60 வருடத்துக்கு மேலாக தொடரும் இனவொடுக்குமுறைக்கு எதிராக, பாரளுமன்றம் - யுத்தம் - பாரளுமன்றம் என்று எல்லைக்குள் வாழ்ந்து இருகின்றோம், வாழ்ந்துகொண்டு இருகின்றோம். இந்த எல்லைக்குள்அரசுடன் பேச்சு வார்த்தைகளை, ஒப்பந்தங்களைசெய்திருகின்றோம், செய்ய முனைகின்றோம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்க்கப்படமல், இனவொடுக்குமுறை தொடருகின்றது.
எம்மைச் சுற்றிய இந்த சூழலின் தான் பின் நாம் இயந்திரதனத்துடன் வாழ்ந்து இருக்கின்றோம், வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். பாரளுமன்றம் - யுத்தம் - பாரளுமன்றம் என்று எல்லைக்குள் நடக்கும் அரசியல் தீர்வுக்கு வழிகாட்டும்என்று நம்பி, நாம் அழிந்து இருகின்றோம், அழிந்து கொண்டு இருகின்றோம்.
இந்த வழிமுறைகளின் பின் பார்வையாளராக இருந்தபடி, இதற்கு பங்களியாக இருக்க முனைந்துஇருகின்றோம், இருக்க முனைகின்றோம். இதைவிட்டால்வேறு வழியில்லை என்ற எண்ணுமளவுக்கு அவநம்பிகைகள். விரக்திகள், நம்பிகையீனங்களும்; தொடருகின்ற நிலையில், ஒடுக்குமுறைக்கு இயைந்து இணங்கிப் போவது கூட வாழ்வாகிவிட்டது. அதேவேளை, இதை விட்டால் வேறு வழியில்லையா? என்று அங்கலாய்கின்றோம். ஏன் இந்த நிலை என்று நாம், நம்மைபப் பார்த்து இன்று எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகும்.
பாராளுமன்றம் - யுத்தம் சார்ந்து அரசுடனான பேச்சு வார்த்தைகள் கடந்தகால தோற்றுப்போன பின், நிகழ்காலத்தில் அதையே நம்பி, அதற்கு தொடர்ந்து துணையாக இருக்க முனைவது ஏன்?
இதற்கு பதில் வேறு பாதையை நாம் தெரிந்து வேண்டுமென்பது இன்று எம் முன்னுள்ள ஒரே தெரிவாகும். மக்களாகிய நாங்கள் முதலில் எங்களை நம்பியும், நமது சக இன மக்களான முஸ்லீம், மலையகமக்களையும், குறிப்பாக சிங்கள மக்களை நம்பியும் செயல்படவேண்டும். இதுவரை காலம் நாங்கள் போராடவில்லை, மற்றவர்களுக்கு துணையாக இருந்தோம். சிங்கள் மக்களுடன் சேர்ந்து இந்த பிரச்சனை தீர்க்க முனையவில்லை, அரசுடன் பேசுவதன் மூலம் தீர்க்க முடியும் என்று நம்பினோம். இதற்கு துணையாக இருந்தோம்.
இந்த வகையில் நமது கடந்தகால பாதையையும், நமது அரசியல் நிலையும் சரியாக இருந்ததா என்பதில் இருந்து, இதற்கு நாம் விடை கண்டாக வேண்டும்.
1.இனவொடுக்கு முறையை அனுபவிக்கும் நாமே, இனவொடுக்கு முறைக்கு எதிராக செயற்படாமல், நாங்களும் இனவாதியாக மாறியது சரியா? ஏன் நாங்களும் ஒடுக்கு முறையாளர்களைப் போன்று இனவாதியாக மாறினோம்? இப்படி எதிர் இனவாதம் சார்ந்து நின்ற நாம், சரியாகத்தான் போராட முடியுமா? எந்த குறுகிய கண்ணோட்டம் இனவொடுக்குமுறையாக வந்ததோ, அந்த குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டு நாம் எப்படி சரியாக போராட முடியும்?
2.இனவொடுக்கு முறையை இலங்கையில் இனவாத அரசு தானே செய்தது. அப்படியிருக்க எதற்காக சாதாரண உழைக்கும் சிங்கள மக்களை எமது எதிரியாக்கினோம்? ஏன் நாங்கள் இனவாதிகள் ஆனோம்!? நாம் இனவாதிகளா?
3.மக்களாகிய நமது கருத்துகளுடன் நமது தலைமையில் நமது விடுதலைக்காகபோராட முடிந்ததா? முடியவில்லை என்றால் ஏன்? எது நம்மைத் தடுக்கின்றது? எது நம்மைத் தடுத்தது?
4.தமிழ் மக்களின் இன ஓற்றுமை பேசிய நாம், அனைத்து மக்கள் மீதும் ஒடுக்குமுறையைக் கையாளும் அரசுக்கு எதிரான அனைவருடனான ஒற்றுமை பேசத் தவறியது ஏன்? குறிப்பாக அரசுக்கு எதிரான சிங்கள ஓடுக்கப்பட்ட மக்களுடனான ஒற்றுமையைப் பற்றி பேசத் தவறியது ஏன்? அரசுக்கு எதிரான அனைவருடனான ஒற்றுமை தவறானதா? இதை எதிர்த்து, நமது இனத்துக்குள் மட்டும் இனவொற்றுமை பேசும்; இனவாதிகளாக இருந்து இருக்கின்றோமே ஏன்? இங்கு சிங்கள மக்கள் சரியாக இருந்தார்களா இல்லையா என்பதல்ல, நாங்கள் சரியாக இருந்தோமா என்பதே நம்மை நாமே கேட்க வேண்டிய முதற் கேள்வி ?
இப்படி கேள்விகள் பல நம் முன் உள்ளது. இவற்றிற்கு விடைகாண்பதன் மூலமே, இனவொடுக்குமுறைக்கு எதிராக, நாம் சரியாக போராடவில்லை என்பதையும் நாம் ஏன் தோற்கடிக்கப்பட்டோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இப்படி இந்த உண்மைகளை இன்று நாம் புரிந்துகொண்டு செயற்படுவதன் மூலம் மட்டுமே, இனவொடுக்கு முறைக்கு எதிராக சரியாகப் போராடமுடியும்.
இனவொக்குமுறை செய்யும் அரசுக்கு எதிராக போராடுவது என்பது, தனித்து நிற்பதல்ல. மாறாக அரசின் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் அனைத்து மக்களுடன் கூட்டுச் சேர்ந்து போராட வேண்டும். குறிப்பாக அரசுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராட வேண்டும். எப்படி தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றனரோ, அது போல் சிங்கள மக்களையும் இலங்கை அரசு ஒடுக்கின்றது. நாம் ஏன் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை எதிர்க்க வேண்டும்? நாங்கள் இனவாதிகளாக இருக்கும் எங்கள் குறுகிய அனுமுறைதான், எங்களின் நண்பர்களைக் கூட தொடர்ந்து எதிரியாகியது, எதிரியாக்கின்றது.
எங்கள் நியாயமான கோரிக்கைளை, எங்கள் மேலான ஓடுக்குமுறைகளை நாங்கள் சிங்கள மக்களிடம் எடுத்துச் சென்றோமா? அவர்களின் மேலான அரசின் ஓடுக்குமுறைகளுக்கு எதிராக நாம் போராடினோமா? இல்லை!!!. அவர்கள் எமக்காக போராடவில்லை என்பது போல், நாங்களும் அவர்களுகாக போராடவில்லை! இதுதான் உண்மை! நாங்களும் தவறுகள் இழைத்துள்ளோம். அது போல் அவர்களும் தவறுகள் இழைத்துள்ளார்கள். எங்கள் அரசியல் கோட்பாடுகளும், அரசியல் பாதைகளும் தவறாக இருந்து இருக்கின்றது. இதனால் தான் நாம் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகின்றோம். இதை நாம் கேள்விக்குள்ளாக்கிக் கொள்வதன் மூலம், இனவொடுக்குமுறைக்கு எதிராக அரசுக்கு எதிரான அனைத்து மக்களுடனும் இணைந்து கொண்டு புதிய வடிவில் போராடமுடியும்.
பி.இரயாகரன்
28.11.2012