Language Selection

எனக்குத் நேரடியா தெரிந்த ஈழ தமிழ்விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகளும்

டெல்லியில் பேச்சுவார்த்தைகளின் போது அது எல்லா கூட்டங்களிலும் பங்குபெற்று என்ற முறையில் எனக்கு தெரிந்த உண்மைகள் நினைவில் உள்ளவரை பதிவாக போட யோசித்துள்ளேன்.

விடுதலை இயக்கங்கள் எல்லாம் டெல்லியில் பேசுவது ஒரு மாதிரி சென்னையில் வந்து அறிக்கை விடுவது இயக்கத் தோழர்களிடம் கூறுவது வேறு மாதிரி. தங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் போலவும், உத்தமர்கள் போல் காட்டிக் கொண்டதும் இன்று வரை வெளியில் வரவில்லை. எல்லா ஈழவிடுதலை தலைவர்களும் அவர்கள் விட்ட அறிக்கைகளுக்கும் அவர்கள் நடந்து கொண்ட விதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இன்று வரை பலர் அறியவில்லை. அவர்கள் பொது வழியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள விட்ட அறிக்கைகள் தான் இன்றும் பலர் அவர்கள் மிகத் திறமையானவர்கள் சிந்தனையாளர்கள் சிறந்த தலைவர்கள் என எழுதி வருகிறார்கள். 1982 கடைசியிலிருந்து 1987 ஒப்பந்தம் வரை எனக்குத் தெரிந்த சம்பவங்களை மட்டும் தான் நான் எழுதுகிறேன். அதிலும் பல செய்திகள் கோர்வையாக இருக்காது. இந்தப் பதிவு இந்தியாவுக்கு ஆதரவான பதிவு அல்ல. உண்மையில் நடந்த சம்பவங்களை பதிவிட விரும்பியபடியால் எழுதுகிறேன்.

பகுதி 1

1982 முதல் 1987 ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை தமிழ்நாடு அரசு இந்திய அரசு இலங்கை விடுதலை இயக்கங்களோடு இருந்த தொடர்புகள் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களும் நான் நேரடியாக பங்கு பற்றி அறிந்த விடயங்கள் இங்கு பதிவாக போட எண்ணியுள்ளேன். நான் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை தவிர மற்ற எல்லா டெல்லி பேச்சுவார்த்தைகளிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக கலந்து கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உமாமகேஸ்வரன் உடன் இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகள் வெளிநாட்டு தூதுவர்கள், வெளிநாட்டு விடுதலை இயக்க பிரதிநிதிகள் பத்திரிகை ஆசிரியர்கள் நிருபர்கள் போன்றவர்களின் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதோடு காலத்துக்கு காலம் சித்தார்த்தன், பரதன், ராஜா நித்தியன், கவிஞர் ஜெயபாலன், ஷிர்லி கந்தப்பா, அண்டன் பயர்ஸ் (சுமதி தென்னாப்பிரிக்கா) தோழர் சைமன் (ரவி), தோழர் சங்கர், லண்டன் சீனிவாசன் போன்றவர்கள் புதுடில்லி வரும்போது, எமக்குரிய தொடர்புகளை தலைமை கட்டளைப்படி, தேவைக்கு ஏற்றபடி சில குறிப்பிட்ட நபர்களை சந்தித்து, இலங்கை பிரச்சனை பற்றியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக நிலைப்பாடு பற்றியும் விபரம் கூற ஒழுங்குகள் செய்து கொடுப்பேன். முடிந்தளவு நானும் அவர்களோடு கலந்து கொள்வேன்.

1982 ஆண்டு பாண்டி பஜார் உமா, பிரபா துப்பாக்கிச் சண்டையின் பின்பு சென்னை மத்திய சிறைச்சாலையில் அவர்களை ரகசியமாக இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறையான IB (இன்டலிஜென்ஸ் பீரோ) இன் இரண்டு தமிழ் அதிகாரிகள் போய் அவர்களிடம் இலங்கை சம்பந்தமான முழு விபரங்கள் இவர்கள் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் கேட்டு, உடனடியாக டெல்லிக்கு அனுப்பினார்கள். ஐபி இயக்குனர் மிகவும் சக்தி வாய்ந்தவர். தினசரி காலையில் இந்திய பிரதம மந்திரியை சந்தித்து உள்நாட்டில் நடக்கும் சகலவிதமான ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் விடயங்களையும் பிரதம மந்திரி இடம் விரிவாக கூறுவார்.

இது இன்று வரை நடக்கும் விடயம். இந்திய உளவுத் துறைகளைப் பற்றி கூற வேண்டுமானால், முதலில் வருவது ஐபி, அடுத்து ரா, ராணுவ உளவுத்துறை MI, கடற்படை உளவுத்துறை போன்றவை இலங்கை விஷயத்தில் தொடர்பில் இருந்தனர். மாநில அளவில் அதாவது தமிழ்நாடு q கியூ பிரான்ச், மற்றும் IS அமைப்பினர். பாண்டி பஜார் சம்பவத்தின்போது தமிழ்நாடு உளவுப்பிரிவு இயக்குனர் மோகனதாஸ், உமா, பிரபா மற்றவர்களையும் இலங்கையிடம் பிடித்து கொடுப்பதற்கு முயற்சி செய்தார். அக்காலத்தில் இலங்கை பொலிஸ் மாஅதிபர் ருத்ரா ராஜசிங்கம் அடிக்கடி தமிழ்நாடு வந்து மோகனதாஸ் சந்தித்து செல்வார். எம்ஜிஆர் நினைப்பதை செய்து காட்டுபவர் மோகனதாஸ். மோகனதாஸ் என்ன செய்தாலும் எம்.ஜி.ஆர் தடுக்க மாட்டார்.

ஐபி ரிப்போர்ட்டை அடுத்தும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் குறிப்பாக கருணாநிதி அழுத்தத்தை அடுத்து இந்திரா காந்தி நேரடியாக எம்.ஜி.ஆருடன் பேசி, மோகனதாஸ் ருத்ரா ராஜசிங்கம் எண்ணத்தை தடுத்தார். இதையடுத்து இந்திய வெளிநாட்டு உளவுத்துறை ரா களம் இறக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் மத்திய அரசை எதிர்க்க முடியாமல் பேசாமல் இருந்தார். ஆனால் மோகனதாஸ் தனது அதிகாரத்தை வைத்து பல இடைஞ்சல்களை செய்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் போய் சென்னை மெரினா கடற்கரையில் நடு இரவில் கலைஞரை சந்தித்து தங்கள் போராட்டம், போராட்ட வரலாறுகளை கூறியுள்ளார் . அதற்கு முன்பே ஒரு இலங்கைத் தமிழர் பெயர் ராஜரத்தினம் என நினைக்கிறேன், போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு தமிழக பல தலைவர்களை சந்தித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஒன்றாய் இருந்த காலத்தில் பல தமிழக அரசியல்வாதிகள், அரசியல் சாராத தலைவர்கள் பொதுமக்கள் என பல பெயர்கள் உண்டு அவர்களிடம் உதவி பெற்ற விடுதலைப் புலிகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் அவர்களை மறந்தே போய்விட்டனர்.

கா சுப்பு
செஞ்சி ராமச்சந்திரன்
தஞ்சாவூர் எம்பி எல் கணேசன் அண்ணா ,
வை கோபால்சாமி அண்ணா,
எம்பி யாக இருந்த ஆலடி அருணா அண்ணா,
தமிழ்நாடு சட்ட மேலவை துணைத் தலைவர் கவிஞர் புலமைப்பித்தன்,
மணவை தம்பி,
தமிழ் மன்னன்.

தமிழ் மன்னன் பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் பிரிந்த பின்பும் இருவருக்கும் இவர் பல உதவிகளை செய்துள்ளார். ராகவனுக்கு இவரை மிக நன்றாக தெரியும் என நினைக்கிறேன். தி.மு.க கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர். கலைஞர் பயப்படும் ஒரே ஆள்.

இரா. ஜனார்த்தனம் பல உதவிகள் செய்தாலும், விடுதலை போராளிகளை தனது சொந்த வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டவர். ஒரு முஸ்லீம் அன்பர் இலங்கை விடுதலை போராளிகள் வந்து தங்கிச் செல்ல தனது வீட்டை கொடுத்திருந்தார் அவர் தனதாக்கிக் கொண்டவர்.

ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார், இவர் பாண்டிச்சேரி காலத்திலிருந்து விடுதலை புலிகளுக்கும் உமா மகேஸ்வரனுக்கு உதவி புரிந்தவர். ஐயாவின் ஒரே நோக்கம் ஆரம்பத்தில் இருந்து அவர் சாகும்வரை இலங்கைத் தமிழருக்கு ஒரு தமிழ் ஈழம் வேண்டும் என்பதே. இலங்கை தமிழ் போராளிகளால் எந்த ஒரு பயனும், புகழும் பெறாமல் முடிந்தளவு அவரும் அவரின் குடும்பமும் பல உதவிகளை செய்து உள்ளார்கள். கடைசி காலத்தில் நான் அவரை பார்க்கும் போதெல்லாம் எங்கள் போராட்டம் இப்படித் திசைமாறிப் எதிரியிடம் போய் நிற்கிறது என கண்ணீர் விட்டு அழுதார். உமா மகேஸ்வரனின் மாற்றம் தான் அவரை மிக அதிர்ச்சி அடைய வைத்தது. eprlf இயக்கத்துக்கு தோழர் அரணமுறுவல் பல உதவிகள் செய்தபோதும், மற்ற இயக்கங்கள் உதவிகள் கேட்டாலும் ஓடி வந்து உதவி செய்யக் கூடியவர். தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் ரகசியமாக இருந்த காலத்தில் மேற்கூறியவர்கள் அரசாங்கத்துக்கு பயப்படாமல் உதவிகள் செய்தவர்கள். பல பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ராகவன் போன்றவர்கள் கட்டாயம் அந்த காலத்தில் உதவி செய்தவர்கள் பெயர்களை பதிவாக போட வேண்டும். அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அதுதான்.

பகுதி 2.

எனக்குத் தெரிந்த அளவு ஈழவிடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்பு

ஜூலை 83 கலவரத்துக்கு முன் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தமிழ்நாட்டு தொடர்புகள் அதிகரித்திருந்தன. தஞ்சாவூர் ஓரத நாட்டைச்சேர்ந்த இளவழகன், ராமசாமி, தஞ்சாவூரைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் மறைமலையான் அவர்களும் இவர்கள் மூலம் தமிழ்நாட்டு அமைச்சர் தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ்.டி.சோமசுந்தரம், தமிழ்நாடு சட்ட மேலவை துணைத் தலைவர் சினிமா பாடலாசிரியர் கவிஞர் புலமைப்பித்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடர்புகள் மூலம் பலர் அறிமுகமானார்கள். நினைவில் நிற்கும் பெயர்கள் பாண்டிச்சேரியைச் சேர்ந்த அபிமன்யு என்கிற அபி, சீசர் (எமது இயக்க மத்தியகுழு உறுப்பினர்) ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி சேகர் மாஸ்டர் போன்ற பலர் உதவி செய்தார்கள். இதில் இளவழகன் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நாங்கள் வாங்கிய பிரின்டிங் பிரஸ் பாவாணர் அச்சகம் உரிமை அவர் பெயரில் இருந்தது. அங்கு மேனேஜராக விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஐயர் சம்பளத்துக்காக வேலை செய்தார். ஐயா மறைமலையான் ஆசிரியராக கொண்டு நாங்கள் வெளியிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற மாதப் பத்திரிகை எமது பாவானர் அச்சகத்தில் தான் அச்சிடப்பட்டது. நான் தான் அப்பத்திரிகையின் பொறுப்பாளராகவும், கிட்டத்தட்ட மாதா மாதம் 5000 புத்தகங்கள் வெளிநாட்டுக்கு பார்சல் செய்து அனுப்பும் வேலையும் நான் தான் செய்தேன். மாறன், சங்கிலி கந்தசாமி போன்றவர்கள் சில வேலைகளில் உதவி செய்வார்கள். பின்பு எனது பொறுப்பை மாதவன் அண்ணா ஏற்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாம் மிக ரகசியமாக பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் தென்மொழி அச்சகத்தின் ஊடாகவே நடக்கும். அடிக்கடி போலீசாரின் அத்துமீறல்களை ஐயா அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் எங்களால் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். காவல்துறையினர் தென்மொழி அச்சகத்தை தலைகீழாகப் புரட்டி விட்டு போன பின்பும் ஒரு மணி நேரத்தில் எமது தகவல் பரிமாற்றங்கள் நடக்கும். ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து எழுதுவதால் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் காவல்துறையினரால் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காலமும் உண்டு.
1982 ஆண்டு கடைசிப் பகுதியில் சென்னை பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி ரூம் நம்பர் 11 நான் சென்றபோது இந்த ரூம் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜனார்த்தன் அவர்களுக்கு உரியது. அக்காலத்தில் அங்கு இலங்கை விடுதலை போராளிகள் தான் தங்கியிருந்தார்கள். அப்போது அங்கு மாணவர் பேரவை ஆரம்பித்த அவர்களில் ஒருவரான ஜீவா என்றழைக்கப்படும் ஜீவராஜா தங்கி இருந்தார். எந்த நேரமும் குடிவெறியில் தான் இருந்தார். அங்கு என்னை சந்தித்த தமிழ் மன்னன் தி.மு.கவைச் சேர்ந்தவர், உமா மகேஸ்வரனை சந்திக்க ஏற்பாடு செய்தார். முதலில் என்ன சந்தித்தவர் மாறன். மாறன் என்னை சந்திக்க வந்த நேரத்தில் அங்கு ராகவனும் பிரபாகரனும் வழக்குத் தவணைக்காக வந்து இருந்தார்கள். நான் ராகவன் முதலில் அங்கு சந்தித்தபோது மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எனக்கு சீனியர் என்ற முறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த மாறன் முதலில் என்னை சந்தேகப் பட்டார். தமிழ்மன்னன் தான் விளங்கப்படுத்தினார். ராகவன் இந்த சம்பவத்தை மறந்து இருக்கலாம். மாறன் தூர கூட்டிக்கொண்டு போய் என்னை பிரபாகரனையும் ராகவனின் காட்டி அவர்களோடு பேச வேண்டாம் கவனமாக இருக்கவும் எனக் கூறினார். பிரபாகரனைப் பற்றி குறிப்பிடும்போது பெயர் சொல்லாமல் முட்டை கண்ணன் என கூறுவர். இரண்டு நாட்களின் பின் உமாமகேஸ்வரன் என்னை சந்தித்த போது அவர் வேட்டி கட்டியிருந்தார். அவரை முதன் முதலில் சந்தித்த போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவரோடு வேலை செய்த எனது மிக நெருங்கிய உறவினர்கள் பெயரைச் சொன்ன போது சந்தோஷப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அதற்காக வேலை செய்யும் படியும், அது இவர்களைத் தவிர மற்றவர்கள் தலைமறைவு காலம் ஆகையால் தலைமறைவாக இருக்கும்படியும் மாறன் வந்து அடிக்கடி சந்திப்பதாகவும் தேவையான பணத்தை மாறனிடம் கொடுப்பதாகவும் கூறிச் சென்றார்.

மாறன் நான் தங்கியிருந்த மவுண்ட் ரோட் ராமச்சந்திரன் லொட்ஜ் வந்து என்னை சந்தித்து உணவுக்கும் லாஜிக்கும் பணம் கொடுத்து சில ரகசியமான வேலைகளையும் கொடுத்து செல்வார்.

ஒருநாள் உமாமகேஸ்வரனும் மாறனும் வந்து, கழக கடிதத் தலைப்புகளும் பல வெளிநாட்டு முகவரிகளும் கொடுத்து, முன்பு ஒன்றாய் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வேலைசெய்த ஜெர்மனி பரமதேவா, பிரான்ஸ் ஏரம்பு, லண்டன் கிருஷ்ணன் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வளர்ச்சி பற்றியும் அவர்களை எமக்கு வேலை செய்யும்படியும் கடிதங்கள் எழுதினோம்.அதன் பின்புதான் வெளிநாட்டுக் கிளைகள் எமக்காக இயங்கத் தொடங்கின.

1983 மார்ச் மாதம் என நினைக்கிறேன், நூற்றுக்கணக்கான இலங்கை அரசுக்கு எதிரான ஆங்கில பிரசுரங்கள் புத்தகங்கள் நான் இருந்த அறையில் ஒளித்து வைத்தார்கள். டெல்லியில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் நடைபெறப் போவதாகவும் அங்கு போய் எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் கிடைக்கும்படி இந்த புத்தகங்களை வெளிநாட்டு தூதரகங்களுக்கு கொடுக்கும்படியும், அங்கு எமது சார்பாக பத்திரிகையாளர் மயிலாப்பூரைச் சேர்ந்த ஹரி என்பவர் ஏற்பாடு செய்யும் பிரஸ்மீட்டில் புத்தகங்களை கொடுக்கும்படியும் அதோடு இலங்கை பிரச்சனை சம்பந்தமாக நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஹரிக்கு உதவும் படியும் கூறினார்.

பகுதி 3

ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகள் எனதுநேரடிப் பங்களிப்பும் அறிந்த செய்திகளும்

நான் டெல்லி போவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்த வேலை என்னோடு தமிழ் மன்னனும், எமது தமிழீழ விடுதலை அணி தலைவர் ஈழவேந்தன் உம் கூட வருவதாக மாறன் கூறி மூவருக்கும் சென்னையிலிருந்து டெல்லி போகும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை தந்தார். காலையில் ஏழு மணிக்கு புறப்பட்ட ரயிலில் நாங்கள் மூவரும் போனோம். ரயிலில் ஈழ வேந்தனுக்கும் தமிழ் மன்னனுக்கும் சரியான சண்டை. அமெரிக்காவில் வருடாவருடம் டாக்டர் பஞ்சாட்சரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை மாநாடு நடத்துவார்கள். மாநாட்டின் முடிவில் அடுத்த பொங்கலுக்கு அல்லது தீபாவளிக்கு அல்லது புதுவருஷத்துக்கு தமிழீழம் கிடைக்கும் என்று கூறி மாநாட்டை முடிப்பார்கள். இந்த மாநாட்டுக்கு இலங்கை தமிழருக்கு சம்பந்தமில்லாத பெரிய அரசியல்வாதிகளை கூப்பிட்டு கௌரவிப்பார்கள். இதற்குத்தான் தமிழ்மன்னன் உண்மையில் இலங்கை போராளிகளோடு சேர்ந்து நாங்கள்தான் உழைக்கிறோம். எங்களையெல்லாம் கூப்பிடக் கூடாதா, நாங்களெல்லாம் அமெரிக்கா பார்க்க கூடாதா என ஈழவேந்தன் இடம் சண்டை பிடித்தார். தமிழ்மன்னன் தூசண வார்த்தைகளால் ஏசினர். ஈழவேந்தன் கூனிக் குறுகிப் போனார்.

அடுத்தநாள் மாலை ஐந்து மணி போல் எமது ரயில் புதுடெல்லியைச் சென்றடைந்தது. தமிழ்மன்னன் புதுடில்லி நோர்த்அவென்யூ என்ற இடத்தில் இந்திய பாராளுமன்ற எம்.பி.க்கள் கார் விட ஒதுக்கப்பட்ட இடத்தில் உணவகம் நடத்தி வரும் நாராயணன் என்பவரோடு தங்குவதற்கு போன போது என்னையும் தன்னுடன் வரும்படி கூறினார். ஆனால் ஈழவேந்தன் வை.கோபால்சாமி எம்.பி யை தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவருக்குரிய எம்.பி குவாட்டர்சில் தங்கலாம் என என்னையும் அழைத்துக்கொண்டு வை.கோபால்சாமி வீட்டுக்கு போனார். அங்கு நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வை.கோ எம்.பி நாங்கள் வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். ஈழவேந்தன் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, நான் டெல்லி வந்த நோக்கத்தையும் கூறி மூன்று நாள் அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டார். உடன் கோபமடைந்த வை.கோ எங்களை உடனடியாக வேறு இடம் பார்க்கச் சொன்னார். கடுமையான குளிர். நேரம் இருட்டி விட்டது. ஈழவேந்தன் கெஞ்சிக் கூத்தாடி இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டு வெற்றிபெற்றார். அடுத்தநாள் காலையில்தான் எழும்பும்போது நாங்கள் அங்கு இருக்க கூடாது என்றும் கூறினார். வைகோ அண்ணாவின் கோபத்துக்குக் காரணம் அவரும் அமெரிக்க மாநாட்டுக்கு தனக்கு ஏன் அழைப்பு இல்லை, தேவையற்ற நபர்களுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். உதவி என்றால் மட்டும் என்னிடம் வந்து விடுங்கள் என்று கூறினார். ஈழவேந்தன் தனக்கும் அமெரிக்க மாநாட்டுகாரர்களுக்கும் சம்பந்தம் இல்லை என விளங்கப்படுத்தியும் வை.கோ. சமாதானம் அடையவில்லை. பிற்காலத்தில் வை.கோ அண்ணா எனக்கு மிக நெருங்கியவராக இருந்தது பிற்கால கதை.

அடுத்தநாள் காலையிலேயே நாங்கள் எழும்பி வை.கோவின் நண்பரும் உதவியாளருமான ஜார்ஜ் இடம் சொல்லி விட்டு வெளியில் வந்து ஈழவேந்தன் தனக்குத் தெரிந்த காந்தி பீஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பின் தங்கும் இடத்துக்கு சென்றார். நான் புத்தக கட்டுகளுடன் தமிழ்மன்னனை தேடிச் சென்றேன். என்னை பார்த்த தமிழ்மன்னனும் அவரின் நண்பர் நாராயணனும் கட்டிப்பிடித்து தம்பி நாங்கள் இருக்கிறோம் உனக்கு உதவி செய்ய, தெரியாத இடம் என்று பயப்படாதே என்று கூறி, உடனடியாக காலைக்கடன்களை முடித்து குளிக்க நாராயணன் பொதுக் குளியலறை கழிவறைக்கு அழைத்து சென்று உதவி செய்தார். சுடச்சுட காலை உணவு தந்தார். தான் வறுமையில் இருந்தாலும், அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. பிற்காலத்தில் குடித்து குடித்து இறந்து விட்டார்.

உடனடியாக நானும் தமிழ்மன்னனும் டெல்லி தொலைபேசி புத்தகத்தை எடுத்து டெல்லியில் இருந்து அனைத்து எம்பஸ்ஸி தூதர் வெளிநாட்டு தூதரகங்களுக்கு விலாசம் எடுத்து இலங்கை அரசுக்கு எதிரான நான் கொண்டு வந்த புத்தகங்களை பார்சல் செய்து தபாலில் போட்டேன். அதே மாதிரி அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பினோம்.

அன்று மாலை விமானத்தில் வந்த பத்திரிகையாளர் ஹரி டெல்லி பிரஸ் கிளப்பில் ஒரு மீட்டிங் நிறுத்தினார் அங்கும் புத்தகங்களைக் கொடுத்து, அக் காலகட்டத்தில் இலங்கை பிரச்சனை பெரிதாக அதிகம் பேருக்கு தெரியவில்லை. நாங்கள் முதன்முறையாக டெல்லி பத்திரிகையாளர்களுக்கு இலங்கையில் இருக்கும் பிரச்சனைகளை விளங்கபடுத்தினோம். இதே நேரம் என்னிடம் பல புத்தகங்களை வாங்கிச் சென்ற ஈழவேந்தன் புத்தகங்களில் தனது தமிழீழ விடுதலை அணி என்ற விசிட்டிங் கார்டை வைத்து பத்திரிகை அலுவலகங்களில் கொடுத்துச் சென்றுள்ளார். அடுத்த நாள் பத்திரிகைகளில் தமிழீழ விடுதலையை அணித்தலைவர் ஈழவேந்தன் இலங்கை அரசுக்கு எதிராக பிரசுரங்கள் விநியோகித்து உள்ளதாக போட்டார்கள். இதனால் மூன்று மாத விசாவில் இந்தியா வந்த ஈழவேந்தன் திரும்ப இலங்கை போகமுடியாமல் இந்தியாவில் தலைமறைவாகி விட்டது அது ஒரு செய்தி.

எமது வேலைகளை முடித்துவிட்டு நானும் தமிழ்மன்னனும் ரயிலில் சென்னை நோக்கி பயணமானோம்.
சென்னையில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடரும்...