இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை சுயநிர்ணயம் மூலமான வர்க்கப் போராட்டம் மூலம் கடக்க முடியுமா? அல்லது கடக்க முடியாதா? இன்று இதுதான் பாட்டாளி வர்க்க சக்திகளின் முன்னுள்ள கேள்வி. எந்த அரசியல் வழியில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை, நாம் நிறுவியாக வேண்டும். இந்த வகையில்
1.மார்க்சியம் முன்வைக்கும் முரணற்ற ஜனநாயகமே, சுயநிர்ணய உரிமை. இதை அரசியல் ரீதியாக முரணற்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயம் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானது என்பதையும், அது எந்த அடிப்படையில் அப்படி இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதன் மூலமே, வர்க்கப் போராட்டத்தை நடத்த சுயநிர்ணயத்தைக் கையாள முடியும். இதை விளக்கியாக வேண்டும்.
2.தேசிய முதலாளித்துவ சமூகக்கட்டமைப்பை இலங்கை கடந்துவிடவில்லை என்பதை நிறுவியாக வேண்டும். இதை நிறுவுவதன் மூலம், சுயநிர்ணயம் மூலம் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை தெளிவுபடுத்த முடியும்.
இந்த அரசியல் அடிப்படையிலான இந்த விவாதம் என்பது, இதைச் சுற்றி இயங்கும் பல்வேறு விடையங்களையும் விவாதிக்கக் கோருகின்றது. உதாரணமாக
1. பொருளாதாரரீதியான சுதந்திரத்தையும் தேசிய இனங்களும், தேசங்களும் கொண்டிருக்க முடியாது என்ற வாதங்கள் மீது.
2. உலகமயமாதலில் தேசங்களும், தேசியங்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இருக்க முடியாது என்ற வாதங்கள் மீது
3. இலங்கையில் சுயநிர்ணயம் எந்த வடிவில், எந்தக் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது என்பது தொடர்பாகவும்
4. இந்தச் சமூக அமைப்பில் தேசிய இன முரண்பாடுகள் தீர்க்கப்படுகின்ற பல்வேறு சூழல்கள், சந்தர்ப்பங்கள் பற்றியும்
5. தேசிய இன முரண்பாடு ஏதோ ஒருவகையில் தீர்க்கப்படுகின்ற போது, சுயநிர்ணயம் என்பது அரசியல்ரீதியாக அர்த்தம் இழந்துவிடுவது பற்றியும்
6. சுயநிர்ணயம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம், வர்க்கப்போராட்டத்தை நடத்துவதற்கான அரசியல் செயல்தந்திரம் தான் என்பது பற்றியும்
7. இன்னும் பல
இந்த வகையில் மேற்கூறியவைகளை நாம் தனியாக பின்னால் விரிவாக ஆராய உள்ளோம். இங்கு இவை எப்படி இருந்த போதும், எந்தவகையான அரசியல் செயல்தந்திரத்தை இதன் மேல் பாட்டாளி வர்க்கம் கொண்டிருந்த போதும், இதை முன்னெடுப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்ன என்பது தொடர்பான தெளிவும் புரிதலும் அவசியமானது. பாட்டாளிவர்க்கம் தன் சொந்தக் கண்ணோட்டத்தில் சுயநிர்ணய உரிமையை சரியாக புரிந்து ஏற்றுக்கொள்வதன் மூலம் தான், இலங்கைக்கு எந்த வகையில் பொருந்தும் என்பது பற்றியும், இலங்கைக்கு எந்த வகையில் பொருத்தமற்றுப் போகின்றது என்பது பற்றியும், விரிவாக விளக்கவும் விவாதிக்கவும் முடியும்.
இன்று இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய விவாதமும் தர்க்கமும் கற்பனையானதல்ல, இது இன முரண்பாட்டின் ஊடாக இன்று எதார்த்தத்தில் காணப்படுகின்றது. இது மட்டுமின்றி தேசமும், தேசியமும், சமூகப் பொருளாதார கூறுகளினால் கற்பிதமாகிவிடவில்லை. இந்த எதார்த்த சூழலில் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வைக் கோருவதும், மறுப்பதும் கூட காணப்படுகின்றது. இருந்த போதும் இன முரண்பாட்டை நிராகரித்துவிட்டு, கடந்து சென்றுவிட முடியாது.
இது பூர்சுவா வர்க்கத்தின் நலன் சார்ந்த ஒன்றாக குறுக்கிவிடக் கூடாது. பூர்சுவா வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற வகையில், பரந்துபட்ட மக்களின் முரணற்ற கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தன்பின்னால் அணிதிரட்டியே வர்க்க நலனை அடைகின்றது. பரந்துபட்ட மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் இதற்குள் உள்ளடங்கி இருப்பதை நாம் நிராகரிக்கக் கூடாது. ஜனநாயகக் கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் தனது முரணற்ற ஜனநாயக கோரிக்கையாக்குவதன் மூலம், அதற்காகப் போராடுவதன் மூலம், பூர்சுவா வர்க்கத்தை பரந்துபட்ட மக்களில் இருந்தும் தனிமைப்படுத்த வேண்டும். இதன் மூலம் பூர்சுவா வர்க்கத்தின் முரணான கோரிக்கைக்குள் அதை முடக்கி, அதை தனிமைப்படுத்தித் தோற்கடிக்க வேண்டும். ஜனநாயகத்துக்கான போராட்டமே, பாட்டாளி வர்க்க புரட்சிக்கான ஆதாரமாகும்.
லெனின் கூறியது போல் ".. ஜனநாயகத்துக்கான போராட்டமானது சோசலிசப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் திசைதிருப்பி விடுமென்றோ கருதுவது ஒரு பெரிய தவறு. அதற்கு மாறாக, பூரண ஜனநாயகத்தைக் கையாளாத சோசலிசத்தின் வெற்றி எவ்வாறு இருக்க முடியாதோ அதே போல், ஜனநாயகத்துக்காக எல்லா முனைகளிலும் முரண்பாடுகளின்றி புரட்சிகரப் போராட்டம் நடத்தாமல் பாட்டாளி வாக்கமானது பூர்ஷ்வாக்களின் மீது வெற்றி கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொள்ள முடியாது." தேசிய இன முரண்பாட்டிலும் இதைத்தான் பாட்டாளி வர்க்கம் முரணற்ற வகையில் கையாள வேண்டும்.
லெனின் விளக்கிக் கூறுவது போல் "சோஷலிசப் புரட்சி என்பது ஒரே தனிச் செயல் அல்ல. ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல, கூர்மையான வர்க்கச் சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது, எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராட்டங்கள் நடக்கும் சகாப்தம் அது." என்றார். இலங்கையில் பிரதான முரண்பாடான இன முரண்பாட்டைக் கடந்து, வர்க்கப் போராட்டத்தை நடத்தி விட முடியாது. தேசியவாதத்திற்கு பின்னால் வால் பிடித்துச் சென்றுவிடவும் முடியாது. பாட்டாளி வர்க்கம் சொந்த வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டும். முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமை இதை வரையறுக்கின்றது.
லெனின் கூறிவது போல் "..பூர்ஷ்வா, குட்டிபூர்ஷ்வா ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை வேறாக பிரிப்பதற்கான தவிர்க்க முடியாத போராட்ட"த்தை நடத்தத்தான், பாட்டாளி வர்க்கம் தேசிய இனப்பிரச்சனையிலும், பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட முரணற்ற சுயநிர்ணய உரிமையை முன்வைக்கின்றது. லெனின் வார்த்தையில் இதைக் கூறினால் "..சிறப்பாக பிரிந்து போவது பற்றிய பிரச்சனைக்கு ஜனநாயகம் அற்ற தீர்வு இருக்கவே முடியாதோ அத்தகைய ஜனநாயக அமைப்பையே "சுயநிர்ணய உரிமை" குறிக்கின்றது" என்றார். இந்த வகையில் தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வாக லெனின் முன் வைப்பது "தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு ஒன்றே ஒன்று தான். முரணற்ற ஜனநாயகம் ஒன்றேதான் அந்தத் தீர்வு" தான். இதைத்தான் சுயநிர்ணய உரிமை வரையறுத்து முன்வைக்கின்றது.
இந்த வர்க்க சமூக அமைப்பில், சமூக பொருளாதார வரலாற்று வழியில் தேசிய இன உருவாக்கத்தையும் அதற்கான வர்க்க முரண்பாட்டையும், பூர்சுவா கோரிக்கையாக்கி நிராகரிக்க முடியாது. லெனின் கூறியது போல் "தேசிய இனம் என்கிற கோட்பாடு பூர்ஷவா சமுதாயத்தில் வரலாற்று வழியில் தவிர்க்க முடியாது. இந்தச் சமுதாயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மார்க்சியமானது, தேசிய இன இயக்கங்கள் வரலாற்று வழியில் நியாயமுடையவை என்பதை முழு அளவுக்கு அங்கீகரிக்கிறது. ஆனால் இந்த அங்கீகாரம் தேசியவாதத்துக்கான ஆதரவு விளக்கமாக ஆகி விடாதிருக்கும் பொருட்டு, இந்த இயக்கங்களில் முற்போக்கான அம்சமாய் இருப்பதற்கு மட்டுமானதாய் அங்கீகாரம் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்." என்றார். இந்த வகையில் மார்க்சியம் முன்வைக்கும் சர்வதேசியத்துக்கும், முதலாளித்துவம் முன்வைக்கும் தேசியத்துக்குமான முரண்பாட்டையும், வேறுபாட்டையும் அரசியல்ரீதியாக புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். கண்டிப்பாக தத்துவம், கோட்பாடு, செயல்தந்திரம், நடைமுறை என அனைத்திலும், இந்த வேறுபாட்டைக் கொண்டு பாட்டாளி வர்க்கம் தன்னை வெளிப்படுத்தி நிற்க வேண்டும். "சுயநிர்ணயம்" தொடர்பான பாட்டாளி வர்க்க மற்றும் முதலாளித்துவத்தின் வேறுபட்ட நிலையை, கண்டிப்பாக வேறுபடுத்தி வெளிப்படுத்தாத அனைத்து சந்தர்ப்பவாதத்தையும் அரசியல்ரீதியாக நிராகரிக்க வேண்டும்.
லெனின் கூறுவது போல் "தேசியவாதம் எவ்வளவுதான் "நியாயமான" "பரிசுத்தமான", நயமான நாகரிக வகைப்பட்டதாய் இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகையான தேசியவாதத்துக்கும் பதிலாய் மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கின்றது." என்றார். இந்த வகையில் தேசிய பிரச்சனையை பாட்டாளி வர்க்கம் அணுக வேண்டும்.
லெனின் கூறுவது போல் "தேசிய இனப்பிரச்சனையின் எல்லாக் கூறுகளிலும் மிகவும் வைராக்கியமான கிஞ்சித்தும் முரணற்ற ஜனநாயத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். இந்தப் பணி பிரதானமாய் எதிர்மறையானது. ஆனால் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்கு மேல் செல்வது சாத்தியமன்று, ஏனெனில் இதற்கு மேல் முதலாளி வர்க்கத்தின் "நேர்முகச்" செயற்பாடு, தேசியவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி ஆரம்பமாகி விடுகின்றது" என்றார். பாட்டாளி வர்க்க செயல்தந்திரம் என்பது, முரணற்ற ஜனநாயகக் கூறுகளை உயர்த்தி முரணான பூர்சுவா வர்க்க ஜனநாயகக் கூறுகளை எதிர்த்துப் போராடுவது தான்.
பூர்சுவா தேசியவாதத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்துவது தான். முரணான பூர்சுவா ஜனநாயகக் கோரிக்கையை எதிர்த்து, முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகக் கோரிக்கையை உயர்த்துவது தான். இதை அரசியல்ரீதியாக முரணற்ற வகையில் மார்க்சியம் வரையறுத்து முன்வைப்பதே சுயநிர்ணய உரிமையாகும். இது தேசியவாத பிரிவினைவாதத்துக்கும் எதிரானது. பலாத்காரமாக ஐக்கியப்படுத்தி வைத்திருப்பதற்கும் எதிரானது.
தொடரும்
1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)
2. இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும்? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 2)
3. லெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம்!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)