பரத்துங்கள்,
இலாபத்தைக் காணுங்கள்.
கும்பிடச் சொல்லி
எங்களை கூப்பிடுவதென்ன?

புழுகுவதும் புரட்டுவதும் ?
காற்றில் கயிறு திரிப்பதுவும் யார்?
காலகாலமாக நீங்கள்தானே…..
இது உங்களுக்குத் தெரியாதா என்ன?

வாருங்கள்
செத்துப்போனவர்கள் போக
மிச்சப்பேர்
இன்னும் இருக்கிறார்கள்
• தமயந்தி .

தொடர்புடைய கட்டுரைகள்

கிணற்றுக் கதையும் “சாதிய எதிர்ப்பு ” போராளி மு .தளையசிங்கமும்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது