பொதுபல சேனா வெறுமனே இனவாத மதவாத அமைப்பல்ல. இப்படி அது தன்னைக் காட்டிக் கொள்வதும், அதை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதும் குறுகிய அரசியலாகும். அதாவது பொதுபல சேனா அமைப்பின் வெளிப்படையான நடவடிக்கைகளைக் கொண்டு அணுகும் போக்கு, இதை தோற்றுவித்தவர்களின் நோக்குக்கு சமாந்தரமானது. சிறுபான்மை இனத்தையும் மதத்தையும் பெரும்பான்மையின் எதிரியாகக்காட்டி ஒடுக்குவதன் மூலம் பிரித்தாளுவது மட்டும் இதன் அரசியல் நோக்கமல்ல. யுத்தத்தின் பின்னான பொருளாதார நலன்கள் தான், இதன் குறிப்பான இதன் குவிவான செயற்பாட்டுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இந்த வகையில் போர்க்குற்றவாளிகளின் கையில் குவிந்துள்ள சொத்துடமை சார்ந்த பொருளாதார நலன்கள், பொதுபல சேனாவின் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது.
இந்த வகையில் இறுதி யுத்தமும், யுத்தத்திற்கு பிந்தைய பாரிய படுகொலை மூலமும் புதிய சொத்துடமை கொண்ட ஒரு ஆளும் வர்க்கம்; உருவாகி இருக்கின்றது. இந்த வர்க்கம் தன்னுடைய புதிய சொத்துடமையைக் கொண்டு சுரண்டவே பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்குகின்றது. இந்த வகையில் புதிய ஆளும் வர்க்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.
1.யுத்தம் மற்றும் யுத்தத்திற்கு பிந்தைய பாரிய போர்க்குற்றத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இன மதவாதத்தை முன்தள்ளுகின்றது.
2.யுத்தம், ஊழல் மூலம் திரட்டிய பணம், சரணடைந்த புலிகளைக் கொன்றதன் மூலம் கைப்பற்றிய சொத்துகள், சரணடைந்த புலிக் குடும்பங்கள் மற்றும் அண்டிப் பிழைத்தவர்களைக் கொன்றதன் மூலம் கொள்ளையடித்த சொத்துகளை அடிப்படையாக கொண்ட புதிய ஆளும் வர்க்கம், இன்று தனது புலி மூலதனத்துக்கு, உரிய இடத்தை இலங்கையில் கோருகின்றது. அது பொதுபல சேனா போன்ற மத இனவாத வன்முறை வடிவிலும், அபிவிருத்தி அரசியல் என்ற போர்வையிலும் தன்னை இன்று போர்த்திக் கொண்டு முன்னிறுத்துகின்றது. ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை இன மத ரீதியான ஆளும் வர்க்க முரண்பாடாகவும், மக்களுக்கு இடையிலான முரண்பாடாகவும் மாற்ற முனைகின்றது.
3.யுத்தம், யுத்தத்துக்கு பிந்தைய சூழலில் வர்க்க ரீதியான முரண்பாடு கூர்மையாவதும், அது குறிப்பாக புதிய ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக மையமாவதை தடுக்தலும் இன மத வாதத்தை முன்தள்ளுகின்றது.
இந்த அரசியல் அடிப்படையில் தான், இன மத முரண்பாடுகள் வௌ;வேறு வடிவங்களில் முன் தள்ளப்படுகின்றது. இதன் அரசியல் விளைவு
1.இன மத முரண்பாடுகள் புதிய வடிவில் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்படுகின்றது.
2.ஆளும் வர்க்கங்களுக்குள்ளானதும், மூலதனத்துக்குள்ளானதுமான முரண்பாடுகளாக கூர்மையாகி, புதிய முதலீடுகள் சார்ந்த ஆளும் வர்க்கம் முதன்மை ஆளும்சக்தியாக மாறுகின்றது.
3.சிறுபான்மை இன மத மூலதனத்தை அகற்றுகின்ற, முரண்பாடாக தோன்றுகின்றது.
இது தனிச் சொத்துடமை, சட்டம், நீதி... என அனைத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக அமைப்பு முறைமையை மறுக்கும் பாசிசக் கட்டமைப்பாக மாறுகின்றது. புதிய சொத்துடமை கொண்ட இந்த ஆளும் வர்க்கம், ஜனநாயக முறையில் போட்டியிட்டு தனது மூலதனத்துக்கான ஒரு இடத்தை இலங்கையில் பெற முடியாதுள்ளது என்பது தான், இந்த முரண்பாட்டுக்கான அரசியல் அடிப்படையாகும்.
இதைப் பெறுவதற்காக சட்டவிரோத வழிகளிலும், சட்டத்தைத் தனக்கமைய திருத்தியும், பொது அச்சத்தை விதைத்தும், சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகள் மூலம் தனது மூலதனத்தை முதலிடவும், முழு இலங்கையையும் சுரண்டவும் முனைகின்றது. பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் வெளித்தோற்றத்துக்கு அப்பால் உள்ள அரசியல் அடித்தளம் இது தான்.
பொதுபல சேனா, அரசின் ஆதரவுடன் தன்னை இனவாத மதவாத அமைப்பாக காட்டிக் கொள்வதன் மூலம், புதிய ஆளும் வர்க்கத்தின் மூலதனத்துக்குரிய இடத்தை இலங்கையில் உருவாக்கிக் கொள்ள முனைகின்றது. அரசு தன் இனவாதம் மதவாதத்தை மூடிமறைக்க, பொதுபல சேனா போன்ற சக்திகளை உருவாக்கி அதை முன்தள்ளுகின்றது. இதன் மூலம்
1.இனமத வாதத்தை விதைத்து மக்களை பிரித்தாள முனைகின்றது.
2.சுரண்டல் சந்தையை மீள மறுபங்கீடு செய்துவிட முனைகின்றது.
இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாது வெறும் இனமத கூறாக இன்றைய முரண்பாட்டை குறுக்கி எதிர்வினையாற்றுவது, இனவாத மதவாத போராட்டமாக குறுக்கிவிடுவதாகின்றது. இதன் மூலம் உண்மையான புதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்க நலன்களுக்கு எதிரான போராட்டம், திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு விடுகின்றது.
புதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்கம் எங்கிருந்து எப்படி தோன்றியது?
யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின் புதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்கம் ஒன்று தோன்றியிருப்பது, அரசியல் ரீதியாக இன்னும் இன்று இனங்காணப்படாத அரசியலாக இருக்கின்றது. இதன் அரசியல் செயற்பாடுகள், பொதுவான வெளிப்படையான இன மத அரசியல் முரண்பாடாக வெளிப்படுகின்றது.
போர்க்குற்றத்தை வெறும் கொலை தொடர்பானதாகவும், இனம் சார்ந்ததாகவும் குறுக்கி விடுகின்றனர். உண்மையில் இந்தக் கொலைகளின் பின்னான அரசியல் அடிப்படை, புலிகளின் சொத்துடைமையையும் புலிகளைச் சார்ந்து வாழ்ந்தவர்களின் சொத்துடைமையையும் கைப்பற்றுவதும் அடங்கலாகத் தான்.
புலிகளின் பல பத்தாயிரம் கோடி பெறுமதி கொண்ட சொத்துடமைதான், இன்று கூர்மையடையும் முரண்பாடுகளுக்கான அரசியல் அடிப்படையாகும். முஸ்லீம் கடைகளுக்கு மேலாக குறிவைத்த தாக்குதலாக இருந்தால் என்ன, குப்பைமேட்டில் இருந்து மக்களை அகற்றுவதாக இருந்தால் என்ன, வயல்காணிகளை சட்டம் போட்டு அபகரிப்பதாக இருந்தால் என்ன, இதுதான் இதற்கான அடிப்படையாகும்.
புலிகளின் இறுதி அரசியல் வடிவம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கம் சார்ந்த ஒரு அரசியல் கொண்ட இயக்கமல்ல. மாறாக சொத்துக்குவிக்கும் மாபியாவாக, தமிழ் மக்களின் சொத்துடமையை தனதாக்கும் கொள்கையைக் கொண்டு அது இயங்கியது. இலங்கையில் புதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்கத்தின் இன்றைய மூலதனம் இப்படித்தான் புலியில் தோன்றியது. புலிகள் இந்த மூலதனத்தை திரட்டிக் கொடுக்கும் மாபியா வேலையைத்தான், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலாகச் செய்தனர்.
இந்தவகையில் புலிகளிடம் இருந்த சொத்து என்பது பல ஆயிரம் கோடியாகும். புலம் பெயர் மக்களின் பணத்தை தனதாக்கிய ஒரு இயக்கம். இறுதி யுத்தத்துக்கு முன் சுனாமி மூலம் பல ஆயிரம் கோடி பணத்தை புலிகள் தம்வசப்படுத்தினர். சமாதான காலம் வரிகள், நிதி சேகரிப்புகள், பணத்தை பலாத்காரமாக கைப்பற்றுவது என்று பல வழிகளில், புலிப் பணக்குவிப்பு நாடு முழுக்க விரிவாகி இருந்தது. யுத்தம் கூர்மையாகிய போது, பொது மக்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் புலிகளிடம் விற்றதன் மூலம் அதை இழந்தனர். யுத்த இறுதி நாளுக்கு முன், புலிகள் ஒரு பவுன் தங்கத்தை 250 ரூபாவுக்கு வாங்கினர்.
இறுதி யுத்தம் என்பது, புலிகள் பணக் கோட்டைக்குள் இருந்து அதைப் பாதுகாக்கும் யுத்தமானது. இறுதியில் அதைக் கைப்பற்றும் யுத்தமாகவே நடதேறியது. புலிகளிடம் குவிந்த பல பத்தாயிரம் கோடி சொத்து மட்டுமல்ல, புலிகளை அண்டிப் பிழைத்தவர்களின் குடும்பங்களிடம் சொத்தும் குவிந்து காணப்பட்டது. யுத்தத்தில் புலிகளின் சரணடைவும், புலிக் குடும்பங்களின் சரணடைவும், அண்டிப்பிழைத்த குடும்பங்கள் சரணடைவும்... அவர்களின் சொத்துக்காக கொல்வதுமே நடந்தேறியது. இந்த போர்க்குற்றம் மூலம், பல பத்தாயிரம் கோடிகளை அபகரித்து புதிய ஆளும் வர்க்கம் உருவானது. இதை விட தொடர்ந்து புலிகள் புதைத்த சொத்துகளுக்காக, புதிய கடத்தல்கள் சித்திரவதைகள் செய்து புலிப் புதையல்களை தேடி வருகின்றனர். இந்தப் பணம் மட்டுமல்ல புலிகள் ஆயுதங்களையும், தமது யுத்த ஆயுதங்களையும் சர்வதேச சந்தையில் விற்பதன் மூலம் புதிய சொத்துடைய வர்க்கம் பல மடங்காக வீங்கியது.
இப்படி கொல்வதன் மூலம் சொத்து குவிக்கப்பட்டது. புதிய ஆளும் வர்க்கம் குவித்துவைத்துள்ள சொத்துகள், யுத்தக் குற்றத்தில் அரசியல் மூலமாக மாறி இருக்கின்றது.
இன்று முதன்மை பெறும் அரசியல் முரண்பாடுகள், புதிய ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்த இதன் போராட்டமானது வன்முறை கொண்டது. ஜனநாயக வடிவங்களில் தன்னை முன்னிறுத்த முடியாது, பாசிச வடிவங்களில் தன்னை முன்னிறுத்துகின்றது. இது வெறும் இன மத முரண்பாடல்ல, புதிய சொத்துடைய ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்த வர்க்க முரண்பாடாகவும், பரந்துபட்ட அனைத்து மக்களுக்கும் எதிரான முரண்பாடாகவும் கூர்மையாகி வருகின்றது. இந்த வகையில் இதை இனம் கண்டு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
பி.இரயாகரன்
18.04.2013