Language Selection

உனதன்னையைத் தங்கையை

காமவெறியினில் குதறியும் புணர்வாயோ?

உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய்

யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே!

நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான்

உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்!

யாரோ யாரெவரோ?

 

 

எங்கெங்கு திரும்பினும் பெண்களுக்கெதிராய்

நடக்கிற கொடுமைகளுக்களவிலையோ?

உனை வலியுடன் ஈன்று மகிழ்ந்த -தாயின்

பிரசவ வேதனை புரிகுவையோ?

நீயுன் தாய்க்கொரு சேய் தானோ ?

கொடூரமாய் இரும்புக்குழலினை நுழைத்து

அவள் யோனியைச் சிதைப்பாயோ?

 

வேதனைப்படுத்தும் வெறியினில் ஆனந்தம்

கொள்வதை உன் சிரசினில் ஏற்றியதார்?

உனை உந்தித் தள்ளிய உளுத்தவர்

ஆட்சியில் சட்டச் சூழ்ச்சிகள் செய்குவார்

ஆள்சபை உறுப்பினரானகுவராம்.

 

காவற்படையென காசினி முழுவதும்

பெண்களைப் பிய்த்துக் சதையெனக் கிழித்து

சுதந்திரம் நல்குவராம்.

 

நேசப்படையென தேசங்கள் புகுந்து

சுடுகலன் நீட்டி உயிர்வதை செய்து

வன்மப் புணர்ச்சியில் வலிந்தவராம்.

 

ஓய்ந்தொரு நொடிதனும் உட்கார விதியிலை

ஓயா விளம்பரம் வாங்கு நுகர் நுகர் என்கும்.

மங்கையர் என்பது மனதினை சுண்டும்

நுகர்பொரு ளாமென வடிக்கும்.

வாங்கு விலைகொடு எனவுனையழைக்கும்.

 

வழியிலையெனில் தோண்டி

மனிதம் புதைகுழியிடுகுவையோ?

பன்றிகள் கூடும் பாராளுமன்றம்

உலகம் காக்கும் உத்தம இராணுவம்

பிரம்மச்சரிய ஆச்சிரமங்கள்

ஊட்டுவ தெதுதனையோ?