பொருத்தமான மிகச் சரியான தீர்ப்பு. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நீதியை பறைசாற்றிய நீதிமன்றங்களின் போலித்தனத்தை துகிலுரிந்து, இறுதியில் அதைத் தூக்கில் ஏற்றி இருக்கின்றனர். இனி நாங்கள் மட்டும் தான், இடையில் நீதிமன்றம் போன்ற இடைத் தரகுக்கு இடமில்லை என்று பாசிட்டுகள் எந்தப் பாசங்குமின்றி சொந்தப் பிரகடனத்தை பாராளுமன்றம் மூலம் செய்து இருக்கின்றனர். யாராவது இதை எதிர்த்து மக்களை அணிதிரட்டினால் போட்டுத்தள்ளுவோம், எங்களோடு இருப்பவர்கள் இதை எதிர்த்தால் தலை உருளும். இது தான் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டமும், தீர்ப்பும். நீதிமன்றங்கள் இதற்கு கொள்கை விளக்கம் வழங்குவதைத் தவிர, இதை மீறி விளக்கம் கொடுக்கக் கூடாது.
சட்டத்தின் ஆட்சிக்கு இனி இடமில்லை என்பதை, தன் வர்க்கத்தை சேர்ந்தவனுக்கு பாராளுமன்றம் மூலம் அழகாக அறுதியிட்டு சொல்லி இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் மறுக்கப்பட்டு வந்த சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும், தன் சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த முரண்பட்ட தரப்புக்கு மறுத்து இருக்கின்றது. இந்த நிலையில் அரசுடன் சேர்ந்து முன்பு தாம் மக்களுக்கு மறுத்த நீதியைப் பற்றி எந்தப் பொது அக்கறையுமியின்றி, தனித்துத் தனக்காக வீதியில் இறங்கி நிற்கின்றனர்.
நாட்டில் சட்டத்துக்கு புறம்பான கைதுகள், கடத்தல்கள், கொலைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றது. வடகிழக்கில் சிவில் கட்டமைப்பு கிடையாது. மாறாக அங்கு இராணுவ ஆட்சி நிலவுகின்றது. இன்று நாட்டை ஆளுவதோ, குற்றக் கும்பல். சட்டம், தேர்தல். எல்லாம் சடங்குத்தனமான, பாசிச நிறுவனங்களாகவே இயங்குகின்றது.
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி என்பது, ஒரு கும்பல் நலனை பேணுவதை அடிப்படையாகக் கொண்டது. தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு மக்களைக் கொண்டு வாக்கைப் போட வைப்பதும், தீர்ப்பைக் கூறுவதுமாகிவிட்டது. பாராளுமன்ற விவாதம், பெரும்பான்மை என்பது எல்லாம், எப்படி முன்கூட்டியே எழுதப்பட்ட தீர்ப்புகள் மேலான சடங்கோ, அது போல்தான் தேர்தலில் போடும் மக்களின் வாக்குகள் கூட.
இந்தச் சட்டவிரோதக் கும்பலின்; ஆட்சியையும், அதன் வரைமுறையற்ற வக்கிரங்களையும், அதிகாரங்களையும் அங்கீகரிக்காத எந்த உறுப்பும், எந்தத் தனிநபரும் சுதந்திரமாக நாட்டில் வாழ முடியாது. அரசுக்கு எதிராக மக்களைச் சார்ந்து போராடுபவர்களை போட்டுத் தள்ளுவது போல், மக்களைச் சாராத தலைமை நீதிபதியின் தலையும் உருட்டப்படுகின்றது.
இங்கு நீதிமன்றம் என்பது தங்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே, பாசிட்டுகள் சொல்லும் செய்தி. இங்கு வாலையாட்டாத நீதிபதிகளை இலக்கு வைத்து, பாசிசம் கடித்துக் குதறுகின்றது. தன்னைத் தவிர வேறு யாரையும் நம்ப முடியாத அளவுக்கு பாசிசம் வீக்கம் பெற்று, தன்னையே எல்லா அதிகாரத்திலும் நிறுவுகின்ற புற்றுநோய்க்குள்ளாகி உள்ளது.
இப்படி இருக்க நீதிமன்றத்தை பாதுகாப்போம், நீதி மீது மக்கள் நம்பிக்கை இழந்து போவதாக கூறிக் கொண்டு போராடும் தரப்பு, இந்த நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து நீண்ட காமாகிவிட்டது என்பது கூட தெரியாது வாழும் மேட்டுக்குடிகளாகவே வீதியில் இறங்கி நின்று கூறுகின்றனர்.
நாட்டில் சட்டத்துக்கு புறம்பான கைதுகள், கடத்தல்கள், கொலைகள்… எல்லாம் தொடருகின்ற நிலையில், இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கானதல்ல. நடக்கும் போராட்டம் பாசிசத்தை நோக்கிய பயணத்தில் சந்திக்கின்ற அந்த வர்க்கத்துக்குள்ளான முரண்பாடுகள் தான். இது தான் போராட்டங்களாக மாறி இருக்கின்றது.
அதுவும் நீதிமன்றத்தை பாதுகாப்போம், சட்ட ஆட்சியை பாதுகாப்போம் என்று இந்த அமைப்பு மீது நம்பிக்கை தெரிவித்து நிற்கின்றது. ஏற்கனவே இருக்கும் சட்டவிரோத கும்பல் ஆட்சி அதிகாரத்தை அங்கீகரித்துக் கொண்டு தான், பாராளுமன்றமா நீதிமன்றமா என்றும், இரண்டுமான சமநிலை பற்றியும் கூச்சல் போட்டுக் கொண்டு நிற்கின்றனர்.
இந்தச் சட்டவிரோதக் கும்பல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி இப்போராட்டங்கள் நடைபெறவில்லை. உண்மையில் இலங்கையில் நீதி கிடைக்காத குற்றங்களின் பின்னால், இந்த அரசு இருக்கின்றது. இதற்கு அனுசரணையாக நீதிமன்றம் செயற்பட்டு வந்திருகின்றது. இதற்கு எதிராக இவர்கள் போராடவில்லை.
கும்பல் ஆட்சி போல் தங்களுக்குரிய பங்கைக் கோருகின்றனர். இந்தப் போராட்டம் மூலம் பாசிசம் தன் காலை விசுவாசமாக நக்கக்கூடிய (ஓ)நாய்களை இனம்கண்டு கொண்டு இருக்கின்றது. இதன் மூலம் இனி மக்களுக்கு எதிராக கூடிக் கூத்தாடும் பாசிசக் கூத்து, இலங்கையில் அரங்கேற உள்ளது.
பி.இரயாகரன்
12.01.2012