ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா? இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா?
மக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானமும், இந்திய ஆதரவும்
இந்தத் தீர்மானம் போர்க்குற்றங்கள் மீது விசாரணையைக் கோரவில்லை. இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. ஐ.நா கூட தலையிட முடியாத, எந்த அதிகாரமுமற்ற பிரதிநிதிகள் தங்கள் சர்வதேச மேலாதிக்க நோக்குடன், இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கும் தீர்மானம் தான் இது. இந்த எல்லைக்குள் இலங்கையில் நடந்த சில உண்மைகளைச் சார்ந்து நின்று, நடந்தவைகளை மூடிமறைத்து புதைக்கின்றது.
உலகை ஏமாற்ற இலங்கை அரசு செய்த மோசடியை, இலங்கைக்கு எதிராக மீளப் பயன்படுத்தியிருக்கின்றது. இலங்கை மீதான மேற்கின் அழுத்தத்தையும் அதன் தலையீட்டைத் தவிர்க்கவும், உலகை ஏமாற்றவும் உருவாக்கியது தான் அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன என்பதை விசாரிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு. இது அரசின் வழிகாட்டலுக்கு ஏற்ப புலிகளை மட்டும் போர்க்குற்றவாளியாக்கி, அரசு மீதான போர்க்குற்றத்தை மறுதலித்தது. அரசு மீதான குற்றத்தை தங்கள் கைக்கூலிக் கும்பலான கருணா - டக்கிளஸ் மீது சுமத்தியது. இராணுவத்தையும் அரசையும் பாதுகாக்கும் வகையில், ஐ.நாவின் அறிக்கையை மறுத்தும் வெளியாகியது. மறுதளத்தில் அரசின் அச்சுறுத்தலையும் மீறி தமக்கு எதிராக சாட்சியமளிக்கக் கூடியவர்களை இனம் காணவும், அவர்களை முடக்கவும் இதனைப் பயன்படுத்தியுள்ளது. உண்மைகளை புதைக்க, சாட்சியங்களை அழிக்க கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற விசாரணை அரசுக்கு உதவியுள்ளது. இந்த வகையில் இது நடந்த உண்மைகளைப் புதைத்து, அரசுக்கு சார்பாக அரசால் முன்வைக்கப்பட்டது. சுயாதீனமான, நடுநிலையான விசாரணையைக் கொண்டதல்ல இது. இலங்கை அரசு எந்தவிதமான போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று இந்த அறிக்கை கூறுகின்றது. பொது மக்களைப் பலியெடுக்கவில்லை என்கின்றது. அவர்களைப் பாதுகாத்ததாக கூறுகின்றது. அரசு மற்றும் இராணுவம் எதைச் சொல்லி வந்ததோ, அதையே மீள வாந்தி எடுத்திருக்கின்றது.
இப்படி உண்மைகள் இருக்க, இலங்கை அரசின் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோருகின்றது ஐ.நா. மனித உரிமை பேரவைத் தீர்மானம். இதை தம் காவடியாக்கி, தங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றது அறிவிழந்த கூட்டம். அரசின் தீர்மானம் தமக்கான தீர்வாக காண்கின்ற, காட்டுகின்ற மோசடியைத் தான் இங்கு நாம் காணமுடியும். இது எந்த நிலையிலும் போர்க்குற்ற விசாரணையையோ, மனித உரிமை மீறலையோ, இனவழிப்பை குறித்த விசாரணைகளையோ கோரவில்லை. இலங்கை அரசின் இந்த மோசடியை, அமுல் செய்யுமாறு ஐ.நா கோருகின்றது. குற்றவாளிகள் தங்களை தாங்கள் சுயவிசாரணை செய்து விசாரிக்குமாறும், பூசி மெழுகுமாறும் கோருகின்றது. குறிப்பாக அரசுக்கு வெளியில் சுயாதீனமான விசாரணையை, ஐ.நா தன் தீர்மானம் மூலம் மறுதலிக்கின்றது.
இதில் உள்ள அடுத்த மோசடி, இந்தியா முன்வைத்த திருத்தமும், ஜ.நா. தீர்மானத்துக்கான ஆதரவுமாகும். இது இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கிலானது. இந்தியா இதை ஆதரிக்க முன் தீர்மான வரையறையை ஐ.நா. மனித உரிமைத் தூதர் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டு;ம் என்று இருந்தது. இதை எதிர்த்த இந்தியா ஐ.நா. மனித உரிமைத் தூதர் இலங்கை அரசுடன் கலந்து ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று திருத்தியதன் மூலம், இலங்கை அரசுக்கு ஆதரவாக இதைத் திருத்தி அதனையே ஆதரித்திருக்கின்றது. இதுதான், இதன் பின்னுள்ள இந்தியாவின் மோசடியான ஆதரவாகும்;. இதன் மூலம் முக்கிய போர்க்குற்றவாளியான இந்தியா, இலங்கையை மட்டுமல்ல தன்னையும் சேர்த்து பாதுகாத்துக் கொண்டது. இதுமட்டுமின்றி புலத்துப் புலி உட்பட தமிழகத்து தமிழினவாதிகளையும் தன் பின்னால் காவடி எடுக்க வைத்திருக்கின்றது. இலங்கை அரசின் அறிக்கையின் பின், அனைவரையும் அணிதிரட்டி இருக்கின்றது.
மறுதளத்தில் இதன் மீதான மேற்கின் அக்கறையும், இந்தியாவின் நடத்தையும், மக்கள் சார்ந்ததல்ல. மாறாக தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் அரசியல் நோக்கிலானது. இலங்கை அரசு தனது இராணுவ பாசிச குடும்ப சர்வாதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கில், சர்வதேச முரண்பாட்டுக்குள் தன்னை உள் நுழைத்த பின்னணியில் தான், இந்த ஐ.நா. மனித உரிமை பேரவைத் தீர்மானம் உள் நோக்குடன் முன் மொழியப்பட்டது. இதை எதிர்த்த நாடுகளில் சீனா உள்ளிட கியூபா வரை அடங்கும். அதுவும் கூட இன்றைய உலக ஒழுங்கிலானது. அமெரிக்காவுடன் முரண்பட்ட நாடுகள், இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. இந்த நிலையில் அமெரிக்காவுடன் முரண்பட்ட நிலையை, ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டுகின்ற வங்குரோத்து அரசியல் தளத்தில் இருந்து புலி எதிர்ப்பு அரசியல் இதை ஆதரிக்கின்றது. மறுதளத்தில் சீனா முதல் கியூபா வரை கம்யூனிச நாடாக கூறுகின்ற பின்புத்தியில் இருந்தும், தமிழினவாத வலதுசாரிகள் இதை வைத்து குறுகிய அரசியல் நடந்த முனைகின்றனர்.
உலகில் அமெரிக்காவுக்கு எதிரான நிலை என்பது, எப்போதும் மக்கள் சார்பான அரசியல் நிலையல்ல. இன்று இலங்கை அரசும் கூட அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இருக்கின்றது. அதனால் அது மக்கள் அரசோ, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசோ அல்ல. இது போல் கியூபா, சீனா கம்யூனிசத்தின் பெயரால் ஆட்சியில் இருப்பதால், அவை கம்யூனிச ஆட்சியுமல்ல. மக்கள் விரோத அரசுகள் தான். உண்மையான ஒரு கம்யூனிச அரசு, மக்கள் சார்ந்த அரசு அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக, உண்மையான சுயாதீனமான சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வண்ணம் மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதை வாக்கெடுப்புக்கு முன்வைத்திருக்கும். மாறாக இந்த மக்கள் விரோத அரசுகள், அமெரிக்கத் தீர்மானத்தை வழிமொழிந்து அதை எதிர்த்ததன் மூலம் தம் பங்குக்கு போர்க்குற்றத்துக்கு உதவியிருக்கின்றது. இப்படி உண்மைகள் புதைக்கப்பட்டு இருக்கின்றது. நீதி மறுதலிக்கப்பட்டு இருக்கின்றது.
சனல் 4 உண்மையின் ஒரு பக்கத்தைக் காட்டி, முழுமையான போர்க்குற்றத்தை மூடிமறைக்கின்றது.
இந்த யுத்தத்தின் பின்னான குற்றவாளிகள் யார்? இதை மூடிமறைப்பதில் இருந்துதான், சனல் 4 காட்சி மௌனமாகி வெளியாகி இருக்கின்றது. முக்கிய குற்றவாளியான இந்தியா உள்ளிட்ட மேற்கின் குற்றங்களை மறுதலிக்கும் வண்ணம், அதை மூடிமறைத்து நடந்தது என்ன என்பதை பற்றிய பொய்யான பிரச்சாரத்தை சனல் 4 காட்சிப்படுத்தி இருக்கின்றது. நடந்த பின்னணியில் ஆயுதங்கள் முதல் கொண்டு தார்மீக உதவி வழங்கிய இந்தியா மற்றும் மேற்கின் பங்களிப்பு இன்றி, வெளியான காட்சிக்குரிய சம்பவங்களும் நடந்து இருக்க முடியாது. இப்படி உண்மைகள் இருக்க, அதை மூடிமறைத்து மேற்கின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப காட்சிகளையும், செய்திகளையும் சனல் 4 தணிக்கை செய்து மட்டுப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமல்ல மேற்குடன், இந்தியாவுடனும் கூடி அரசியல் செய்யும் புலிகளின் வலதுசாரிய அரசியலுக்கு இது உட்பட்டது.
போர்க்குற்றங்களில்; இலங்கை அரசு மட்டும் ஈடுபடவில்லை. புலிகள் மட்டும் ஈடுபடவில்லை. இந்தியா முதல் மேற்கு மட்டுமின்றி, சீனா முதல் ருசியா வரை இதற்கு துணையாகவும் பக்கபலமாகவும் இருந்தது. இதுதான் இங்கு உண்மை. இதை சனல் 4 மறுத்து, உலகமயமாக்குகின்றது. இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்கு துணையாக இருந்த இலங்கை அல்லாத நாடுகளின் போர்க்குற்றத்தை மூடிமறைத்து, மேற்கின் தேவைக்கு ஏற்ப காட்சிப்படுத்துவதுதான் சனல் 4 காட்சிகளின் உள்ளடக்கம். இங்கு வெளியான காட்சிகள் கூட மேற்கின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப வெட்டப்பட்டு, தணிக்கைக்கு உள்ளாகின்றது. முதலில் வெளியிட்ட சுட்டுக்கொல்லப்படும் சனல் 4 காட்சியின் தொடர்ச்சியில், இசைப்பிரியா உள்ளிட்ட காட்சி வெட்டப்பட்டது. இதன் பின் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வெளியான இரண்டாவது காட்சியில், முதலில் வெட்டப்பட்ட இசைப்பிரியாவின் காட்சி வெளியாகின்றது. அதேநேரம் பிரபாகரனின் கடைசி மகன் பற்றி குறிப்பும் வெளிவருகின்றது. ஆனால் காட்சி வெளியிடப்படவில்லை. இதன் பின் மீண்டும் மேற்கின் நிகழ்ச்சிக்கு ஏற்ப வெளியான மூன்றாவது காட்சியில், பிரபாகரனின் கடைசி மகனின் காட்சி இடம்பெறுகின்றது. இங்கு காட்சிகள் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் வெளிவரவில்லை. ஆக காட்சிகள் வெட்டப்பட்டு, மேற்கின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப தொடர்ந்து வெளிவருகின்றது. உண்மைகள் சுயாதீனமாக காட்சிப்படுத்தப்படவில்லை. ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காட்சிகள் வெளிவருகின்றது. இதே சனல் 4 யுத்தம் நடந்தபோது கே.பியின் பேட்டியையும், யுத்தத்தின் பின்னான பேட்டி உட்பட வீடியோ பேட்டி வரை வெளியிட்டது. இந்த வகையில் புலியுடன் கொண்டிருந்த தொடர்பும், மேற்கின் அரசியலுடன் பின்னிப் பிணைந்த வண்ணம் பேட்டிகளும்;, காட்சிகளும்; வெளியாகின. இந்த தொலைக்காட்சி இந்தியா உள்ளிட்ட அமெரிக்கா வரை, இந்த போர் குற்றத்தில் எந்த வகையில் எப்படி சம்பந்தப்பட்டது என்பதை கொண்டுவரவில்லை. அதை மூடிமறைக்கும் வண்ணம், அவர்களை நண்பர்களாக காட்டும் வண்ணம், உண்மைக் காட்சிகளை கொண்டு அரசை மட்டும் குற்றவாளியாக்கி காட்ட முனைகின்றது. ஊடக தர்மத்தை புதைத்து, உண்மையையும் நீதியையும் மோசடி செய்திருக்கின்றது.
உண்மைகளும் பொய்களும்
நடந்த சில உண்மைகளைக் கொண்டு தங்கள் சர்வதேச அரசியலை இவர்கள் நடத்த முனைகின்றனர். மக்களின் துன்பங்கள், துயரங்கள் தங்கள் மேலாதிக்க நலனுக்கு பயன்படுத்தும் மோசடிகள் மூலம், மக்களை கழுவேற்றுகின்றனர். தென்னாசிய பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவமுனையும் அமெரிக்கா மற்றும் இந்தியா நலன்கள், மக்கள் சார்ந்த விடையங்களை பயன்படுத்தி கொள்ளும் சுயநல வக்கிரத்தை இதன் பின்னால் நாம் காணமுடியும்;. இதை தீர்வாகவும், வழியாகயும் காட்டி அரசியல் நடத்தும் அரசியல் போக்கிலித்தனத்தை இனம் கண்டு நாம் சுயமாக அணிதிரளாத வரை முள்ளிவாய்க்காலில் நடந்தது போன்ற புதைகுழிதான் மீண்டும் பரிசாக கிடைக்கும். இதைத்தான் எமது கடந்தகால வரலாறு, எமக்கு கற்றுத் தந்திருக்கின்றது.
- பி.இரயாகரன்.