Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 தமிழினவாத அரசியல் வரலாறே புரட்டலானது. 1948 களில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பானது வர்க்க ரீதியானதல்ல, இனரீதியானதே என்று தமிழினவாதம் மூலம் திரித்து உருவாக்கிய கட்சியே தமிழரசுகட்சி. தேர்தல் மூலம் இடதுசாரிகளின் ஆட்சியதிகாரம் இலங்கையில் ஏற்பட்டு விடும் என்ற சுரண்டும் வர்க்கத்தின் அச்சமே, மலையக மக்களின் பிரஜாவுரிமையைப் பறிக்க காரணமாகியது. இந்த வர்க்க அரசியலை மூடிமறைத்து வர்க்க அரசைப் பாதுகாக்கவே, தமிழ் சுரண்டும் வர்க்கம் தமிழினவாதத்தை முன்வைத்தது. இதன் மூலம் தமிழினவாதத்தை வடகிழக்கில் விதைத்தனர்.

இப்படி தமிழினவாதத்தை உருவாக்கியவர்கள், தமிழ் மக்களை எப்போதும் சிங்கள மக்களுக்கு எதிரானவராக வைத்திருப்பதையே கொள்கையாகவும், நடைமுறையாகவும் கொண்ட அரசியலையே முன்வைத்தனர். தேர்தல் அரசியலில் வெற்றி பெற, இனவாதம் தவிர்ந்த வேறு கொள்கை எதுவும் இவர்களிடம் இருக்கவில்லை.

 

இதனால் தமிழ் - சிங்கள மக்கள் பரஸ்பரம் மற்றவர் மொழியைக் கற்பதை எதிர்த்தனர். மக்கள் தமக்குள் தொடர்பு கொள்வதை, தங்களின் தேர்தல் தமிழினவாத அரசியலுக்கு ஆபத்தானதாகக் கருதினர். அதேநேரம் அரச எடுக்கும் திட்டங்கள் மக்களுக்கு நன்மையளிக்கும் பட்சத்தில், மக்கள் தம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள் என்ற, தேர்தல் கட்சிக்கேயுரிய இனவாத அச்சத்தில், அரசின் எல்லாத் திட்டங்களையும் எதிர்க்கவும் செய்தனர். நாடு தளுவிய அனைவருக்குமான மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும்;, தமிழ் மக்களுக்கு எதிரானதாகக் காட்டி எதித்தனர். அதேநேரம் மூலதனத்துக்கு சார்பான திட்டங்களை ஆதரித்தனர்;. வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், தமிழினவாதிகளின் எதிர்ப்பை மீறியே உருவாக்கப்பட்டது.

வர்க்கம், இனம், மதம், சாதி, பால் கடந்த இலவச தாய்மொழி தமிழ் கல்வியை பெற்றவர்களின் இன்றைய வரலாறு, தமிழினவாதிகளின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணாகவே நடந்தேறியது. இன்று வடகிழக்கு பல்கலைக்கழகங்கள் தொடங்கி தமிழ் மொழி மூலம் கற்று - "தீண்டத்தகாத" சாதியில் இருந்த வந்த பல்கலைக்கழக மாணவர்களின் வரலாறு மற்றும் போராட்டங்களானது. அது தமிழினவாத சிந்தனை முறைக்கும் - அதன் நடைமுறைக்கும் முரணான, அரசியல் பாதையிலேயே சாத்தியமானது.

அதேநேரம் தமிழ் - சிங்கள மக்கள் தமக்கு இடையில் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதுதான், இனவாதிகளின் கொள்கை. இனவாதிகள் சொல்வதைக் கேட்கவும், தமக்கு இன ரீதியாக வாக்கு போடும் ஒரு மந்தைக் கூட்டத்தை வைத்திருப்பதே, இனவாதிகளின் தேர்தல் அரசியலாக இருந்து வந்தது. மக்கள் தமக்குள் மொழி கடந்து தொடர்பு கொள்ளக்கூடாது, ஆகவே தாய்மொழி அல்லாத ஆங்கிலத்தைப் படிக்கலாம், சக இனத்தின் தாய்மொழியைப் படிக்கக் கூடாது என்பது, தேர்தல் வாக்கு அரசியலாகும். பிற மொழி வெறுப்பு கொள்கை மூலம், தமிழ் - சிங்கள மக்களிடையான எந்த சுதந்திரமான உரையாடலையும், சிந்தனைச் சுதந்திரத்தையும் கடந்த 70 ஆண்டுகளாக இனவாதம் மூலம் தடுத்து நிறுத்திவர்கள், தாங்கள் மட்டுமே பிற மொழியை பேச முடியும் என்ற பொதுச் சூழலை உருவாகி வைத்துள்ளனர். இதன் மூலம் தங்கள் சுயநலன்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

இலவச தாய்மொழிக் கல்விக்கான தேசியமயமாக்கலை எதிர்த்த தமிழினவாத வெள்ளாளியக் கண்ணோட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பது, பரஸ்பரம் பிற இன மக்கள் தொடர்பு கொள்ள மொழியைக் கற்பது, தங்கள் வெள்ளாளிய சமூகக் கட்டமைப்புக்கு எதிரானதாகவே கருதினர். அதை தமிழனின் இருப்புக்கு எதிரானதாக காட்டினர். அதை எப்படி எந்த வடிவங்களில் முன்வைத்தனர் என்பதை, தமிழினவாதம் எப்படிப்பட்ட பிரச்சாரத்தை செல்வநாயகத்தின் பத்திரிகையான சுதந்திரன் மூலம் முன்வைத்தனர் என்பதை தெரிந்து கொள்வதன் - கற்றுக்கொள்வதன் மூலம், பல தமிழினவாத பித்தலாட்டங்களை கற்றுக் கொள்ள முடியும். சுதந்திரமான சிந்தனைக்கும், பகுத்தறிவுக்கும் இது வித்திடும்.

16.10.1960 இல் சுதந்திரன் ஆசிரியர் தலையங்கமானது தாய்மொழியிலான இலவச தமிழ் மொழிக் கல்விக்கான தேசியமயமாக்கத்தை "தற்கொலைக்கு ஒப்பானது" என்று தலைப்பிடுகின்றது. இதன் மூலம் தங்கள் வெள்ளாளிய சமூகத்தின் அரசியலையும் அச்சத்தையும் அச்சொட்டாகவே வெளிப்படுத்தியது. அனைவருக்கும் இலவச தாய்மொழிக்காக பாடசாலைகளை தேசியமயமாக்கல் என்பது, அரசின் "சர்வாதிகார" நடவடிக்கையாகவும், "கம்யூனிச" நடவடிக்கையாகவும் தமிழினவாதம் முன்வைத்த சுதந்திரன் வருணிக்கின்றது. இதன் மூலம் இது தமிழரின் சமூக அமைப்பு முறையான வெள்ளாளியத்துக்கு கேடுவிளைவிக்கும் ஒன்றாக, தமிழினவாதம் மூலம் முன்வைக்கின்றது.

வர்க்கம், பால், சாதி, இனம், மதம் .. கடந்து, அனைவருக்குமான இலவசக் கல்வியை "கம்யூனிசம்" என்று கூறியே எதிர்க்கின்றது. "கம்யூனிசம்" குறித்து தமிழினவாதம் கட்டமைத்த, கட்டமைத்துக் கொண்டு இருந்த முதலாளித்துவ அழுகுண்ணி பொய்களின் மேல் ஏறி நின்றே இதைக் கூவினர். 16.10.1960 இல் சுதந்திரனில்:

"சர்வாதிகாரச் சமதர்ம நாடுகளின் அரசாங்கம் கல்வி நிலையங்களைக் கைப்பற்றித் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருப்பதைக் காணலாம். ஆட்சியிலிருக்கும் கட்சியின் அரசியல் கொள்கைகளைப் பாடசாலைச் சிறுவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பதித்து, அத்தனை ஜீவன்களையும் ஒற்றைப் போக்கில் சிந்திக்கும்படி செய்து, அவர்களை ஆட்சிபீடத்தில் நிரந்தர அடிமையாளராக்குவதே இத்தகைய கல்வி முறையின் நோக்கமாகும். இதையே தேசியக் கல்வி முறை என்ற அழகான போர்வையில் கொம்யூனிஸ்டு நாடுகள் நடைமுறையில் கொண்டு வந்திருக்கின்றன"

என்று தங்கள் முதலாளித்துவ வெள்ளாளிய கண்ணோட்டத்தில் திரித்தும் புரட்டியும் கூறியதன் மூலம், அனைத்து தமிழ் மக்களுக்குமான இலவசக் தாய்மொழிக் கல்வியை மறுத்தனர். அரசு கல்வி முயற்சியை "கம்யூனிசமாக" காட்டுவதன் மூலம், கம்யூனிசத்திற்கான உலகளாவிய மனித போராட்டங்களே அனைவருக்குமான இலவசக் கல்வி முறையை கொண்டு வந்த உண்மையை, தங்களை அறியாமல் போட்டுடைத்து விடுகின்றனர். அனைவருக்கும் தாய் மொழிக் கல்வி என்பது தங்கள் கொள்கையல்ல, அது கம்யூனிசத்தின் "சர்வாதிகாரக்" கொள்கையே என்கின்றனர்.

இந்த வகையில் தமிழினவாதிகள் கோரிய சமஸ்டி கூட, அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற "கம்யூனிச" கொள்கைக்கு முரணானதாய் இருக்கும் என்பது, வர்க்கம், சாதி, பால், மத.. அடிப்படையிலானதே. சமஸ்டியை கோரிய தமிழினவாத கொள்கைக்கு முரணாகவே, வர்க்கம், சாதி, பால், மதம்.. கடந்த கல்வி முறையை, அரசு தான் கொண்டு வந்தது. வெள்ளாளிய தமிழினவாதிகளின் எதிர்ப்பை மீறி, அரசாங்கத்தால் தரப்பட்டது தான், தமிழ் மக்களுக்கான கல்விமுறை. வர்க்கம், சாதி, பால், மதம்.. கடந்து இன்று கல்வி கற்கின்றவர்கள், தமிழினவாதம் பேசுகின்ற போது, தங்கள் தந்தையர்களுக்கும் - தாய்மார்களுக்கும் கல்வி எப்படி, எதனால் மறுக்கப்பட்டது என்ற உண்மையைக் கற்றுக் கொள்ளாதவராக இருக்கின்றனர். இதை ஒடுக்கப்பட்ட மக்களின் கடந்தகால வரலாற்று உண்மைகள் போட்டு உடைக்கின்றது.

தமிழினவாதம் எப்படிபட்ட கல்வியை முன்வைத்தது, அது யாருக்கான கல்வி என்பதை 16.10.1960 இல் சுதந்திரன் ஆசிரியர் தலையங்கம் முன்வைக்கத் தவறவில்லை.

"பாடசாலைகளில் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், அப் பாடசாலைகள் தனிப்பட்டவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாடசாலைகள் ஒரு போதும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படலாகாது”

கல்வியை தனியார் தீர்மானிக்க வேண்டும்;. பணமுள்ளவன், சாதிய அடிப்படையில் வெள்ளாளியப் பின்னணியைக் கொண்ட, ஆண் என்ற ஆணாதிக்க கலாச்சாரத்தை பாதுகாப்பவனே பாடசாலைகளையும், மாணவர்களின் கல்வி எது என்பதையும் தீர்மானிக்க வேண்டும்;. இதைத்தான் தமிழினவாதிகள் முன்வைத்தனர். அன்று எதை இவர்கள் முன்னிறுத்தி பாதுகாக்க முனைந்தனரோ, அது வெளிப்படையான வெள்ளாளியமே. வர்க்கம், பால், சாதி, இனம், மதம்.. கடந்த, அனைவருக்குமான கல்வியல்ல.

அரசு இலவசமான, தாய்மொழி கட்டாய கல்வியை வழங்குவதை பேரினவாத ஒடுக்குமுறையாகவே, தமிழினவாத கண்ணோட்டத்தில் அணுகினர். தமிழினவாதம் முன்வைத்த சமஸ்டி முதல் தனிநாடு வரையான தமிழனின் அதிகாரத்தில், கல்விக் கொள்கை என்பது தனியார் கல்வி முறையே. கல்வி "ஒரு போதும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படலாகாது” என இதை அன்று மட்டும் இவர்கள் கூறவில்லை, இன்றும் அதையே முன்வைக்கின்றனர். இந்த தனியார் கல்வி முறை என்பது, வெள்ளாளியக் கல்வி முறையாகும். 1950 களில் இருந்த கல்வி முறை இத்தகையதே.

அரசாங்கம் பாடசாலைகளை தேசியமயமாக்கிய போது அதைக் குறித்து

"மத ஸ்தாபனப் பாடசாலைகளை, உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளையும் பிடுங்கி அனைத்தையும் அரசாங்கத்தின் இரும்பு ஆதிக்கத்தின கீழ் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலை ஏற்பட அனுமதிப்பது நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து கொம்யூனிஸ சர்வாதிகாரம் தலைதூக்க வழி செய்வதாகும்"

என்று வெள்ளாளிய தமிழினவாதத்தை சுதந்திரன் முன்வைக்கின்றது. இவர்கள் கூறியது போல் எதார்த்தத்தில் அனைவருக்கமான கல்வி "ஜனநாயகத்தை" குழிதோண்டி புதைத்ததா? எனின் இல்லை, மாறாக இதைச் சொல்லி, தாம் அல்லாத அனைவரையும் ஒடுக்கி, "துரோகியாக்கிய" தமிழினவாதமே "ஜனநாயகத்தை" குழிதோண்டி புதைத்தது. அனைவரும் கற்றால் "கொம்யூனிஸ சர்வாதிகாரம்" உருவானதா இல்லை, இப்படி சொல்லியே தமிழினவாத சர்வாதிகாரம் தோன்றி, அதுவே பாசிசமாக மாறி, அனைத்தையும் அழித்ததுடன் - தன்னை மீறியதைக் கொன்று குவித்தது. இதுதான் கடந்த தமிழினவாத வரலாறு.

1986 இல் கல்வி கற்ற பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயகத்திற்கும், மனித சுதந்திரத்திற்குமாகப் போராடிய போது, தமிழினவாதம்; எப்படி சமூகத்தை ஒடுக்கியது என்பது பற்றியதே, இந்த "யாழ் பல்கலைக்கழக போராட்டம்" என்ற - இந்த வரலாற்றின் சாரம்.

கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் கல்வி கற்கும் புதிய தலைமுறைக்காக தேசியமயமான கல்வி கொள்கையை ஆதரித்ததை, தமிழினவாதம் எப்படி இழிவுபடுத்தி அணுகியது என்பதைப் பார்ப்போம்.

"ஒரு சிலர் அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்பதை வரவேற்கின்றார்கள் என்றால் அவர்களின் அறியாமையாகவும் சுயநல நடத்தைக்காகவும் நாம் வருந்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம்"

என்று சுதந்திரன் அனைவருக்கும் இலவச தாய் மொழிக் கல்வியை, அறியாமையாகவும் - தனிப்பட்ட சுயநல நடத்தையாகவும் வருணிக்கின்றது. தங்கள் வெள்ளாளிய தமிழினவாத சமூக அமைப்பிலான மேலாதிக்க நடத்தைக்கு எதிரான அறியாமையாகவும், இதை மறுப்பது தமிழின "துரோகமாகவும்", தாம் அல்லாத பிறர் நலனை முன்வைப்பதை சுயநலமானதாகவும் வருணிக்கின்றது.

அதேநேரம்

"தமிழ் ஆசிரியர்கள் சிலர் தமது முகாமைக்காரர் மீது கொண்ட ஆத்திரம் காரணமாக பாடசாலைகளை அரசாங்கம் கையேற்பதை ஆதரிக்கின்றார்கள். ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதற்காக இனத்தையே எதிரியின் கையில் ஒப்படைக்கும் இழிசெயல் இதுவாகும். வீட்டிலே எலியின் உபத்திரத்தை ஒழிப்பதற்காக கூரைக்கே நெருப்புக் கொடுத்தனாம் ஒரு புத்திசாலி, இந்தப் புத்திசாலியின் மனோபாவத்தோடு தான் சில தமிழ் ஆசிரியர்கள் அரசாங்கம் பாடசாலைகள் கையேற்பதை வரவேற்கின்றார்கள் போலும்"

என்ற தமிழினவாதத்தை முன்வைத்து சுதந்;திரன், ஆசிரியர்கள் மேலான சுரண்டல், அடக்குமுறை, அடிமைத்தனம் என்பது இனத்துக்கே உரியது, இதை எதிர்ப்பது, கேள்விக்கு உட்படுத்துவது என்பது இனத்தை எதிரியின் கையில் ஒப்படைக்கும் இழிசெயல் என்கின்றது. வெள்ளாளிய சமூகத்திற்கே உரிய கொடுமையுடன் கூடிய சுரண்டலையும், மனித அடிமைத்தனத்தையும் கல்வி முறையாகக் கொண்ட பாடசாலைகளையும் – இதையே மாணவரின் கற்கை முறையாகவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதை எதிர்ப்பது - மறுப்பது கம்யூனிசமாகவும், இது "இனத்தையே எதிரியில கையில் ஒப்படைக்கும் இழிசெயல்" என்று இனத்தின் பெயரில் முன்னிறுத்தி நியாயப்டுத்துகின்றது. இதையெல்லாம் மீறியே கல்வி தேசியமயமாகிய, இன்று கற்றுக்கொண்டு இருக்கும் மாணவர் சமூகத்தை உருவாக்கியது.

அரசு தேசியமயமாக்கிய பின் மாணவர்களின் பாடத்திட்டம் குறித்து, வெள்ளாளிய தமிழினவாத அரசியல் தலைவர்கள் குமுறத் தொடங்கினர். தங்கள் பாடத்திட்டத்தை மாற்றுவது சர்வாதிகாரம், கம்யூனிசம்.. என்று காட்டுக் கூச்சல்களை எழுப்பினர்.

18.10.1964 சுதந்திரனில்; "பாட நூல்களை வெளியிடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு" என்ற தலைப்பில், தமிழினவாதக் கூச்சல்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் போடுகின்றனர்.

"கூட்டு அரசாங்கம் பாடநூல்களை வெளியிடுவதாக, அதை தனது தனியுரிமையாக்கிக் கொள்வதென முடிவு செய்துள்ளமை பொதுவாக நாட்டிற்கும் குறிப்பாக இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடியதாகும்"

என்கின்றனர். இப்படி நாட்டுக்கு பேராபத்தாக காண்பது எதை? தங்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் கட்டிப் பாதுகாத்த வெள்ளாளிய சிந்தனையிலான சமூக அமைப்பிலான கல்வியில் ஏற்படக் கூடிய மாற்றங்களையே. இதனால் இது சர்வாதிகாரமானது எனவும் சிறுபான்மைக்கு எதிரான ஒன்றாகவும் காட்டவும் கட்டமைக்கவும் அவர்கள் தயங்கவில்லை.

இவர்கள் "சிறுபான்மை" விரும்பியவாறு நூல்களை வெளியிடுவது என்பதன் பொருள், தங்கள் வெள்ளாளிய சமூக அமைப்பு முறையை முன்னிறுத்தியே ஒழிய, அதற்கு எதிராக அல்ல. பகுத்தறியும் அடிப்படையில் அல்ல. அரசு வெளியிடுவது "சர்வாதிகாரத்துக்கு வழி" வகுக்கும் என்று உப தலைப்பிட்டு, அதில்

"..வரலாறு இலக்கியம், சமயம் போன்ற பாடநூல்களை இவ் அரசாங்கம் வெளியிடத் தொடங்கினால் அரசாங்கம் விரும்பியவாறு உண்மைகளைத் திரித்து தமிழ், மக்களுக்கும் ஏனைய சிறுபான்மையினங்களுக்கும் இந்நாட்டின் சரித்திரத்தில எதுவித இடமும் இல்லாமல் செய்து விடலாம்"

என்கின்றனர்.

இனவாத அரசை முன்னிறுத்தி முன்வைக்கும் இந்த சுயநலத் தர்க்கமானது, அடிப்படையில் தமிழனைத் தமிழன் ஒடுக்கிய வரலாற்றை போற்றுகின்றது. இவர்கள் வரலாறு இலக்கியம், சமயம் என்று குறிப்பாக புலம்பும் தங்கள் கல்வி முறை, சாதி ஒடுக்குமுறை பற்றியோ, தங்கள் சுரண்டல்முறை பற்றியோ, தங்கள் ஆணாதிக்க கலாச்சாரம் குறித்தோ பேசுவதில்லை. வரலாறு இலக்கியம், சமயம் சார்ந்து முற்போக்காக எதையும் முன்வைப்;பதில்லை. மாறாக தங்கள் ஒடுக்கிய பிற்போக்கான வரலாறுகள், இதன் மேல் உருவாக்கப்பட்ட இலக்கியம், சமயம் பற்றியே பீற்றுகின்றனர். தமிழனைத் தமிழன் ஆண்ட, ஆள நினைக்கும் கதை இது தான்.

தங்கள் ஒடுக்கியாண்ட வெள்ளாளிய பாரம்பரியப் பெருமைக்கு மாறாக "..அறிவியல் கலாச்சார வளர்ச்சியை அரசாங்கம் விரும்பும் பாதையில் இழுத்துச் செல்லும் முயற்சி" என்று, தங்கள் பிற்போக்கான தமிழர் குறித்த பெருமையை பீற்றிக் கொள்கின்றனர். தங்கள் ஒடுக்கியாண்ட பெருமையைக் கல்வி மூலம் பாதுகாப்பது ஜனநாயக உரிமை என்று, அதையே அரசியலாக காட்டிக் கொள்ளுகின்றனர். "அரசாங்கத்தின் முடிவு கையாளப்பட்டால் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரே தன்மையான இரண்டொரு நூல்கள் மாத்திரம் வெளிவரும்." என்கின்றனர். ஏதோ பன்முகத் தன்மை கொண்ட பகுத்தறியும் மனித அறிவியலை முன்வைத்து இருந்தது போன்ற போலிப் பிரமையை உருவாக்கியபடி, தாம் அல்லாத தங்களை எதிர்த்த அனைத்து அரசியல்வாதிகளையும் "துரோகியாக" முத்திரை குத்தி ஒடுக்கியவர்களின், இந்தத் தர்க்கமே பித்தலாட்டமானது.

தமிழனைத் தமிழன் ஒடுக்கிய இரு நேர் எதிர் வரலாற்றையா தமிழ் சமூகம் கற்றது? மதம் தனிமனித நம்பிக்கை என்ற அடிப்படையில், மதசார்பற்ற கல்வியையா தமிழன் கற்றான்? சாதி மறுப்பு கல்வியையா தமிழினவாதக் கல்வி முன்வைத்தது? இது தமிழினவாத அரசியலில் கூட கிடையாது. ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஒடுக்கும் வெள்ளாளிய கல்வியையே முன்னிறுத்தியது.

இது தமிழினவாதிகளைப் பொறுத்தவரையில் "நாங்கள் ஒப்புக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சாசனத்தையும் மீறுகின்றது" என்று, தங்கள் தமிழினவாதத்துக்கு எதிரான மனித உரிமை மீறல் என்று கரடி விடுகின்றது. அத்துடன் இது

"தனி மனித உரிமைகளை வேண்டுமென்றே திட்டமிட்டு அபகரிக்கும் இவ்வரசாங்கம் பாட நூல்களை ஒரு கருவியாகக் கொண்டு மக்களின் சிந்தனை சுதந்திரத்துக்கு முற்றுப்புள்ளியிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. சர்வாதிகார நாடுகள் இப்படியான நடவடிக்கைகள் மூலம் தான் மக்களின் சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தின என்பது சரித்திரம் கண்ட உண்மை"

இப்படி கூறும் இவர்களின் சொந்த வரலாறு என்ன? மனித சிந்தனை சுதந்திரத்துக்கு வித்திட்டதா எனின் இல்லை. மாறாக வோட்டுகள் மூலம் முடக்கி, வேட்டுகள் மூலம் சிந்தனைச் சுதந்திரம் பலியிடப்பட்டதே தமிழின வரலாறு. இனவாதிகள் விரும்பாத கற்கை என்பதை "சர்வாதிகார நாடுகளின்" நடத்தையாக காட்டுவதன் மூலம், தங்களின் சொந்த நடத்தையை பிறர் மீது சுமத்தியபடி அதையே தொடருகின்றனர். எல்லா இனவாதிகளினதும், மதவாதிகளினதும்; நடத்தையே "சிந்தனை சுதந்திரத்துக்கு முற்றுப்;புள்ளியிடுவது" தான். இனவாதிகள், மதவாதிகள் மனிதனின் சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, ஒற்றைச் சிந்தனையை வளர்த்தன - வளர்க்கின்றன. இனம், மதம் என்று, பிற சமூகத்தில் இருந்து தங்களைத் தாங்கள் குறுக்கி;க் கொள்பவர்கள். தமிழினவாதிகள் கோரிய தமிழினவாத தமிழ் பல்கலைக்கழகத்தின் நோக்கமும் இத்தகையதே.

தொடரும்

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05

1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06

சர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07

தேசியமும் - சர்வதேசியமும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 08

இன-மத பல்கலைக்கழகத்தைக் கோரியவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 09

இனவாத காலனியத்தின் நீட்சியாக கோரியதே, தமிழ்ப் பல்கலைக்கழகம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 10

தமிழினவாத வாக்குக் கோரி "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 11

காணாமல் போன "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12

தமிழ் பல்கலைக்கழகத்தை யாருக்காகக் கோரினர்? - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 13