இன்று எதிர்க்கருத்துகளும், கோட்பாடுகளும், முரண்பாடுகளை மறுக்கும் தூய்மைவாதம் சார்ந்த வரட்டுவாதமாக முன்தள்ளப்படுகின்றது. இதேபோல் அவதூறுகள் என்பது இட்டுக்கட்டப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒழுக்கம் சார்ந்த தூய்மைவாதமாகவும் திணிக்கப்படுகின்றது. இன்று பலமுனையில் பரவலாக இவை இரண்டும் சோடி சேர்ந்து, மக்கள் போராட்டங்களை மறுக்கும் பொது அரசியலாக பயணிக்க முனைகின்றது.
தமிழ் - சிங்கள - முஸ்லிம் - மலையக மக்கள் இணைந்து போராடுவது என்பது சாத்தியமற்றதா!? சாத்தியமற்றதாக்க இவர்கள் முனைகின்றனர். இனவொற்றுமையை கீழ் இருந்து கட்டியமைப்பதற்கான செயல்தந்திரம் என்பது, இனவொடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவது மூலம் தான் சாத்தியம். வெறும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் இது சாத்தியமில்லை. கீழ் இருந்து கட்டியமைக்கக் கூடிய மக்கள் போராட்டத்தை, தங்கள் கோட்பாட்டு முரண்பாடுகள் கொண்டு எதிர்ப்பதும், எதிராக முன்னிறுத்துவதும் மக்கள்விரோத அரசியலாகும். கோட்பாடுகள், தத்துவங்கள் மக்கள் மீதான ஒடுக்குமுறையிலான போராட்டத்தை எதிர்ப்பதற்காக அல்ல, அதை வழிநடத்துவற்காகத் தான். அதேநேரம் கோட்பாடுகள் தத்துவங்கள் உருவாக்கும் செயல்தந்திர முரண்பாடுகள், போராட்டங்களை எதிர்ப்பதற்கு பதில் குறைந்தபட்ச ஐக்கியத்தை செயல்பூர்வமான மக்கள் போராட்டங்கள் மேல் கோருகின்றது. இதில் ஊன்றி நின்று கொண்டுதான், கோட்பாடு சார்ந்து முரண்பாடுகளை நடைமுறை மூலம் தீர்க்க முனைய வேண்டும். இதுதான் மக்கள் அரசியல். இன்று இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக, நடைமுறையில் போராடுவது தான் முதன்மையான மையமான அரசியல்.
இன்று சமூகம் பற்றியும், சமூகப் புரட்சிக்கான செயல்தந்திரம் குறித்தும் முரண்பட்ட கருத்துள்ளவர்கள் ஐக்கியப்பட்டு போராடுவதையும், வேறுபட்ட இனங்கள் ஒன்றிணைந்து போராடுவதையும், இதற்குள்ள முரண்பாட்டைக் காட்டி எதிர்க்கின்றனர். இதை சாத்தியமற்றதாகவும், தவறானதாகவும் காட்டிகொண்டு, இதை அரசியல்ரீதியாக மறுப்புக்குள்ளாக்குகின்றனர். இந்த வகையில் இணைந்து போராடும் ஐக்கியத்துக்குள் விரிசலை ஏற்படுத்தும் வண்ணம் கருத்துக்களையும், எதிர்பிரச்சாரங்களையும் முன்வைக்கின்றனர். ஐக்கியம் மற்றும் போராட்டத்துக்கு எதிராக, சமூகம் பற்றிய முரண்பட்ட கருத்துக்குள் உள்ள முரண்பாடுகளையும், இரண்டு இனங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளைக் கொண்டு ஐக்கியம் மற்றும் போராட்டத்தை சாத்தியமற்றதாக்க முனைகின்றனர்.
இங்கு இப்படி இவர்கள் முன்வைப்பதன் நோக்கும், ஒரு குறிக்கோளை முன்வைத்து ஒன்றிணைந்து போராடுவதை தடுத்து நிறுத்துவது தான். இந்த நோக்கத்தின் மற்றொரு முகம் தான், ஐக்கியப்பட்டு போராடும் அமைப்புப் பற்றியும், அதில் உள்ள தனிநபர்களையும் பற்றி இட்டுக்கட்டிய அவதூறுகளை பரப்புவதும் தொடர்ந்து அக்கம்பக்கமாக நடந்தேறுகின்றது. மக்கள் போராடிய வரலாற்று காலம் முதல், போராட்டங்கள் பற்றியும் அதற்கு தலைமை தாங்கியவர்கள் பற்றியும் இட்டுக்கட்டிய அவதூறுகளை எதிர்கொணடு போராடியதும் கூட, போராட்ட வரலாறாகவே தொடருகின்றது. 1917 ருசியப் புரட்சியின் போது லெனினை "ஜெர்மானிய உளவாளியாக" கூட சித்தரித்து காட்டியதே, எம்முன்னான கடந்துபோன வரலாறு. இப்படி மக்கள் போராட்டங்களை முறியடிக்க எத்தனையோ அவதூறுகள், அன்று முதல் இன்று வரை தொடருகின்றது. இன்று ஐக்கியமும் போராட்டமும் நபர், குழு, இனம் கடந்த போராட்டமாக மேலெழுகின்ற போது, இதற்கு எதிரான பலமுனையிலான எதிர்வினைகளைப் பொதுவில் காண்கின்றோம்.
ஐக்கியம் போராட்டத்துக்கு எதிராக கருத்தையும் சிந்தனையையும் மக்களுக்கு முன் வைக்கும் போது, அதற்கு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கம் என்பது மக்களை அணிதிரட்டுவதாக, நடைமுறையில் அதற்காக போராடுவதாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் கீழிருந்து மக்கள் போராடுவதை எதிர்க்காது, அதை ஆதரித்து தாமும் அதில் பங்காற்ற வேண்டும். நோக்கமற்ற எதிர்ப்பும், கருத்துக்களும் மக்களை மோசடி செய்வது தான். இது மக்களை ஏமாற்றி, தவறாக நடத்துவது தான் இதன் நோக்கமாகிவிடுகின்றது. இதுதான் இதன் இயல்பான பொதுத்தன்மை கூட. சமூகத்தை நோக்கிய, சமூக மாற்றத்தை நோக்கிய செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு எதிரான செயலற்ற கருத்துக்களும், அவதூறுகளும் நிலவும் சமூக அமைப்பை பாதுகாப்பதற்கான ஒன்றாகவே இவை இன்று முன்தள்ளப்படுகின்றது.
மக்களைச் சார்ந்து நின்றும், மாற்றுச் செயல் மூலம் பதிலளிக்காததுமான கருத்துக்கள், மக்களின் செயற்பாட்டை முடக்குவதை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் இன்று பலமுனைகளில் செயலை மறுக்கும் கருத்துகள் பலவிதத்தில் முன்தள்ளப்படுகின்றது. இப்படி கருத்தாக மட்டுமல்ல, கருத்துகளை கொண்டு செல்லும் அமைப்புகள் மீதும், இதில் உள்ள தனிநபர்கள் மீதும் இட்டுக்கட்டிய அவதூறுகளை முன்தள்ளுகின்றனர். கருத்தியல் ரீதியாக, செயல்ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது, ஆதாரமற்றதும் அடிப்படையுமற்றதுமான கற்பனையான அவதூறுகளில் இறங்கிவிடுகின்றனர்.
இப்படி கருத்துகளும், அவதூறுகளும் ஐக்கியத்தையும் போராட்டத்தையும் மறுத்து முன்வைக்கப்படுகின்றது. கருத்துக்கும், செயலுக்கும் இடையில் உள்ள தொடர்பை மறுக்கும் வரட்டுவாதிகள் மத்தியில், இந்தக் கருத்துகள் முனைப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. மக்களின் செயலுடன் தொடர்பற்ற கருத்துகள், செயலுடன் தன்னை ஒருங்கிணைக்காத கருத்துகள், சாராம்சத்தில் கருத்துமுதல்வாதமாகும். தன் கருத்து செயலுக்கானதல்ல என்ற வகையில், தன்னை செயலில் இருந்தும் கூட விலக்கிக் கொள்கின்றது. இதன் மூலம் இந்த சமூக அமைப்பில் வாழ்கின்ற, இந்த அமைப்பை செயல்பூர்வமாக மாற்றுவதை மறுக்கின்ற கருதுக்களாக வெளிவருகின்றது. யாருக்கு எதிராக, இந்த சமூகத்தை மாற்ற விரும்புகின்றவர்களுக்கு எதிராகவே.
இன்று முரண்பட்டவர்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், முரண்பட்ட இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும் மறுக்கின்ற கருத்துக்கள், செயல்பூர்வமான ஒன்றை சிதைக்கும் அடிப்படையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. அது கொண்டிருக்கக் கூடிய தத்துவம் மற்றும் செயற்பாடுகள் மீதும், இந்த நோக்கில் தான் அவதூறுகள் பொழியப்படுகின்றது. இது மேலும் மேலும் மக்களைச் சார்ந்து நின்று போராடுவதற்கான அவசியத்தையே கோருகின்றதே ஒழிய, போராட்டத்தை கைவிடக் கோரவில்லை.
பி.இரயாகரன்
06.03.2013