Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேற்கு ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இலங்கை அரசோ தேர்தல் "ஜனநாயக" வடிவங்கள் மூலமும், சட்ட வடிவங்கள் மூலமும், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி வருகின்றது. மக்களுக்கு எதிரான இந்த இரண்டு எதிர்ப்புரட்சிச் சக்திகளும், உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் தங்களை அணிதிரட்டி வருகின்றது. ஏகாதிபத்தியத்துக்குள்ளான சர்வதேச முரண்பாட்டுக்குள், இலங்கை மக்கள் ஒடுக்கப்படுவதும், பிளவுபடுத்தப்படுவதும் தீவிரமாகி இருக்கின்றது. இதற்குள் முரண்பாடுகள் கையாளப்படுவதும்;, மக்கள் ஒடுக்கப்படுவதும் நடந்தேறுகின்றது.

இலங்கையில் உலகமயமாக்கலை தீவிரமாகிக் கொள்ளும் மேற்கு ஏகாதிபத்தியங்கள், இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் தரப்பை மட்டும் கவிழ்க்க முனைகின்றது. இதன் ஊடாக மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்களை, இலங்கையில் கட்டுப்படுத்த முனைகின்றது. பலவேறு நாடுகளில் மேற்கு ஏகாதிபத்தியம் ஆளும் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் தரப்பை மட்டும் எதிரியாக காட்டி நடத்தும் அரசியலைத் தான், இலங்கையிலும் முன்தள்ளுகின்றது. ஆளும் வர்க்கத்தையும், உலகமயமாக்கலையும் பாதுகாக்கின்ற அதேநேரம், ஆளும் வர்க்கத்துக்கு தலைமை தாங்குபவர்களை எதிராக நிறுத்தி அதை "புரட்சிகரமான" அரசியல் செயற்பாடாக்க முனைகின்றது. இப்படி ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சி அரசியல் இலங்கையில் முன்தள்ளப்படுகின்றது.

இந்த வகையில் ஐ.நா முதல் சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் வரை, இலங்கை அரசுக்கு எதிராக திட்டமிட்ட செயற்பாடுகளை தீவிரமாக்கி இருக்கின்றது. மேற்கு ஏகாதிபத்தியங்களின் சர்வதேச நலன்கள் சார்ந்து இவை வெளிப்படுகின்றது. 1980களில் இந்திய நலன்கள், எப்படி மக்கள் விரோத ஆயுதப் போராட்டமாகவும், யுத்தமாகவும் மாறியதோ, அதே போன்றதுதான் இதுவும்;. எதிர்ப்புரட்சி அரசியல் அடிப்படையைக் கொண்ட மக்கள் விரோத சக்திகள், மீண்டும் "புரட்சிகர" கூறாக முன்னிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்று இதுவே அரசியல் முன்முயற்றி கொண்ட ஒன்றாக மாறிவருகின்றது. நீண்டகால நோக்கில் அரசுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதைக் காட்டிலும், இந்த எதிர்ப்புரட்சி கூறுகள் சார்ந்து அரசை கவிழ்ப்பது கவர்ச்சிகரமானதாக, நடைமுறைச் சாத்தியமானதாக கருதும் ஏகாதிபத்திய அரசியல் முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றது. இந்த வகையில் இலங்கை அரசு புரிந்த முந்தைய போர்க்குற்றங்கள் முதல் இன்றைய ஜனநாயக விரோதக் கூறுகளை முன்னிறுத்தி, தொடர்ச்சியாக அரசை ஏகாதிபத்தியங்கள் அம்பலப்படுத்துகின்றது. இதன் மூலம் இலங்கை அரசுக்கு எதிரான உலக பொதுக் கருத்தை உருவாக்கும் வண்ணம், பிரச்சாரத்தையும் அழுத்தத்தையும் உருவாக்குகின்றது. நீண்டகால நோக்கில் இலங்கை ஆளும் தரப்பை தனிமைப்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட வகையில் செயல்படுகின்றது.

இலங்கை அரசு இதை "தேசியத்துக்கு" எதிரானதாகவும், "புலிப் பயங்கரவாதத்துக்கு" சார்பானதாகவும், தனது "நட்பு" நாடுகளுக்கு எதிரானதாகவும் காட்டியபடி பாசிசமயமாக்கலை தீவிரமாக்குகின்றது. இந்த வகையில் தனது இனவாத தேசியவாதத்தை இலங்கை "தேசியமாக" காட்டிவிடுகின்றது. தனது ஏகாதிபத்திய எதிர் முகாமைச் சார்ந்து நிற்பதை, "ஏகாதிபத்திய எதிர்ப்பாக" காட்டிவிடுகின்றது. தனது அரச பயங்கரவாதத்தை "புலிப் பயங்கரவாதத்துக்கு" எதிரான ஒன்றாக காட்டிவிடுகின்றது. அரசு இப்படி இனம் மதம் சார்ந்து மக்களை தன் பின் அணிதிரட்டுகின்றது.

இப்படி இரண்டு மக்கள் விரோத அரசியல் முகாங்கள் ஒன்றையொன்று மூடிமறைத்து, தீவிர அரசியல் தளத்தில் இயங்குகின்றது. பொதுவாக, பெரும்பான்மையான அரசியல் செயல்பாடுகள் இதில் ஒன்றைச் சார்ந்தோ அல்லது அங்குமிங்குமாகவோ நின்று இதற்குள் இயங்குகின்றது.

இலங்கை பொது அரசியல், இந்த முரண்பாட்டுக்குள் இயங்குகின்றது. இவ்விரண்டையும் முறியடிக்கும் ஒருங்கிணைந்த போராட்டம் தான், மக்கள் சார்ந்ததாக இருக்க முடியும்;. அரசை எதிர்ப்பது பிரதான கூறாக இருக்கும் போது, அரசு தன்னை பாதுகாக்க முன்னிறுத்தும் கூறுகளை தனிமைப்படுத்திப் போராட வேண்டும்;.

இந்த வகையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதலாளித்துவ தேசியத்தை அரசு மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முன்னிறுத்த வேண்டும். அரசு மற்றும் புலிப் "இனத் தேசிய" வாதத்தையும், அதன் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும்;. ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாத அரச எதிர்ப்பு என்பது, ஏகாதிபத்திய சார்பாக இருப்பதை இனம் கண்டு, அதைத் தனிமைப்படுத்த வேண்டும்.

இந்த வகையில் தமிழ் இனத் 'தேசியவாதிகள்' தங்கள் விடுதலைக்கான பாதையாக, ஏகாதிபத்திய செயல்பாட்டை காட்டுவதுடன், அதை தங்கள் அரசியல் முன்னெடுப்புகளாக முன்தள்ளுகின்றனர். ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்வைத்து செயற்படுவதன் மூலம், இலங்கை அரசை தோற்கடிக்க முடியும் என்ற கருத்தை பிரச்சாரம் செய்கின்றனர். ஏகாதிபத்தியங்கள் தமிழ் இனவாதம் சார்ந்து, இலங்கைக்குள் தனக்கான அரசியல் செயல்தளத்தை உருவாக்குகின்றது. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து அரசை தோற்கடிப்பதை மறுக்கும் இந்த இனம் சார்ந்த "இனவாத தேசியம்", ஏகாதிபத்தியத்தை சார்ந்து தான் செயல்படுகின்றது. மார்க்சியத்தால் பூசி மெழுகினாலும், இனத் தேசியத்தை கைவிடாத வரை அது ஏகாதிபத்தியம் சாந்ததுதான். இனத் தேசியத்தை வைத்திருக்கும் வரை, சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் சேரமுடியாது. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணையாத வரை, மக்களைச் சார்ந்து நிற்கவும் முடியாது, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக செயற்படவும் முடியாது.

தமிழ் குறுந்தேசிய வாதம் போல், சிங்கள பேரினவாத தேசியம் கூட, இனத் "தேசியத்தை" முன்னிறுத்துகின்றது. தமிழ் குறுந் தேசிய வாதம் சிங்களப் பெருந்தேசியத்தையும், சில தரப்பு மேலதிகமாக ஏகாதிபத்தியத்தையும் தங்கள் எதிரியாக காட்டுவது போல், சிங்கள பேரினவாத தேசியம் கூட குறுந்தேசியத்தையும் (புலிக்கும்), சில தரப்புக்கள் மேலதிகமாக ஏகாதிபத்தியத்தையும் தங்கள் எதிரியாக காட்டுகின்றனர். இப்படி இனத் தேசியத்தை சார்ந்து, அதையே "தேசியமாக" காட்டுகின்றனர். இவ்விரண்டும் சர்வதேச ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் எதிர்முகாம் சார்ந்த, இனவாதத்தை சார்ந்த மக்கள் விரோத அரசியல் கூறாகும்;. இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து, அணிதிரட்டாத இனவாதமாகும்.

குறுந்தேசியமும், பேரினவாதமும் "தேசியம்" என்ற குறுகிய பிரச்சாரத்தைக் கொண்டு தான், தனது பாசிசமாக்கலை அரசியலாக்குகின்றது. இனக் குறுந்தேசியத்தின் ஒவ்வொரு செயலும், இலங்கை பேரினவாத தேசியத்தை பாதுகாக்கும் அரசியல் நடத்தையாகின்றது. அரச எதிர்ப்பு அரசியல், இப்படி அரச சார்பான பாசிசமாக்கலாகவே மாறுகின்றது.

மேற்கு ஏகாதிபத்தியத்துடனான இலங்கை அரசின் முரண்பாடுகள், இனவாதத்தை முன்னிறுத்திக்கொண்டு முன்நகர்த்துகின்றது. இந்த நிலையில் இலங்கையின் எதிர்க்கட்சிகள் செயலற்று போவதற்கான காரணம், இலங்கை அரசின் பேரினவாதத்தை முழுமையாக மறுக்காது அதை சார்ந்து நிற்பது தான். இனப்பிரச்னைக்கு சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் இனவாத எல்லைக்குள் நின்று அரசை அணுகுகின்றது. இதனால் அரசுக்கு எதிரான ஏகாதிபத்திய அரசியல், எதிர்கட்சிகளைக் கூட செயலற்றதாக்குகின்றது. அரச பாசிசமாக்கல் என்பது இனவாதத்தை அடிப்படையாக கொண்டு கட்டப்படுவதால், எதிர்க்கட்சிகள் அதை முழுமையாக எதிர்கொள்ள முடியாது, அரசியல் ரீதியாக திராணியற்றதாகி விடுகின்றது. ஏகாதிபத்திய சார்பு அரசியல் கூறுகளும், தன்னார்வ நிறுவனங்களும், அரசுக்கு எதிரான சக்திகளாக முனைப்புப் பெறுகின்றன. இலங்கையின் எதிர்க்கட்சிகள் மேற்கு ஏகாதிபத்திய நலனை ஆதரித்த போதும், ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசை தனிமைப்படுத்தும் இன குற்றங்களைச் சார்ந்து எதிர்க்கட்சிகள் இயங்கவில்லை. அரசியல் ரீதியாக அங்குமிங்கும் நிற்பதன் மூலம், அவை அரசியல் ரீதியாக செயலற்று போகின்றனர்.

ஏகாதிபத்தியம் சார்பான புதிய அரசியல் கூறுகள் "புரட்சிகர" கூறுகளாக தம்மை காட்டிக்கொண்டு, எதிர்ப்புரட்சிகர சக்திகளாக முன்னுக்கு வருகின்றது. இது அரசுக்கு எதிரான மேற்கு ஏகாதிபத்திய போக்குடன் தன்னை மூடிமறைத்துக் கொண்டு தன்னை "புரட்சிகர" கூறாகக் காட்ட முனைகின்றது. இலங்கைப் புரட்சிகர வர்க்க சக்திகள் இந்த அரசியல் சூழலை புரிந்து கொள்வதன் மூலம்தான், இதை எதிர்கொண்டு போராட முடியும்.

பி.இரயாகரன்

28.11.2012