இலங்கையில் பாசிசம் அனைத்தையும் சேரிக்கின்றது. சுயாதீனமான செயல்கள் மீது வன்முறையை ஏவுகின்றது. இலங்கை அரசியலில் எங்கும் இதைக் காணமுடியும். இலங்கையில் உழைக்கும் மக்களில் தீண்டத்தகாதவராகவே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றனர். இலங்கையின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தைக் கூட மலையக மக்களுக்கு நடைமுறைப்படுத்த மறுக்கின்ற ஜனநாயக விரோத அரசு தான், இலங்கையில் “ஜனநாயகமாக” இன்னமும் தொடருகின்றது. அரசு பாசிச வடிவம் பெறுகின்ற போது, மலையக தோட்டத்தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும் வடிவமும் வன்முறை கொண்டதாகவும், திணிப்பாகவும் மாறுகின்றது. அவர்கள் தமக்காக போராட முடியாத வண்ணம், சுரண்டல் வன்முறை வடிவம் பெற்றுவருகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக, பாசிட்டுக்களின் துணையுடன் முதலாளிமார் தொழிற்சங்க காடையர்களுடன் இரகசிய ஓப்பந்தம் செய்கின்றனர். பாசிச அரசில் கூட்டுச் சேர்ந்துள்ளவர்கள், தங்கள் தொழிற்சங்கங்களைக் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின் பெயரில் மோசடி ஓப்பந்தங்களைச் செய்கின்றனர். இதை எதிர்க்கின்ற தொழிற்சங்கங்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர். இன்று காடைத்தனம் செய்யும் இந்த தொழிற்சங்கங்கள் என்பது, கட்டாய சந்தாவூடாகவே தொழிலாளர்களுடன் தொடர்பற்ற வகையில் உருவாக்கப்படுகின்றது. முதலாளிமார் தொழிலாளர் சம்பளத்தில் இருந்து எடுக்கின்ற கட்டாய சந்தாவூடாகவே, முதலாளிக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் உருவாக்கப்படுகின்றது.
தோட்ட முதலாளிமாரும், பாசிச அரசில் அங்கம் வகிக்கின்றவர்களாய் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் முடிவுகளை எடுத்து அதை உழைக்கும் மக்கள் மேல் திணிக்கின்றனர். மலையக தோட்டத்தொழிலாளர்கள் ஒருநேரக் கஞ்சிக்கே போதாக் கூலியையும், மேலும் மேலும் கடினமான உழைப்பையும் திணித்துவிடுகின்றனர். இந்தப் பாசிச சதியில் ஈடுபட்ட தொழிற்சங்கள், பிற தொழிலாளர் சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் வன்முறையை ஏவுகின்ற அளவுக்கு, பாசிசப் பண்பு மாற்றம் பெற்று விட்டதை கொட்டகலை சம்பவம் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கையில் இரணுவப் பாசிசமயமாக்கம் இப்படித்தான் அரங்கேறுகின்றது. 16 தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிற்சங்கம், தொழிலாளர்களுக்கு எதிரான சதியை எதிர்த்தும் சம்பள உயர்வைக் கோரியும் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது, பொலிசாரின் ஆதரவுடன் வன்முறை ஏவப்பட்டது. தொழிற்சங்கம் சக தொழிலாளிக்கு எதிராக வன்முறைத் தாக்குதலை நடத்துமளவுக்கு, பாசிசம் பண்பு மாற்றம் பெற்று வருகின்றது. அரச இயந்திரம் வன்முறை கொண்ட கூலிக் குழுக்களாகவும், அதை “ஜனநாயகத்தின்” உறுப்பாகவும் மாற்றி, பாசிச வன்முறைக்கு அரணாக பாதுகாப்பாகவும் இன்று செயற்படத் தொடங்கி இருக்கின்றது.
இலங்கையில் போராடுவோர் மீதும், தமக்கு எதிரானவர்கள் மீதும் வன்முறையை நடத்துவதற்கு பாதுகாப்பு வழங்குவது தான் அரச பாசிச கட்டமைப்பின் அரசியல் உள்ளடக்கமாகும். அரசு தான் அல்லாத அனைத்தின் மீதும் தாக்குதலை நடத்தத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு அமைவாக உதிரிக் கும்பலாக பொறுக்கித் தின்னக் கூடிய காடையர்களைக் கொண்ட, பாசிசக் கட்டமைப்பை உருவாக்கி, அதை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. இதை “ஜனநாயகத்தின்” உட்கூறாக உருவாக்கி, தாம் அல்லாத ஒருவரின் “ஜனநாயக” உரி;மையாகக் கூறி, சுதந்திரமான ஜனநாயகக் கூறுகள் மீது வன்முறையை ஏவிவிடுகின்றது. தாமாக அடங்கிப் போகவும், இல்லாதபோது அழிக்கவும் செய்கின்றது. நாடு முழுக்க இந்த பாசிச உதிரிக் கும்பல்கள், “ஜனநாயக” உரிமையின் பெயரில் உருவாக்கப்படுகின்றது. ஜனநாயக போராட்டங்களையும், ஜனநாயகரீதியான செயற்பாடுகளையும் இது தாக்கி அழிக்கின்றது.
அரசு அனுசரணையுடன், இராணுவ - பொலிஸ் துணையுடன் வன்முறை இன்று அரங்கேறுகின்றது. வடக்கு முதல் தெற்கு வரையான இந்தத் தாக்குதல், அரசுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகள் மீதும் இன்று முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது.
கூட்டு தொழிற்சங்கம் மீதான தாக்குதல் முதல் வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கட்சி அலுவலகங்கள் மீதான தாக்குதல் அனைத்தும் ஓரே அரசியல் வடிவம் கொண்டவை. இது தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முதல் தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறையை ஏவுகின்றது.
கிறிஸ் மனிதன் முதல் தொழிற்சங்கத்தின் பெயரில் இயங்கும் காடையர்கள் வரை, மக்கள் அஞ்சி ஓடுங்கும் வண்ணம் வன்முறையை ஏவி வருகின்றது. மக்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாசிட்டுகள் தங்கள் கோழைத்தனத்தை இப்படித்தான் முன்தள்ளுகின்றனர். மார்க்ஸ் கூறுவது போல், ".. இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடத்து கொள்வதன் மூலமாக மட்டுமே..." பாசிசத்தின் கோழைத்தனம் சுறுசுறுப்பாகி வக்கிரம் பெறுகின்றது. இன்று இலங்கையில் நடந்தேறுவது இது தான்.
மக்கள் விழிப்படைவதும், தமக்காக தாம் போராடுவதும், அது வர்க்க உணர்வு பெற்றுவருவதும் கூர்மையாவதையுமே, அரசு ஆதரவு பெற்று பாசிச வடிவம் பெற்றுள்ள உதிரிக் கும்பல்களின் தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்து. இன்று வர்க்க ரீதியாக அணிதிரள்வதும், அதற்காக உழைப்பதன் அவசியத்தையும், இந்த வன்முறைகள் அரசியல் ரீதியாக அனைவருக்கும் உணர்த்தி நிற்கின்றது. இதற்காக போராடுவதும், அணிதிரள்வதையும் தாண்டிய சமூக உணர்வு, அரசியல் என்பது எல்லாம் பம்மாத்தாகும்.
பி.இரயாகரன்
25.04.2013