Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிலவும் இன முரண்பாட்டைப் பயன்படுத்தாது, அதற்கான தீர்வை முன்வைக்கும் சுயநிர்ணயத்தையே ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் என்ற வாதம், மார்க்சிய வர்க்க அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாகும். இதன் அரசியல் அர்த்தம் இனமுரண்பாட்டை நியாயப்படுத்தும் கோட்பாடாக சுயநிர்ணயத்தைக் காட்டி, இறுதியில் அதை நிராகரித்து விடுவதாகும்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் எழும் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல, மாறாக முதலாளித்துவக் கோரிக்கையாகும். அதேநேரம் தேசியம் ஜனநாயகக் கோரிக்கையே ஒழிய, ஏகாதிபத்தியக் (நலன் சார்ந்த) கோரிக்கை அல்ல. இந்த வகையில் இது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அரசியல் கோரிக்கை. இதை நாம் அரசியல்ரீதியாக, முரணற்ற வகையில் புரிந்து கொள்ளவேண்டும். இதில் பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவிதமான அரசியல்ரீதியான குழப்பம் இருக்கக் கூடாது.

தேசிய முதலாளி வர்க்கம் சார்ந்து எழும் இந்த ஜனநாயகக் கோரிக்கை, சாராம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது. இதை மறுப்பதும், இதை ஏகாதிபத்தியக் கோரிக்கையாக கருதுவதும், பாட்டாளி வர்க்க அரசியல் சாரத்தையே அரசியல்ரீதியாக மறுப்பதாகும். ஏகாதிபத்திய மூலதனத்துக்கும், தேசிய மூலதனத்துக்கும் (தேசிய முதலாளி) இடையிலான வேறுபாட்டையும், இதனால் எழும் அரசியல் முரண்பாட்டையும் மறுப்பதாகும். இது மூலதனத்தைப் பற்றிய ஒற்றைப் பரிமாணம் கொண்ட வரட்டுவாதமாகும்.

இந்த அரசியல் தான் அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்தில் உள்ள வேறுபட்ட செயற்பாட்டுக் கூறுகளையும், செயற்பாட்டுத் தன்மைகளையும் மறுதளிக்கின்றது. பொருளாதாரக்கூறாகக் குறுக்கி, வரட்டுத்தனமாக்கி விடுகின்றது. இதற்குள் உள்ள உறவுகளையும், சார்புத் தன்மையையும் மறுதளிக்கின்றது. இது தொடர்பாக ஏங்கெல்ஸ் பிரோக்குக்கு 1890 இல் எழுதிய போது "இளைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத்தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமாக அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நானும் பகுதியளவுக்கு பொறுப்பாகும். ... ஆனால் வரலாற்றில் ஒரு காலகட்டத்தை ஆராய்ச்சி செய்வதும், அதாவது செய்முறையில் அதைக் கையாள்வது என்பது வேறு விஷயம், அங்கே தவறு செய்வதை அனுமதிக்க முடியாது." என்றார். இது பற்றி ஏங்கெல்ஸ் மேரிங்குக்கு 1893 எழுதிய போது "..மார்க்சும் நானும் எங்களுடைய எழுத்துக்களில் அதைப் போதுமான அளவுக்கு வலியுறுத்தத் தவறினோம், அதைப் பொறுத்தமட்டில் நாங்கள் சம அளவுக்குத் தவறு செய்தவர்களே. அதாவது, நாங்கள் பிரதான அழுத்தத்தை முதலாவதாக அரசியல், சட்டவியல் மற்றும் இதர சித்தாந்தக் கருத்துகளையும் இக்கருத்துக்கள் என்னும் ஊடகத்தின் மூலமாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளையும் அவற்றின் அடிப்படையான பொருளாதார மெய்விபரங்களிலிருந்து பெறுவதற்குக் கொடுத்தோம். அப்படி செய்யக் கடமைப்பட்டிருந்தோம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்கின்ற பொழுது, உள்ளடக்கத்துக்காக வடிவத்தைப் பற்றிய பிரச்சனையை, அதாவது இக்கருத்துக்கள் ஏற்படுகின்ற வழிகளை, இதரவற்றைப் புறக்கணித்தோம். அது நமது எதிரிகள் எங்களைப் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் திரித்துக் கூறுவதற்கும் விரும்பத்தக்க சந்தர்ப்பத்தை அளித்தது.... உள்ளடக்கத்துக்காக முதலில் வடிவம் எப்போதுமே புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கனவே நான் கூறியபடி நானும் இதைச் செய்திருக்கின்றேன்.... வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி அடைவதை மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம்;..." இது பற்றி விரிவாக பின்னால் வேறு ஒரு இடத்தில் தனியாக ஆராய்வது அவசியம். தேசியப் பிரச்சனையில் மேல்கட்டுமான அடுக்குகளில் உள்ள கூறுகளின் சுயேற்சைச் தன்மையை அடிக்கட்டுமானம் மூலம் மறுதளிக்கப்படுவதையும் குறுக்கிவிடுவதையும் காணமுடியும்.

நிற்க, ஏகாதிபத்திய மூலதனக்கும் தேசிய மூலதனத்துக்கும் உள்ள வேறுபாட்டை மறுப்பது, பாட்டாளி வர்க்க அரசியல் செயல்தந்திரத்தை வரட்டுத்தனமாக்குவதாகும். வேறுபாட்டையும், முரண்பாட்டையும் மறுத்து, வெறும் முதலாளித்துவமாக குறுக்கிக் காட்டுவது சமூகத்தில் பல்வேறு வர்க்கங்கள் இருப்பதையும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அவர்களை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயல்தந்திரத்தை மறுத்தலாகும்.

இனமுரண்பாடும் அதனால் எழும் தேசியவாதமும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலாகவே தொடர்ந்து இருக்கின்றது. இலங்கையில் அரைநிலப்பிரபுத்துவம் சிதைந்தபோது கூட, ஜனநாயகப் புரட்சி மூலம் அது நடைபெறவில்லை. அதேநேரம் ஜனநாயகப் புரட்சிக்குரிய வர்க்க சக்திகளின் முரண்பாடு, நவகாலனிய பொருளாதாரக்கூறுகளுடனான முரண்பாடுகளாக உள்ளது. இதுவே ஜனநாயகப் புரட்சிகர சக்திகளின் பிரதான முரண்பாடாக காணப்படுகின்றது.

பல்தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய ஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தவிர்ப்பதற்காக, தரகுமுதலாளித்துவம் குறுகிய இன தேசியவாதத்தைத் தூண்டியதன் மூலம், தனித்தனியான இனவாத தேசியமாக வெளிப்படுத்துகின்றது. இந்த இனவாதத்துக்கு ஊடாகத்தான் ஏகாதிபத்திய நலன்கள் வெளிப்படுகின்றது. இதை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இலங்கை மக்களின் தேசியமாக வழிகாட்ட வேண்டிய பொறுப்பு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கக் கடமையாகும். இப்படி ஒரு வர்க்கக்கோரிக்கை இருப்பதை நிராகரிப்பது அரசியல் தவறாகும். சுயநிர்ணயத்தின் அரசியல்சாரம், ஆளும் வர்க்கம் முன்வைக்கும் இனமுரண்பாட்டை மக்களிடையே இல்லாதாக்கி, மக்களை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அணிதிரட்டுவது தான்.

ஏகாதிபத்தியங்கள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தித் தான், தன் நலனை அடைகின்றது என்பது சிறுபிள்ளைத்தனமான வாதம். ஒரு நாட்டை ஏகாதிபத்திய நலன் சார்ந்து பிரித்துவிட வேண்டும் என்று ஏகாதிபத்தியம் கருதுமாயின், அது சுயநிர்ணயம் என்ற மார்க்சியக் கோட்பாட்டை கொண்டு செய்வதில்லை. ஏகாதிபத்தியம் உருவாக்கிய இனவாதம் சார்ந்து, நிலவும் இன முரண்பாட்டைக் கொண்டு தான் செய்யும். அது தனது செயலுக்கு ஏற்ப வழங்கும் "சுயநிர்ணயத்தைக்" கொண்டு செய்யும். இது மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயத்திற்கு முற்றிலும் முரணானது. இங்கு மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயத்தை பற்றியே பேசுகின்றோம்.

இன்று ஏகாதிபத்திய நாடுகள் தமது; நலன் சார்ந்து இலங்கையில் பிரிவினையை மறுத்து நிற்கின்றன. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய நலன் சார்ந்து நாடுகளைப் பிளக்கும் செயலுக்கு சுயநிர்ணயம் உதவுவதாகவும், சுயநிர்ணயம் என்பது ஏகாதிபத்திய பிரிவினை தான் என்பது, அரசியலற்ற அர்த்தமற்ற வாதமாகும். இன்று இலங்கையில் பிரிவினையை முன்வைக்கக்கூடிய ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசியல் கூறுகளைக் கூட, ஏகாதிபத்தியம் மறுத்து நிற்கின்றது. இன்று இதுதான் ஏகாதிபத்திய நலன் சார்ந்த சர்வதேச நிலை. இந்த எதார்த்த அரசியலை மறுத்து, சுயநிர்ணயத்தின் பிரிந்து செல்லும் உரிமையை மறுப்பதும் சரி, அதை பிரிவினையாகக் காட்டி நிற்பதும் சரி, மார்க்சிய ஆய்வுமல்ல அரசியலுமல்ல. இன்று சுயநிர்ணயத்தை ஏற்று இதை மறுத்தலும் சரி, ஏற்காமல் இதை மறுத்தலும் சரி, இது சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான். அதாவது சுயநிர்ணய உரிமை முன்வைக்கும், வர்க்க அரசியலை மறுப்பது தான். கோட்பாட்டு ரீதியாக சுயநிர்ணயத்தை சரியாக முன்நிறுத்துவதுடன் இதை நாம் முடிக்க முடியாது. இது இலங்கைக்கான பொருத்தப்பாடுகள் மட்டுமின்றி, நடைமுறைப் போராட்டத்தில் இதன் பிரயோகமும் தொடர்பாகவும் கூட, இத் தொடரில் ஆராய்வதும் தெளிவுபடுத்துவதும் அவசியம். அதாவது "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" என்ற நூலில் லெனின் கூறியது போல் "எந்த சமூகப் பிரச்சனையையும் ஆராயும் பொழுது அதைத் திட்டவட்டமான வரலாற்று எல்லைகட்குள் தான் ஆராய வேண்டும். பிரச்சனை ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாக இருந்தால் அதை வரலாற்றுக் காலகட்டத்தில் அந்நாட்டை இதர நாடுகளிருந்து வேறுபடுத்தும் ஸ்தூலமான விசேஷ அம்சங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற மார்க்சியச் சித்தாந்தம் உறுதியாக தவிர்க்க முடியாத வகையில் கோருகின்றது" இதை இந்த தொடர் மூலம் செய்தாக வேண்டும்.

நிற்க, சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டில் உள்ள வர்க்க அரசியலை புரிந்து கொள்வதில் உள்ள அடிப்படையான அரசியல் தவறு, சுயநிர்ணய உரிமை பிரிவினைக்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையை முன்வைக்கின்றது என்பதை அரசியல்ரீதியாக மறுப்பதாகும். இந்த வகையில் இது கூட இன்றைய ஏகாதிபத்திய நிலைக்கு மாறாக பிரிவினை தான் தன் வர்க்க நலனுக்கு உகந்தது என்று கருதி, முன்னெடுக்கக் கூடிய பிரிவினை நோக்கத்துக்கு கூட எதிரானது. இப்படி எந்த வகையினாலும் சரி, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கோட்பாடு தான் சுயநிர்ணயம். தொகுப்பாக

1.ஏகாதிபத்தியம் பிரிவினையை முன் வைக்கும் போது பாட்டாளி வர்க்கம் பிரிந்து செல்லும் உரிமை மூலம், ஏகாதிபத்தியம் முன்தள்ளும் பிரிவினையை மறுக்கின்றது.

2.ஏகாதிபத்தியம் இனவொடுக்குமுறைக்கு உதவும் போது, பிரிந்து செல்லும் உரிமை மூலம் பாட்டாளிவர்க்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் போராடுகின்றது.

3.தேசிய இனமுரண்பாடு இருக்கும் போது, சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையே ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் என்பது தவறான தர்க்கமும், வாதமுமாகும். உண்மையில் இது எதார்த்தத்தில் உள்ள இனமுரண்பாட்டை பயன்படுத்துமே ஒழிய, தனக்கு எதிரான சுயநிர்ணயத்தையல்ல.

4.சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு என்பது வர்க்கப் போராட்டத்தை நடத்தும் சாதனமே ஓழிய, ஏகாதிபத்தியம் பயன்படுத்தக் கூடியளவுக்கு, பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கங்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு, அது சுய முரண்பாடு கொண்ட கோட்பாடல்ல.

5.மற்றைய வர்க்கங்கள் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு வேறு அரசியல் விளக்கங்களையும், அர்த்தங்களையும் கற்பிக்கின்றது என்றால், கற்பித்து இருக்கின்றது என்றால், அது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் குறைபாடுமல்ல, அதன் தவறுமல்ல. மாறாக பாட்டாளி வர்க்கத்தின் செயலற்ற அதன் சொந்த அரசியல் தவறாகும். இதைத்தான் திருத்தவேண்டுமே ஓழிய, மாறாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைக் கைவிடுவதல்ல. கம்யூனிசமும், அதன் தத்துவமான மார்க்சியமும் பரவலாக இன்று திரிக்கப்பட்டு இருக்கின்ற போது கூட, வர்க்க அரசியலை நாம் கைவிடுவதில்லை. மாறாக திரிபுக்கு எதிராக எப்படி போராடுகின்றோமோ, அப்படித்தான் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்திப் போராட வேண்டும். இலங்கையில் மார்க்சியத் தத்துவம் வர்க்க அடிப்படையில் இருந்து எப்படிச் சிதைக்கப்பட்டதோ, அப்படித்தான் சுயநிர்ணயக் கோட்பாடும் கூட சிதைக்கப்பட்டு இருக்கின்றது. இன்று அனைத்து மட்டத்திலும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட மார்க்சிய தத்துவத்தை மீட்பது மட்டுமல்ல, வர்க்க நடைமுறையும் கூடத்தான் மீட்கப்பட வேண்டும். இந்த வகையில் தான் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை, ஏகாதிபத்தியக் கோட்பாடாக கூறி கைவிடுவது மார்க்சியமல்ல. இது இன முரண்பாட்டுக்கு, இனவாதத்துக்கும் உதவுவது தான்.

ஆக இவை எதை எடுத்துகாட்டுகின்றது எனின் சாராம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சிறந்த வர்க்க ஆயுதம் தான் சுயநிர்ணயம். இந்த ஆயுதத்தை தவறாக விளங்கிக் கொள்வதும், விளக்கிக் கொள்வதும், பாட்டாளி வர்க்க அரசியலை புரிந்து கொள்ளத் தவறுவதாகும். பாட்டாளி வர்க்க அரசியல் உள்ளடக்கத்தை மறுத்தலாகும். பாட்டாளி வர்க்க அரசியலில் இருந்து விலகிக் செல்ல, இதுவும் ஒரு அரசியல் காரணமாக இருக்கும்.

தொடரும்

பி.இரயாகரன்

11.03.2013

1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)