Language Selection

பகுதி 8

1983ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரத்தில் சென்னை டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள்

1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப்பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில் உமாமகேஸ்வரன், கண்ணன் என்ற சோதிஸ்வரன், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைதுசெய்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தார்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இவர்கள் கைது செய்யப்பட்டதோடு இலங்கை போலீசாரோடு தமிழ்நாட்டு டி.ஜி.பி மோகனதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பதற்ற சூழலில் பல உள்ளூர் தலைவர்களின் ஆலோசனைப்படி ஜூலை மாதம் சந்ததியார் கலைஞர் கருணாநிதியை சந்தித்த பொழுது அவரின் ஆலோசனைப்படி, பின்பு என்னையும் கூட்டிக்கொண்டு செஞ்சி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சந்தித்தோம்.

அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த டெல்லி ராஜ்யசபா எம்பி ஆன L.கணேசன் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தான் 22 ஆம் தேதி ஜூலை மாசம் டெல்லி போவதாகவும் தனக்கு முழு விபரங்களையும் கூறி உதவி செய்ய ஒருவரை தன்னோடு அனுப்பும்படி கூறினார். சந்ததியார் என்னைத்தான் அனுப்பினார்.

23ஆம் தேதி காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நான், L.கணேசன் எம்பி, செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ, திமுக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் டெல்லி பயணமானோம்.

24ஆம் தேதி மாலை டெல்லியில் இறங்கியவுடன், L.கணேசனின் டெல்லி வீட்டுக்குப்போய் விட்டு, உடன் கணேசன் எம்.பி எங்களைக் கூட்டிக்கொண்டு பாராளுமன்ற தி.மு.க அலுவலகத்திற்கு போனோம். அங்கு பல தி.மு.க எம்.பிக்கள் இருந்தார்கள். குறிப்பாக முரசொலி மாறன், வை. கோபாலசாமி, மாயத்தேவர், தி.மு.க பாராளுமன்ற குழுத் தலைவர் அண்ணன் C.T தண்டபாணி இவர்களோடு என்னை அறிமுகப்படுத்திவிட்டு, எல்.கணேசன் அண்ணா இவர்களோடு தமிழ்நாட்டு அரசாங்கம் செய்யும் சதி பற்றி ஆலோசனை நடத்தி அடுத்தநாள் பாராளுமன்றத்தில் இதுபற்றி பேச ஏற்பாடு நடத்தினார்.

அதோடு பிரதமமந்திரி இந்திரா காந்தியை சந்தித்து உமாமகேஸ்வரன் உட்பட மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என ஒரு மனு தயாரித்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

அடுத்தநாள் விடியும் போது நிலைமையே வேறு. வெலிக்கடை சிறையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் பரபரப்பாக இருந்தது. உடனடியாக எல்.கணேசன் என்னையும் செஞ்சி ராமச்சந்திரனையும் கூட்டிக்கொண்டு மற்றவர்களையும் உடன் பாராளுமன்ற தி.மு.க அலுவலகத்துக்கு வரும்படி கூறி அங்கு ஆலோசனையில் ஈடுபட்டார். உடனடியாக பாராளுமன்றத்தில் இலங்கை இனப் படுகொலையையும் சேர்த்து பேசவும் பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையாரை சந்தித்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும்படி கேட்கவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

அன்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் ராஜ்யசபா அமர்வில் என்னையும் கூட்டிக்கொண்டு போய் பார்வையாளர்கள் இடத்தில் என்னை வை.கோபால்சாமி அண்ணா அமர்த்தினார். பாராளுமன்றத்தில் கணேசன் வை.கோபால்சாமி மிக உணர்ச்சிவசமாக பேசினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரதமமந்திரி இந்திரா காந்தி அம்மையார் எழுந்து தனது கட்சிக்காரர்களை அமைதியாக இருக்கும்படி கூறி இவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்தார். பின்பு அவர் பதிலளிக்கும்போது முதல்முறையாக இலங்கையில் நடப்பது இனக்கலவரம் இல்லை, இனப்படுகொலை என பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூறினார்.

பின்பு 88ஆம் ஆண்டு வரை பல எம்.பி மார் என்னை இலங்கை விவாதம் நடக்கும்போது பாராளுமன்றத்துக்கு ராஜ்ய சபா, லோக் சபா பார்வையாளர் அரங்கில் கூட்டிக் கொண்டு போவார்கள். பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்னிடம் தான் கூடுதலாக அவ்வப்போது நடக்கும் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை குறிப்பு எடுத்துக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டு தி.மு.க எம்.பிக்கள் இலங்கை விடயமாக பரபரப்பாக இருந்த போது, 27ஆம் திகதி காலை அந்த அதிர்ச்சி செய்தி வந்தது.

திரும்பவும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை. இந்திய பாராளுமன்றமே இலங்கைப் பிரச்சினையில் பரபரப்பாக இருந்தது. வேறு எந்த விடயங்களும் பாராளுமன்றத்தில் எடுக்கவில்லை.

கலைஞரின் வேண்டுகோளின்படி டெல்லியில் மிகப் பிரம்மாண்ட எதிர்ப்பு ஊர்வலம் இலங்கை தூதுவர் ஆலயத்திற்கு முன்பாக நடத்த முடிவு செய்தனர்.

இரவோடிரவாக கணேசனின் உறவினர் பையன், நான் மற்றும் சில தமிழ் இளைஞர்கள் சேர்ந்து விடிய விடிய கருப்பு, சிவப்புதுணி வாங்கி கையாலேயே தி.மு.க கொடி தயாரித்து கிட்டத்தட்ட 150 கொடிகள். அடுத்த நாள் மிக பிரம்மாண்டமான ஊர்வலம் டெல்லி வாழ் தமிழர்கள் எல்லாப் பகுதியிலிருந்தும் வந்தார்கள்.

டெல்லி வாழ் மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு, நோர்த் அவென்யூ எம்.பி மார் குடியிருப்பில் இருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் அளவிலிருந்த சாணக்கிய puri என்ற இடத்தில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்திற்கு ஊர்வலமாக எதிர்ப்பு கோஷங்களோடு போனோம்.

நாம் அங்கும் போகும் போது எமக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் டெல்லி கிளையினர் இலங்கை அரசின் தூதுவராலயத்தின் முன்பாக மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். எம்பசியின் வெளியில் உள்ள கேட்டை உடைக்கும்அளவுக்குப் போய்விட்டார்கள்.

நான் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சென்னை வந்தபோது தான், முதல் நாள் 31ஆம் திகதி எம்.ஜி.ஆர் அவசர அவசரமாக உமாமகேஸ்வரனையும் தோழர்களையும் விடுதலை செய்தார்.

விடுதலை செய்த உடன் உமாமகேஸ்வரன் கலைஞரிடம் போகாமல் இருக்க, தனது மந்திரிசபையில் இருந்த காளிமுத்துவையும் அவரின் தம்பியையும் அனுப்பி ஜெயிலில் இருந்து நேரடியாக உமாமகேஸ்வரனை தனது தோட்டத்துக்கு கூட்டி வரச் செய்து கட்டிப்பிடித்து கவலைப்பட்டு தான் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னார். பல மாதங்கள் உமாமகேஸ்வரன் இடம் மிக நெருக்கமாக இருந்தவர் தான் எம்.ஜி.ஆர் .

எம்.ஜி.ஆர் உமாமகேஸ்வரன் கூட்டை திட்டமிட்டு பிரித்தவர் டி.ஜி.பி மோகனதாஸ்.

மேலே கூறிய சம்பவங்களுக்கு பின்பு டெல்லியில் ஏற்பட்ட தொடர்புகளால் நான் டெல்லியில் எல்.கணேசன் எம்.பி வீட்டிலும் பின்னர் ஆலடி அருணா எம்.பி வீட்டிலும் தமிழீழ மக்கள் விடுதலை கழக டில்லி அலுவலகத்தைத் திறந்து 1988 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட முடிந்தது.

பகுதி 9

நான் டெல்லியிலிருந்து வந்திறங்கிய போது இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு கொந்தளிப்பாக இருந்தது. ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள். சிறையிலிருந்து விடுதலையாகி இருந்தார்கள் உமா மகேஸ்வரன், கண்ணன், நிரஞ்சன் மூவரும். மாலையில் உமாமகேஸ்வரன் வந்து என்னை சந்தித்து டெல்லியில் நடந்த விபரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு என்னை கூட்டிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் எல்.கணேசனை சந்திக்கச் சென்றோம். அவர் பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தார். உமா அண்ணா அவரிடம் நன்றி கூறி, பழைய நண்பரான செஞ்சி ராமச்சந்திரனை சந்தித்து பேசினார். செஞ்சி ராமச்சந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் யாரையும் பிரபாகரன், உமாமகேஸ்வரன் யாரையும் முகம் கொடுத்து பேசுவதற்கு விருப்பம் இல்லை. பிற்காலத்தில் அவரை சந்தித்து பேசும்போது கூறினார் ஆரம்ப காலத்தில் தாங்கள் நல்ல உதவி செய்ததாகவும் இவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் கொலை செய்து கொண்டும் இருப்பது தாங்கள் எதிர்பார்க்காத நிகழ்வு என்றும், தான் பிரபாகரனிடம் ஒற்றுமை பற்றி பேசும்போது பிரபாகரன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வரும்போது பாலசிங்கம் தான் பிரபாகரனைக் குழப்பியது. இதெல்லாம் தங்களுக்கு மன வருத்தம் என்றும் கூறினார்.

எல்.கணேசன் அண்ணா, கலைஞரை சந்தித்து நன்றி கூறி, இன்றுள்ள நிலைமையில் கலைஞரின் ஆலோசனையை பெற சொன்னார். உமா தனியாக போய் கலைஞரை சந்தித்து உரையாடினார். கலைஞரை சந்தித்த செய்தி பத்திரிகையில் வரவும் எம்ஜிஆருக்கு எரிச்சலைக் கொடுத்தது. எம்.ஜி.ஆர். எமக்கு ஆதரவான நிலையை எடுக்க காரணம் இந்திராகாந்தி அம்மையார் இலங்கைப் பிரச்சினையில் தீவிரமாக இறங்கி விட்டதுதான். இக்காலகட்டத்தில்தான் 83 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரமே இந்திய வெளிநாட்டு உளவுத்துறை RAW அதிகாரிகள் முதன்முறையாக களத்தில் இறக்கி விடப்பட்டு இயக்கத் தலைவர்களை ரகசியமாக சந்திக்கத் தொடங்கினார்கள்.

இப்போது மாதிரி அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தால் தகவல் தொடர்புக்காக நல்ல ஒரு இடம் எங்களுக்கு தேவைப்பட்டது. உடனடியாக உமா அண்ணா என்னை கூட்டிக்கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மதிப்புக்குரிய பெரியவர் ராசாராம் அவர்களை போய் சந்தித்தோம். அவரும் எங்களை அன்போடு வரவேற்று உபசரித்தார். தன்னால் ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்ட பொழுது உமா அண்ணா பழைய சட்டமன்ற விடுதியில் (பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டல்) எமக்கு அலுவலகம் அமைக்க ஒரு அறை தர முடியுமா என கேட்டார். அவரும் உடனடியாக எமக்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார்.(சபாநாயகரின் கட்டுப்பாட்டில்தான் சட்டசபை உறுப்பினர் உறுதி எல்லாம் உள்ளன)

முதலாம் மாடியில் 84 நம்பர் ரூம் எமது இயக்கத்துக்காக ஒதுக்கி தரப்பட்டது. எல்லா வசதிகளும் நமக்குத்தான் முதல் கிடைத்தது. ஆனால் அதை கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு உடைத்து விட்டோம். வேறு எந்த ஒரு இயக்கத்துக்கும் ஒரு அரசு விடுதி கிடைக்கவில்லை. இனி நான் எழுதும் செய்திகள் வரிசை முன்பின்னாக இருக்கலாம், நினைவில் இல்லை. நடந்த சம்பவங்கள் பதிய வேண்டிய தேவை உள்ளது.

எம்.எல்.ஏ விடுதி எமது அலுவலக அறையாக மாற்றப்பட்டது. அதன் முதல் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டு, அங்கேயே தங்கியும் இருந்தேன். திருவல்லிக்கேணியில் இருந்த எமது இரகசிய இடத்தில் மாதவன் அண்ணா அங்குதான் தங்கி இருந்தார். முக்கிய ஆவணங்கள் அங்குதான் இருந்தன.

இந்திய ரா அதிகாரிகள் தகவல் தொடர்பும் எம்.எல்.ஏ ஹாஸ்டல் அலுவலகம் ஊடாகவே நடந்தன. சீலிடப்பட்ட கவர்கள் ரகசியமாக என்னிடம் கொடுக்கப்படும் நான் அதை உமா அண்ணாவிடம் கொடுத்து விடுவேன். உமா கொடுக்கும் கடிதங்கள் செய்திகளையும் ரா அதிகாரிகள் வரும்போது அவர்களிடம் கொடுத்து விடுவேன்.

மாதவன் அண்ணாவும் காலையில் வந்து விடுவார். அங்கு IB அதிகாரிகள் வந்து உமா அண்ணாவை சந்திப்பதோடு, என்னோடு, மாதவன் அண்ணாவோடும் நீண்ட நேரம் அந்த நேர இலங்கையில் நடக்கும் செய்திகளை கேட்டு கொள்வார்கள். தமிழ்நாடு உளவுத்துறை கியூ பிராஞ்ச் அதிகாரிகள் எங்களை சந்திக்க வருபவர்களை விசாரிப்பதும் எங்களை முறைத்துப் பார்ப்பது மாறி இருப்பார்கள்.

பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டல் முதல் தளத்தில் பழ.நெடுமாறன் ஐயாவின் கட்சி அலுவலகம் இருந்தது. நெடுமாறன் ஐயா எங்களைப் பார்த்து சிரித்தால் நாங்கள் சிரித்து விட்டு போய் விடுவோம். ஒருநாளும் அவரோடு போய் கதைப்பதில்லை. காரணம் அவர் பிரபாகரனுக்கு மதுரையில் உதவி செய்வதால். அந்த நேரம் நெடுமாறன் ஐயாவும் இலங்கை அரசுக்கு எதிராக படகில் இலங்கைக்குப் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அதிரடி அறிவிப்பு செய்து, போராட போனபோது, ராமேஸ்வரத்தில் என நினைக்கிறேன் அவர் போகும் படகை எம்.ஜி.ஆர் அரசு பெரிய ஓட்டை போட்டு, படகு நகராதபடி செய்துவிட்டார்கள். நெடுமாறன் அய்யாவின் போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லின் செல்வர் குமரி ஆனந்தன் போய் கலந்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தமிழ்மணி சென்னையில் ஒரு பெரிய மாணவர் போராட்டத்தை நடத்தினார்.

இப்படியான போராட்டங்கள் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்ததை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. இந்தப் போராட்டங்களில் முன்னிலை நின்றவை, எம்.ஜி.ஆர் அரசுக்கு எதிரான கட்சிகள். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம். கலைஞர் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் பெரிய போராட்டத்தை அறிவித்தார். இரண்டு நாளில் அந்தப் போராட்டம் நடக்க விருந்தது. எம்.ஜி.ஆர் ஆதரவு பத்திரிகையான சுதேசமித்திரன் என நினைக்கிறேன், அதன் ஆசிரியர் ஜெபமணி என்பவர் வந்து உமாமகேஸ்வரனை சந்தித்து சும்மா பேசிக் கொண்டிருந்தார். அவரது பத்திரிகை மாலை பத்திரிகை. அன்று மாலையில் சுதேசமித்திரன் பத்திரிகை தலைப்புச் செய்தி «விடுதலைப்புலி உமா மகேஸ்வரன் கருணாநிதிக்கு கடும் கண்டனம்.» «ரயில் மறியல் போராட்டம் தேவையற்றது. கருணாநிதி எமக்கு ஆக்கபூர்வமான வழியில் ஆதரவு தர வேண்டும்» என இச் செய்தி வந்தவுடன் எல்.கணேசன் அண்ணா எங்களை வரச் சொல்லி «என்னப்பா உமா இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார்» என கடுமையாக கேட்டார். நாங்கள் இச்செய்தி தவறு என்று கூறிவிட்டு, உமா அண்ணாவுக்கு செய்தி பற்றி அறிவித்தோம். உடனடியாக உமா அண்ணா வந்து எல்.கணேசன் அண்ணாவையும் சந்தித்துவிட்டு, உடனடியாக என்னையும் கந்தசாமியும் கூட்டிக்கொண்டு கலைஞரிடம் நேரில் போய் இது பொய் செய்தி பத்திரிகை ஆசிரியர் என்னை வந்து சந்தித்தது உண்மை. ஆனால் ரயில் மறியல் பற்றி இருவரும் பேசவில்லை. இந்தச் செய்தி வேணும் என்று போடப்பட்டது என்று கூறினார். கலைஞர் கருணாநிதி அமைதியாக எனக்கு தெரியும், இன்னும் எந்தெந்த வழிகளில் உங்களை சம்பந்தப்படுத்தி எனக்கு எதிராக செய்திகளை போடுவார்கள். நாங்கள் நடத்தும் போராட்டங்களை நசுக்குவதற்கு எம்.ஜி.ஆர் பல முறைகளை கையாண்டு வருகிறார். அதுவும் எனக்கு தெரியும். நீங்கள் மத்திய அரசு இப்போது எடுத்துள்ள புதிய ஆதரவு நிலையை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என ஆலோசனை கூறினார்.

உமாமகேஸ்வரனுக்கு மனம் ஆறவில்லை. வெளியில் வந்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஜெபமணி யை சுட போகிறேன் என ஆவேசப்பட்டார். கந்தசாமியும் நானும் அவரை சமாதானப்படுத்தி கந்தசாமி தான் போய் பத்திரிகை ஆசிரியர் ஜெபமணியை எச்சரிக்கை செய்து மறுப்பு செய்தி போட சொல்வதாக கூறினார். ராயப்பேட்டையில் இருந்த பத்திரிகை அலுவலகத்திற்கு நானும் கந்தசாமியும் போனோம். ஆசிரியர் ஜெபமணி திமிராகப் பேசினார். கந்தசாமி கைத்துப்பாக்கியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நாளை மாலை பத்திரிகையில் மறுப்பு செய்தி வராவிட்டால் நாளை இதே நேரம் வருவேன், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கை செய்துவிட்டு வந்தோம். அதேநேரம் மற்ற பத்திரிகை அலுவலகங்களுக்கும் போய் இச்செய்தியின் மறுப்பறிக்கை எமது கடிதத் தலைப்பில் கொடுத்தோம். அடுத்தநாள் சுதேசமித்திரன் பத்திரிகையில் முன்பக்கத்தில் ஆனால் சிறிதாக மறுப்பறிக்கை கொடுத்து மன்னிப்பு கேட்டிருந்தார். தி.மு.க நடத்திய ரயில் மறியல் போராட்டம் மிக வெற்றிகரமாக நடந்தது. மத்திய அரசு தமிழ்நாட்டில் அன்று ரயில்களை இயக்கவில்லை.

பகுதி 10

காலகட்டத்தில் பல முக்கிய சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. இந்திய அதிகாரிகள் ஆயுதபயிற்சிகள் ஏற்பாடு செய்து தருவதாக உமாவிடம் கூறியதால் தளத்தில் வேலை செய்த தோழர்களுக்கு விபரம் அறிவிக்கப்பட்டு இந்தியாவுக்கு பயிற்சிக்காக தோழர்கள் அனுப்பப்பட்டார்கள். எமது கழக நிர்வாகம் தூங்க, சாப்பிட நேரமில்லாமல் ஓடி திரிந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அடிக்கடி தனது ராமாபுரம் தோட்டத்துக்கு உமாமகேஸ்வரனை அழைத்துப் பேசுவார். காரணம் கலைஞருடன் நெருக்கமாக கூடாது என்ற நோக்கத்தோடு தான். ஆனால் தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க மந்திரி எஸ்.டி. சோமசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை எங்களுக்கும் முகாம் போட சகல உதவிகளும் செய்யச் சொல்லி எமக்கு மிக மிக உதவி செய்தார். அதோடு சென்னையில் இருந்த தனது அதிகாரபூர்வ அரசு வீட்டில் சென்னை வந்த எமது தோழர்களை தங்கவும் வைத்து இருந்தார்.

எம்.ஜி.ஆர் கலைஞருக்கு எதிராக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அதாவது இந்தியாவிலிருந்து கலைஞர் ஆட்சியில் குட்டிமணியை நாடு கடத்தாமல் இருந்திருந்தால் குட்டிமணி வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று. உடன் அரசு ஆதரவு பற்றிய பத்திரிகைகள், எம்.ஜி.ஆர் ஆதரவுத் தலைவர்கள் கலைஞர் கருணாநிதியை துரோகி என வசை பாடத் தொடங்கினார்கள். உண்மையில் அது நடந்தது 1972 ஆம் ஆண்டு அல்லது 1974ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப் பட்டார். அப்போது குட்டிமணியை இலங்கையில் கூட கடத்தல்காரர் என்ற அளவில்தான் சிலருக்குத் தெரிந்திருந்தது. பலபேருக்கு குட்டிமணி என்ற பெயர் கூட தெரியாது.

இந்த நிலையில் கலைஞருக்கு நெருக்கமான தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் டெலோ இயக்கத்தின் இரட்டை தலைவர்களான ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ராசுபிள்ளை ஆகியோரை கலைஞரிடம் அழைத்துப்போய் கலைஞருக்கு ஆதரவாக அறிக்கை விட வைத்தார். அதில் குட்டிமணி அந்த காலத்தில் தன்னை ஒரு விடுதலை இயக்கப் போராளி என்று பகிரங்கமாய் தெரிவதை விரும்பவில்லை என்றும் அதனால்தான் இந்தியாவில் தான் கைது செய்யப்படும் போது தன்னை ஒரு கடத்தல்காரன் ஆக காட்டிக் கொண்டார் என்றும் அறிக்கையில் இருந்தது. அதோடு கலைஞருக்கு ஆதரவாக குட்டிமணியின் மனைவியின் கடிதத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். அன்றிலிருந்து எம்.ஜி.ஆருக்கு சிறி சபாரத்தினம் telo இயக்கமும் எதிரியாகி விட்டனர். எம்.ஜி.ஆரை தவறான வழியில் இட்டுச் சென்றது உளவுத்துறை ஐஜி திரு . மோகனதாஸ் அவர்கள். மத்திய அரசு மத்திய உளவுத் துறைகளால் IB மற்றும் ரா மட்டுமே தமிழ்நாட்டில் இலங்கை சம்பந்தப்பட்ட வேலைகளை தொடர்புகளை கையாண்டன. தமிழ்நாட்டு போலீசாருக்கு உளவுத்துறைக்கு அனுமதி இருக்கவில்லை. இது தமிழ்நாட்டு மிகப் ஃபுல்லான அதிகாரி மோகன்தாஸ் மிக கோபமாக இருந்தார். அதனால்தான் எம்.ஜி.ஆரை தவறாக வழி நடத்துவதாக நடுநிலையான அண்ணா தி.மு.க மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாங்கள் அவர்களுடன் பேசும்போது கருத்துகளைச் சொன்னார்கள்.

ரா, சந்திரஹாசன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எஃப், telo, ஈரோஸ் அமைப்புகளை பயிற்சிக்காக தொடர்பு கொண்டு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்கள். இந்திய பயிற்சிகள் நடக்கப் போவதை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் திடீரென மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது மகன் பகீரதன் தலைமையில் ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கி பெயர் கூட tena என நினைக்கிறேன். இதற்கு அமிர்தலிங்கத்தை திசைதிருப்பி வைத்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என பேசிக்கொண்டார்கள். ஆனால் அமிர்தலிங்கம் எடுத்த முயற்சி நடக்கவில்லை. விடுதலைப்புலி பிரபாகரன் தன்னைத்தான் அமிர்தலிங்கம் பரிந்துரைப்பார் என நினைத்து வைத்திருந்தவர். அமிர்தலிங்கத்தின் புது இயக்கத்தைப் பற்றி அறிந்த பிரபாகரன் இதுவரை மிக மிக நெருக்கமாக அமிர்தலிங்கத்தோடு நெருக்கமாக இருந்தவர், பின்பு அமிர்தலிங்கத்தை எதிரியாக பாவிக்க தொடங்கினார். இந்த விடயங்கள் எல்லாம் அப்போது இயக்க தோழர்களோடு பரிமாறப்பட்ட விஷயங்கள். நெடுமாறன் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது. ஆயுதப் பயிற்சியும் பெற்றார்கள்.

சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சம்பவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இலங்கையிலிருந்து அமிர்தலிங்கம் விமானத்தில் வரும்போது மாறுவேடத்தில் பெண் போல் வேடமிட்டு வந்ததாக பல செய்திகள் அப்போது பத்திரிகைகளில் வந்தன. உண்மையில் அப்படி வந்ததாக தெரியவில்லை. சென்னை வந்தவுடன் எம்.ஜி.ஆர் அப்பொழுது தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இரா.ஜனார்த்தனம் அவர்களை விமான நிலையம் அனுப்பி அமிர்தலிங்கம் கலைஞரிடம் போகாமல் தன்னை மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்துகொண்டார். ஜனார்த்தனம் எதை கூறி பயமுறுத்தி இருந்தாரோ தெரியாது. அமிர்தலிங்கம் கலைஞரை சந்திக்க முதலில் பயந்தார். பின்பு பலமுறை சந்தித்தார்.

இந்த செய்திகள் தெரிந்த பல தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள். இதற்கு மேலும் பல செய்திகளை கழக செய்திகள் மற்ற இயக்க செய்திகள் நேரடியாக தெரிந்த தோழர்கள் மௌனமாக இருப்பது சரியல்ல. நீங்களும் உங்கள் நேரடி பங்களிப்பைப் பற்றி எழுதினால் வருங்காலத்தில் பலர் இங்கு நடந்த உண்மையான செய்திகளை படிக்க உதவியாக இருக்கும். நான் எழுதுவது எனது சொந்த நேரடி அனுபவங்களை என்றபடியால், நான் கேள்விப்பட்ட பல விடயங்களை எழுதவில்லை. தயவுசெய்து ஆரம்பகால எமது இயக்கத் தோழர் பார்த்திபன், பெரிய மென்டிஸ், கணபதி ஆர். ஆர் போன்றோர் 83ஆண்டு கலவரத்துக்கு முன்பு நடந்த அவர்களின் பங்களிப்பைப் பற்றி எழுதினால் நானும் அறிய ஆவலாக இருக்கிறேன். உங்களுக்கும் பல முக்கிய தகவல்கள் தெரியும். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது. பல உண்மைகள் தெரிந்த பல தோழர்கள் உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை செய்திகளை ஒரு பதிவாக போட்டால் எல்லோருக்கும் நல்லது. அறியக்கூடியதாக இருக்கும்.

 

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2