Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"அரசியல் பொருளாதாரத் துறையில் சுதந்திர விஞ்ஞான ஆராய்ச்சி சந்திப்பது, மற்றெல்லாத் துறைகளிலும் சந்திக்கிற எதிரிகளை மட்டுமன்று. அது ஆராய்கிற பொருளின் விசேடத் தன்மையானது மானுட நெஞ்சத்தின் உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனி நலனின் ஆவேசங்களை யுத்தகளத்துக்குள் எதிரிகளாக வரவழைக்கிறது." என்று மிக அழகாகவே மார்க்ஸ் தனது மூலதன முன்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆம் நாம் இன்று சந்திப்பது இதுதான்.

நாங்கள் தனிநபர் செயற்பாட்டை கடந்து அமைப்பாகியதும், வெறும் விவாதங்கள் கடந்து நடைமுறையுடன் கூடிய செயற்பாட்டுக்கு வந்தடைந்து இருப்பதும், இனவாதத்தை பொது அரசியல் உணர்வாக கொண்ட சமூக அமைப்பை எதிர்க்கும் ஒரு அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் நிலைக்கு நாம் வந்திருப்பதும், எமக்கு எதிரான எதிரிகளை வரவழைக்கிறது. "உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனிநலனின் ஆவேசங்களை" எம்மீது காறி உமிழ வைக்கின்றது. வரலாற்றைத் திரிக்கின்றனர். தனிநபர்களை பற்றி இட்டுக்கட்டி அவதூறு பொழிகின்றனர்.

இவர்கள் யார்?, இவர்கள் நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாவோ கூறியது போல், "….வழக்கமான பாதைகளை மட்டும் பின்பற்றத் தெரிந்தவர்களுக்கு உற்சாகத்தைக் காணமுடியாது. அவர்கள் பார்வையற்றவர்கள். ஏதாவது புதிதாகத் தோன்றட்டும் …. அவர்கள் உடனே அதை எதிர்க்கக் கிளம்பி விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மக்களிடையே நடந்து செல்லட்டும், அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்ளட்டும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணட்டும் .. அப்படிப்பட்டவரது நோயை அப்படித்தான் குணமாக்கமுடியும் …" என்றார். இதை அவர் தன் சொந்த அமைப்புக்குள் கூறிய போதும், மாற்றத்தை நோக்கிய தேடல் உள்ள எமது சமூகத்தில் இதை பொருத்தி காணவும், ஆராயவும் முடியும். இன்று உண்மையான நேர்மையான தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட அனைவருக்கும் முன்னுள்ள, ஒரேயொரு சரியான தெளிவான பாதை இதுமட்டும்தான்.

இப்படியிருக்க நாம் தனிநபர் மற்றும் விவாதம் கடந்து, செயலுக்குரிய ஒரு மாற்றத்தை நோக்கிய எமது அரசியல் முன்முயற்சியை, அமைப்பின் செயல் அல்ல "தனிநபர்களின்" செயல்கள், "கும்பலின்" செயல்கள் என்று முத்திரை குத்திக் காட்டுவதன் மூலம், தனிநபர் அவதூறுகள் மூலமும் ஒதுக்க முனைகின்றனர். இதனால் அமைப்பையும், இதில் உள்ள தனிநபர்களையும் இட்டுக்கட்டிய அவதூறுகள் மூலம், உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டுகின்றனர். இதன் மூலம் இந்தச் செயற்பாட்டை ஆரம்பத்தில் இருந்தே தடுத்து நிறுத்திவிட முனைகின்றனர்.

இந்த வகையில் மூடிமறைத்த மார்க்சிய சொல்லாடல் கொண்ட அரசியல் விவாதங்கள் மூலம், எமது அரசியல் செயல்பாட்டை மறுக்க முடியாத போது, தனிநபர் அவதூறுகளையும், காட்டிக்கொடுப்புகளையும் செய்ய முனைகின்றனர். இதன் மற்றொரு அரசியல் பரிணாமம் தான், தனிநபர் அழித்தொழிப்பு அரசியலாகும். இந்த அரசியல் என்பது தீவிர இடது வேசம் கொண்ட வலதுசாரியமாகும். இடதுசாரியம் பேசியபடி வலதுசாரிய தேசிய அரசியலுக்குள் நின்று இது தன்னை முன்னிறுத்துகின்றது.

இடதுசாரிய அரசியலையும் நடைமுறையையும் கோட்பாட்டுரீதியாக எதிர்கொள்ள திராணியற்று இருக்கும் போது அது, இட்டுக்கட்டிய தனிநபர் தாக்குதலையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டையும் முன்தள்ளுகின்றது.

இதன் ஒரு அரசியல் பண்புதான், அமைப்பின் உள் மாநாட்டில் யார் வந்தனர், என்ன பேசினர் என்ற புலனாய்வு செய்வாகும். அத் தகவல்களை அரசியலாக்குவதுடன், அங்கு நடந்ததாக கூறி இட்டுக்கட்டிய அவதூறுகளை கொண்டு, தங்கள் இழிவான அரசியலை கட்டமைக்கின்றனர். எதிரியின் புலனாய்வு முறை எதைச் செய்கின்றதோ, அதை தங்கள் அரசியலாக்கிக் கொண்டு இழிவான குரோதமான காட்டிக் கொடுக்கும் அரசியலை செய்கின்றனர். இதைத் தான் எமக்கு எதிரான அரசியல் போக்காக்கி, அவ்வாறு செய்வதன் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். வரலாற்றுச் சூழல் சார்ந்த கடந்தகால தனிநபர் அரசியல், அது சார்ந்து தனிநபர்களை முன்னிறுத்துகின்ற கடந்தகால செயற்பாட்டை, எமக்கு எதிராக முன்னிறுத்தி அதை தொடர்ந்து நிலைநிறுத்த முனைகின்றனர்.

தனிநபர்கள் அமைப்பாகும் போது அதைக் கண்டு அஞ்சுபவர்கள் தான், அமைப்பு வடிவத்தை அழித்தொழிக்க முனைகின்றனர். தனிநபர்களை பற்றி இட்டுக்கட்டி அவதூறு செய்வது முதல் அவர்களை அழித்தொழிப்பது வரையான இந்த அரசியல் என்பது வலதுசாரியம் தான். இந்த வகையில் இடதினை அடிப்படையாகக் கொண்ட வலதும், வலதுசாரியமும் ஒரே அரசியல் அடித்தளத்தைக் கொண்டது. இது அமைப்பாவதை மறுப்பதும், அதை இழிவுபடுத்துவதும், அதை தனிநபர் கட்சியாக சித்தரிப்பதும், பின் தனிநபரை தூற்றுவதன் மூலம், அமைப்பு வடிவத்தையே சிதைக்க முனைகின்றனர். இதன் மூலம் தனிநபர்களை மையப்படுத்தி, மக்களை மந்தைகளாக தொடர்ந்தும் வைத்திருக்க முனைகின்றனர்.

இதன் மூலம் தங்கள் சுய வளர்ச்சியை மகிழ்ந்து அனுபவிக்கின்ற இவர்கள், வர்க்கப் போராட்டத்தை மகிழ்ந்து அனுபவிப்பதை மறுப்பவர்களாக இருக்கின்றனர். மக்களை அரசியல்ரீதியாக விழிப்பூட்டுவதை மறுதளிக்கும் இவர்கள், அந்தச் செயல் தொடங்க முன்னேயே அதன் மீது காறி உமிழ்கின்றனர். மக்கள் அரசியல்ரீதியாக விழிப்புறுவது தங்கள் சுய தம்பட்டங்களுக்கு தடையாக இருப்பதைக் காண்கின்றனர். "மக்கள் முட்டாள்களாக இருப்பது கொடுங்கோலர்களுக்குத்தான் பயனளிக்கும், அவர்கள் புத்திசாலிகளாக இருப்பது தான் நமக்குப் பயனளிப்பதாக இருக்கும்." என்ற மாவோவின் சரியான அரசியல் கூற்றைக் கண்டு அஞ்சுகின்றனர். மக்களை தங்கள் சொந்த இனவாதத்தில் இருந்து விடுவித்து புத்திசாலியாக்க முனையும் அமைப்புச் செயற்பாட்டு முன்முயற்சியைக் கண்டு அஞ்சுகின்றனர். தமிழ் தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட இனவாதத்தை சார்ந்து இயங்கும் இடது வலதுகள், மிக இழிவான குரோதமான உணர்ச்சிகளை அமைப்பின் மீது வெளிப்படுத்துகின்றனர்.

இப்படி தங்கள் வலதுசாரிய இருப்புக்கு எதிரான மாற்றங்கள் உருவாவது கண்டு அஞ்சுகின்றனர். அமைப்பாக, செயலுக்கான எமது மாற்றம் என்பது, பல இருப்புகளை அச்சுறுத்துகின்றது. மாற்றங்கள் பற்றி மார்க்ஸ் ”இயற்கையை மாற்றியமைத்த போதே நீயும் மாற்றியமைக்கப்பட்டாய். இயற்கையுடனான உனது உறவு மாறியபோது சக மனிதனுடனான உனது உறவும் மாறியதே. உன் உடலின் மீதே உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்டபோது நீ அடிமை. நிலத்திலிருந்து அந்நியப்பட்டபோது பண்ணையடிமை. இப்போது உன் உழைப்பிலிருந்தே அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறாய், நீ பாட்டாளி” என்றார்.

இன்று தனிநபரில் இருந்து அமைப்பாகும் எமது மாற்றம் முதல் இனவாத உணர்வுகளில் இருந்து இனவாதமல்லாத உணர்வுக்கு மக்களை மாற்றி அமைக்க முனையும் எமது செயற்பாடு பற்றிய எமது மாற்றம் கண்டு, வெளிப்படுத்தும் குரோத உணர்வு மாற்றம் நிகழும் போது அது எம்மீதான வன்முறையாகவே வெளிப்படும். அதற்கான ஆட்காட்டி வேலையையும், புலானய்வு வேலையை தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில் எம் முன் இருப்பது என்ன? மார்க்ஸ் மூலதன முன்னுரையில் கூறியது போல் "விஞ்ஞானத்துக்கு ராஜபாட்டை எதுவுமில்லை. அது களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகின்ற வாய்ப்புண்டு" என்றார். இந்த வகையில் நாம் இன்று பயணிக்கும் பாதை, சில பத்து வருடங்களில் பின்பாக மாறி வரும் புறநிலையான புதிய வரலாற்று சூழலில் மிகத் தெளிவாக ஒளிரத் தொடங்கியுள்ளது.

இந்த இடத்தில் மார்க்ஸ் தன் மூலதன முன்னுரையில் எடுத்துக் காட்டிய ஒரு பகுதியை மீள இங்கு முன்வைப்பது பொருத்தமானது.

"மார்க்சுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது யாதென்றால், தாம் ஆராய முற்பட்டுள்ள புலப்பாடுகளின் விதியைக் கண்டுபிடிப்பதே. குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குள் திட்டமான வடிவத்தையும் பரஸ்பரத் தொடர்பையும் கொண்டுள்ள இப்புலப்பாடுகளை ஆளுகிற விதி மட்டுமன்று அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவை திரிந்து மாறுபடுவது பற்றிய, வளர்;ச்சியடைவது பற்றிய, அதாவது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு, தொடர்புகளின் ஒரு வரிசையிலிருந்து வேறொரு வரிசைக்கு மாறிச் செல்வது பற்றிய விதி அவருக்கு இன்னுமதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விதியைக் கண்டுபிடித்தவுடனேயே, அதனை சமூக வாழ்வில் வெளிக்காட்டுகிற விளைவுகளை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார். ஆதலால் மார்க்ஸ் ஒன்றைப் பற்றி மட்டுமே கவலை கொள்கின்றார். சமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டிய அவசியத்தை விடாக்கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும், அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக அவருக்குப் பயன்படுகிற உண்மைகளை முடிந்த வரை பாரபட்சமின்றி நிலைநாட்டுவதைப் பற்றியும் கவலை கொள்கிறார். இன்றுள்ள அமைப்பின் அவசியம், இவ்வமைப்பு தவிர்க்க முடியாமலே மறைந்து அதனிடத்துக்கு வர வேண்டிய இன்னொரு அமைப்பின் அவசியம் ஆகிய இரு அவசியங்களையும், மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உணர்ந்திருந்தாலும் உணராதிருந்தாலும் இப்படித்தான் நிகழுமென்பதையும் அவர் ஒருங்கே நிரூபித்து விட்டாலே இதற்;குப் போதுமானது. மார்க்ஸ் சமுதாயத்தின் இயக்கத்தை இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார்........... நாகரிகத்தின் வரலாற்றில் உணர்வு அமிசம் இவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கிறதென்றால், நாகரிகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு விமர்சன ஆராய்ச்சி உணர்வின் எந்த வடிவத்தையும் அல்லது எந்தப் பயனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பது கூறாமல் விளங்கும். இப்படிச் சொல்வதன் பொருள் அதன் தொடக்க ஆதாரமாகப் பயன்படக் கூடியது கருத்தன்று. பொருளாதாயப் புலப்பாடே என்பதாகும். இப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒரு நிகழ்வை கருத்துகளோடு அல்லாமல், இன்னொரு நிகழ்வோடு மோத விட்டும், ஒப்பிட்டும் பார்ப்பதுடன் நின்று கொள்ளும். முடிந்தவரை சரிநுட்பமாக இரு நிகழ்வுகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தினால் உண்மையிலேயே ஒரு பரிணாமத்தின் வெவ்வேறு அமிசங்களாக அவை அமைவதும் இவ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆனால் அனைத்திலும் மிக முக்கியமானது இப்படியொரு பரிணாமத்தின் வெவ்வேறு கட்டங்கள் வெளிப்படுகிற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் தொடரை, வரிசைக் கிரமங்கள் மற்றும் சங்கிலித் தொடர்களை விடாக்கண்டிப்புடன் பகுத்தாய்வதாகும்"

இன்று புதிதாக வர வேண்டிய இன்னொரு அமைப்பின் அவசியம் பற்றி மட்டுமல்ல, புறநிலையுடன் கூடிய எங்கள் மாற்றங்கள் பற்றிய இயங்கியல் ரீதியான பார்வை ஊடாக அனைத்தையும் புரிந்து கொள்வது அவசியமானது. "ஊக்கமூட்டும் சூழலுடன் தம்மைத் தக்கவைத்துக்கொள்ள தம்மை ஆழ ஈடுபடுத்திக் கொள்ளாதுதான் நமது மிக மோசமான தோல்வியாகும்" என்று மாவோ தனது சொந்த அமைப்பு பற்றிய விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு, எம்மை நாம் ஊக்கமூட்டும் வண்ணம் எம் மீதான அவதூறின் நோக்கத்தை அரசியல்ரீதியாக அறிந்து கொண்டு, எம்மை நாம் அமைப்பாக்கிக் கொண்டு போராட வேண்டும்.

பி.இரயாகரன்

12.11.2012