Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கட்சித் திட்டத்தில் இருக்ககூடிய சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, இனவொடுக்குமுறைக்கு எதிரான வெகுஞன அமைப்பின் குறைந்தபட்சத் திட்டத்தை மறுப்பது மக்கள் நலன் சார்ந்த அரசியலல்ல. ஒரு கட்சியிடம் சுயநிர்ணயத்தை முன்வைக்குமாறு கோருவதற்கு உள்ள உரிமை, அக்கட்சி இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை மறுப்பதாகவோ எதிர்ப்பதாகவோ இருக்கக் கூடாது. இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராடியபடி, சுயநிர்ணயத்தை கட்சித் திட்டத்தில் முன்வைக்குமாறு கோரவேண்டும். இதுதான் மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனையிலான வழிமுறை.

இன்று இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான சமவுரிமைக்கான குறைந்தபட்சத் திட்டத்தை மறுக்க, சுயநிர்ணயத்தை முன்னிறுத்துவது சரியானதா!? சுயநிர்ணயத்தை முன்வைக்காதவர்கள், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மூலம் "ஏமாற்றி" விடுவார்கள் என்ற தர்க்கம் சரியானதா? சரி சுயநிர்ணயத்தை முன்வைத்தால், இந்த "ஏமாற்றம்" எப்படி இல்லாது போகும்!?

இந்த "ஏமாற்றம்" பற்றிய தர்க்கம், எங்கிருந்து எந்த அரசியலில் இருந்து வருகின்றது? இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம், தங்கள் தேசியம் சார்ந்த குறுகிய அரசியல் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் சார்ந்த குட்டிபூர்சுவா வர்க்கக் கண்ணோட்டம் தான் "ஏமாற்றம்" பற்றிய தர்க்கம். இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறை மூலம் உருவான, குட்டிபூர்சுவா வர்க்க சிந்தனை உருவாக்கிய குறுகிய கனவுகளை "சுயநிர்ணயம்" மூலம் தக்கவைக்க முடியும் என்று இவர்கள் மனதார நம்புகின்றனர். அதனால் தான் "சுயநிர்ணயத்தை" தங்கள் நோக்கில் இருந்து கோருகின்றனர். சுயநிர்ணயத்தை இவர்கள் கோருவது வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்காக அல்ல. சுயநிர்ணயம் என்பது வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான கோட்பாடு. இவர்களின் அச்சம் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காது, இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை ஒழித்துவிட்டால் என்ன நடக்கும் என்ற அச்சம் பயம் பீதி தான், இன்று வெளிப்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை முன்வைப்பது, இந்த நோக்கில் இருந்தல்ல.

பாட்டாளி வர்க்கம் தன் வர்க்கப் போராட்டத்தை நடத்த, இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை ஒழிப்பதற்காகவே சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது. இதே நோக்கில் சுயநிர்ணயத்தை முன்வைக்காது, இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை ஒழித்துவிடுவதை, பாட்டாளி வர்க்கம் எதிர்க்கத்தான் முடியுமா? இல்லை. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை ஒழிப்பது பாட்டாளி வர்க்கத்தின் நோக்கமும் கூட. சுயநிர்ணயத்தை வைத்தாலும், வைக்காவிட்டாலும், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை ஒழிப்பது தான் அதன் பொதுக் கொள்கை.

இன்றைய இந்தச் சமூக அமைப்பில் பாட்டாளி வர்க்கமல்லாத மற்றைய வர்க்கங்கள், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை தங்களுக்குள் தீர்த்துவிடுமாயின் அதைப் பாட்டாளி வர்க்கம் எதிர்க்காது. ஏனெனில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு இவை சாதகமானது. சுயநிர்ணயத்தை முன்வைக்காது இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை ஒழித்து "ஏமாற்றிவிடுவார்கள்" என்பது, குட்டிபூர்சுவா வர்க்கத்தின் சொந்தக் கண்ணோட்டமாகும். இங்கு "ஏமாற்றிவிடுவார்கள்" என்று அபத்தமாக வைக்கின்ற போது

1.அவர்கள் "சிங்களவர்கள்"

2.அவர்கள் "இனவாதிகளாகிவிட்டால்"

இந்த இரு தர்க்கமும், வாதங்களும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் சார்ந்ததல்ல. மாறாக தேசியவாத குட்டிபூர்சுவா வர்க்க கண்ணோட்டமாகும். இப்படி பாட்டாளி வர்க்கம், தன் சக இன வர்க்க சக்திகளை பார்த்து கேட்கவும், காட்டவும், கூறவும் முடியாது.

இப்படி இருக்க தமிழ் மக்களை தமிழர்களே ஏமாற்றிக் கொண்டு இருக்க, தமிழர்களை தமிழர்கள் ஒடுக்கியபடி இருக்க, சிங்களவர்கள் பற்றியும், அவர்கள் "இனவாதிகளாக" மாறிவிடுவார்கள் என்ற தர்க்கமும் அபத்தமானது, அருவருக்கத்தக்கது.

இங்கு சிங்களவரா அல்லது தமிழரா என்பதல்ல, இனவாதிகளா இல்லையா என்பதல்ல, இதைத் தீர்மானிப்பது. மாறாக எந்த வர்க்கத்தைச் சார்ந்து, என்ன அரசியல் என்பதுதான் இதைத் தீர்மானிக்கின்றது. அத்துடன் இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடும் சக்திகள், திடீரென "இனவாதிகளாக" மாறிவிடுவார்கள் என்பது அர்த்தமற்ற அரசியல் குதர்க்கமாகும். இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்களை, வெறும் மந்தைகளாக கருதும் குட்டிபூர்சுவா வர்க்கக் கண்ணோட்டம் தான் இது. தன்னையொத்த, தன் நடத்தையை ஒட்டிய சொந்த சிந்தனையில் இருந்து, இதை புரிந்துகொண்டு கூறுகின்ற தர்க்கமும், குதர்க்கவாதமுமாகும்.

மறுதளத்தில் இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் சுயநிர்ணயத்தை முழுமையாக முன்வைக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். இது குட்டிபூர்சுவா வர்க்கத்தை திருத்திப்படுத்துவதற்காக அல்ல. மாறாக பாட்டாளி வர்க்க புரட்சியை நடத்துவதற்காகவே.

இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுவதன் மூலம், இதை முழுமையாக இல்லாதாக்கிவிட முடியாது என்பதால் தான் சுயநிர்ணயத்தை முன்வைக்க வேண்டும் என்கின்றோம்;. இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறையை இல்லாது ஒழிப்பது ஒரு நடைமுறைத் தீர்வாக இருந்த போதும், இதன்பால் பரந்துபட்ட மக்களை அணிதிரட்டிவிட பல தடைகள் உண்டு. ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட இனங்கள் மத்தியில் உள்ள, மற்றைய வர்க்கங்களின் பின் உள்ள மக்களை வென்று எடுக்கக் கூடிய தெளிவான அரசியலையும், கோசங்களையும், தீர்வுகளையும், நடைமுறைகளையும் முரணற்ற வகையில் முன்வைத்துப் போராட வேண்டும்;.

பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வருவதன் மூலம் என்னவகையான தீர்வுகள் மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கும் என்ற தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்து அணிதிரட்டுவது இங்கு அவசியம்;. இதன் மூலம் பாட்டாளி வர்க்க அதிகாரத்தின் மூலம், இனப்பிரச்சனையைத் தீர்க்கும் போராட்டத்தை நடத்துமாறு இனவொடுக்குமுறைக்கு எதிரான சக்திகளை பாட்டாளிவர்க்கத்தின் கீழ் அணிதிரட்ட முடியும். இதன் மூலம் தான் பாட்டாளிவர்க்க புரட்சிக்குரிய உயர்ந்தபட்ட புரட்சிகர அரசியல் சூழலை உருவாக்க முடியும்;. பாட்டாளி வர்க்க புரட்சிக்குரிய தடைகளை அகற்ற, சுயநிர்ணயத்தை முன்வைப்பது அவசியமாகின்றது.

இந்த வகையில் சுயநிர்ணயத்தை கோர வேண்டும். இதுவல்லாத அனைத்தையும் எதிர்க்கவும், அதை அம்பலப்படுத்தவும் வேண்டும். இந்த சமூக அமைப்பில் தீர்வு காண மறுக்கும் சுரண்டும் வர்க்கங்களின் இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வை கொண்ட வர்க்கப் போராட்டம் மூலம் மட்டும், இதை இல்லாதாக்கிவிட முடியாது. பாட்டாளி வர்க்கம் மிகத் தெளிவான தீர்வை முரணற்ற வகையில் முன்வைப்பதன் மூலம் தான், மற்றைய வர்க்கங்களில் இருந்து மக்களை பாட்டாளி வர்க்க புரட்சிக்காக அணிதிரட்டிவிடமுடியும். இது தான் சுயநிர்ணயத்தை முன்வைக்கும் பாட்டாளி வாக்கத்தின் அரசியல் சாரம்.

 

பி.இரயாகரன்

04.03.2013