Language Selection

பி.இரயாகரன் -2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

தமிழ்மொழி பேசும் மக்களை ஒடுக்கிவரும் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியே, முஸ்லீம் தலைமைகள் இன்று முன்னெடுக்கும் இன-மத வாதமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லீம் இன-மத வாதத்துக்கு அரச அதிகாரங்களைக் கொடுத்திருப்பதன் மூலம், தமிழ் மக்களை தொடர்ந்து ஒடுக்க முடிகின்றது.

 

தமிழ் மக்கள் முஸ்லீம் இன-மதவாத தலைமைகளால் ஒடுக்கப்படுவதால், தமிழ்மக்கள் இதை எதிர்க்கின்ற போது இனவாதத்துக்கு பலியாகக் கூடாது. மாறாக முஸ்லீம் தலைமை ஏன் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பி, விடை கண்டாக வேண்டும். முஸ்லீம் தலைமை தன் இன ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்குவதற்கு தான், தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்ற உண்மையை இனங்கண்டு அதைத் தனிமைப்படுத்தும் வண்ணம், ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுடன் அணிதிரண்டு போராடவேண்டும். உதாரணமாக முஸ்லீம் மக்களை புலிகள் ஏன் ஒடுக்கினர்!? புலிகள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியதால், அதை மூடிமறைக்கவே முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் எதிரியாகக் காட்டி ஒடுக்கினர். இது எமது கடந்த வரலாறு.

ஒடுக்குவதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டு, ஒடுக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து இன-மதவாதத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

தமிழ்மக்களின் இன ரீதியான, பிரதேச ரீதியான வாழ்வியலை சிதைக்கவே, பேரினவாதத்தின் கருவியாக முஸ்லீம் தலைமைகள் செயற்படுகின்றனர். சிங்கள இன-மதவாதத்தால் ஒடுக்கப்படும் முஸ்லீம் சமூகத்தின் இன-மதவாத தலைமைகள், அதற்கு எதிராகப் போராடாது  தமிழ் மக்களை ஒடுக்குவதன் மூலம் முஸ்லீம் மக்களை ஏமாற்ற முனைகின்றனர். இந்த உண்மையை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்டு கொள்ளவேண்டும்.

வடகிழக்கில் புலிகள் மற்றும் இயக்கங்கள் அதிகாரத்தைக் கொண்டு இருந்த காலத்தில், முஸ்லீம் சமூகத்தை ஒடுக்கியதுக்கு நிகராகவே, இன்று முஸ்லீம் தலைமைத்துவம் செயற்படுகின்றது. உதாரணமாக இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனிய நாசிகள் யூதர்களை ஒடுக்கியதன் பின் உருவான சர்வதேச அனுதாபத்தை கொண்டு, அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதுடன் பலஸ்தீன மக்களை ஒடுக்கி வருகின்றது. இதுபோன்றே வடகிழக்கில் முஸ்லீம் இன-மதவாத தலைமைகள் செயற்படுகின்றனர்.

கடந்த போராட்டக் காலத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டிப் போராட வேண்டும் என்ற அடிப்படையில், புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் மீதான விமர்சனங்கள் தமிழ் தரப்பால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. இது போன்று இன்று முஸ்லீம் தலைமை முன்னெடுக்கும் இன-மத ஒடுக்குமுறையை, முஸ்லீம் தரப்பு விமர்சிப்பதில்லை. "இலக்கியம் தொடங்கி  முற்போக்கு" வரை பேசுகின்ற முஸ்லீம் தரப்பின் விமர்சனமற்ற இன-மதவாத அடிப்படையின் துணையுடனேயே, முஸ்லீம் தலைமைத்துவம் இந்த இனவாத வெறியாட்டத்தை அரசின் ஆதரவுடன் தொடர்ந்து செய்கின்றது.

கடந்த யுத்த காலத்தில் புலிகளின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக எல்லைப் படை, ஊர்காவல் படை தொடங்கி இராணுவம் நடத்திய சித்திரவதைகள் வரை, முஸ்லீம் இன-மத தலைமையும், கூலிப் படைகளுமே தமிழ் மக்களுக்கு எதிராக முன்னின்று செயற்பட்டனர். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, முஸ்லீம் மக்களின் நலனின் பெயரில் செயற்பட்ட இந்த மனிவுரிமை மீறலுக்கு எதிராக போராடாத முஸ்லிம் தரப்புகளின் சந்தர்ப்பவாதமானது, புலியெதிர்ப்பு தமிழ் தரப்புகளின் துணையுடன் தான் முன்னெடுக்கப்படுகின்றது என்பதே உண்மை.

புலியெதிர்ப்பு தொடங்கி "தமிழ் தேசிய" எதிர்ப்பை முன்வைக்கும் தமிழ் அரசியல், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் மேலான ஒடுக்குமுறைகளைக் கண்டு கொள்வதில்லை. இந்தப் பின்னணியில் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு, முஸ்லீம் இன-மத சுரண்டும் அதிகார வர்க்கம், தமிழ்மக்கள் ஒடுக்கப்படுவதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க முற்படுகின்றனர்.

முஸ்லீம் "இலக்கியவாதிகளுடன்" கூடிக் குலாவுவதற்காக புலியின் கடந்தகால நடத்தைகளை மட்டும் முன்னிறுத்தி, நிகழ்காலத்தில் அரசுடன் சேர்ந்து முஸ்லீம் தலைமைகள் முன்னெடுக்கும் புலிக்கு நிகரான மனித விரோத குற்றங்களை தமிழ் "இலக்கியவாதிகள்" கண்டு கொள்வதில்லை.

முஸ்லீம் "முற்போக்கு" அரசியல் - இலக்கியவாதிகளிடமிருந்து எந்தக் குரலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக எழவில்லை. இந்த அரசியல் எதார்த்தத்தை எதிர்கொள்ள, இன, மதம் கடந்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் அணிதிரளுவதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் முறியடிக்க முடியும்.