Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த உண்மையை அனைவரும் மூடிமறைக்கவே விரும்புகின்றனர். வடக்கு – கிழக்கில் பெண்கள் உடலை விற்கின்றனர், விற்பது அதிகரித்து வருகின்றது. அவள் ஏன் உடலை விற்கின்றாள்? இதை இந்த சமூகம் ஆராய மறுக்கின்றது. தனது குற்றமாக இதை உணர மறுக்கின்றது. "நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!"  என்ற பேட்டியை ஒரு கற்பனை கதை என்று சொல்பவர்களும், இது ஒரு வியாபாரக் கதை என்ற சொல்பவர்களும் (ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்)  வடக்கு கிழக்கில் பெண் ஏன் உடலை விற்கின்றாள் என்பதற்கு பதில் சொல்லவேண்டும். ஒரு உண்மையை வியாபாரமாக்குபவர்கள், அரசியல்ரீதியாக இழிவுபடுத்துபவர்களைக் கொண்டு, இந்த எதார்த்தத்தை யாரும் புதைத்து விடமுடியாது. இதுவொரு கற்பனை என்றால் கூட, உண்மையான எதார்த்தத்தில் இருந்து தான் புனையப்பட்டது. கற்பனையாளனின் நோக்கத்தை மறுப்பதன் பெயரால், உண்மைகளை புதைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. முரண்பாடான எதிர்முனை அரசியல் தளத்தில் இருப்பவர்கள், தங்கள் குறுகிய அரசியலில் இருந்து இதை மறுக்கின்றனர். உண்மையை வியாபாரமாக விளக்கி, இதை புதைக்க முனைகின்றனர். இதுவொரு சமூகத்தின் பொது அவலம். ஒடுங்கிச் சிதைந்து போகும் பல நூறு பெண்களின், உண்மையான சொந்தக் கதை.

உடலை விற்று வாழவேண்டும் என்று எந்தப் பெண்ணும் பிறப்பதில்லை. இந்த நிலையில் தமிழ்தேசியமாக குறுக்கிக் கொண்ட போராட்டம், உடலை விற்று வாழும் பெண்களையும் உருவாக்கி இருக்கின்றது. தவறான போராட்டத்தில் கிடைத்த அறுவடைகளில் இதுவும் ஒன்று. இதை நிவர்த்தி செய்ய தமிழ்தேசியத்திடம், மாற்று எதுவும் கிடையாது. மறுதளத்தில் இதை வைத்து மாமா வேலை செய்பவனும், வியாபாரம் செய்பவனும், அரசியல் செய்பவனும், பிரமுகர்தனம் செய்பவனும் …. என எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இதே போன்றது தான், இந்த உண்மையை மறுத்து நிற்பதும். இந்த உண்மையை மறுப்பதன் மூலம் இலாபம் அடைபவர்களுக்கே உதவுகின்றனர்.

சமூகரீதியாக இதை புரிந்து கொள்ளாத இந்த ஆணாதிக்க சுரண்டல் அமைப்பில், வாழவழியற்ற பெண்கள் தங்கள் உடலை விற்று வாழ்வது தான் இலகுவானதாகி விடுகின்றது. மறுபக்கத்தில் அவர்களைப் பொறுத்த வரையில் இது கவுரமானது கூட. அவள் தன் சொந்தக் காலில் நிற்க முனைகின்றாள். தினம் தினம் மற்றவனின் காமப் பார்வைக்குள், சிதைந்தும் சார்ந்தும் வாழ்வதை விட, தன் உடலை விற்று வாழ முனைகின்றாள்.

இப்படி உண்மையிருக்க "நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற பேட்டியை கற்பனைக் கதை என்றும், போராட்டத்தை சிதைக்க முனைவதாக தமிழ்தேசியவாதிகள் (முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!)  கூறுகின்றனர். மறுதளத்தில் தமிழ்தேசியத்தை உசுப்பேற்ற புனைந்த கற்பனைக் கதையாக புலியெதிர்ப்பு வாதிகள் (முன்னாள் போராளி இன்னாள் பாலியல் தொழிலாளி ஆனந்த விகடன் கிண்டிய அல்வா!)  என கூறுகின்றனர். இதற்கு வெளியில் தமிழ் ஒழுக்கம் கற்பு பற்றி சதா கண்காணித்து கருத்து வைக்கும் கலாச்சாரவாதிகளான யாழ் மேலாதிக்கவாதிகள் (முன்னாள் பெண் போராளியின் பேட்டி கவலை தருகின்றது!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்)  இந்த உண்மை தன்மை பற்றி கேள்வி எழுப்புகின்றனர். இப்படி பல உதாரணங்களைக் காணமுடியும்.

உண்மைகளை புதைத்துவிட ஆளுக்காள் முனைகின்றனர். உண்மை நிலை என்ன?

1.இன்று வடக்கு – கிழக்கில் பெண் உடலை விற்ற வாழும் நிலையில்லையா?

2.பெண் உடலை விற்பது அங்கு அதிகரித்துச் செல்லவில்லையா?

3.விதவைகளுக்கு இந்த சமூகம் வாழத்தான் வழிகாட்டுகின்றதா?

4.பெண்ணின் பாலியல் தேவைகளையும், உணர்வுகளையும் இந்த சமூகம் அங்கீகரித்து இருக்கின்றதா?

5.பெண்ணை அவளின் உடலூடாக அணுகுவது, வடக்கு – கிழக்கில் அதிகரிக்கவில்லையா?

6.சமூகத்தில் பாலியல் குற்றங்களும், சிறு வயது பாலியல் பிறழ்ச்சிகளும், பொது பாலியல் நுகர்வு நாட்டங்களும் அதிகரிக்கவில்லையா?

7.வடக்கு – கிழக்கில் அதிகரித்துவிட்ட பெண்கள் எண்ணிக்கையும், பாலியல் பிரச்சனைகளும், வரைமுறையற்ற பாலியல் நடத்தையை உருவாக்கவில்லையா?

8.சமூக கலாச்சார கட்டுக்கோப்பு கொண்ட சமூக அமைப்பாகவா சமூகம் உள்ளது அல்லது உதிரியான நுகர்வு சமூகமாக மாறியுள்ளதா?

9.அதிகமான போதைக்குள்ளும், வரைமுறையற்ற நுகர்வு கலச்சாரமும் கொண்ட சமூகத்தின், பாலியல் நடத்தையும் பாலியல் நுகர்வும் எந்த வடிவத்தில் வெளிப்படுகின்றது?

10.முன்னாள் புலிகளின் மறுவாழ்வுக்கு அரசும் சரி, தமிழ்தேசியவாதிகளும் சரி என்ன செய்தார்கள, செய்கின்றனர்?

11.முன்னாள் புலிகள் சமூகத்தில் இயல்பாக மற்றவர்கள் போல் வாழமுடிகின்றதா?

12.தனிமையாக வாழும் பெண்களை பாலியல் ரீதியாக அணுகுவதும், அந்த நோக்கில் நிர்ப்பந்திப்பதும், உதவுவதன் மூலமும் பெண்ணை உளவியல் ரீதியாக பாலியல் பண்டமாக்கப்படவில்லையா?

13.உடலை விற்கும் பெண்ணை நோக்கி தமிழ் ஆண்கள் செல்லவில்;லையா? (இதை இராணுவமாக குறுக்கிவிடுவது அபத்தம்)

இப்படி பற்பல கேள்விகள் உண்டு. தமிழ்தேசியவாதிகளும், புலியெதிர்ப்புவாதிகளும், கலாச்சாரவாதிகளும், திரிபுவாதிகளும்.. இதை கற்பனை என்றும் வியாபாரம் என்றும் கூறுவதன் மூலம், இந்த உண்மையான எதார்த்தத்தை மூடிமறைக்க முடியாது. அங்கு கணிசமான பெண்கள் உடலை விற்று வாழ்கின்ற மனித அவலத்தை மறுப்பதன் மூலம், அதே ஆணாதிக்க வக்கிரத்துடன் மீளவும் இவ்வாறு செய்கின்றனர். வாழவழியற்ற நிலையில் தனித்து வாழும் ஒரு பெண், இந்த நிலையில் என்ன தான் செய்ய முடியும்?

உதவும் தனி மனிதர்கள் முதல் தன்னார்வ நிறுவனங்களை கண்டறிந்து அணுகுவது என்பது இலகுவானதா? தங்கள் வாழ்வுக்கான அடிப்படைகளை பெற்றுத்தான் விடமுடியுமா? அவர்களால் இதைப் போன்ற இலட்சம் பெண்களின் பிரச்சனையை தீர்த்துவிடத்தான் முடியுமா? இப்படி உதிரியான உதவிகளைக் கூட மோசடி செய்வதும், ஒரு பகுதியை சுருட்டிக் கொள்ளும் பொதுப்; பின்புலத்தில், பெண்கள் இந்த ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் தன் உடலை விற்று வாழ்வது இலகுவானதாக, கவுரமானதாக தேர்ந்தெடுக்குமாறு நிற்பந்திக்கப்படுகின்றாள். குற்றவாளி அவள் அல்ல, இந்த சமூகம் தான். அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தது, இந்தச் சமூகம் தான்.

சமூக விழிப்புணர்வற்ற எந்த வழிமுறையும், இதற்குரிய தீர்வாகாது. இதை மூடிமறைப்பதன் மூலம், உதிரியாக உதவுவதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியாது. சமூகரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் மூலம், மக்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ள வைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியும்.

பி.இரயாகரன்

09.11.2012