வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.
மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
சாதிச் சமூக அமைப்பு என்பது பிறப்பில் இருந்தே சாதியைத் திணித்து விடுகின்றது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அனைவருக்கும் சாதிய அடையாளத்தைக் கொடுத்து விடுகின்றது. இது தனி மனிதனின் தெரிவல்ல. மாறாக சாதிய சமூதாயத்தின் திணிப்பாகும்.
சாதிய சமூக அமைப்பில் வாழ்க்கை முறையானது, சாதியப் பண்பாட்டுகளையும் கலாச்சாரத்தையும் பேணுதலாகும். இந்த சாதிய பண்பாட்டுக் கலாச்சாரத்தை மறுத்து வாழ்கின்ற வாழ்க்கை முறையும் அதனாலான சிந்தனை முறை - வெள்ளாளிய சாதியச் சமூகத்துக்கு எதிராக வாழ்தலாகும். இதற்கு மாறாக வாழ்தல் என்பது வெள்ளாளியமாகும்.
இது ஏன் வெள்ளாளியமாக இருக்கின்றது.!?
ஒடுக்கப்பட்ட சாதிக்குள் பல சாதிப் பெயர்களும் - பிரிவுகளும் இருந்த போதும், அதன் பெயரால், சாதிய அமைப்பை குறிப்பதுமில்லை, அழைப்பதுமில்லை.
சாதிய சமூக அமைப்பில் எந்த சாதி சமூக பொருளாதார ரீதியாக ஆதிக்கம் பெற்றதாக இருக்கின்றதோ, தன்னை உயர்ந்த சாதியாக பிரகடனப்படுத்தி பீற்றிக் கொள்கின்றதோ, தன் சாதியை உயர்ந்ததாக கூறி பிற சாதிகளை இழிவுபடுத்துகின்றதோ, தன் சாதிய அடையாளம் மூலம் பிற சாதிகளை ஒடுக்குகின்றதோ… அந்த சாதியே சமூகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிற சாதிகளை ஒடுக்குவது தொடங்கி சாதி பார்த்து திருமணம் செய்வது வரை, ஒடுக்கப்பட்ட சாதிகளை கொண்ட சமூகமாக, ஒடுக்கும் வெள்ளாளிய சாதிய சமூகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. வெள்ளாளிய வாழ்க்கை மற்றும் சிந்தனை முறையானது, சமூகத்தை ஆதிக்கம் செய்கின்ற வாழ்க்கை முறையாக திகழ்கின்றது. இதே போன்று ஒடுக்கப்பட்ட சாதிகள் தனக்கு கீழ் சாதிய ஒடுக்குமுறையை கையாளும் போது, அதுவும் வெள்ளாளியமாக இருக்கின்றது.
இந்தியாவில் பார்ப்பனிய சாதிய சமூக அமைப்பு போன்று இலங்கையில் தமிழர் மத்தியில் வெள்ளாளிய சாதி சமூக அமைப்பு முறை ஆதிக்கம் பெற்றுக் காணப்படுகின்றது.
இந்திய சாதிய அமைப்பு முறையானது, இந்து மதத்துடன் ஒருங்கிணைந்து இந்துத்துவமாக இருக்கின்றது. இந்தியாவில் எங்கெல்லாம் இந்து மதம் சென்றதோ, அங்கு சாதியமும் புரையோடியது. அத்துடன் இந்து மதத்துக்கு அக்கம் பக்கமாக வாழ்ந்த பிற மதங்களையும், சாதியம் ஊடுருவியது.
இந்து மதத்தின் கோயில்கள் தொடங்கி வழிபாட்டு முறை வரை, அது முன்வைக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் அனைத்தும், சாதிய வழிப்பட்டது. அனைவருக்குமான பொது வழிபாட்டு முறை கிடையாது. சாதிக்கொரு வழிபாட்டு முறையைக் கொண்டதே இந்து மதம். சாதியையும் இந்து மதத்தையும் இரண்டாகப் பிரிக்க முடியாது.
இந்துத்துவம் என்பது சாதியாகவும் - சாதியம் என்பது இந்துத்துவமாகவும் இருக்கின்றது. சாதி மற்றும் இந்துத்துவமானது, இந்தியாவில் பார்ப்பனியமாகவும், இலங்கையில் வெள்ளாளியமாகவும் இருக்கின்றது.
இங்கு வெள்ளாளியம் என்பது சாதிய வாழ்க்கை முறையும், சாதிய சிந்தனை முறையுமாகும். இந்த வெள்ளாளியம் தான், தமிழரின் அரசியல் பொருளாதாரம்மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த வெள்ளாளிய சாதிய அரசியல் தான், கடந்த காலத்தில் தமிழ் மக்களை செயலற்றதாக்கி, அவர்களைப் புதைகுழிக்கு அனுப்பியது. சமகாலத்தில் இந்த வெள்ளாளிய சாதிய அரசியல் தான் ஆதிக்கம் பெற்று காணப்படுவதுடன் "முற்போக்கு - இடதுசாரியத்தின்" வீழ்ச்சிக்கும் அதன் செயலற்றதனத்துக்கும் காரணமாகவும் இருக்கின்றது.