சமவுரிமை இயக்கத்திற்கான செயற்திட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. இனவாதத்தை மக்கள் மத்தியில் இல்லாது ஒழித்தலும். இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதலுமாகும். இந்த வகையில் அனைவரையும் போராடுமாறும், போராட முன்வருமாறும் கோருகின்றோம். இதன் அர்த்தம் எம்முடன் இணையுமாறு கோரவில்லை. மாறாக இதை நீங்கள் சுயாதீனமாக முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.
நாங்கள் இலங்கை தளுவிய அளவில் ஒரு செயல்திட்டத்தைக் கொண்டு போராட உள்ளோம். இந்தவகையில் சமவுரிமைக்கான அமைப்பை இணைந்து உருவாக்குகின்றோம். இந்த அமைப்பின் நோக்கங்களே அவ்வமைப்பின் கட்டுப்பாடாகும். அப்பால், எந்த அமைப்புரீதியான கட்டுப்பாடுமற்றது. அமைப்பினது நோக்கம் சார்ந்த, உங்கள் சுயகட்டுப்பாட்டையும், இதற்கான உழைப்பையும் இதன் மீதான நேர்மையையும் உங்களிடம் சமவுரிமை இயக்கும் கோருகின்றது. மக்களை இனவாதத்துக்கு எதிராக விழிப்புற வைத்து இனவாதத்தை ஒழிக்கவும், இனவொடுக்குமுறையை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து சக்திகளும் இணைந்து, இதை முன்னெடுக்க முடியும். இதை முன்னின்று முன்னெடுக்கவும், இதில் பங்காற்ற முன்வருமாறும் கோருகின்றோம்.
இந்த நோக்கத்தில் இணையும் சக்திகளுக்கிடையிலான வேறுபட்ட முரண்பாடுகள், அரசியல் நோக்கங்கள் எதுவும் சமவுரிமை இயக்கத்தின் நோக்கங்களுக்கு தடையாக இருக்கக் கூடாது. இவ் முரண்பாடுகள் இங்கு பேசப்படவேண்டிய விடையம் அல்ல. சமவுரிமை இயக்கத்தின் நோக்கத்தை முன்னிறுத்திப் போராடுவதன் மூலம், இதன் பலத்தையும், இதன் ஓற்றுமையையும் பலப்படுத்தும் வண்ணம் எங்கள் செயல்கள் அமைய வேண்டும். மக்கள் மத்தியில் இனவாதத்துக்கு இடமில்லை என்ற உயரிய சமூக நோக்கத்துடன், தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக மக்களை இனமேலாதிக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைத்தல் எம்முன்னுள்ள அரசியல் பணியாகும். இதில் நாங்கள் முன்மாதியாக செயல்படுதல் அவசியம்.
பல்வேறு சக்திகளுக்கிடையில் இருக்கக்கூடிய முரண்பாடுகளையும், பரஸ்பரம் எமக்கு இடையில் உள்ள வித்தியாசமான பார்வைகளையும் கைவிடக் கோரவில்லை. மாறாக முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் உரிமையையும், அம்முரண்பாடுகளை சமவுரிமை இயக்கத்திற்கு வெளியில் விவாதிக்கும் உரிமையையும் எவரும் கொண்டிருக்கமுடியும். இம் முரண்பாடுகள் எவையும் சமவுரிமை இயக்கத்தின் அரசியல் நடைமுறை வேலைக்கு தடையாக இருக்கக் கூடாது. நாங்கள் இத்தளத்தைக் கடந்து வெளியில் செய்யும் எமது அரசியல் சார்ந்த விமர்சன முறையில் கூட, மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளோம்.
சமவுரிமை இயக்கத்தில் இணைய முன்வரும் போது அதற்கு வெளியிலான முரண்பாடுகளை பற்றி பரஸ்பரம் பேசுவதை விடுத்து, சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்புகளை முன்னிறுத்தி நிற்பது அவசியம். முரண்பாடுகளை பேச விரும்பினால், அம்முரண்பாடுகளை இதற்கு வெளியில் உள்ள வெவ்வேறு அரசியல் மட்டங்களில் வைத்து பேசமுடியும். சமவுரிமை இயக்கத்தின் இந்த நடைமுறை வேலையில் இணைந்து வேலை செய்வதன் மூலம், எமக்கு இடையில் பரஸ்பரம புரிந்துணர்வை பெறுவதற்குரிய ஒரு நடைமுறை முன்மாதிரி மூலம் நாம் எம்மை வெளிப்படுத்தவும் முடியும். நடைமுறை செயல் மூலம், எம் முன்மாதிரியை நாம் ஒவ்வொருவரும் நிறுவ முடியும்.
இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு, அனைத்து இனத்தை சேர்ந்த ஒரு பொது நடைமுறைக்குள் நாம் அனைவரும் பங்காற்ற வேண்டிய வரலாற்று காலகட்டத்தில் நிற்கின்றோம். இனமுரண்பாட்டுக்கான தீர்வு முதல் சமூக விடுதலை பற்றிய வெவ்வேறு பார்வைகளையும், தீர்வுகளையும் கொண்டிருப்பது என்பது இதற்கு தடையாக இருக்க வேண்டியதில்லை.
இன்று மக்களுக்கு பொருளாதாரரீதியாக மனிதாபிமான சமூகக் கண்ணோட்டத்துடன் உதவி செய்கின்றவர்களின் நேர்மையான மனப்பாங்கு போல், இனவாதத்திலிருந்து மக்கள் மீள உதவுவதும் கூட சமூகக் கடமையாகும். இந்த வகையில் பொருளாதாரரீதியாக உதவுவர்கள், இதனையும் தங்கள் பணியாக இணைத்து முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.
மக்கள் மத்தியில் இனரீதியான பிளவு அவசியமற்றது. இதற்காக உழைப்பது அனைவரினதும் தார்மீகக் கடமை. இனவாதத்துக்கு எதிரான சமவுரிமை என்பது, அனைத்து மட்டத்திலும் இதை நாம் கோரவும் முன்வைக்கவும்; முடியும்;. பால் வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள், நிற வேறுபாடுகள், பிரதேசவேறுபாடுகள் என்று அனைத்திலும் கூட, மக்களுக்குள்ளான இந்த முரண்பாடுகளைக் களையும் வண்ணம் நாம் இணைந்து பயணிக்க முடியும்;.
மக்களை விழிப்பூட்டுவதன் மூலம் தான் நாம் இதற்கான சரியான தீர்வுகளை பெறமுடியும். எமக்கு முன்னுள்ள ஒரே நம்பிக்கையான செயல்பூர்வமான நடைமுறையாக இவைகளே இன்று உள்ளது.
நாங்கள் கோட்பாட்டு வரட்டுவாதிகளாகவோ, செயலுக்கு எதிரானவராகவோ இருக்கவேண்டியதில்லை. எதிராகாமல் இருக்க, நாங்கள் பங்காளியாக மாறுவதுமே இன்றுள்ள நடைமுறைரீதியான தெரிவாக இருக்கின்றது. இது இலங்கை தளுவிய வேலைமுறை என்பதால், இது நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாக எம் முன் உள்ளது. இதில் இணைந்து பங்காற்றுமாறு, உங்களை தோழமையுடன், நட்புடன் அழைகின்றோம்.
பி.இரயாகரன்
08.11.2012