மேற்கு ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சியுடன் முரண்படும் இலங்கைக்கு எதிரான, ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் அரசியல் எடுபிடிகளாக தமிழ்த்தேசியமும், தமிழ் ஊடகங்களும் இயங்குகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக இன்று பல முனையில் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள், தமிழ் மக்களின் மீட்புக்கான ஒன்றாக காட்டுகின்ற அரசியலுக்குள், வலதுசாரி தேசியம் முதல் இடதுசாரிய தேசியம் வரை புரளுகின்றனர். இதைத் தாண்டி மக்களைச் சார்ந்த எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து போராடும் அரசியலை எதிர்க்கும் இவர்கள், மாற்றாக மக்கள் அரசியல் எதையும் நடைமுறையுடன் முன்வைப்பதுமில்லை. இந்த அரசியல் பின்புலத்தில் தான், கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் படங்களை புதிதாக வெளியிட்டு செய்திகளையும், போர்க்குற்றங்கள் பற்றியும் பேசுகின்றனர்.
2009 இல் நாம் மட்டும் இந்தப் படுகொலைகளை அம்பலப்படுத்தி படங்களை வெளியிட்டதுடன், இலங்கையரசின் போர்க்குற்றத்தை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய வண்ணம் இருந்தோம். அப்போது நாம் வெளியிட்ட காட்சியையும் போர்க்குற்றங்களையும் உறுதி செய்யும் வண்ணம், இன்று புதிய படங்கள் வெளியாகி இருக்கின்றது. 2009 ஆனி மாதம் இதை அம்பலப்படுத்தி நாம் எழுதிய போது
"பிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம் -3"
என்ற கட்டுரையும், அதைத் தொடர்ந்து 2009 ஆடி மீண்டும் இதை பற்றி
என்ற கட்டுரையும் தான், இதைப் பற்றி தமிழ் மக்கள் முன் முதன்முதலில் இவற்றை கொண்டு வந்தது. ஆனால் தமிழ் ஊடகவியல் என்ன நடந்தது என்பதை மூடிமறைக்கவும், இதைப்பற்றி மௌனத்துடன் இதை தமிழ்மக்கள் முன் இருட்டடிப்பும் செய்து வந்தனர்.
இப்படி இருக்க சென்ற வருடம் சனல் 4 காட்சியைத் தொடர்ந்து, இன்று மேற்கு ஏகாதிபத்திய நலன்களுடன் தொடர்ந்து புதிய படங்கள் காட்சிப்படுத்துகின்றது. நீண்டகாலமாக நடந்ததையும், பல்வேறு காட்சிகளையும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்தவர்கள், செய்பவர்கள், பிரபாகரன் குடும்பமே உயிருடன் இருப்பதாக வேறு கூறி வந்தனர். இன்று மேற்கு ஏகாதிபத்திய நலன் சார்ந்து அவர்கள் வெளியிடும் காட்சிப்படங்களையும், செய்திகளையும், ஏதோ புதிய விடையமாக காட்டி காட்சிப்படுத்துகின்றனர். நாம் முன்னமே கூறியது போல் இன்னும் இன்னும் பல காட்சிகள், சம்பவங்கள் மூடிமறைக்கப்பட்டு இருக்கின்றது. இன்று கூட அதில் சிலவற்றை, தங்கள் சொந்த குறுகிய நலன்களுக்கு ஏற்ப பதுக்கிப் பதுக்கி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இன்று இதை வெளியிட்டவர்கள் மக்கள் நலனில் இருந்து வெளியிடவில்லை. மாறாக தங்கள் குறுகிய நலன் சார்ந்து, குறுகிய நோக்குடன் வெளியிடுகின்றனர். உண்மையில் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் சரணடைந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்ட காட்சிகள் இவர்களிடம் உண்டு. இலங்கை அரசு மற்றும் மேற்கு ஏகாதிபத்திய முரண்பாடு எந்தளவில் தீர்க்கப்படுகின்றது என்பதை பொறுத்து தான், அவை தொடர்ந்து வெளிவரும் அல்லது அது முற்றாக மூடிமறைக்கப்படும். இந்த அவர்களது நோக்கங்களைத் தாண்டி இன்று இப்படங்கள் வெளிவரவில்லை.
இன்று இதன் ஒரு பகுதி வெளியிடப்படுவதன் நோக்கம், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை தண்டிப்பதற்காக அல்ல, மாறாக உலகமயமாக்கலில் இலங்கை எங்கே எந்த முகாமில் நிற்கின்றது என்பதை பொறுத்துதான், இவை இன்று வெளியாகின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் வலது, இடது தமிழ்தேசியமும், புலம்பெயர்ந்த மேற்குசார்பு ஊடகவியலாளர்களும் பின்னிப்பிணைந்து இந்த அரசியல் பின்புலத்தில் இயங்குகின்றனர்.
இந்த மேற்கு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்குள் தான், தமிழ்தேசியம் புளுத்து வெளிவருகின்றது. இந்த தமிழ்தேசியம் தான் இன்று "சுயநிர்ணயம்" பற்றியும் பேசுகின்றது. தங்கள் ஏகாதிபத்திய நிகழ்ச்சி மற்றும் பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலுக்குள் நின்று தான், "சுயநிர்ணயத்தைப்;" பற்றி சுயநிர்ணயத்துக்கு எதிராக கருத்து முன்வைத்து பேசுகின்றனர்.
சொந்த மக்களைச் சார்ந்தும், இலங்கை மக்களைச் சார்ந்தும், உலக மக்களைச் சார்ந்தும் போராடுவதற்குப் பதில், மேற்கு ஏகாதிபத்தியம் சார்ந்து நின்று அனைத்தையும் முன்தள்ளுகின்றனர். இந்த மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியல் பின்புலத்தில் நின்று பலரும் "சுயநிர்ணயம்" பற்றிக் கூட பேசுகின்றனர்.
"சுயநிர்ணயம்" என்பது இடதுசாரிய தமிழ் தேசியத்துக்கானதாகவும், வலதுசாரிய பிரிவினைக்கானதாகவும், மொத்தத்தில் ஏகாதிபத்திய நலனுக்கு கீழப்;படுத்திவிடுகின்ற அரசியலாகவுமே இன்று முன்தள்ளப்படுகின்றது.
இதற்கு வெளியில் எந்த மக்கள் சார்ந்த மாற்று அரசியலோ, நடைமுறையோ அற்ற அரசியல் தளத்தில், ஏகாதிபத்திய பிரச்சாரம் இன்று முடுக்கி விடப்பட்டு இருக்கின்றது. இதற்கமைய இன்று புதிய காட்சிகள் வெளியிடப்படுகின்றது. ஏகாதிபத்தியம் சார்ந்த செய்திகள், காட்சிகள், செயற்பாடுகள், போர்க்குற்றங்கள் என அனைத்தும் தமிழ்மக்கள் நலன் சார்ந்ததாக காட்டும் ஊடக பிரச்சாரம், இன்று உச்சத்தை எட்டி இருக்கின்றது. மக்கள் தான் தமக்காக தாம் போராட வேண்டும் என்பதை மறுத்து, "சுயநிர்ணயம்" என்பது அனைத்து இனமக்களும் ஓன்றிணைந்து நடத்தும் வர்க்கப்போராட்டம் என்பதை மறுத்து, மக்களைச் சாராத ஏகாதிபத்திய நலனுக்குள் அரசியலை முழுமையாக புதைத்து வருகின்றனர். மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை, ஏகாதிபத்திய துணையுடன் இன்று அரங்கேற்றத் துடிக்கின்றனர்.
பி.இரயாகரன்
19.02.2013