Language Selection

மட்டக்களப்பு சிறையுடைப்பு நடாத்தப்பட்டு அரசியற்கைதிகள் மீட்கப்பட்ட சம்பவம் நடந்தாயிற்று. அன்றைய காலத்தில் மிகவும் பரபரப்பானதும் திகில் நிறைந்ததுமான இந்தச் சிறையுடைப்புச் சம்பவம் பல கைதிகளை விடுவித்ததன் பின்னர், விடுவிக்கப்பட்டவர்கள் தாம் சார்ந்திருந்த விடுதலை இயக்கங்களில் மீண்டும் இணைந்து கொண்டார்கள்.

 


அன்றிருந்த சூழலில் சிறையுடைப்பு என்பது இராணுவ முகாம்களைத் தாக்கி வெற்றிகொள்வதையும் விடவும் ஒரு வீரதீர சம்பவமாக மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி அலையை ஏற்படுத்தும் என்பது இயக்கங்களின் கணிப்பாக இருந்தது.

அதுமட்டுமன்றி இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த மக்கள் இந்தச் சிறையுடைப்பை ஒரு வெறும் சாகச இராணுவ நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல் எல்லா இயக்கங்களையும் சார்ந்த கைதிகளின் உயிர் மீட்பு நடவடிக்கையாகவும் அதுவரையும் அவர்கள் கோரி நின்ற இயக்கங்களின் ஒற்றுமைக்கான ஒரு நடவடிக்கையாகவும் கண்டார்கள்.

இச் சிறையுடைப்பில் விடுவிக்கப்பட்ட பலர் இன்று உயிருடன் இல்லை. சிலர் இன்றும் சாட்சிகளாய் வாழ்கிறார்கள். இங்கே கீழே குறிப்பிடப்படும் இச் சிறையுடைப்பின் சுருக்கமான விபரிப்பு பற்றிய தரவுகளை சரி பார்க்கவும் விமர்சிக்கவும் மறுக்கவும் இன்னும் சிறைமீண்டு உயிர்வாழும் அவர்களது கருத்துக்கு விடுவோம். இக்குறிப்பு ரீ.சபாரத்தினம் என்பவரால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டதன் தமிழாக்கம்.

இச் சிறையுடைப்பின் பின்னராக, ஒரு முரணான விடயம் நடந்து கொண்டிருந்தது அன்று. இந்தச் சிறையுடைப்பை நடாத்தியதும் அதன் வெற்றிக்கு உரிமை கோருவதுமான தீர்மானம் புளட்டின் மத்தியகுழுவால் நிறைவேற்றப்பட்டது.

சிறையுடைப்பில் மீண்டவர்கள் பாதுகாப்பான முறையில் நகர்த்தப்பட்டதனை அடுத்து, சிறையுடைப்பு நடவடிக்கைக்கு துண்டுப்பிரசுரத்தின் வழி உரிமை கோருவது என புளட்டின் யாழ் மாவட்ட நிர்வாகக் குழுவுக்கு அறிவுறுத்தல் கிடைத்தது. ஆனால் சிறையுடைப்புக்கு தனியே புளட் மட்டும் உரிமை கோரமுடியாதபடி மற்றைய இயக்கங்கள் இது ஒரு பல்வேறு இயக்கங்களின் ஒன்றிணைந்த நடவடிக்கை என முரணான தகவல்களை தந்துகொண்டிருந்த போதும், இந்தத் துண்டுப்பிரசுரம் மூலம் தனியே உரிமை கோருவதில் புளட் முடிவு கொண்டிருந்தது.

இந்தச் சிறையுடைப்புக்கு முன்னர் என்னவாறான கொடூர சம்பவங்கள் நடந்தது என்பதையும் குறிப்பாக இந்தக் கைதிகள் பற்றியும் இங்கு ஒருமுறை மீட்டுப் பார்ப்போம்.

கறுப்புயூலை என்று நினைவு கூரப்படும் 1983 ம் ஆண்டு யூலைப் படுகொலைகளையும் கலவரங்களையும் அடுத்து நடந்தேறியது தான் வெலிக்கடைச் சிறைப் படுகொலை.

வெலிக்கடை சிறையில் யூலை மாதம் 25 ம் திகதி 35 தமிழ் கைதிகள் படுகொலை நடந்து, நாள் விட்டு மறுநாள் 27 ம் திகதி மேலும் 18 தமிழ் கைதிகளும் 3 சிறைச்சாலைக் காவலர்களும் கொல்லப்பட்டனர். 73 தமிழ் அரசியல் கைதிகளில் 53 மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் ரெலோ இயக்கத் தலைவர்களாக இருந்ததாலும், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தமக்கெதிரான வழக்கில் பகிரங்கமாக வாதிட்டதாலும் அதிகமாக பேசப்பட்டவர்கள் குட்டிமணி, மற்றும் தங்கத்துரை போன்றவர்கள். குட்டிமணியின் கண்கள் பிடுங்கப்பட்டு கொலைவெறியாட்டம் நடந்ததன் பின்னர் காந்தீயத்தைச் சேர்ந்த டொக்டர் இராஜசுந்தரம் கோடரியால் மண்டை பிளக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் இந்தக் கைதிகள். வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டதே அவர்களைப் படுகொலை மூலம் இல்லாதொழிப்பதற்காகவே என்ற பேச்சுமுண்டு.
யூலை 28 ம் திகதி, இந்தக் குரூரப் படுகொலையிலிருந்து மயிரிழையில் தப்பிப் பிழைத்த 19 தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறையில் ஏற்கனவே 22 தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இப்போது மொத்தமாக 41 அரசியல் கைதிகளும் மற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள சாதாரண மற்றும் தீவிர கொலை கொள்ளையில் ஈடுபட்ட 150 குற்றவாளிக் கைதிகளும் இருந்தனர்.

அரசியல் கைதிகளில் அன்றைய பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக இருந்த வரதராஜப் பெருமாள் (பின்னாட்களில் வடகிழக்கு முதலமைச்சராக இருந்தவர்) மற்றும் மகேந்திரராஜா என்பவர்களும் உள்ளடங்குவர்.

சத்துருக்கொண்டானில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இனால் ஒழுங்குசெய்யப்பட்ட கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்ற யாழ்ப்பாணத்திலிருந்து இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அதனை ஒழுங்கு செய்திருந்தவர்கள் மற்றும் உரையாற்ற வந்தவர்கள் உள்ளடங்கலாக கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் வரதராஜப் பெருமாள், சிறீஸ்கந்தராசா, மணி, வடிவேலு, குமார், சிவா என்போர் உள்ளடங்குவர். ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் நாயகம் பத்மநாபா அங்கிருந்த போதும் பொலிசாருக்கு அவரும் கூடவே கலந்துகொண்டது பற்றியும் அவர் பற்றியும் சரிவர அறியாதிருந்ததால் அவர் கைது செய்யப்படுவதிலிருந்து தற்செயலாக தப்பித்துக் கொண்டார்.

அப்போது மட்டக்களத்தைச் சேர்ந்த பரமதேவா (புளட் அரசியல் துறை வாசுதேவாவின் சகோதரர்) மட்டக்களப்பு சிறையில் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக ஆரம்பகாலங்களில் கைதுசெய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர். அவரது சிறைத் தண்டனை சில மாதங்களில் முடிவடைய இருந்தது, எனினும் சிறையுடைப்பைத் திட்டமிட்ட குழுவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.

மட்டக்களப்புக்கு அரசியற்கைதிகள் இடம் மாற்றப்பட்டதன் பின்னர் கொழும்பிலிருந்து உயர் மட்ட போலீஸ் குழு ஒன்று ஆகஸ்ட் மாதம் மட்டக்களப்பு சிறைக்கு சென்றது. வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் சம்பந்தமான அறிக்கைகளை பதிவு செய்வதற்காய், இங்கு இடம் மாற்றப்பட்டிருந்த 19 கைதிகளையும் விசாரிக்க என அவர்கள் அங்கு சென்றிருந்தனர். ஆனால் 19 கைதிகளும் கூட்டாக விசாரணையைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். விசாரணைக்கு தனித்தனியாக அழைத்தபோது, அந்த விசாரணையை மேற்கொள்ளும் புலனாய்வாளர்கள் மேல் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என துணிவுடன் ஒருமித்த முகமாக மறுத்து நின்றனர். வேறு வழியின்றி புலனாய்வாளர்கள் விசாரணையைக் கைவிட்டு கடுப்புடன் திரும்பினர்.

புலனாய்வாளர்களின் பயணத்தின் பின்னர், அங்கிருந்த சிறை அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஒரு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு இக்கட்டான தகவல் எட்டியது. சிங்கள பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தனிச் சிங்களப் பிரதேசத்திலுள்ள உயர் பாதுகாப்பு மிகுந்த சிறையொன்றுக்கு தமிழ் அரசியல் கைதிகள் இடம் மாற்றப்பட இருக்கிறார்கள் என்பது தான் அத் தகவல்.

உயிர்பிழைத்து எஞ்சியிருக்கும் தங்களையும் படுகொலை செய்வதற்கே இந்த இடமாற்றம் என்பது அரசியல்கைதிகளிடம் அச்சத்தை தோற்றுவித்தது.

எனவே ஒன்றில் முடிந்தால் எல்லோரும் அல்லது ஒரு சிலரேனும் உயிர்பிழைப்பதற்குள்ள ஒரேயொரு வழி சிறையிலிருந்து தப்புவது. அந்த முயற்சியில் சிலர் உயிர் போனாலும் போகட்டும், எஞ்சியவர்ளாவது உயிர் பிழைக்கட்டும் என்று முடிவாகிறது.

இத் திட்டத்துக்கு எல்லாரும் ஆதரவு தருகிறார்கள். வேறுபாடுகள் கடந்து ஒருமிக்கிறார்கள்.

அன்று இளமைத் துடிப்பும் பலமும் கொண்ட டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், பனாகொட மகேஸ்வரன், பரமதேவா மற்றும் வேறும் சிலர் சிறையுடைப்பை முன்னின்று நடாத்தும் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

உடன்படிக்கையின் படி எல்லோரும் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் வரை இது ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இருக்கும். எல்லோரும் சிறையை விட்டு வெளியேறிய பின்னர் அந்தந்தப் போராளிகளை அந்தந்தப் போராளிக்குழுக்களே பொறுப்பேற்று அப்பிரதேசத்தை விட்டு முற்றாக வேறு பிரதேசங்களுக்கு பாதுகாப்பாக நகர்த்த வேண்டும் என உடன்பாடாகிறது.

மிக கவனமாகவும் பிசகின்றியும் திட்டம் தயாரிக்கப்பட்டது. பொதுவான திட்டம் எதுவெனில் ஜெயிலரையும், அங்கிருந்த மற்றைய ஏழு ஜெயில் காவலர்களையும் மடக்கி எதிர்ப்பிழக்கச் செய்த பின்னர் அவர்கள் கைகால்களைக் கட்டி, சத்தம் எழுப்பாதபடி வாய்களுக்கு பிளாஸ்டர் போட்ட பின் சிறையின் பிரதான வாயில் வழி வெளியேறுவது.

சிறையின் முன் பிரதான கதவுக்கான திறப்பின் அச்சு சவர்க்காரக்கட்டியின் மேல் அழுத்திப் பெறப்பட்டிருந்தது. அதனை வைத்து கள்ளத்திறப்பு தயாரிக்கப்பட்டிருந்தது.

இளவயதிற்குரிய வேகமும் உடற்பலமும் கொண்டவர்களான டக்ளஸ் தேவானந்தா, பனாகொடை மகேஸ்வரன், பரந்தன் ராஜன் சிறைச்சாலை அதிகாரிகளையும் காவலர்களையும் தமது பிடிக்குள் கொண்டுவருவது என முடிவாகிறது.


எந்த ஆயுதக் குழுக்களையும் அக் காலப்பகுதியில் சார்த்திருக்காத வரதராஜப் பெருமாள் மற்றும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அழகிரி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு சிறையின் பின்பக்கமாகவுள்ள மதிலை உடைத்து ஒரு சிறு ஓட்டையை மதிற்சுவரில் ஏற்படுத்துவது. பிரதான வாயில் வழி தப்பிக்கும் முதன்மைத் திட்டம் பிழைத்துப் போய்விட்டால் அது இரண்டாவது மாற்று பி திட்டமாக இருந்தது.


டேவிட் மற்றும் டாக்டர். ஜெயகுலராசா விடம் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் வாய்களுக்கு சத்தமிடாதபடி பிளாஸ்டரால் கட்டுப்போடும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சிறையுடைப்பிற்கான நேரமும் நாளும் குறிக்கப்பட்டது. சிறையின் பிரதான வாயிலில் ஒரே ஒரு காவலாளி மட்டுமே காவலுக்கு நிற்பான். ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருதடவை இராணுவ ரோந்து அங்கு வரும். அந்த இராணுவ ரோந்துக்கு இடையில் பொலிஸ்படை ரோந்து ஒன்று நடைபெறும். இந்த இரண்டு ரோந்துகளுக்கும் இடையிலுள்ள 7 நிமிடங்களிடையில் தான் எல்லாம் நடந்து முடிய வேண்டும்.

ஊரடங்கிய இரவுவேளை தான் நடக்கவும் வேண்டும். அதேவேளை வீதியில் முற்றிலும் ஆள் அரவம் இல்லாத நேரத்தில்; சிறையை விட்டு வெளியேறி தெருக்களில் இறங்குவது வழியில் படுபவர்கள் கண்களுக்கு சந்தேகங்களை தோற்றுவிக்கும். எனவே குறிக்கப்பட்ட நேரம் மாலை 7.25. இலிருந்து 7.32 இற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்க வேண்டும். அதாவது இராணுவ ரோந்து வந்து சென்ற பின்னரான கணத்திற்கும் பொலிஸ் ரோந்து வந்து சேரும் கணத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் அதாவது 7 நிமிடங்களில் அனைத்தும் நடாத்தி முடிக்கப்பட வேண்டும்.

ஆயுதங்களை சிறைக்குள் கடத்தும் வேலை இராணுவப்பயிற்சி பெற்றவர்களிடம் விடப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த பயிற்சி பெற்ற போராளிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஒத்துழைப்போடு தங்களது போராளிகளை தொலைதூரம் நகர்த்தலுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை ஏற்படுத்தியிருந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் மத்தியகுழு உறுப்பினர் குணசேகரம் சிறைவாசலில் வைத்து தங்களைச் சார்ந்த போராளிகளை பொறுப்பெடுப்பார்.

மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், வாமதேவன், பாரூக், டேவிட் புளட்டிடம் இருந்து தங்களுக்கான ஆயுதங்களை பெறுவதோடு தங்கள் தூரப்பயணத்துக்கான ஒழுங்குகளை புளட் இயக்கம் மேற்கொண்டிருந்தது.

தமிழீழ இராணுவம் என்ற இயக்கத்தின் தலைவர் பனாகொடை மகேஸ்வரன் தன் இயக்கத்தைச் சேர்ந்த காளி மற்றும் சுப்பிரமணியம் என்பவர்களோடு மட்டக்களப்பு களப்புக்கடல் வழியாக படகொன்றில் தப்பிச் செல்லும் திட்டத்திலிருந்தார்.

நித்தியானந்தன் அவரது அன்றைய துணைவியார் நிர்மலா, பிதா சின்னராசா, ஜெயதிலகராசா, டொக்டர் ஜெயகுலராசா, பிதா சிங்கராயர் இவர்கள் அன்றைய காலத்தில் எல்.ரீ.ரீ.இ இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.

இவர்களில் பிதா சிங்கராயர் தன்னுடைய வயதையும் தனது நலிந்த உடல் ஆராக்கியத்தையும் கருத்திற்கொண்டு தப்பிச் செல்வதற்கு அவை இடம் தராது என்ற வகையிலும், தான் தப்பிச்செல்வது என்பது தன் மேல் சொல்லப்பட்ட பொய்யான குற்றங்களுக்கு ஆதாரமாக ஆக்கப்படும் என்றும் இரண்டு காரணங்களுக்காகவும் மறுத்திருந்தார்.

நித்தியானந்தன் தனக்கும் தனது துணைவியாருக்கும் தாங்களே பொறுப்பு என கூறியிருந்தார்.


கோவை மகேசன் (சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர்) அப்போது சுகவீனமுற்றிருந்தார். டாக்டர். வீ.ஏ.தர்மலிங்கம் அவர்களும் முதுமையானவரான இருந்ததால் தப்பிச் செல்வதற்கு இயலுமானவர்களாக இருக்கவில்லை. அத்தோடு அவர்கள் மற்றவர்களைப் போல பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி இருக்கவில்லை. அவசரகால விதிமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனால் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படக் கூடிய சூழலில் இருந்தனர். எனவே அவர்கள் விடுவிக்கப்படும் வரையில் சிறையிலேயே இருப்பது என முடிவெடுத்திருந்தனர்.

எதிர்பார்த்தது போலவே பிதா சிங்கராயரும், கோவை மகேசனும், டொக்டர் தர்மலிங்கமும் 1983 நவம்பர் மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டனர்.

உள்ளே கடத்திவரப்பட்ட ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருந்தன. எனவே காவலர்களை வெருட்டி அடக்குவதற்கு பழைய செருப்புகள் பிஸ்டல் போன்றிருக்குமாறு வெட்டி அமைக்கப்பட்டது. பனாகொடை மகேஸ்வரன் கைவண்ணத்தில் இவை உருவாகின.

சிறையுடைப்புக்கான கணங்களுக்காக எல்லோரும் காத்திருந்தனர். அதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னராக பிதா சிங்கராயர் ஏனையவர்களைச் சந்தித்து நல்லாசி கூறி வெற்றிபெற வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டார்.

மாலை 7 மணியளவில் சிறைக் காவலர் அந்தோனிப்பிள்ளை அரசியல் கைதிகளுக்கு தேநீர் எடுத்து வந்திருந்தார். தன்னுடைய வழமையான மாலை நேர பானத்துக்கு பின்னர் அவர் எப்போதும் குஷியாக இருப்பார். ஒரு பழைய சினிமா பாடலொன்றை முணுமுணுத்துப் பாடிக் கொண்டிருந்தார்.
“எப்படி இருக்கிறீர்கள் தம்பிகளா” என கைதிகளை குசலம் விசாரித்தார் அவர்.

பரந்தன் ராஜன் அவரை அப்படியே மடக்கிப் பிடிக்க, டேவிட் கை கால்களை கட்டிப் போட்டுவிட்டார். 
பனாகொடை மகேஸ்வரன், ஆஜானுபாகுவான உடற்கட்டுடைய 6 அடி உயரமான கவரும் தோற்றமுடையவரான அவர் சிறையதிகாரியை மடக்கினார். 

மற்றவர்கள் சிறைக்காவலர்களை மடக்கினர். கைதிகள் சிறைவாசல் வழியாக தப்பியோடினர்.

இதேவேளை வரதராஜப் பெருமாள் மற்றும் அழகிரி ஆகிய இருவரும் பின்புறச் சுவரை இடித்துக் கொண்டிருந்தவர்கள் சடுதியாக வழமைக்கு மீறிய ஒரு அமைதி ஏற்பட்டதை அறிந்து எதுவாயிருக்கும் என அறிய முன்புற வாசலுக்கு ஓடிச் சென்றனர். அங்கே சிறைக்கதவு திறந்திருந்தது. அவர்களும் வெளியே ஓடிச் சென்றனர். 

அவர்கள் சிறையின் மறுபுறம் வந்தபோது பனாகொடை மகேஸ்வரனையும் அவருடைய கூட்டாளியையும் ஏற்றிக்கொண்டு படகொன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. கரையிலிருந்து இவர்கள் சத்தமிட்டு குரல் எழுப்பினர். படகு திரும்பி வந்து இவர்களையும் ஏற்றிக் கொண்டு மீண்டும் புறப்பட்டது.

வாமதேவன், ( துரையப்பா கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சாரதியாக இருந்தவர்), இவரைக் கைது செய்வதற்கு இட்டுச் செல்லும் தகவலுக்கு அன்றைய காலத்தில் ஒரு இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்திருந்தனர், இவருக்கென சிறையுடைப்பில் வழங்கப்பட்ட பொறுப்பு நிர்மலா காவலில் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்து நிர்மலாவை விடுவிப்பதாகும். எல்லா அவசரத்திலும் வாமதேவன் நிர்மலா பற்றி மறந்துவிட்டிருந்தார்.

சிறைவிட்டு வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளட் போராளிகள் காட்டுவழிப் பாதையில் கொண்டு செல்லப்பட்டனர். ஒருமித்தே குறிப்பிட்ட தூரத்தைக் கடந்த பின்னர் தங்கள் தங்கள் இடங்களுக்கு வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்று அங்கே இவர்களுக்காக காத்திருந்த படகுகளில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ ஐச் சார்ந்த நித்தியானந்தன், பிதா சின்னராசா, ஜெயகுலராசா மற்றும் ஜெயதிலகராஜா சிறையின் பின்புறமாக ஓடிச் செல்ல, பரமதேவாவும் இவர்களுடன் இணைந்து கொண்டார். 600 மீற்றருக்கு அப்பாலிருந்த மாந்தீவு என்ற இடத்திற்கு படகொன்றின் மூலம் சென்றடைந்தனர். அவர்கள் சென்ற திசையை நோக்கி வேட்டுச் சத்தங்கள் எழுந்தன. இருள் கவிந்திருந்தது. துரித கதியில் அவர்கள் முள்ளிக்குடாவுக்கு சென்றடைந்தனர். வழியில் ஒரு டிராக்டர் இயந்திரத்தைக் கடத்தி அதன் மூலம் திருக்கோவில் சென்றடைந்தனர். தமிழ்நாட்டுக்கு படகேறும் வரை அவர்கள் அங்கே மறைந்திருந்தனர்.

பனாகொடை மகேஸ்வரன் வேறு திட்டம் வைத்திருந்தார். மட்டக்களப்பில் தங்கி விடுவது என்பது அவர் முடிவாகியிருந்தது. அங்கிருந்தபடி சாகசமான தாக்குதல்களை நடாத்துவது அவர் திட்டம். மட்டக்களப்பு பிரதேசம் குறித்து முன்பின் பரிச்சயமற்றவராயிருந்தபோதும் பனாகொடை மகேஸ்வரன் மட்டக்களப்பிலேயே தலைமறைவாகியிருந்தார்.

யாழ்ப்பாணப் பூர்வீகமுடைய இவர் யாழ்ப்பாணத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று மேற்படிப்பை இங்கிலாந்தில் பெற்றுக்கொண்டவர்.; இயக்கங்களால் அதுவரை நடாத்தப்பட்ட வங்கிக் கொள்ளைகளில் 35 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தங்கம், நகைகள் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான கொள்ளையை காத்தான்குடியில் இவர் மேற்கொண்டார்.

அதுவரையான தமிழர் போராட்ட வரலாற்றில் பரப்பரப்பான ஒரு அத்தியாயம் என பேசப்பட்ட இந்தச் சிறையுடைப்பு, அங்கிருந்த கொள்ளை மற்றும் இன்னபிற குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த அரசியற்கைதிகளல்லாத சாதாரண கைதிகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. அரசியல் கைதிகள் சிறையின் இரும்புக் கதவுகளை தாண்டி ஓடித் தப்பிப்பதைக் கண்ட அவர்களும் வெளியே ஓடினர்.

இவ்வாறு சிறை வெறுமையாகிய இருந்ததை மாலை 7.32 க்கு வழமையான ரோந்துக்கு வந்து சேர்ந்த பொலிஸ் படையினர் கண்டனர்.
போலிசும் இராணுவமும் சேர்ந்து நிலம், கடல் மற்றும் ஆகாயவழியில் மும்முரமான தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். வெளியேற முடியாமல் நகரத்துக்குள் சிக்கிக்கொண்ட பெரும்பாலும் சிங்கள கைதிகளாகயிருந்தவர்கள் சிலர் பொலிசார் அச் சுற்றிவளைப்பில் திரும்பவும் மாட்டிக்கொண்டனர்.

தமிழ் இளைஞர்கள் இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்றுவருவது தொடர்பான அரசல் புரவலாக தகவல்களை இலங்கை இராணுவம் திரட்டியிருந்து எனினும் இலங்கை அரசாங்கம் இதுகுறித்து 1983 நவம்பர் மாதம் வரை திட்டவட்டமாக எதனையும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே மட்டக்களப்புச் சிறையுடைப்பு 23 செப்டம்பர் 1983 இல் நடந்தபோது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அதிர்ந்து போயிருந்தார்.

இப்போது திரும்ப புளட்டினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுர விடயத்துக்கு திரும்பி வருவோம். இவ்வளவு பாத்திரங்களும் பங்களிப்புகளும் சம்பவங்களும் நடந்தபோதும் அவ்விபரங்கள் மற்றைய இயக்கங்களால் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியில் சொல்லப்பட்டபோதும் முன்னர் கூறியபடியே துண்டுப்பிரசுரம் வெளியிடும் வேலைகள் ஆரம்பமானது.

அதற்கான உள்ளடக்கத்திலும் தனித்து உரிமை கோருவதிலும் எழுந்த விமர்சனங்களை மறுப்புகளையும், தீர்மானம் மேற்கொள்ளும் தலைமைகள் உள்வாங்கவில்லை.

துண்டுப்பிரசுரத்தை அச்சேற்றுவதற்கு அன்றைய சூழலில் ஊரடங்கு உத்தரவு கெடுபிடிகள் மற்றும் அச்சம் காரணமாக அச்சகங்கள் தயங்கி நின்றன.
ஆனாலும் எப்படியாவது அச்சேற்றி மக்கள் மத்தயில் விநியோகிக்க வேண்டும்.

துண்டுப்பிரசுர வாசகங்கள் கையெழுத்துவடிவில் என்னிடம் வந்து சேர்ந்தது. இப்போது இதனை அச்சேற்றும் பொறுப்பும் என்னிடம் தரப்பட்டது.
கையில் கையெழுத்துப்பிரதி வரவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவும் நிலைமை இறுக்கமாகியது. ஊரடங்கு உத்தரவு வேளையில் அச்சகம் எதுவும் திறந்திருக்காது.

எப்படி இந்த நெருக்கடிக்குள் துண்டுப்பிரசுரத்தை அச்சேற்றுவது என்று பரந்தாமனும் நானும் அலைந்துகொண்டிருந்தபோது காலால் மிதித்து இயக்கும் அச்சு இயந்திரம் பற்றியும் அதற்குரிய சொந்தக்காரர் இன்னார் இன்ன இடம் என்ற தகவல் கிடைத்தது. மிகவும் ஒதுக்குப்புறமான ஒரு சொந்தக் குடியிருப்பு வீட்டில் அந்த அச்சியந்திரம் இருந்தது. அதனால் பிரதான வீதிகளுக்கு அண்மையாக இல்லாமல் அது ஒதுக்கமான ஒழுங்கைகளால் சென்றடையும் இயல்பிலேயே பாதுகாப்பு மிகுந்த இடமாக இருந்தது.

அதன் சொந்தக்காரர் இந்த துண்டுப்பிரசுரத்துக்கான அச்சுக்கோர்ப்பு வேலையை தான் செய்து தருவதாகவும், மை மற்றும் பேப்பர் கைவசம் இருப்பதால் அதற்குரிய செலவையும் அச்சுக்கோர்ப்பதற்கான கூலியையும் தரும்படியும் அந்நாட்களில் யாரும் துணியாத இவ் வேலையை செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இவ்வளவு இருந்தும் மின்சாரத்தில் இயங்காத அச்சியந்திரத்தை கால்களால் மிதித்து உழக்கி இயக்கி அச்சேற்றும் பொறுப்பு உங்களுடையது என்றார். எப்படி அதனை இயக்குவது என்பதனையும் சொல்லித் தந்தார்.

தன்னுடைய வீட்டினுள்ளே தனியாக இருந்த அச்சுக்கூடத்திற்கு எந்தவித அசுமாத்தமோ பரபரப்போ இல்லாமல் வந்து அச்சியந்திரத்தை மிதித்து இயக்கி அச்சேறிய துண்டுப்பிரசுரங்களை வெட்டி பொதியாக்கும் வரை அரச உளவு அல்லது மாற்றாருக்கு செய்தி கசியாதபடி தன்னுடைய பாதுகாப்பு பற்றிய அவதானத்துடனும் இருநாட்கள் முழுவதுமாய் எங்களிருவருக்கும் அவர் அச்சு மிதிக்கும் வேலை தந்து கொண்டிருந்தார்.

இப்போது துண்டுப்பிரசுரம் சாக்குப் பொதிகளில் தயாராகிவிட்டது. இருள்கவிந்த பின்னர் அவருடைய வீட்டிலிருந்து அவற்றை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் வரை அவர் பாதுகாப்புணர்வில் அவதானமாக இருந்தார்.


இயல்பாகவே தனது ஒரு சிறு பங்களிப்பு என்ற உணர்விலேயே இந்த அச்சேற்றும் பணியை அவர் செய்தாரே ஒழிய எவ்வித உத்தரவோ அல்லது அழுத்தமோ அல்லது ஆயுதம் தரித்த இயக்கமொன்றின் நடவடிக்கை என்ற அச்சவுணர்வுடனோ அவர் இருக்கவில்லை.
கைத்துப்பாக்கி இடுப்பில் செருகியிருக்குமாற்போல காட்டிக்கொண்டு அல்லது உரப்பைக்குள் ஆயுதத்தை மறைத்து எடுத்துச் சென்று அவர்களை மறைமுகமாக அச்சப்படுத்தியோ மக்களுக்கு உள்ளுர பய உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை அந்நியப்படுத்தி காரியங்கைள நிறைவேற்றிக் கொண்டன இயக்கங்கள்.

சயிக்கிள்களைத் தவிர எங்களிடம் இவை எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒரு நடைமுறையை கைக்கொண்டவர்களுமல்ல, எதிர்த்தவர்களாக இருந்தோம்.

அவரைச் சார்ந்து ஒரு குடும்பம் இருந்தது. அவர் எவ்வியக்கத்தையும் சார்ந்த அனுதாபியாக கூட இருக்கவில்லை. சாதாரண ஒரு உழைப்பாளிப் பொதுமகன். ஆனால் தான் உணர்ந்துகொண்ட நியாயத்துக்கான தனது பங்களிப்பாக அவர் இந்த அச்சுவேலையை எடுத்து நிறைவேற்றித் தந்தார். அவர் பெற்றுக்கொண்ட கூலி தனது உழைப்பின் ஒரு நியாயமான பகுதியேயாகும்.

இப்போது துண்டுப்பிரசுரப் பொதிகள் சைக்கிள்களில் அச்சக வீட்டிலிருந்து இடம் மாற்றப்பட வேண்டும். இரவிரவாக சயிக்கிளில் இன்னொரு ஒதுக்கமான ஆனால் வேறெவரும் குடியிருக்காத, மிகவும் சன சந்தடி மிகுந்த எனது இரவுவேளை தங்குமிடத்துக்கு மாற்றியாயிற்று. இப் பொதிகள் இங்கிருந்து கைமாற்றப்பட வேண்டும்.

ஒரு கருக்கலான மாலைப்பொழுதில் அவர்கள் வர இருக்கிறார்கள்.

வந்தவர்களும் சயிக்கிள்களில் தான் வந்தார்கள். துண்டுப்பிரசுரம் அடங்கிய பொதிகள் கைமாறியது. அப்படி வந்தவர்களுக்கு தலைமை தாங்கி வந்தவர் என் கண்களில் படவில்லை. சில மீற்றர்கள் தொலைவில் நின்று அவர் என்னைப் பார்த்திருக்கிறார்.

அவரைப்பற்றி அறிந்திருந்தும் முன்னரோ அதற்குப் பின்னரோ இலங்கையில் இருந்த காலத்தில் நேரடியாக என்றும் கண்டதில்லை.

ஆனால் இவர் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுகிறார்.

மக்களின் விடுதலைக்காக போராடுவதாக புறப்பட்ட இயக்கங்களே ஒடுக்குமுறையாளர்களாகின்றனர். இயக்கங்களிடையே ஒற்றுமையைக் கோரி நின்ற மக்களுக்கு ஒடுக்குமுறையையே பரிசாக வழங்குகின்றனர் அனைத்து இயக்கங்களும். மற்ற இயக்கத்தினர் மேலான படுகொலைகளை ஏவிவிட்டதன் மூலம் தமது பாசிச முகத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியாவால் வகுத்துக் கொடுக்கப்பட்டு ஒப்பேற்றப்பட்ட அனுராதபுர நகர சிங்களப் பொதுமக்கள் படுகொலையை அடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் யூலை மாதம் 26 இல் 1987 இல் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து வந்த மாதங்களில் இவர் விடுதலையாகின்றார்.

13 வருடங்களுக்குப் பிறகு 1995 இல் இன்னொரு நாட்டில் என்னை விசாரித்துக் கொண்டு அவர் வருகிறார். இன்றைய காலங்கள் போல் அன்று தொடர்பாடல் தொழில்நுட்பம் இல்லாத காலம். வெறும் விலாசத்தை வைத்துக் கொண்டு தேடி வருகிறார்.

"பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்
வாசலிடைக் கொன்றை மரம்."

வில்வராய முதலியாரைத் தேடிவந்து அவரது மகனிடமே வீட்டுக்கு வழிகேட்ட கூழங்கைத் தம்பிரானுக்கு பாட்டிலே பதில் சொல்லி வழிகாட்டிய சின்னத்தம்பிப் புலவர் போல்

ஏறத்தாழ எனது இருப்பிட விலாசத்துக்கு வந்த பின்னரும் கூட வந்து சேர்ந்த இடம் சரிதானா என உறுதிப்படுத்த அங்கே தொலைவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அக் குழந்தையின் சாயலைக் கண்டு தான் வந்து சேர்ந்த இடம் சரிதான் எனக் கண்டு நீ இன்னார் மகன் தானே என அறிமுகப்படுத்திக் கொண்டு அக் குழந்தை வழிகாட்ட வீடுவந்து சேர்கிறார். 

ஆச்சரியம் எதுவெனில் எனது முகச்சாயலை வெகுதொலைவிலும் இருளிலும் நின்று  13 வருடங்களுக்கு முன்னர் அடையாளம் வைத்து அந்த ஞாபகத்தில் அந்த முகச்சாயலை எனது மகனின் முகத்திலும் அவதானித்து இவ்வாறு எனது வீட்டுக்கு வருகிறார் அவர்.
இப்போதுதான் நான் முதற்தடiவாக நேரில் அவரைப் பார்க்கிறேன்.

திருமணமாகி தனது துணiவியாருடன் எமக்கு மிக அருகில் இருந்த நகதை;தில் தான் அவர் ஜக்கிய நாடுகள் அகதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்துடன் வசித்து வந்தார்.

பின்னர் எமது நகரத்துக்கே இடம்பெயர்ந்து வந்துவிட்டார்.

காலங்கள் கடந்தன.

சில காலம் கனடாவில் தற்காலிகமாக தங்கிவிட்டு நோர்வே தொரம்சோ நகரத்துக்கு மீளவும் வருகிறார்.

இந்தியாவுக்கு செல்கின்ற அவரது பயணத்தில் ஒரு இடைத் தங்கலாக எனது வீட்டில் தங்கியிருந்து பின்னர் தனது முன்னைய நகரத்துக்கு செல்வதற்காய் அவரை நான் படகேற்றி அனுப்பி வைக்கின்றேன். 

அங்கிருந்து அவர் அடுத்து வரும் நாட்களில் சென்னை செல்லவிருப்பதாக சொல்லி விடைபெறுகிறார்.

அதற்கப்பால் சென்னையில் அவர் கார் விபத்தில் காலமான செய்தி வந்து சேர்கிறது.

எனது பிள்ளைகளால் “புரபசர்” என அழைக்கப்படும் அவர் இங்கிருந்து படகில் புறப்படும் நாளன்று இங்குள்ள பிரபலமான மலையுச்சி ஒன்றுக்கு அவர்களை கேபிள் கார் வழி அழைத்துச் சென்று மலையுச்சியில் எம்.ஜி.ஆர் பாடலான

"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்" என்ற பாடலை பாடி ஆடி மகிழ்ந்ததாக அறிந்தேன்.

இதோ 17ம் நிமிடத்திலிருந்து அவரது குரலைக் கேளுங்கள்.