இனவாதம் மூலம் மக்களைப் பிரித்தாண்ட அரசு, புலிக்கு பின் மக்களை மதரீதியாகப் பிளக்க உருவாக்கப்பட்டது தான் "ஹலால்" ஒழிப்பு. இன்று மத மோதலை திட்டமிட்டு தூண்டி வருகின்றது. மதம் சார்ந்த "ஹலால்" குறியீடு, வர்த்தகம் சார்ந்த குறியீடாக சந்தைப் பொருளாக மாறி இருக்கின்ற சூழலைக் கொண்டு மோதலை உருவாக்குகின்றது. இதன் மூலம் அரசு மக்களை பிளக்கத் தொடங்கி இருக்கின்றது. மக்களை ஒற்றுமையுடன் வாழ்வதை தகர்ப்பதன் மூலம் தான், மக்கள்விரோத அரசாக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற உண்மையை இலங்கையில் "ஹலால்" ஒழிபபு கோசத்தின் பின் காணமுடிகின்றது
சமூகவுடமை சாராத தனியுடைமை அமைப்பைப் புனிதமாகவும், தனிமனிதனின் வழிபாட்டு உரிமை அல்லாத மதஅடிப்படைவாதத்தை மத உரிமையாகவும் கொண்ட இந்தச் சமூக அமைப்பில், "ஹலால்" குறியீட்டை எதிர்ப்பதும், மறுப்பதும் இந்த தனியுடமை அமைப்பின் உரிமைக்கு எதிரானது. சட்ட விரோதமானது. சிறுபான்மை மீதான அடக்குமுறை. அரசு இன்று அதனையே முடுக்கிவிட்டு இருக்கின்றது. ஒரு பகுதி மக்களுக்கு தனிவுரிமையை மறுப்பதாகும்.
சந்தை சார்ந்த வர்த்தகக் குறியீட்டை மதம் சார்ந்த குறியீடாக மட்டும் குறுக்கிக் காட்டுவதன் மூலம், "தனிவுடமை" சார்ந்த சந்தை சார்ந்த அதன் உரிமையையும் சுயாதீனத்தையும் மறுக்கின்றது. அதே நேரம் மதம் சார்ந்த உரிமையில் தலையிடுகின்றது. இவை அனைத்தும் இந்த சமூக அமைப்பில் சட்டபூர்வமானது. மறுப்பது சட்டவிரோதமானது.
இப்படி இருக்க பெரும்பான்மை மதம் சார்ந்து முன்னெடுக்கப்படும் சட்டவிரோதமான மிரட்டல்களும், வன்முறைகளும் அரசு ஆதரவுடன் திட்டமிட்டு தொடர்ந்து அரங்கேறுகின்றது. மக்களைப் பிளக்க, மக்களை மோதவைக்க, மத அடிப்படைவாதம் தூண்டப்படுகின்றது. மக்கள் ஒன்றுபட்டு, முரண்பாடின்றிச் சேர்ந்து வாழ்வதை அரசு விரும்பவில்லை. இதை அரசுக்கு எதிரானதாகவே, அரசு கருதுகின்றது.
புலிக்கு பின் மக்களை மிரட்டவும், பிளக்கவும், ஒடுக்கவும் அரசு செய்கின்ற புதிய முயற்சி தான் "ஹலால்" ஓழிப்பு பிரச்சாரம். இதற்கு முஸ்லீம் மக்கள் பலியாகாமல், மற்றைய மத மக்களுடன் இணைந்து நிற்பதன் மூலம் தான், அரசின் இந்தப் பிளவுவாதத்தை எதிர்த்து நிற்க முடியும். வேறு வழியில் அல்ல.
இந்த அரசு மக்களை மிரட்ட கிறிஸ் மனிதனை இறக்கிய போது மக்கள் ஒன்றிணைந்து போராடியதன் மூலம், அவர்களை கையும் மெய்யுமாக பிடித்த போது இராணுவம் அவர்களை மீட்டுச் சென்றது முதல் மக்கள் துரத்திய போது அவர்கள் இராணுவ முகாமுக்குள் ஓடி ஒழித்தது வரையான நிகழ்வின் மூலம் தான், அரசின் இந்த முயற்சி தவிடுபொடியானது. இங்கு மக்களின் ஒற்றுமையும், ஒன்றுபட்ட போராட்டமும் தான் அரசின் இந்த முயற்சியை முறியடித்து வெற்றி கொள்ள காரணமாக இருந்தது. அரசு பல பாகங்களில் உருவாக்கிய கிறிஸ் மனிதர்கள், திடீரெனக் காணாமல் போனார்கள்.
இந்த வகையில், இன்று "ஹலால்" ஒழிப்பு என்ற அரசின் மறைமுகமான மதப்பிளவுவாதத்தை எதிர்த்து, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசின் இந்த பிளவுவாதத்துக்கு பலியாகாமல் நின்று இதை எதிர்த்து நிற்க வேண்டும்.
இன்று நிலவும் தனியடமை அமைப்பில் "ஹலால்" என்பது வர்த்தக உரிமையாகவும், மதம் சார்ந்த உரிமையாகவும் இருப்பதை மறுக்கக் கூடாது. இந்தச் சமூக அமைப்பில் இது ஜனநாயக உரிமையாகவும், ஜனநாயகக் கோரிக்கையாகவும் இருப்பதை இனம் காணவேண்டும். பொதுவுடமை அமைப்பில் வர்த்தகக் குறியீடுகள், மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும் இல்லாதாக்கப்படும் என்ற உண்மையைக் கொண்டு, "ஹலால்" ஒழிப்பு பிளவுவாதத்தை ஆதரிக்கக் கூடாது.
இந்தத் தனிவுடமைச் சமூக அமைப்பில் ஒரு மதத்துக்கு எதிராக இன்னுமொரு மதத்தை தூண்டுவது, ஒரு வர்த்தக குறியீட்டுக்கு எதிராக மக்களை மதரீதியாக பிளந்து அணிதிரட்டுவது ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது.
இந்த வகையில் "ஹலால்" ஒழிப்பு ஜனநாயக விரோதமானது. இதற்கு எதிரான அனைத்து மத மக்களையும் ஒன்றிணைத்து இதை எதிர்த்துப் போராட வேண்டும். மதம் சார்ந்த உரிமையை வலியுறுத்தியும், மதம் கடந்து அணிதிரள்வதன் மூலம் அரசின் பிளவுவாத முயற்சியை முறியடிக்க வேண்டும்;. வர்த்தகக் குறியீடு சார்ந்த உரிமையை வலியுறுத்தி, வர்த்தகம் சாராத பொதுவுடைமையைக் கோரி அரசுக்கு எதிராக அணிதிரள வேண்டும். இல்லாதபட்சத்தில் அரசு மத முரண்பாட்டை இலங்கையில் முதன்மைக்குரிய முரண்பாடாகவும், மக்களைப் பிளந்து ஆளும் அரசியல் கூறாகவும் மாற்றிவிடும். இனவாதத்தை தொடர்ந்து, அபாயகரமான அரசியல் கூறாக மதவாதம் மேலெழுந்து வருகின்றது. இதை தடுத்து நிறுத்த இனம் மதம் கடந்து மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதை அரசியலாகக் கொண்டு, எமது செயற்பாடுகள் அனைத்தும் அமைய வேண்டும்;
பி.இரயாகரன்
18.02.2013