Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.

இந்த வகையில் மாணவர்கள் போராட்டத்தினுள் முழுச் சமூகத்தினதும் கோரிக்கையை உள்ளடக்கும் அரசியல் கோரிக்கையுடன் போராடத் தொடங்கினர். "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்" என்று கோரியதுடன் "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்" என்று போராடினர். மனிதனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் எழுந்த மாணவர் போராட்டம், இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தது.

இதை மக்களுக்கு வழங்கினால் தாங்கள் "அரசியல் அநாதையாகிவிடுவோம்|" என்று கூறி துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட தேசியவாதிகள், அத்தோடு நின்றுவிடாமல் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவினர்.

இக்காலத்தில் வெளியாகிய மாணவர் துண்டுப்பிரசுரம் ஒன்றின் தலையங்கம் "நாம் பேசவேண்டும்! எழுத வேண்டும்!! வாழ வேண்டும்!!! அதற்காக நாம் போராடுகின்றோம்" என்றது. நாங்கள் மனிதனாக வாழ வேண்டும் என்றால், போராட வேண்டும். இது தான் மாணவர் இயல்பு.

நடந்த மாணவர்கள் போராட்டம் பற்றி சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜனி திரணகம தனது 'முறிந்த பனை" என்ற நூலில் "தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். .... பல்கலைக்கழக மாணவர்கள்... விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .... அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ... இதன் தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொருதுணிவைக் காட்டினார்கள்." என்று இந்தப் போராட்டம் குறித்த தனது குறிப்பில் எழுதியிருக்கின்றார். இன்று எது தேவை என்பதை, மாணவர்களுக்கும் இக் கூற்று எடுத்துக் காட்டுகின்றது.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் இரகசியமாக கடத்திச் செல்லப்பட்டு நீண்ட நாள் சித்திரவதைக்குள்ளாகிய நிலையில், அவர்களிடமிருந்து தப்பி பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ".. நாம் தமிழீழத்துக்காகப் போராடிய காலகட்டங்களில் இப் பல்கலைக்கழகம் ஆரம்பமுதலே, வெகுஜனப் போராட்டம் என்பதை முதன்முதலில் பல்கலைக்கழகம் தான் வெளிப்படையாக முன்னெடுத்தது. தமிழீழத்தை ஆதரித்து பகிரங்கமாகப் போராடியது இப்பல்கலைக்கழகம் தான். அந்தவகையில் இப் பல்கலைக்கழகம் ஓர் பாரம்பரியத்தை முன்னெடுக்கின்ற வகையில், முன்னெடுக்கின்ற நிலையில், இப் பல்கலைக்கழகத்தில் நான் வந்த காலகட்டத்தில், பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஸ்ரீலங்கா அரசினால் மறுக்கப்பட்டிருந்து. இந்நிலையில் விடுதலைப் போராட்டத்துக்கு இப் பல்கலைக்கழகம் முழுமையான ஆதரவையும் முழுமையான பங்களிப்பையும் செலுத்திக் கொண்டிருந்தது.

84ம் ஆண்டுக்கு முன்பு ... (தமிழீழ அரசியலுக்கு) ஓர் கோட்டையாகவே இப் பல்கலைக்கழகம் விளங்கியது. அதற்குப் பிற்பட்ட காலங்களில் இப் பல்கலைக்கழகத்தில் ... (இயக்கங்களின்) அணுகுமுறைகள், மாணவர் மீதான தாக்குதல்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராகத் திரும்பிய போது, இங்கு நாம் அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய ஒரு சூழ்நிலை எழுந்தது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் ஸ்ரீலங்கா அரசினால் பறிக்கப்பட்டிருந்த பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் தமிழீழத்தில் ...(இயக்கங்களால்) பறிக்கப்பட்டது. அதாவது 85ம் ஆண்டு (இயக்க) .. அழிப்புக்குப் பிற்பாடு முற்றுமுழுதாக தமிழ் ஈழத்தில் இருந்த கருத்துச்சுதந்திரம் பத்திரிகைச்சுதந்திரம் முற்றாகவே அழிக்கப்பட்டது. ஒரு மாணவன் அல்லது ஒரு சமூகத்தில் உள்ள மனிதன் எந்தவொரு கருத்தையும் பகிரங்கமாகக் கூற முடியாத ஒரு நிலைமை உருவானது.

இதைத் தமிழீழத்துக்காகப் போராடுகின்றோம், தமிழீழத்தில் உள்ள மக்களுடைய சுதந்திரத்துக்காக போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, இந்த மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட நிலைமையில் நடந்தது." இன்று சுய உணர்வை இழந்து சுதந்திர உணர்வுகளை இழந்து நிற்கும் வரலாற்றுத் தொடர்ச்சிக்கான காரணி இது தான்.

மக்களும் மாணவர்களும் அன்று இரண்டுவிதமான கடும் ஒடுக்குமுறைகளுக்குள், முரண்பட்ட அரசியல் சூழலுக்குள் நின்று போராடினார்கள். தங்கள் சுதந்திரத்துக்காக, தங்கள் சமூகத்தின் உயிர் மூச்சுக்காகப் போராடினார்கள். அடக்குமுறையைக் கண்டு அடங்கி ஒடுங்கிக் கிடக்கவில்லை. தானும் தன்பாடும் என்று ஒதுங்கிக் கிடக்கவில்லை.

இதே காலத்தில் வெளியான மற்றொரு துண்டுப்பிரசுரத்தின் தலையங்கம் 'றாக்கிங் என்பது பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பண்பாட்டு அம்சமா!" என்று கேட்டு ராக்கிங்கிக்கு எதிரான ஒரு போராட்டத்தைக் கூட தொடங்கியது.

மரபான வலதுசாரிய கூறுகளைக் கடந்து இடதுசாரியப் பாரம்பரியம் கொண்ட முற்போக்குக் கூறாக மாணவர் போராட்டம் வளர்ச்சி பெற்றது. வெறும் மாணவர்கள் விவகாரங்களைக் கடந்து சமூகத்தின் பால் அக்கறை கொண்டதுடன், தன்னையும் இணைத்துக் கொண்டது. சமூகத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ள முனைந்தது.

தனது போராட்டத்துக்கு சமூகத்தில் ஆதரவைக்கோரியும், சமூகத்தில் பல முனைகளில் நடந்த போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒரு புதிய அரசியல் பாரம்பரியம், யாழ் பல்கலைக்கழகப் போராட்டத்தின் போது உருவானது. எந்தளவுக்கு மாணவர்களும், மக்களும் போராட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு அமைப்பாக்கப்படுகின்றரோ, அந்தளவுக்கு ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியும்.

இதைத்தான் அன்று மாணவர் சமூகம் செய்ய முனைந்தது. இந்த அனுபவத்தை இன்று விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. சமூகமும், மாணவர்களும் உயிர்ப்புள்ள சமூக உறவாக மாற இது உதவும்.

தமிழ் மாணவர்களின் இன்றைய நிலை இன்று இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான பொது அடக்குமுறையும், தமிழ் சமூகம் மீதான மேலதிகமான இனவொடுக்குமுறையும் காணப்படுகின்றது. அதேநேரம் கடந்தகால அரசியல் தமிழ் மக்களை செயலற்ற நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. தமிழ் மக்கள் இன்றைய இந்தச் சூழல் உருவாகுவதற்கு, 2009 க்கு முந்தைய இரு ஒடுக்குமுறைகளும் காரணமாக இருந்திருக்கின்றது. மக்களின் சுயமான செயற்பாடுகள் அனைத்தும் அழிக்கப்பட்ட, அதன் நீட்சியாகவே இன்று தமிழ் சமூகம் நடைப்பிணமாகி இருக்கின்றது.

ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு அதை மாற்ற முனையும் மாணவர் சமூகத்தின் பொது ஆற்றலை இது முடமாக்கியிருக்கின்றது. இலங்கையில் தமிழ் மாணவர்கள் செயலற்றுப்போய் இருக்கின்றனர். நாட்டின் பொதுவான நிகழ்வுகள் சார்ந்த சிங்கள மாணவர்களின் செயற்பாடுகள் கூட, தமிழ் மாணவர்கள் மத்தியில் இருப்பதில்லை. பல்கலைக்கழங்களில் கற்கின்ற தமிழ் மாணவர்கள், சிங்கள மாணவர்களில் இருந்து ஒதுங்கியும் வாழ்கின்றனர். அதேநேரம் விசேடமாக பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வாழும் தமிழ் மாணவர்கள், அதை எதிர் கொள்வது கிடையாது. மாறாக ஒதுங்கியும், ஒடுங்கியும் தனிமைப்பட்டு வாழ்கின்றனர்.

தமிழ் மாணவர்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொள்ள, சிங்கள மாணவர்களுடன் இணைந்து நிற்பதன் மூலம் அதை எதிர்கொள்ள முடியும். பொதுவான விடையங்களில் தமிழ்-சிங்கள மாணவர்களின் ஒன்றிணைந்த பொதுச் செயற்பாடுகள் தான், குறிப்பான விடையங்களிலும் தோழமையுடன் பயணிக்க வைக்கும்.

இந்த வகையில் மாணவருக்கே உரிய துடிப்பை தமிழ் மாணவர்கள் மீளக் கட்டமைக்காத வரை, உருவாகும் சமூகம் என்பது நலிவுற்று அடங்கியொடுக்கிப் போகவே வைக்கும். இது சமூகத்தை மேலும் பலவீனமாக்கும். சுயாதீனமான, சுதந்திரமான மனித ஆற்றலை வளர்த்தெடுக்கவும், அதை மீளக் கட்டமைக்கவும் கடந்தகால மாணவர்களின் ஆற்றல் பற்றிய வரலாற்றுப் பார்வையையும், அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்வது அவசியம்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் மேலான பொது ஒடுக்குமுறையும், தமிழ் தேசம் சார்ந்து பேரினவாத ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ளும் தமிழ் மாணவர்கள், இன்று ஒடுங்கிக் கிடக்கும் வரலாற்றுக் காரணம் என்ன?

1.தமிழ் மக்கள் மேலும், மாணவ சமூகம் மீதும் தொடர்ச்சியாக கையாண்ட பேரினவாத ஒடுக்குமுறையும், இனவழிப்பும்

2.சுயாதீனமான சுதந்திரமான மாணவர் செயற்பாட்டை மறுத்து, தமிழ் தேசியம் சார்ந்து ஆயுதம் ஏந்தியவர்கள் கையாண்ட பொதுவான ஒடுக்குமுறை

3.சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மேலான இந்த இரட்டைச் சுமைக்கு எதிராக, குரல் கொடுத்து கரம் கொடுக்காமை

பொதுவான இந்த வரலாற்றுக் காரணங்களால் தமிழ் மாணவர்கள் ஒதுங்கியும், ஒடுங்கியும் தனிமைப்பட்டும், செயலற்றும் கிடக்கின்றனர்.

சமூகத்தையே இன்று முற்றாகச் செயலற்றதாக்கி இருக்கின்றது. எதையும் கேள்வி கேட்கவும், மாற்றவும் முனையும் மாணவருக்கே உரிய பண்பை மாணவர் சமூகம் இழந்து நிற்கின்றது. ஒடுங்கி ஒதுங்கி வாழ்கின்ற நிலையா, மாணவர்களின் இயல்பு! இல்லையெனின், ஏன் இந்த நிலை இன்று? இதைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவது எப்படி? தனித்து ஒடுங்கிக் கிடப்பதன் மூலம் இதை மாற்ற முடியாது.

மாறாக தனித்து நின்று இதை எதிர்ப்பதன் மூலம், சுய அழிவுக்கு செல்ல முடியாது. மாறாக கூட்டாக செயற்படுவது அவசியம். அதை தனித்து தமிழ் மாணவர்களாக ஒதுங்கி செயற்படுவதன் மூலம், தனிமைப்பட்டு ஒடுக்குமுறைக்குள் சிக்கி அழிவது தவிர்க்கப்பட வேண்டும்.மாணவர்கள் என்ற பொது அடையாளத்தைஉயர்த்தி, அனைத்துக்குமாக ஒன்றிணைந்து போராடுவது அவசியம். இதன் மூலம் ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த மக்களுக்காக, மாணவர்கள் சிந்திப்பது செயற்படுவது அவசியம்.

1980 களில் தொடங்கி 1990 வரையான யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்கள், தங்களது சுயாதீனத்தால் பல முரண்பட்ட சூழலை எப்படி எதிர்கொண்டு போராடியது என்பதை தமிழ் மாணவர்கள் இன்று தெரிந்து கொள்வது அவசியம். இது ஒடுங்கி வாழும் தன்மையில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டும்.

-தொடரும்

மாணவர் குரல் 1