Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இது சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்கும் இனவாதமாகும். இப்படி தன்னை மூடிமறைத்த சுயநிர்ணயம், நேரடியான இனவாதத்தை விட ஆபத்தானதும், அபாயாகரமானதுமாகும். தனக்கான நேரம் வரும் வரை அது தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு, அதிகம் நாசம் செய்கின்ற இனவாதமாகும். இதை அரசியல்ரீதியாக, கோட்பாட்டுரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமாகின்றது. சுயநிர்ணயத்தின் பின் ஒளித்துப் பிடித்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது.

இங்கு

1."சுயநிர்ணயத்தை" ஏற்றுக் கொள்வதால், அது இனவாதமல்லாததாகிவிடாது.

2. சொந்த இனத்தின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை சார்ந்து நின்று "சுயநிர்ணயத்தை" முன்வைத்தால் அது இனவாதமல்லாததாகிவிடாது.

3. மாறாக சுயநிர்ணயம் தனக்கு எதிரான இனத்தின் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சார்ந்து நிற்காத வரை, மேலுள்ள இரண்டும் இனவாதமாகும்.

சுயநிர்ணயத்தைத் திரித்து வலது இனவாதம் இருப்பது போல், சொந்த இனத்தின் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சொல்லி இடது இனவாதமும் இருக்க முடியும். இதை ஒடுக்கும் இனம், ஒடுக்கப்பட்ட இனம், என்ற இரண்டு வௌ;வேறான நேரெதிரான முரண்பட்ட தளத்திலும் இதைக் காணமுடியும். சுயநிர்ணயம் இதை நிராகரிக்கின்றது. சொந்த இனம் கடந்த, மற்ற இன ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்பதையே சுயநிர்ணயம் கோருகின்றது. இதுவல்லாத அனைத்தும் அப்பட்டமான இனவாதமாகும்.

இங்கு நாம் அரசியல்ரீதியாக இனங்காண வேண்டியது சொந்த ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று "சுயநிர்ணயத்தை" முன்வைப்பதாக கூறுகின்ற இனவாதத்தைத்தான். இது தான் சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களை, அதன் கோசத்தின் கீழ் நின்று இனவாதத்தின் கீழ் அணிதிரட்டுவதாகும். எதிர் இன ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, அதைச் சார்ந்து நின்று போராடாத வரை, இவை அனைத்தும் இனவாதம் தான்.

இன்று சுயநிர்ணயத்தைச் சொல்லி இனவாதத்தை மூடிமறைப்பதை அனுமதிக்க முடியாது. சுயநிர்ணயம், இனவாதம் இவையிரண்டும் வெவ்வேறு வர்க்கங்களின், நேர் எதிரான கோட்பாட்டு அடிப்படையாகும். இந்த அடிப்படையில் இரண்டு வேறான அரசியல் நடைமுறையைக் கொண்டதுமாகும். இனவாதம் சொந்த ஒடுக்கப்பட்ட மக்களை தன்பின் அணிதிரட்ட, அந்த வர்க்கக் கோசங்களை தனதாக்கி கொள்வதன் மூலம் தான், தன்னை எப்போதும் முன்னிறுத்துகின்றது. இந்த அரசியல் மோசடியை முறியடிக்க, அவர்கள் மற்ற இன ஓடுக்கப்பட்ட வர்க்கத்தை அணிதிரட்டுகின்றனரா என்பதைக் கொண்டு இந்த இனவாதத்தை அரசியல்ரீதியாக இனம் கண்டு முறியடிக்கமுடியும்.

இந்தவகையில் கடந்தகால தமிழ் தேசியப் போராட்டங்கள் சுயநிர்ணய அடிப்படையில் நடைபெறவில்லை. மாறாக இனவாத அடிப்படையில், சுயநிர்ணயத்தை எதிர்த்து நடந்தது. ஓடுக்கப்பட்ட வர்க்கக் கோசங்களை முன்னிறுத்தித் தான், இனவாதம் மேலெழுந்தது. சுயநிர்ணயம் இப்படித் தான் விளக்கப்பட்டது. இன்று இந்த இனவாத எல்லைக்குள் தான் கருத்துக்கள், சிந்தனைகள் அனைத்தும் மீளக் கட்டமைக்கப்படுகின்றது.

இங்கு அடுத்த முக்கிய விடையம் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய இனப்பிரச்சனையை அணுகுகின்றவர்கள், மார்க்சியத்தை தங்கள் கோட்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அதில் ஒரு கூறாக சுயநிர்ணயத்தை முன்வைக்க வேண்டும். சுயநிர்ணயத்தை முன்வைத்து, அதற்கு மார்க்சியத்தை கீழ்ப்படுத்துவதல்ல.

வர்க்கப் போராட்டத்தை நடத்தத்தான் சுயநிர்ணயமே ஒழிய, இனப்பிரச்சனையைத் தீர்க்க சுயநிர்ணயமல்ல. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்காது இனவொடுக்குமுறையை முன்னிறுத்தும் போது, அது இனவாதமாகவே இருக்கின்றது. இந்த இனவாதம் வன்முறையை நாடும் போது, அது மக்களுக்கு எதிரான பயங்கரவாதமாகவும் வெளிப்படுகின்றது.

அரச இனவாதம் போன்று, அரச பயங்கரவாதம் போன்றதே, சுயநிர்ணயத்துக்குப் பதிலான இனவாதமுமாகும். சுயநிர்ணயம் சொந்த ஒடுக்கப்பட்ட மக்களையும், மற்றைய இன ஒடுக்கப்பட்ட மக்களையும் சார்ந்து இருக்கவும் செயற்படவும் முடியும். தனித்து அல்ல. தனித்த அனைத்தும் இனவாதம் தான். சுயநிர்ணய அரசியல் என்பது குறித்த இனத்தைச் சார்ந்து நிற்காது. அது இனம் கடந்தது. குறித்த இனத்தைச் சார்ந்து பேசும் சுயநிர்ணயம் என்பது, திரிக்கப்பட்ட மூடிமறைத்த இனவாதமாகும்;. இது தன் சந்தர்ப்பத்திற்காக காத்து இருக்கும், சந்தர்ப்பவாத இனவாதமாகும்.

இங்கு இனம் கடந்து நின்று சுயநிர்ணயத்தை முன்வைப்பது மட்டுமல்ல, இதுவல்லாத இனவாதம் சார்ந்த மூடிமறைத்த சுயநிர்ணயத்தை அம்பலப்படுத்திப் போராடவும் வேண்டும்.

இன்று இலங்கையில் பேரினவாத மற்றும் குறுந்தேசிய இனவாதம் ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில், இவ்விரண்டையும் எதிர்க்காது மூடிமறைத்த வலது சந்தர்ப்பவாதம் இனவாதம் இருப்பது போல், மூடிமறைத்த இடது சந்தர்ப்பவாத இனவாதம் தன் இன ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து தன்னை வெளிப்படுத்தும். இவ்விரண்டையும் சுயநிர்ணயத்தைக் கொண்டு போர்த்திப் பாதுகாப்பதை அனுமதிக்க முடியாது.

"சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான" இனவாதமா? என்ற கேள்வியில், அது சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சார்ந்து நிற்காத வரை அது இனவாதம் தான். இங்கு இனவாதத்தை வரையறுப்பது, எதிர் இன வர்க்கத்தை சார்ந்து நின்று சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றனரா அல்லவா என்பது தான் இதைத் தீர்மானிக்கின்றது.

"இலங்கை அரசுக்கு எதிராகக் குரலெழுப்புகின்ற அனைவரையும் புலிகள் என்றும், சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசுவது இனவாதம் என்றும்," கூறுவதன் மூலம், உண்மையில் தங்கள் இனவாதத்தை மூடிமறைக்க முனைகின்றனர். உண்மையில் சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசும்போது, சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கம் சார்ந்து நின்று பேச வேண்டும். இல்லாத வரை அது மூடிமறைத்த சந்தர்ப்பவாத இனவாதம் தான்.

 

பி.இரயாகரன்

05.01.2012