Language Selection

மணலை மைந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

6
ஏன், இன்றும் கூட அரசியல் ரீதியான சில செயற்பாடுகளில் ரயாவுடன் இணைந்து செயற்பாட்டு வருகிறேன். ரயாவுடன் சேர்ந்து செய்யும் அநேகமான அரசியல் சார்ந்த வேலைகளையும், கடந்த 15 வருடங்களாக ஒரு சிலர், அவர் மீதான தனிப்பட்ட ஆத்திரத்தில், கோவத்தில் அல்லது காப்புணர்வில் ஹட்டன் நேஷனல் வங்கி கொள்ளையை முன்னிறுத்தி அடித்து வீழ்த்த முயல்வதும், அவதூறுகளை பரப்புவதும் வழமையாக இருந்து வருகிறது. சிறு வயதிலேயே புலம்பெயர்ந்து, இங்கு கல்விகற்று , தொழில் புரிந்து நாம் சேர்த்த பணத்தில் செய்த அரசியல் வேலைகள் அனைத்தும், ரயாவிடமிருந்த ஹட்டன் நேஷனல் வங்கிப் பணத்தில் நாம் செய்ததாக கதை கட்டுவது வழமையாக இருந்து வருகிறது. அதேபோலவே, ரயா தான் எங்களுக்கு தலைவர் என சிலரால் சித்திரம் புனைய முனைவதும் நடந்தேறுகின்றது. உண்மை என்னவெனில் ரயாவை விட பெருமளவிலான பணத்தை நானும் இன்னும் சில தோழர்களும் செலவிட்டுள்ளோம்.

ரயாவிடமிருந்த திறமையாக நாங்கள் பயன்படுத்திக் கொண்டது அவரின் ஓயாத- சளைக்காத உழைப்பாகும். எடுத்த வேலையை முடிக்கும் வரையும் தனது அனைத்து சக்தியையும் பயன்படுத்தி – உழைக்கத் தயங்காத மனிதர் அவர். விமர்சனங்களை – எதிர்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தனது மனச்சாட்சிக்கு எது சரியென படுகிறதோ அதை செய்து முடிக்கும் தன்மை கொண்டவர். இதுவே, அவரின் நல்ல பக்கமாகவும் அதேவேளை , விமர்சனத்துக்கு உட்படுத்தவேண்டிய பக்கமாகவும் நான் கருதுகிறேன். பிழைகள் நடந்த வேளையில் தனிப்பட்ட முறையில் சுயவிமர்சனம் செய்யும் பண்பையும் நான் கண்டுள்ள அதேவேளை, அச் சுயவிமர்சனங்களை அவர் பெரிதும் நடைமுறையில் கடைப்பிடிக்க தவறியதையும் அவதானித்துள்ளேன்.


7

NLFT – ஹட்டன் நேஷனல் வங்கிப் கொள்ளைப் பணம் ரயாவிடம் ஒரு சதம் கூட இருக்கவில்லை என்பதை, இன்று கூட நிரூபிக்கத்தக்க வகையில் சாட்சியங்கள் உள்ளன. இது பற்றி ரயா சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 12.மே. 2021 அன்று தமிழரங்கத்தில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

"என் பற்றிய விபரம், என்னிடம் என்ன இருந்தது என்பதை, புலிகள் தங்கள் சித்திரவதைகள் மற்றும் வெளி விசாரணைகளில் பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, பகிரங்கமாகவே மேடையில் வைத்துக் கூறி இருக்கின்றனர். அவை என்னவென்பது வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.


28.04.1987 இல் புலிகள் என்னைக் கடத்தி காணாமலாக்கிய நிலையில், 80 நாள் அவர்களின் வதைமுகாமில் சித்திரவதையின் பின்பாக 17.07.1987 அன்று தப்பி இருந்தேன். இதன் பின் 35 நாட்கள் தலைமறைவாக இருந்தேன். இந்த தலைமறைவு வாழ்க்கையில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்கவைத்து அரசியல் ரீதியாக உதவியது நாவலன். நான் தப்பி இருப்பதை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாவலன் மூலம் தெரியப்படுத்தியதை அடுத்து, புலியின் கடத்தலுக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை தடுக்க, மாத்தையா – திலீபன் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மேடையில் வைத்து எனது உயிருக்கு உத்தரவாதத்தை தரக் கோரினர். இதையடுத்து கைலாசபதி கலையரங்கில் நடாத்தப்பட்ட அக் கூட்டத்தில், மேடையில் வைத்து பகிரங்கமாக எனது உயிருக்கு உத்தரவாதத்தை மாத்தையா வழங்கினார். கூட்டத்தில் அறிவிப்பின்றி திடீரென நான் மேடையில் தோன்றியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததுடன், அதனை எதிர்பார்க்காத அவர்கள் கூட்டத்தில் தாங்கள் மேலும் அம்பலப்படுவதில் இருந்து விலக இடைநடுவில் வெளிநடப்பு செய்தனர். இவை அன்றைய செய்திப் பத்திரிகையில் வெளியாகி இருக்கின்றது. 23.08.1987 அன்றைய ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி பத்திரிகைகளில் அந்த செய்திகள் இருக்கின்றது. இதற்கு முந்தைய பத்திரிகைளிலும் இதையொட்டிய பல செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின."

பார்க்க அன்றைய செய்திகள்

https://padippakam.com/padippakam/index.php/nortes/475-unijaffna

அக் கூட்டத்தில், என்னிடமிருந்து எவற்றைக் கைப்பற்றினர், நான் யார் என்ற விபரங்களை புலிகள் கூறி இருக்கின்றனர். என்னிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியையும், 154 ரவைகளையும் கைப்பற்றியதாக அவர்களே கூறுகின்றனர். மேலும் நான் அன்றைய காலத்தில் (மாத்தையாவின் மொழியில் தற்போது) மத்தியகுழு உறுப்பினர் என்ற தகவலையும் கூறுகின்றனர்;. அதேநேரம் எனது கைதுக்கு காரணமாக, ஆயுதம் வாங்க சென்ற தொடர்ச்சியில் சம்பந்தப்பட்ட ஆறாவது நபர் பற்றியும் கூறுகின்றனர். அந்த நபரிடம் கைப்பற்றியவை என்ன என்ற தகவலை, அன்று பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் தலைமைதாங்கிய அவ்வையிடம், மாத்தையா மற்றும் திலீபன் கூறிய தகவலை, அவ்வை அந்த மேடையிலேயே தெரிவிக்கின்றார். 80000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டது என்ற குறிப்பையும், அப் பணத்தைக் கொண்டு ஆயுதம் வாங்க முற்பட்டதாகவும் மாத்தையா கூறுகிறார்."

இந்த கட்டுரையில் ரயா எழுதியுள்ள விபரங்கள், நான் மேலே கூறியுள்ளது போல ஆதாரத்துடன் நிரூபிக்கத்தக்கது. இதில், புலிகளால் கைது செய்யப்பட்ட, 80000 ரூபா பணத்துடன் ஆயுதம் வாங்குவதற்கு அலைந்த ஆறாவது நபராக ரயா புலிகளின் பிரதி தலைவர் மாத்தயாவினால் “வர்ணிக்கப்படுகிறார் “. அத்துடன் ஒரு கைத்துப்பாக்கியையும், 154 ரவைகளையும் 80 ஆயிரம் ரூபாயையும் தாம் கைப்பற்றியதாகவும் மாத்தையா பகிரங்கமாக கூறியுள்ளார். அன்று பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் தலைமைதாங்கிய அவ்வையிடம், மாத்தையா மற்றும் திலீபன் கூறிய தகவலை, அவ்வை அந்த மேடையிலேயே தெரிவித்திருக்கிறார் . இந்த நிகழ்வு 23.08.1987 அன்று வெளிவந்த பத்திரிகைகள் மற்றும் அன்று யாழ்.பல்கலைகழகத்தில் நடந்த கூட்டத்தில் பங்குபற்றியவர்களில்- இன்று வெளிநாடு வாழ்பவர்கள் 10 பேருக்கு மேற்பட்டவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

மேலும், புலிகளால் கடத்தப்பட்டு பின் அவர்களின் பிடியிலிருந்து தப்பிய பின், இன்று லண்டனில் வாழும் – ரயா மீதான வங்கிக்கொள்ளை சார்ந்த அவதூறுகளை பரப்பிய இனியொரு இணையத்துக்கு சொந்தக்காரரான நாவலனே, ரயாவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்துள்ளார். இதுவும் பகிரங்கமான நிரூபிக்கத் தக்க விடையம். சில வருடங்களின் பின் இருவரும் சேர்ந்து சமர் என்ற அரசியல்-விமர்சன சஞ்சிகையை பாரிஸில் நடத்தினார்கள். அக் காலத்திலிருந்து சில முரண்பாடுகளினால் இருவரும் பிரிந்த பின்பு கூட நாவலன் வங்கி கொள்ளை சார்ந்த அவதூறை ரயா மீது முன்வைக்கவில்லை.

ஆனால், இதே நாவலன் சில வருடங்களில் பின்னால் அசோக், மற்றும் சில நபர்களுடன் சேர்ந்து தேசம் இணையத்தில் சொந்த பெயரிலும், புனைபெயரிலும் மூர்க்கமான அவதூறுகளை கிசு கிசு பாணியில் பரப்பினார். இக் கிசுகிசு பாணி அவதூறுகளால் தேசம் இணையம் பிரபலமாகி, பின் வாசகர்கள் சலித்துப்போக மேற்படி இருவரும் வெளியேறி இனியொரு என்ற தளத்தை உருவாக்கி அவதூறுகளை தொடர்ந்தார்கள். இப்போதும் கூட அவ் அப்போது ரயாவின் நினைவு வந்தால் முகபுத்தகத்தில் பதிக்கின்றார்கள். இவர்களுக்கு ஜால்ரா போட இரவுகளில் தண்ணீரில் நீந்தும் சில பாம்புகள் அவதூறுகளை விரிவுபடுத்துவார்கள். கடந்த சில மாதமாக ரயாவின் மீது பழிசொல்லி களைத்துப்போன அசோக், தற்போது ரயாவுடன் அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்பில் இருப்பவர்களையும் வங்கி கொள்ளைப் பணத்துடன் சம்பந்தப்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார்.

எந்தவித தமிழ் தேசிய அரசியல் தொடர்பும் இல்லாமல், ரயாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகியவர்கள் மீதும் கூட கீழ்த்தரமான பொய்களை அள்ளி வீசிவருகிறார் அசோக். இவர் சார்ந்த புளொட் இயக்கம் பல கொலைகளையும் கொள்ளைகளையும் செய்துள்ளது. இது பற்றி அவர் எந்த காலத்திலும் வாய் திறந்ததில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகத்தில உள்ள அத்தனை வழிவகைகளையும் பயன்படுத்தி தன்னை புனிதனாக்கி கொள்வதில் தீவிரம் காட்டும் அவர், இப்போ தன்னை புலிகளின் ஆதரவாளர் போல காட்டி வருகிறார். இதன் மூலம் அவர் எழுதும் அவதூறுகளுக்கு புலிவால்கள் லைக் போட்டும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றார்கள். உதாரணமாக, கனடாவில் வாழும் ஒரு பெண் எழுத்தாளர். அவரை 2009 இல் ம.க.இ.க சந்தர்ப்பவாதமாக, தனது வினவுதளத்தில் கட்டுரை எழுத வைத்தது. அந்த அரைகுறை “தமிழ் தேசிய ” பிதற்றல் கட்டுரைகள் மீது ரயா போன்ற பலர் விமர்சனம் வைத்தார்கள். இந்த கோபத்தில் இருந்து வந்த அந்த எழுத்தாளர், இப்போதும் தன்னை விமர்சித்தவர்களின் மீது வன்மத்தில் இருந்தபடி , அசோக்கு போன்றவர்களின் விமர்சனத்துக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

ஆனால், அசோக் அவர்களும் நாவலன் அவர்களும் வங்கி கொள்ளை பணத்துடன் ரயாவை இணைத்து பரப்பும் தகவல்கள் பொய்யானது என்று தெரிந்தே, அவ் அவதூறுகளை-பொய்களை பரப்புகின்றார்கள். இவர்கள், நன்றாக அறிவார்கள் யார் யாரெல்லாம் NLFT -PLFT தலைமையில் இருந்தார்களென்று! எந்த காலத்திலும் தப்பித் தவறிக் கூட அப்பணத்துக்கும் கொள்ளைக்கும் பொறுப்பான, NLFT -PLFT தலைமையில் இருந்தவர்களை இவர்கள் விமர்சித்தது கிடையாது. மாறாக ஹட்டன் நேஷனல் வங்கி கொள்ளை பணத்துடன் நேரடி தொடர்புள்ளவர்கள் அசோக் மற்றும் நாவலனுடன் இன்றுவரை தொடர்பில் உள்ளனர். நெருக்கமான உறவுகளை பேணுகின்றார்கள். அசோக் மற்றும் நாவலன் பரப்பும் பொய்களுக்கு ஆதரவாக பொய் பெயர்களில் பின்னூட்டம் இடுவது, பொய்களை விரிவுபடுத்துவது போன்ற வேலைகளையும் முன்னாள் NLFT மத்தியகுழு மற்றும் வங்கி பணத்தில் நலன்பெற்றோர் செய்து வருகின்றார்கள்.

இவர்கள், அசோக் போன்றவர்கள் தொடர்ந்தும் ரயா மீது பழி சுமத்துவதன் மூலமே தாம் (NLFT -PLFT பிரமுகர்கள்) வங்கி பணம் சம்பந்தமாக மக்களுக்கு நேரடியாக பதில் சொல்லமால் தாம் தப்பிக்க முடியுமென்ற விளப்பத்தில் இன்றும் இயங்கி வருகின்றார்கள்.

8

இந்த வங்கி கொள்ளை பணத்துடன் ரயாவை இணைத்து பல வருடங்களாக பல கட்டுகதைகள்- அவதூறுகள் உலவிய போது, ரயாகரன் 12.மே. 2021 அன்று தமிழ் அரங்கத்தில் எழுதிய கட்டுரை போன்று- ஆரம்பத்திலேயே வெளிப்படையாக எழுதியிருந்தால், இன்று வரை உலாவும் வங்கிக் கொள்ளை பற்றிய பொய்களை சிலவேளைகளில் தடுத்திருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. தியாகியாக தன்னை காட்டிக்கொண்டு எல்லாப் பழியும் தன்தலையில் சுமந்தார். தற்போது சில நண்பர்களின் நெருக்குவாரம் காரணமாகவே வெளிப்படையான கட்டுரையை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் கூட கொள்ளைக்கும் – பணத்துக்கும் பொறுப்பான எவரும் அம்பலப்படுத்தப்படவில்லை. காத்தார் மூத்தார் எல்லோரையும் சுயவிமர்சனம் செய்ய கோரும் திருவாளர். ரயா, தன் மீது பழி வந்தாலும் கூட, தனது முன்னாள் தோழர்களை பற்றி ஒரு சொல் கூட வாய்திறக்க தயாரில்லை. ரயாவில் மட்டுமல்ல அவரின் குடும்பம்- அதன் பொருளாதாரம், ரயாவுடன் தொடர்பில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதும் கூட அவதூறுகள் விதைக்கப்படும் போதும் அவர் பேச தயாராயில்லை. தன் முன்னாள் தோழர்களை கேள்விகேட்க தயாராகவில்லை. இந்த விடையத்தில் ரயாகரனின் இந் நிலைப்பாடு, அரசியல்- சமூக ரீதியாக இரட்டை நிலைப்பாட்டை பறைசாற்றுகிறதென நான் சொல்வதில் தவறுண்டோ ?! அதேவேளை, ரயா தியாகியாக எல்லா அவதூறுகளையும் பொறுத்துக்கொள்ளலாம். அதுவும் ஒரு வகையில் அவரின் தெரிவு. ஆனால், NLFT -PLFT என்ற இரு அமைப்புகளையும், மற்ற இயக்கங்களுடன் ஒப்பிட்டு 100% சுத்தமான புரட்சிகர, ஜனநாயக, மார்சிச, லெனினிய, ஸ்டாலினிய, தமிழ் தேசிய, கம்யூனிச அமைப்புகள் என ரயா உட்பட – NLFT -PLFT முன்னாள் உறுப்பினர்கள் பல வருடங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் படம் காட்டி வருகின்றார்கள்.

   1. உண்மையிலே அப்படியான அமைப்புகளாக இருந்திருந்தால், ரயா என்கிற தனிமனிதர் மீது வங்கிக்கொள்ளை பழி சுமத்தபட்டபோது, புலிகளினால் கொல்லப்பட்டவர்கள் போக- மீதமாகவுள்ள 100 % சுத்தமான புரட்சிகர மத்தியகுழு உறுப்பினர்கள் ஏன் சமூகநலனில் நின்றாவது உண்மைகளை பகிரங்கமாக கூற முன்வரவில்லை?

              2. அத்துடன், வங்கி கொள்ளையில் அபகரிக்கப்பட்ட பணம் சமூகத்துக்கு – மக்களுக்கு சொந்தமானது. இக் கொள்ளை பற்றி குறைந்தது 15 வருடங்களுக்கு மேலாக விவாதங்கள், அவதூறுகள் பரப்பப்படுகிறது. இந் நிலையில் , மற்ற தமிழ் தேசிய இயக்கங்களை விட எல்லாவற்றிலும் வளர்த்த, முரண்பாடற்ற ஜனநாயகத்தை உலகிற்கு கற்பிக்க வந்த, புத்திசீவி இடதுசாரிகளின் இயக்கங்களான NLFT – PLFT-யின் தலைமையில் இருந்தோருக்கு ஓரளவுக்கேனும் உண்மையை சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இல்லையோ???!

             3. புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது இலங்கையிலும் கூட அரசியல், பொருளாதார, கலை -இலக்கிய பரப்பில் அதிகாரம் செலுத்தும் சக்திகளாக பல NLFT – PLFT முன்னாள் உறுப்பினர்கள் வலம் வருகின்றார்கள். அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டதாக பாசாங்கு செய்தபடி, தமது சமூக அதிகாரத்தை பல தளங்களில் தக்கவைத்துள்ளனர். எல்லோருக்கும் தர்மமும், நியாயமும், சமூக பொறுப்பும் கற்பிக்க முயலும் இவர்கள்- ஏன் இவர்களின் இயக்கத்தால் செய்யப்பட்ட கொள்ளை பற்றியும் அதன் பணம் பற்றியும் பொறுப்பு கூற தயங்குகிறார்கள் ???

       4. கனடாவில் வசிக்கும் இலக்கிய -அரசியல் செயற்பாட்டாளர் விக்கினேஸ்வரன், கனடா மனோரஞ்சன், லண்டனில் இருக்கும் பனிமலர் சபேசன் (இவர் தன்னை மத்தியகுழு உறுப்பினர் என்று கூறி வந்தார் . சிலர் இதை மறுக்கின்றனர்), மற்றும் லண்டனில் வாழும் தமிழ் மாறன் போன்றோர் ஏன் இன்றுவரை இப்பிரச்சனை பற்றி சிறு மூச்சு கூட விட்டதில்லை ??? அரசியலில், செயற்பாட்டில் அதி முன்னேறிய இயக்கத்து தலைமை என தம்பட்டம் அடிக்கும் NLFT -தலைமையை சேர்ந்த இவர்களுக்கு சமுதாயம் சார்ந்த கடப்பாடும் கரிசனமும் இல்லையோ ????! இங்கு பெயர் குறிப்பிட்டவர்கள் போன்று இன்னும் பலர் உள்ளனர்.

9

ரயா பாரிஸ் வந்த பின்பு அசோக் மற்றும் நாவலன் அவரின் நெருங்கிய நண்பர்களாகவே இருந்துள்ளார்கள். அப்படியானால், அவர்கள் எவ்வாறு வன்மம் கொண்ட பொய்களையும்- அவதூறுகளையும் பரப்பும் நிலைக்கு வந்து சேர்ந்தார்கள் என்பதுவும், இங்கு ஓரளவுக்கேனும் ஆராய வேண்டியது முக்கிய கூறாகும். நான் ஆரம்பத்தில் கூறியது போல புளொட் இயக்கத்தின் மீது விமர்சனம் வைப்பதில் NLFT- காரர்களுக்கு அலாதி பிரியம். அந்த வழியில் வந்த ரயா காரசாரமான விமர்சனங்களை புளொட் இயக்கம் சார்ந்து எழுதியுள்ளார். இவ் விமர்சனக்களில் இவர் அதிகமாக கேள்விகேட்டதுவும், சில சந்தர்ப்பங்களில் தவறான அடிப்படையில் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டவர்களும், அசோக் யோகன் கண்ணமுத்துவும், புளொட் இயக்கத்தின் உபதலைவராகவிருந்த காந்தன் அல்லது ரகுமான் ஜான் மாஸ்டர் அவர்களுமாகும். ரயா மற்றும் இன்னும் சிலரும் எந்தவித மனத்தடையுமின்றி, புளொட் இயக்கத்தில் நடந்த அனைத்து கொலை, கொள்ளை மற்றும் அரசியல் கொடுமைகளுக்கு மேற்படி இருவருமே காரணமென்பது போன்ற சித்திரத்தை தம் விமர்சனங்கள் மூலம் கட்டமைத்தார்கள்.

அசோக்கோ அல்லது ரகுமான் ஜான் அவர்களோ எந்தவொரு கொலைகளையும் செய்ததாகவோ அல்லது நேரடியாக தலையிட்டதாகவே தகவலில்லை. ஆனால், அவர்கள் பொறுப்புவகித்த புளொட் இயக்கத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் தனியாகவும், தலைமையில் இருந்தோருடனும் இணைந்து பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடுள்ளவர்கள். இந்த இருவர் சார்ந்தும் எழுதப்பட்டவைகளில் பெரும்பான்மையான பதிவுகளின் போக்கும், உள்ளடக்கமும் அவர்கள் மீதான காத்திரமான –அரசியல் உள்ளடக்கத்தை கொண்ட விமர்சனங்களாக அமையவில்லை என்பதே என் கருத்து. அவையெல்லாம் குற்றப்பத்திரிகைகளாகவே அமைந்தன.

மே 18 என்ற பெயரில், ரகுமான் ஜான் அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்க முயற்சித்த வேளையில், பல விமர்சனங்களை அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது. மே 18 பற்றியும் அதன் பத்திரிகையாக வெளிவந்த வியூகம் பற்றியும் விமர்சனங்களை எழுதியவர்களில் நானும் ஒருவன். அவர் மீது வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று, புது அரசியல் அமைப்பை உருவாக்குவதானால் – அதற்கு முன்பு அவர் உப -தலைமை வகித்த புளொட் மற்றும் உறுப்பினராக செயற்பட்ட தீப்பொறி அமைப்புகள் சார்ந்த அவரின் விமர்சனம்-சுயவிமர்சனத்தை முன்வைக்கவேண்டுமென்பதாகும். அந்நிலையில் இது ஒரு நியாயமான கோரிக்கையே!. இதற்கு அப்பால் விமர்சனம் என்ற போர்வையில் அவரை பற்றி எழுதப்பட்டவையெல்லாம் பெரும்பாலும் அடிப்படையற்ற “கேள்வி செவியன் ” எழுத்துக்களே. ரகுமான் ஜான் மற்றும் அசோக் அவர்களை விமர்சனம் – சுயவிமர்சனம் கோரிய ரயா, எந்த காலத்திலும் பகிரங்கமாக NLFT – PLFT சார்ந்தவர்களை கேள்வி கேட்டதும் கிடையாது . சுயவிமர்சனம் கோரியதும் கிடையாது. மாறாக, NLFT சார்ந்த விடயங்களை – வங்கி கொள்ளை உட்பட தன்மீது பழிவந்தாலும் பறயில்லையென மென்று விழுங்கினார் !!!

இதேபோலவே நாவலன் அவர்கள், ரயா மீது கோபமும் வன்மமும் கொள்ள காரணமாக இருந்தது, இருவர்க்கும் இடையிலான தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட சீவியம் பற்றிய பார்வைகள் சார்ந்த முரண்பாடுகளே! அதை இங்கு விபரிப்பது நாகரிகமான – நேர்மையான விடயமுமல்ல. எனது அரசியல் விளக்கத்தின்படி, இந்த இருவரினதும் அரசியல் பார்வையில் பெரிதாக எந்த வித்தியாசமுமில்லை- முரண்பாடுகளுமில்லை. குறிப்பாக, தமிழ் தேசிய விடுதலை சார்ந்து, மார்சிஸத்தை முன்னிறுத்தி-சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகித்து பிரிவினையை கோருவதே இருவரின் அரசியல் பார்வையாக இருந்து வந்தது. ரயா அதிலிருந்து இன்று கொஞ்சம் மாறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

10

19 மே 2021. முடிவுரை .

எனக்கு தெரிந்த -புரிந்த அரசியல், தத்துவார்த்த மற்றும் இலங்கை தமிழ் தேசிய போராட்ட வரலாறுப் புரிதலின் அடிப்படையில் மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்படும் ரயா, நாவலன், அசோக் மற்றும் ஜான் மாஸ்டர் போன்றவர்களின் அரசியல்- தத்துவார்த்த அடிப்படைகளில் பெரியதோர் வித்தியாசங்கள் -முரண்பாடுகள் கிடையாது. தனிமனித சீவியம் சார்ந்த போக்குகளும், காழ்ப்புணர்வுகள், பொறாமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகளும், புலப்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கிய “குழுவாதங்களுமே இவர்களுக்கு இடையிலான மோதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது . இவர்கள் அவதூறான முறையில் ஒருவர் மீது ஒருவர் முன்வைக்கும் குற்றங்களினால், உண்மையிலேயே சமூகவிரோத குற்றவாளிகளும், அரசியல் பொறுக்கிகளும் தப்பித்து வாழ்கின்றனர். உத்தம புத்திரர்களாக, பிரமுகர்களாக வலம்வருகின்றார்கள். உதாரணமாக, NLFT – தலைமையிலிருந்தோர், ஹட்டன் நேஷனல் வங்கி பணத்தை கையாண்டோர்-அதனால் பலன் பெற்றோர் பலர் இன்று எதுவும் தெரியாதது போல சமுக-அரசியல் தளத்தில் முற்போக்காளர்களாக –சமூக விடுதலை வீரர்களாக, இலக்கிய -அரசியல் விமர்சகர்களாக வலம் வருகின்றார்கள். ஹட்டன் நேஷனல் வங்கி பணத்தை கையாண்டவர்கள், சமூகத்துக்கு இக் கொள்ளை பற்றிய பொறுப்பு கூறவேண்டிய கடமையிலிருந்து தப்பிக்கிறார்கள். அதே போலவே, புளொட் இயக்கத்துக்குள் நடந்த கொலைகள், சமூகவிரோத செயல்களை அசோக் – ரகுமான் ஜான் மீது சுமத்துவனால், தப்பிப்பவர்கள் உண்மையான சமூகவிரோத சக்திகளே! புளொட் இயக்கத்தில் தலைமை பாத்திரம் வகித்த ரகுமான் ஜான் மற்றும் அசோக் இருவரும் என்ன உத்தம புத்திரர்களாக என்றால் கிடையாது! இவர்கள் மீதும் நிரூபிக்கத் தக்கதான விமர்சனங்கள் உண்டு. அவற்றை நாம் விரிவுபடுத்தி- திரிபுபடுத்தி ஊதிப்பெருக்காமல் உண்மைதன்மையின் அடிப்படையிலிருந்து விமர்சனங்களை கையாள வேண்டும்!


11

20.05.2021. முடிவுரைக்கொரு முடிவுரை.

மேலே உள்ள பந்தியுடன் கட்டுரையை முடிவுக்கு கொண்டுவரவே முடிவு செய்திருந்தேன். எழுதியும் முடித்து விட்டேன். இன்று 20.05.2021. பணிமுடிந்து இணைய ஊடகங்கள் பக்கம் போனால், அங்கு முதலில் கண்டது திருவாளர். அசோக் யோகன் கண்ணமுத்து எழுதி, ஐரோப்பாவில் உள்ள இணைய தளம் ஒன்றில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்று. அதன் உள்ளடக்கம் என்னை மனக்கிலேசம்- மனத்துயர் அடைய வைத்தது.

அசோக் யோகன் கண்ணமுத்துவுக்கும், முன்னாள் புளொட்-தீப்பொறி உறுப்பினர் ஒருவருக்குமிடையில் இடையில் நடக்கும் விவாதத்தில் “வெல்வதற்காக”, புளொட் இயக்கத்தில் நடந்தாக கூறப்படும் கொடுமையான ஓர் சம்பவத்தை உபயோகித்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார். அவ் இயக்கத்தின் பெண் தோழர் ஒருவர் மீது நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமையையே அசோக் தனது கட்டுரையில் உபயோகப்படுத்தியுள்ளார். அக் கொடுமையை நிகழ்த்தியதாக ஒரு முன்னாள் புளொட் உறுப்பினர் மீது குற்றம் சுமத்துகிறார். இந்த பாலியல் வன்கொடுமை பற்றிய குற்றச்சாட்டு சிலவருடங்களுக்கு முன்பு, அரசியல் கிசுகிசு மற்றும் அவதூறுகளை பிரசுரித்த தேசம்நெற்றில் ஜென்னி என்பவர் எழுதிய கட்டுரையில் முன்வைக்கப்பட்டது. பின்பு அவரே தான் முன்வைத்த குற்றச்சாட்டில் பிழை இருக்கலாம் என்று கூறினார். அந்த குற்றச்சாட்டுகளையே இன்று தூசி தட்டி, அசோக் அவர்கள், தனது சொந்த அனுபவத்தை பதிவது செய்வது என்ற போர்வையில் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார்.
இங்கு அசோக்கின் கட்டுரையில் சகிக்க முடியாமலிருப்பது அவர், ஒரு விவாதத்தில் வெல்லவேண்டுமென்ற வெறியில், படுகீழ்த்தரமான முறையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு பெண்ணை உபயோகப்படுத்தியதாகும். அவர் எழுதும் அந்த கதையின் உள்ளடக்கமெல்லாம் மூன்றாம் நிலை தகவல்களிலிருந்தும் – அவதூறுகளாக வெளிவந்த புனைவுகளிலிருந்தும் தொகுக்கப்பட்டதாகும்.அசோக் ஒரு பெண் மீது நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் பாலியல்கொடுமையை உபயோகிப்பது அந்த பெண்ணுக்காக நியாயம் கேட்பதற்காக அல்ல! அல்லது பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக அல்ல! அவர் எழுதும் வன்மம் நிறைந்த அந்த பதிவில் ஒரு பெண்ணை உபயோகிப்பது தன்னை நியப்படுத்திக் கொள்ளும் வெறியே தெரிகிறது! அஷோக்குக்கு யாரையாவது பழிவாங்க நினைத்தால் அதற்கு வேறு கதைகளை பயன்படுத்தியிருக்கலாம். ஒரு பெண் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் கொடுமையை, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக உபயோகிக்கின்றார்.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு புளொட் இயக்கத்திலிருந்து தப்பியோடிய நபர்கள் மூவர் மீதும், தீப்பொறி அமைப்பு கருக்கொண்ட காலத்தில்- அதன் மீதும் குற்றம்சுமத்தி அழிப்பதற்காக உருவாக்கபட்டதாக – அரங்கேற்றப்பட்டதாக கூறப்படும் அந்த பாலியல் வன்கொடுமைக்கு, அசோக் தான் அன்று பங்கெடுத்த புளொட் தலைமையிடம் நியாயத்தை கோரியதாக எந்த பதிவுமில்லை. ஆனால், இன்று தன்னை உத்தமனாக நிலைநிறுத்த- அந்த பெண்ணின் வாழ்க்கை கதை என்ற புனைவை தனது சுயதேவைக்கு பயன்படுத்தியுள்ளார். உருக்கமாக அந்த பெண்ணின் வாழ்வை சித்தரிப்பதன் மூலமும், இறுதியில் அவர் மனசிதைவடைந்து இறந்து போனார் என்று கிளைமாக்ஸ் புனைந்த விதத்திலும், தன் மீது பரிதாபத்தையும், தன் எதிரிகள் மீது வெறுப்பையும் சூட்சுமமாக கட்டமைத்திருக்கிறார் அசோக்.

அசோக் அவர்களில் புனைவு வெளிவந்து சில மணிநேரங்களிலேயே அவர் எழுதியது பொய் என்று நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் அசோக்கின் முகப்புத்தகத்திலேயே பதியப்பட்டது. உயிருடன் வாழும் ஒருவரை, “மனசிதைவடைந்து இறந்து விட்டதாக” கூறியது பொய் என நிருபிக்கப்பட்டது. அத்துடன், பெண்களை சுய தேவைக்காக கிள்ளுக்கீரையாக பயன்படுத்துவதை பகிரங்கமாக எதிர்த்ததுடன், அசோக்கின் பதிவில் உண்மையில்லை என மறுத்தார் பலரதும் நம்பிக்கைக்கும் பாத்திரமான, விடயமறிந்த முன்னாள் புளொட் இயக்க போராளி ஒருவர்.

இக் கட்டுரையை ஒரு நேர்மறையான முடிவுடன் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எச்சசொச்சமாக இருக்கும் இடதுசாரிய -முற்போக்கு சக்திகள், சமூக அக்கறை கொண்டவர்கள் தமக்கு இடையிலான முரண்பாடுகளை கடந்து – உடன்பாடுகளை கண்டடையும் வகையில் எழுதவே நினைத்திருந்தேன். முடியவில்லை. இது ஒரு தோற்றுப்போன கட்டுரை ………………. .

நிறைவாக, பேராசிரியர் அ .ராமசாமி அவர்கள் தனது முக புத்தகத்தில் 20.05.2021 அன்று எழுதிய குறிப்பொன்றில் இருந்து சில வரிகள் :“விமரிசன மதிப்பீடுகளைச் சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. இடம்,பொருள், ஏவல் என எதையும் பார்க்காமல் நீங்கள் பேசலாம். ஆனால் அவை விமரிசன மதிப்பீடுகளாக இருக்கவேண்டும். எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் உதிர்க்கும் தரமதிப்பீடுகளாகவும் ஒப்பீடுகளாகவும் நீங்கள் சொல்வது இருக்கும்போது அதற்கான எதிர்வினைகளும் அப்படித்தான் இருக்கும். “

Newton Marianayagam .21.05.2021.

இக் கட்டுரையில் முதலாவது பக்கம் இணைப்பில்.

part 1 பகுதி 1

https://raseriart.wordpress.com/2021/05/19/அவதூறுகளை-வரலாறாக்குவத/