சுயநிர்ணயம் என்றால் என்ன? சுயநிர்ணயம் ஏன் முன்வைக்கப்படுகின்றது? சுயநிர்ணய கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு என்ன? இது பற்றிய அரசியல் தெளிவின்மை, முடிவுகளை தவறாக எடுக்க வைக்கின்றது. இன்று இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் அரசியல் வடிவம் பெற்று அரசியல்ரீதியாக சமவுரிமை இயக்கம் மேலெழுந்து வரும் போது அரசியல் தவறுகள் ஆழமாக பிரதிபலிக்கின்றது. அதேநேரம் ஒவ்வொரு வர்க்கமும், சுயநிர்ணயத்தை தத்தம் வர்க்கநலனில் இருந்து புரிந்துகொள்வதும் முரண்படுவதும் கூட அரசியல் போக்காக மாறிவருகின்றது. சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசியவாதம் கூட தன்னை மூடிமறைத்துக் கொண்டு முன்னிறுத்த முனைகின்றது.
இன முரண்பாட்டுக்கு எதிராக சுயநிர்ணயத்தை மார்க்சியம் முன்வைப்பது, வர்க்கப் போராட்டத்தை நடத்தவும் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றவும் தான். சுயநிர்ணயம் என்பது தன் சொந்த வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத்தானே ஒழிய இதைத்தாண்டியல்ல. இதன் மூலம் தன் அதிகாரத்தில் எப்படி தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படும் என்பதை தெளிவாக்குவதுடன், அனைத்து இன எல்லைகளையும் கடந்த அடிப்படையில் பாட்டாளி வர்க்க அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடுமாறும் கோருகின்றது.
இந்தவகையில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்துக்கு ஏற்ப, நடைமுறை சார்ந்து இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிராகப் போராடுகின்றது. இங்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வை, பாட்டாளி வர்க்கம் தன் அதிகாரத்தை நிறுவுவதற்கு முன் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக நடைமுறைப்படுத்தி விட முடியாது. நடைமுறைப்படுத்துவதானால் பாட்டாளி வர்க்கம் அரச அதிகாரத்தை தன் ஆதிக்கத்தில் வைத்திருக்க வேண்டுமென்பது இயல்பானது. ஆனால் இன ஒடுக்குமுறை தேசத்தில் நிலவினால், பாட்டாளிவர்க்க கட்சி சுயநிர்ணய உரிமையை வெறும் அரசியல் கோட்பாடாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அதை முன்னிறுத்தி நடைமுறையில் போராட வேண்டும். எந்தவகையில் அப்போராட்டங்களை முன்னெடுப்பதென்பது அக்கட்சியின் போராட்ட நடைமுறை சார்ந்த தந்திரோபாயத்தில் தங்கியுள்ளது. இதனடிப்படையில் ஆட்சி அதிகாரத்துக்கு வர முன்பே இனவொடுக்குமுறைக்கெதிராக ஒரு பாட்டாளி வர்க்க கட்சியும் அதன் அணிகளும் நடத்தும் போராட்டங்கள் அவ்வொடுக்குமுறைக்கெதிரான சில பலாபலன்களை நல்கும்.
இதன் மூலம் இனவொடுக்குமுறையிலிருந்து மக்களை தன் நடைமுறைப் போராட்டம் மூலம் பாதுகாக்கின்றது. இந்நிலையில் பாட்டாளி வர்க்கம் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதைத் தடுக்க, ஆளும் வர்க்கம் இனப்பிரச்னைக்கு தீர்வைக் கொடுக்கும் சூழலும் கூட ஏற்படும். இதன் போது பாட்டாளி வர்க்கம், தன் வர்க்க நலனில் நின்றுதான் இதை அணுகும். அதாவது பாட்டாளி வர்க்கம் தேசிய இன முரண்பாடு இருக்கும் வரை, சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வைத்தான் உயர்ந்தபட்ச தீர்வாக கொண்டு போராடும்.
இந்தவகையில் சுயநிர்ணயம் என்பது பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கு முந்தைய ஒரு தீர்வை பெற்றுத் தரும் கோட்பாடு அல்ல. மாறாக பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கு முன், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடும் ஒரு நடைமுறைக் கோட்பாடாகவே இருக்கின்றது.
இங்கு பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு முன் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மூலம் அளவுரீதியான (இன ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபடுதல்) மாற்றங்களையும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு பின் பண்புரீதியான (இன ஒடுக்குமுறைகளில் இருந்து முற்றாக விடுபடுதல்) மாற்றத்தைக் கொண்ட ஒரு நடைமுறைக் கோட்பாடு தான் சுயநிர்ணயம். ஆக இதை ஒன்றில் இருந்து ஒன்று பிரித்து பார்க்க முடியாத கோட்பாட்டு உள்ளகத்தைக் கொண்டது. இதை பிரித்துவிடுகின்ற போது, இப்படி விளக்கிக் கொள்ளும் போது சுயநிர்ணயம் திரிபுபடுத்தப்பட்டுவிடுகின்றது.
சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கு முந்தைய தீர்வாக கருதுகின்ற பற்பல அரசியல் போக்குகள் காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் நின்று தான், சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்கமல்ல இந்த அமைப்பிற்குரிய தீர்வாக கருதிக் கொண்டு இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தை எதிர்க்கும் போக்குகளும் கூட காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கு முன் சுயநிர்ணயத்தின் நடைமுறை என்பது, இனவாதத்தையும் இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுவதானே ஓழிய, இதைத் தாண்டி எந்தத் தீர்வையும் வழங்குவதுமில்லை. இதைத் தாண்டி வேறு எந்த அரசியல் நடைமுறையையும் கொண்டு அது இருப்பதுமில்லை. இதுதான் சுயநிர்ணயம் சார்ந்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரேயொரு அரசியலாக இருக்கும். பலர் இதைத் தாண்டி தீர்வைக்கொண்டது தான் சுயநிர்ணயம் என்று விளங்கிக் கொள்வது என்பது, பாட்டாளி வர்க்க அரசியல் அல்ல.
ஆக இன்று சுயநிர்ணயத்தை அரசியல் ரீதியாக புரிந்துகொள்ளாத அடிப்படையில் இருந்து சுயநிர்ணயத்தை மறுப்பதும், ஏற்பதும் கூட இன்று பொதுவாகக் காணப்படுகின்றது. இது போல் நடைமுறையை மறுப்பதும் காணப்படுகின்றது. அரசியல்ரீதியான இந்த தவறு, தேசியவாதிகளின் "சுயநிர்ணயத்தை" மறுத்து போராடுவதற்கு பதில் அதை அங்கீகரித்து விடுவதும் நிகழ்கின்றது.
முடிவாக இன்றைய பொது அரசியல் சூழலில் இதைத்தான் காணமுடிகிறது. சுயநிர்ணயம் பற்றிய தவறான அரசியல் கண்ணோட்டம், பாட்டாளி வர்க்க சக்திகள் மத்தியில் கூட பொதுவாக காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கு முந்தைய பிந்தைய அரசியல் கடமைகளை பிரித்துக் காணமறுக்கும் தவறுகள் ஊடாகவே இதை பொதுவாக காணமுடியும். தேசியவாதிகளின் "சுயநிர்ணயத்தில்" இருந்து தங்களை அரசியல் ரீதியாக வேறுபடுத்தாத, அதை எதிர்த்துப் போராடாத தவறுகளில் இருந்தும், சுயநிர்ணயத்தை ஓட்டிய தவறான விளக்கம் காணப்படுகின்றது. சுயநிர்ணயத்தை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என இருதளத்திலும் இதுதான் பொதுவாகக் காணப்படுகின்றது. இனவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிராகப் போராடும் சமவுரிமை இயக்க செயற்பாட்டை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மத்தியிலும் கூட இந்தத் தவறான போக்கும் விளக்கமும் காணப்படுகின்றது. சுயநிர்ணயக் கோட்பாடு மற்றும் நடைமுறை பற்றிய தவறான அரசியல் புரிதல், புரட்சிக்கு முன் பின்னான நீட்சியாக சுயநிர்ணயத்தை காண மறுப்பது, சுயநிர்ணயத்தை குறுக்கி விளங்கிக் கொள்வதும், பொதுவான இன்றைய அரசியல் தவறுக்கான அரசியல் அடிப்படையாகும்.
பி.இரயாகரன்
24.02.2013