கொள்கையளவில் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது? ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை "சுயநிர்ணயத்தை" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.
இங்கு சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பற்றியோ, அவர்கள் மாற்றாக எதை முன்வைக்கின்றனர் என்பது பற்றியோ, நாம் தனியாகவே பார்க்க வேண்டியுள்ளது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொண்டவர்கள் பற்றிய, அரசியல் புரிதல் இன்று அவசியமாகின்றது. நாங்கள் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற போதும், மற்றவர்களில் "சுயநிர்ணயத்தில்" இருந்தும் வேறுபடுகின்றோம். அதேநேரம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும் முடிகின்றது. இதுதான் சமூக இயக்கத்தை முன் தள்ளும், இயங்கியலாக இருக்க முடியும்.
இந்த அடிப்படையிலான அரசியல் புரிதலுடன் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொண்டவர்கள் பற்றி ஆராய்வோம். சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்கள், அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதை விளக்கவும், நடைமுறைப்படுத்தவும் முற்பட வேண்டும். இதுதான் சுயநிர்ணயம் பற்றிய மார்க்சிய அடிப்படையாக இருக்க முடியும். இதில் ஒரு கூறை அல்லது ஒரு பகுதியை மட்டும் முன்னிறுத்திப் பேசுபவர்கள், அவ்வாறு முன்னெடுப்பவர்கள் சுயநிர்ணயத்தின் முழுமையை மறுப்பவராகின்றனர். சாராம்சத்தில் அது பிரிவினையாகவும் அல்லது பலாத்காரமான ஐக்கியத்தையும் முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதமாகவும் வெளிப்படுகின்றது.
முழுமையற்ற "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்துவது பிரிவினையாக அல்லது பலாத்காரமான ஐக்கியமாகவே தன்னை முடிமறைத்துக் கொள்ளுகின்றது. கடந்தகாலத்தில் ஜே.வி.பி சுயநிர்ணயத்தை பலாத்காரமான ஐக்கியமாகவே காட்டியது. இதேபோல் இன்று பிரிந்து செல்லும் உரிமையை, பிரிவினையாக காட்ட முனைகின்றனர்.
பிரிவினை என்பது பிரிந்து செல்லும் உரிமைக்கு நேர் எதிரானது. பலாத்காரமான ஐக்கியம் என்பது இணங்கி வாழும் ஐக்கியத்துக்கு நேர் எதிரானது. கோட்பாட்டு ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ இணக்கம் காணமுடியாதது. இவ்வாறு இதைப் பிரித்து வேறுபடுத்தி அணுகாத சுயநிர்ணயம், மக்களின் ஐக்கியத்தை மறுதளித்துவிடுகின்றது.
இவ்வழியில் ஒரு தத்துவத்தின் முழுமையை வைத்து கிளர்ச்சியை, பிரச்சாரத்தை செய்யாதவர்கள், "சுயநிர்ணயத்தின்" பெயரில் அரசியலை மோசடிக்குள்ளாக்குகின்றனர். இன்று இனமுரண்பாடு கூர்மையாகி ஒடுக்குமுறையாகவும், மறுபுறத்தில் போராட்டம் என்பது பிரிவினையாகவும் தொடர்ந்து வெளிப்படுகின்ற அரசியல் அரங்கில், சுயநிர்ணயத்தை பகுதியாக முன்னிறுத்துபவர்கள் ஒன்றுக்கு துணைபோகும் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர்.
தேசியக் கோரிக்கை என்பது, திட்டவட்டமாக பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிரானது. லெனின் தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகளில் 'பூர்சுவா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காணமுடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும். இவை முதலாளித்துவ உலக முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைகளில் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை.' என்றார். இந்த அரசியல் அடிப்படையில் தேசியத்தை அணுகாத, விளக்காத அரசியல், பித்தலாட்டமானவை, மோசடித்தனமானவை.
இந்த இடத்தில் சுயநிர்ணயம் பற்றி முழுமையான மார்க்சிய விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.
1.'ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும்.' என்கின்றார் லெனின். (லெனின்- தே.வி.பா.ச -ப.245)
2.'சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை - 'தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம்' என்பதை வலியுறுத்த வேண்டும். ------. அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும். ' என்றார் லெனின். (லெனின்-தே.வி.பா.ச-ப 246)
இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டிராத "சுயநிர்ணயம்" மோசடியானது. இவ்வாறு முழுமையில் முன்வைக்காதவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளாக இயங்குகின்றனர். எப்போதும் சுயநிர்ணயத்தைக் கோரும் போது முழுமையைக் கோருவதும், அதை கிளர்ச்சியாக பிரச்சாரமாக முன்வைக்கும் போது அதை முழுமையாக முன்வைக்கவேண்டும்.
இங்கு தத்தம் இனத்தில் அதை முன்வைக்கும் போது, தம் இனம் சார்ந்த இனவாதிகளின் கோசத்தை எதிர்ப்பதில் இருந்து தொடங்க வேண்டும். இதை விடுத்து தம் இனம் சார்ந்த இனவாதிகளை திருப்;தி செய்யும் வண்ணம் சுயநிர்ணயத்தைப் பகுதியாக முன்வைப்பவர்களும், அதை பகுதியாக விளக்கி காட்டுபவர்கள் அரசியல் பித்தலாட்டம் செய்பவராக இருக்கின்றனர். "சுயநிர்ணயம்" என்ற சொல்லை ஏற்றுக் கொள்வது சரியான அரசியல் அரசியல் அளவுகோல் அல்ல. மாறாக "சுயநிர்ணயத்தை" ஏற்றுக் கொண்டு அதை மறுப்பவர்களை எதிர்த்து போராடுவதன் மூலம் சுயநிர்ணயத்தை சரியாக விளக்கிக் போராட வேண்டும். அதாவது சுயநிர்ணயத்தை திரிப்பவர்களை எதிர்த்து, சுயநிர்ணயத்தை முழுமையில் முன்னிறுத்த வேண்டும். சுயநிர்ணயத்தை பிரிவினையாக முன்னிறுத்துவதை எதிர்த்து, சுயநிர்ணயத்தை பலாத்காரமான ஐக்கியமாக முன்னிறுத்தும் தேசியவாதங்களை எதிர்த்தும் போராடவேண்டும்.
பி.இரயாகரன்
2910.2012