Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புகைத்தலையும் மதுபானம் அருந்துவதையும் குறைப்பதன் மூலம், மின்கட்டண உயர்வை மக்கள் ஈடுசெய்ய முடியும் என்று மேன்மைமிகு இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். பாசிட்டுகள் இப்படித்தான் வக்கிரமாக மக்களைப் பார்த்து கூறமுடியும். குடும்ப ஆட்சியை நிறுவிக் கொண்டு, குடும்பச்சொத்தை பல பத்தாயிரம கோடியாக குவித்துக்கொண்டு, அதை பாதுகாக்க படைகளையும் அதற்கான செலவுகளையும் பல மடங்காக அதிகரிக்கும் நாட்டின் ஐனாதிபதியிடம், இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இதை மூடிமறைக்க குறைந்த மின் பாவனையாளர்களைப் பாதிக்காத அதிகரிப்பையே செய்துள்ளதாக கூறுவதன் மூலம், மக்களை முட்டாளாக்க முனைகின்றனர். மக்கள் மேலான புதிய வாழ்க்கைச் சுமையை திரித்தும், ஏய்த்தும் அதை மூடிமறைக்க முனைகின்றனர்.

தனிப்பட்ட மின்கட்டண உயர்வை மின்பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப திணிக்கப்பட்டுள்ள அதே நேரம், திணிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு அனைத்து பாவனைப்பொருட்கள் முதல் சேவைத்துறை அனைத்தினதும் விலையையும் தாறுமாறாக அதிகரிக்க வைத்திருக்கின்றது.

மின்கட்டண உயர்வு நேரடியானதும், மறைமுகமானதுமான இரண்டு வாழ்க்கைச் சுமைகளை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. மறுபுறத்தில் தேசிய சிறு உற்பத்திகள், தங்கள் உற்பத்திகளுக்கான மின் மற்றும் மூலப்பொருட்கள் மேலான செலவுகளை ஈடுகொடுத்து சந்தைப்படுத்த முடியாத வண்ணம், இந்த மின்கட்டணம் இடியாக மாறி இருக்கின்றது. பன்னாட்டு உற்பத்தியை எதிர்கொள்ள முடியாது தொடர்ந்து நலிந்தும் நசிந்தும் வந்த தேசிய உற்பத்திகளுக்கு எதிரானது, இந்த மின்கட்டண உயர்வு.

உழைத்து வாழும் மக்கள் மேல் இந்தச் சுமையைத் திணிப்பதன் மூலம் தான், தேசிய உற்பத்திகள் தாக்குப்பிடிக்க முடியும் என்ற அவலநிலை, மின்கட்டண உயர்வு மக்களை அதிகமாய் உழைக்கக் கோருவதும், உழைப்பிற்கான கூலியை குறைக்கும் வண்ணமும் இந்த மின்கட்டண அதிகரிப்பு மக்கள் மேல் பாய்ந்திருக்கின்றது.

மின் அதிகரிப்புக்கு மின்சார சபையின் கடன் தான் காரணம் என்ற அரசு தரப்பின் கூற்றுக்கு பின்னால், இருப்பது ஊழலும், மோசடிகளும், மின்கட்டணத்தை செலுத்தாததும் தான். இந்த வகையில் இதற்கு அரசும், அரசுக் கொள்கையும் தான் காரணமாகவும் இருக்கின்றது. இதை அனைத்து மக்கள் மேல் திணிப்பதும், மக்களின் அனைத்துவிதமான நுகர்வின் அளவை குறைப்பதன் மூலம், நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்கான அதிகரிப்பு என்று கூறுவதும் கடைந்தெடுத்த அரசியல் மோசடி.

மக்களை மேலும் மேலும் சூறையாடும் அரசு, மக்களுக்கு எதிரான படைப்பலத்தை அதிகரிப்பது தொடர்ந்தும் நடந்தேறுகின்றது. படைகளுக்கான சலுகைகளும் வசதிகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

மக்கள் மேலான வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் அதே நேரம், மக்கள் போராடுவதைத் தடுக்க படைப்பலமும் தொடர்ந்து அதிகரிக்கின்றது. இலங்கையில் நேரெதிராக அதிகரிக்கும் இந்தப் போக்கு, வர்க்க முரண்பாட்டையும் வர்க்கப் போராட்டத்தை நோக்கி மக்கள் பயணிப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

மக்கள்விரோத பாசிச அரசுக்கு எதிராக தங்கள் சொந்தப்பலத்தில் போராடுவதைத் தவிர, வேறு வழி மக்களுக்கு இல்லை. இதைத்தான் அரசு தன் படையை பலப்படுத்துவதன் மூலமும், மக்களுக்கு கூறுகின்றது. போராட்டங்களுக்கு எதிரான அரசபயங்கரவாதம், இதை தன் நடைமுறை மூலமும் நிறுவுகின்றது.

 

பி.இரயாகரன்

23.04.2013