Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எந்த வகையில்? எம்மையும், எம் நடத்தையையும் மாற்றினோமா? எம் எழுத்தை, எம் எழுத்துமுறையை மாற்றினோமா? எந்த வகையில், நாம் எம்மில் மாறி இருக்கின்றோம். மக்கள் போராட்ட அனுபவம் தான் உண்டா? இல்லை. எம்மில் இருந்து நாங்கள் மாற்றத்தை தொடங்காமல், மக்களை அணிதிரட்ட முடியாது. இதைப்பற்றி பேசுவது, எழுதுவது முதல் தங்களை இதற்குள் அடையாளம் காட்டுவது வரையான வரையறைக்குள், இதை முடக்கி பார்க்கின்ற, காட்டுகின்ற எல்லைக்குள் இது பேசப்படும் பொருளாகவே மக்கள் போராட்டம் இருக்கின்றது.

சிங்கள புரட்சிகர சக்திகள் தங்கள் கடந்தகாலத்தை மறுத்ததன் மூலம், மீண்டும் மீண்டும் அதை சரிபார்ப்பதன் மூலம் தங்களை புரட்சிகரமாக்கும் இன்றைய சூழலில், தமிழ் தரப்பு தங்கள் புரட்சிகரமற்ற கடந்தகாலத்தை மறுக்காத சூழல் தொடர்ந்து காணப்;படுகின்றது. இந்த நிலையில் மக்களை அணிதிரட்டல் என்பதை, நடைமுறையில் புரிந்துகொண்டு முன்னெடுப்பது கடினமானது.

நாம் சரியான கோட்பாடுகளையும், கொள்கைகளையும் கண்டறிந்துவிட்டால், அதை நாம் முன்வைத்து விட்டால், மக்கள் போராட வருவார்கள் என்று கருதுகின்ற எல்லைக்குள், மக்கள் போராட்டம் பற்றிய சிந்தனை காணப்படுகின்றது. தத்துவங்களை, கோட்பாடுகளை, கோசங்களை … நாம் ஏற்றுக்கொள்வதால் அது போராட்டமாகிவிடாது. அதைப்பற்றி பேச, எழுதத் தெரிவதால் நாம் புரட்சியாளராகி விடமாட்டோம். அதுபோல் இவை மக்களை வழி நடத்தும் தகுதியாகிவிடாது.

தத்துவரீதியான விவாதங்கள், அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டும் ஊழியர்களுக்கானதே ஓழிய மக்களுக்கானதல்ல. கடந்த சில பத்தாண்டுகள் மார்க்சியம் மறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வந்த நிலையில், தத்துவார்த்த விவாதங்கள் நடாத்தப்பட்டன. அறிவு மற்றும் தர்க்கரீதியாக நடந்த கருத்துச் சார்ந்த போராட்டங்கள், அது சார்ந்த மொழி உட்பட அனைத்தையும், அதே வடிவில் அல்லது அதே பாணியில் மக்களிடம் எடுத்துச்செல்ல முடியாது.

மக்களின் அரசியல் மற்றும் அறிவு மட்டம் முக்கியமானது. மக்கள், அரசியலை புரிந்து கொள்ளும் மொழி முக்கியமானது. அம்மொழியைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. அந்த மொழியில் அரசியல் பேசப்பட வேண்டும். பொதுவாக அந்த மொழியில் அரசியலை பேசமுடியாதவர்களாக அரசியல் பேசுகின்ற அறிவுஜீவிகள் இருக்கின்றோம். இதனால் கூட எமது அரசியல் மக்களில் இருந்து அன்னியப்பட்டு இருக்கின்றது.

மக்கள் போராட்ட அனுபவமற்ற இலங்கைச் சூழலில், அனைத்தும் மீளக் கட்டமைக்கப்பட வேண்டும். சண்ணும், சண் வழி வந்த கட்சிகளும் சரி, ஜே.வி.பியும் சரி, தமிழ் தேசிய வழி வந்தவர்களும் சரி, வர்க்கரீதியான மக்கள் திரள் அமைப்பைக் கட்டிய அனுபவம் கிடையாது. ஆனால் குறித்த விடையங்களை ஓட்டி, மக்களை திரட்டிய அனுபவம் உண்டு. மக்கள் திரளை அரசியல்ரீதியாக அணிதிரட்டிய அனுபவம் கிடையாது.

இதற்கு அப்பால் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொண்ட விடையங்களை ஆங்காங்கே பயன்படுத்த முனைந்தவர்களும், இந்த அடிப்படையில் கூட மக்களை அணுகாதவர்கள் தான் உள்ளனர். எமது அணுகுமுறை உட்பட அனைத்தும், நடைமுறையில் பரிசீலிக்கப்பட வேண்டியவை. பொது ஓடுக்குமுறையை நாம் காண்பது போல், மக்களிடம் எடுத்துச்செல்ல முடியாது. மக்கள் அதை எப்படி புரிகின்றனர், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை உள்வாங்கி தான் மக்களுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.

பொதுவில் எம் அறிவு, தர்க்கத் திறன் மூலம் விடையங்களைப் புரிந்து கொள்கின்ற நிலையில் நின்று, மக்களுக்கு உபதேசம் செய்ய முனைகின்றோம். எமக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புடன், மக்களின் கருத்துக்கு காது கூட கொடுப்பது கிடையாது. சிலர் மக்கள் பின் வால் பிடிக்கின்றனர்.

இந்த வகையில் இன்று மக்களை அணுகும் போது எமது மொழி முதல் தனிப்பட்ட நடத்தைகள் வரை, அனைத்தும் கேள்விக்குள்ளாக்க வேண்டியவையாக உள்ளது.

கருத்தை முன்வைக்கும் போது தெரிந்ததைக் கொண்டு, கரடுமுரடான கோட்பாட்டுச் சொற்களுக்குள் நின்றும், மக்களுடன் உரையாட முடியாது. மக்களை கற்றுக்கொள்ள கோரும் நாம், நாம் கற்றுக் கொள்வதை மறுக்கின்றோம். இங்கு கற்றுக்கொள்வது என்பது, மக்களிடம் இருந்தும் தான் என்பதை ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். இதிலிருந்து அவர்கள் புரியும் மொழியில் பேசியாக வேண்டும். நாங்கள் புரிந்து கொண்ட மொழியில், அவர்களுக்கு புரியவைக்க முடியாது.

சமூகத்தின் முன் அனைத்தும் கேள்விக்குள்ளாகி மீளக் கற்றுக்கொடுப்பது என்பது, அவர்கள் ஒவ்வொரு விடையத்தையும் எப்படி புரிந்து இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொண்டு உரையாட வேண்டும். அதற்கான மொழி மட்டுமல்ல, அதைப்பற்றிய தெளிவும் அறிவும் அவசியமானது. எமது போராட்டம் பற்றிய அறிவு தர்க்கம் கூட, வெறும் கோட்பாட்டு சட்டங்களுக்குள்ளானது.

முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கம், பாசிசம், தேசியம், புலி, சுயநிர்ணயம், பிரிவினை … என்ற சொற்களுக்குள் நின்று மக்களை அணுகுகின்ற பொது நடைமுறையும் சரி, எழுத்துகளும் சரி வரட்டுத்தனமானது. அரசியல் என்பது இதுதான் என்பதை புரிந்து வைத்திருப்பது தவறானது. மறுதளத்தில் தன்னை இடதுசாரியாக காட்டல் மற்றும் இது சார்ந்த எழுத்து முறை மக்களுக்கு அன்னியமானது.

அறிவுஜீவிகள் மத்தியில் உள்ள நடத்தை மற்றும் மொழி, மக்களில் இருந்து அன்னியமானது. மாறாக மக்கள் பேசிக்கொள்ளும் மொழியில் அரசியல் பேசியாக வேண்டும். நடந்த, நடக்கின்ற விடையங்களை தொகுத்துக் கொடுப்பதன் மூலம் மக்களை அணுகலாம் என்பது தவறானது. இவை மக்களுக்கு தெரிந்தவை. இதை நாம் தொகுத்து கூறுவதால் மட்டும், மக்கள் தெளிவடைவார்கள் என்பது தவறானது.

அரசியல்ரீதியாக கொண்டு செல்லுதல் அவசியம். ஆனால் அதை அரசியல் சொற்கள் ஊடாக செய்ய முடியாது. மக்களின் மொழியில், அவர்கள் புரியும் மொழியில் அவை செய்யப்பட வேண்டும்.

மக்களுக்கு "உண்மையான நிலைமைகளில் இருந்து உத்தரவுகளை விவாதித்து, பரிசீலித்து அறியாமல் கண்மூடித்தனமாக அவற்றை நடைமுறைப்படுத்துவதும், அதன்பால் மட்டுமீறி விதிகளைப் பின்பற்றும் மனப்போக்கைக் கொண்டிருப்பதும் முற்றிலும் தவறானதாகும்" என்றார் மாவோ. 1933 இல் மாவோவின் கருத்து நிராகரிக்கப்பட்ட காலத்தில், மாவோ சொன்ன சரியான கருத்தை இங்கு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் 1957 ஆண்டு மாவோ கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். "படிப்பில் இரண்டு விதமான மனோபாவங்கள் உண்டு. ஒன்று, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தினாலும் சரி, பொருந்தாவிட்டாலும் சரி, எல்லாவற்றையும் அப்படியே எடுத்து நடும் வரட்டு மனோபாவம். இது நல்லதல்ல. மற்றது, நமது தலைகளைப் பாவித்து, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தியவற்றைப் படிக்கின்ற, அதாவது, நமக்கு உபயோகமான அனுபவங்களைக் கிரகித்துக் கொள்கின்ற மனோபாவம். இது தான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய மனோபாவம்."

எம்மை நாம் புரட்சிகரமானவராக மாற்றிக் கொண்டு தான், மக்களை வழிகாட்ட முடியும்.

பி.இரயாகரன்

21.10.2012