Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தீபச்செல்வன் குளோபல் தமிழ்நியூஸ் இணையத்தில் தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடுவதை எதிர்த்து "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?"  என்று கேட்டு எழுதுகின்றார். இதில் அவர் "நம்மில் சிலர் தெற்கு மக்களையும் இணைத்துக்கொண்டே போராட வேண்டும்" என்று கூறுவதை எதிர்த்து குறுந்தேசிய இனவாத தர்க்கத்தை முன்வைக்கின்றார். இங்கு "நம்மில் சிலர்", என்று கூறுவது, எம்மைக் குறித்தது கூட. அத்துடன் "தெற்கு மக்களையும் இணைத்து" போராடக் கூடாது என்கின்றார். இது வெறும் தீபச்செல்வனின் கருத்துமட்டுமல்ல, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராட தயாரற்ற அனைவரினதும் நிலையும் இதுதான். இந்தநிலையில் "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று வேறு கேட்கின்றார்! சரி இணைந்து போராடுவது தவறா? இது தமிழ் மக்களின் பிரச்சனை மறுத்து விடுமா? இணைந்து போராடாமல் தீர்வு காணத்தான் முடியுமா? சொல்லுங்கள் எப்படி என்று? "நம்மில் சிலரான" நாங்களும் வருகிறோம். அரசுடன் பேசுவதும், இந்தியாவுடன் சேர்ந்து கூத்தாடுவதும், ஏகாதிபத்தியத்துடன் கூடுவதும் தான் உங்கள் வழி. நாங்கள் இதை மறுத்து, மிகத் தெளிவாக கூறுகின்றோம், தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடாது, தமிழ்மக்கள் மேலான இனவொடுக்குமுறையை வேறு எந்தவழியிலும் தீர்க்க முடியாது. அவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரானது தான். தமிழ் மக்கள் தமக்காக தாம் போராடுவார்களாக இருந்தால், அவர்கள் சிங்கள முஸ்லீம் மலையக மக்களுடன் இணைந்து தான் போராடுவார்கள். இதற்கு வெளியில் வேறு உண்மை மாற்று கிடையாது.

இதை மறுத்துதான் தீபச்செல்வன் "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று கேட்கின்றார். இதை நாங்கள் உங்கள் பாணியில் மாற்றிக் கேட்போம், சிங்கள மக்களுக்கு துயரங்கள் இல்லையா? இது வடக்கு கிழக்கு மக்களுக்குத் தெரியாததா? சொல்லுங்கள். நீங்கள் கேட்பது போல், இங்கு எல்லாப் பிரச்சனையும் "தனித்துவமானது" தான். இப்படி இருக்க தமிழ்மக்கள் பிரச்சனை மட்டும்தான் "தனித்துவமானது" என்பது குறுகிய இனவாதமாகும். இங்கு "தனித்துவமானது" என்பது கூட, தனித்து இருப்பதில்லை எல்லா பிரச்சனைகளையும் உள்ளடக்கியது கூட. எதுவும் தனித்து இயங்குவது கிடையாது.

இனங்களைப் பிரித்து வைத்திருப்பதன் மூலம், இனங்கள் பிரிந்து வாழ்வது மூலம் தான், மக்களின் பொது அவலங்களை பரஸ்பரம் கண்டுகொள்வது தவிர்க்கப்படுகின்றது. சரி நீங்கள் சிங்கள மக்களின் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் குரல் கொடுக்கின்றீர்களா? இதை தமிழ் மக்கள் முன்கொண்டு செல்லுகின்றீர்களா? நீங்கள் செய்யாத ஒன்றை, அவர்கள் செய்யவில்லை என்று கூற, எந்த அருகதையும் உங்களுக்கு கிடையாது. இது நேர்மையற்றது கூட.

"எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று கேட்கும் நீங்கள், இந்த துயரத்தை ஏற்படுத்திய குறுந்தேசியத்தையும், புலித்தேசியத்தையும் பற்றி உங்களுக்கு தெரியாததா?" அதற்கு எதிராகக் குரல் கொடுத்தீர்களா? இதை தமிழ் மக்களுக்கு சொன்னீர்களா? இல்லை. இப்படி இருக்கும் உங்கள் குறுந்தேசிய இனவாதச் செயலை நேர்மையானதாக கருதுகின்றீர்களா? சொல்லுங்கள். இப்படி இருக்கும் உங்கள், இடதுசாரியம் பற்றிய குற்றச்சாட்டுகள் அபத்தமானவை.

"எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று கேட்கும் நீங்கள், அதை உருவாக்காமல் தடுக்கும் வண்ணம் போராடி இருக்கின்றீர்களா? புலிகள் தமிழ் மக்கள் மேல் நடத்திய மனிதவிரோதச் செயலை அம்பலப்படுத்தி இருக்கின்றீர்களா? குறுந்தேசிய இனவாதத்தை எதிர்த்து இருக்கின்றீர்களா? இல்லை. இதை முதலில் கேள்விக்கு உள்ளாக்குங்கள்.

சிங்கள மக்களுடன் இணைந்து செயலாற்றாத வரை, தமிழ் குறுந்தேசியத்தை உயர்த்தி நிற்கும் வரை "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று கேட்கும் தகுதி உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் கிடையாது.

இப்படி இருக்க இந்தத் தர்க்கத்தை யாருக்கு எதிராக, எந்த அரசியல் சூழலில் இன்று முன்வைக்கின்றார் என்பது, இவர்களின் வக்கிரமான குறுந்தேசியத்தையே மேலும் அம்பலமாக்குகின்றது.

"நம்மில் சிலர் தெற்கு மக்களையும் இணைத்துக்கொண்டே போராட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் தெற்கு மக்கள் நாளும் பொழுதும் வடக்கிற்கு வந்து செல்லுகிறார்கள். ஆனால் எந்த இணக்கமும் உருவாகவில்லை. சுற்றுலா வரும் மக்கள் தமிழர்களை கைதிகளைப் போல பார்க்க தமிழர்கள் அவர்களை எதிரிகள் போலப் பாக்கிறார்கள்." இப்படி தீபச்செல்வன் கூறும் போது, இதன்பின்னான அவரின் குறுந்தேசிய வக்கிரமே மேலும் அம்பலமாகின்றது. இப்படி மிகைப்படுத்தி காட்டமுனையும் அதேநேரம், வடக்கு மக்களுடன் இணைந்து போராட முனையும் சிங்கள மக்களை இவரால் கண்டு கொள்ளவும் காண முடியாமலும் போகின்றது. தமிழ்மக்களுடன் இணைந்து போராடியதால் காணாமல் போன லலித், குகன் உட்பட, போராடும் இடதுசாரிகள் மேலான தொடர் அடக்குமுறைகள் தொடருகின்ற நிலையில் "தமிழர்கள் அவர்களை எதிரிகள்போலப் பாக்கிறார்கள்." என்ற கூறுவது குறுந்தேசிய வக்கிரம் தான். இந்த நிலையில் தமிழ் மக்கள் "அவர்களை எதிரிகள் போலப் பாக்கிறார்களா" எனின் இல்லை. ஆனால் நீங்களும், உங்களைப் போன்றவர்களும் அப்படித்தான் பார்க்கின்றீர்கள். இதுதான் உண்மை. ஏனெனின் அது உங்கள் குறுந்தேசிய இருப்பை கேள்விக்கு உள்ளாக்குகின்றது அல்லவா. இது போல் பெருந்தேசியம் சாhந்து அரசு ஒடுக்குமுறையை ஏவுகின்றது. இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.

"சுற்றுலா வரும் மக்கள் தமிழர்களை கைதிகளைப் போல பார்க்க" என்ற கூற்று சுத்த இனவாதம். தமிழர்களை கைதிகளைப் போல் பார்க்க, சுற்றுலா வருவதில்லை. அவர்கள் சுற்றுலா தான் வருகின்றார்கள். இப்படி இருக்க இனம் சார்ந்த பரஸ்பர அன்னியமான இனவாத சூழல் தான், பரஸ்பரம் புரிந்து கொள்வதைத் தடுக்கின்றது. சிங்கள மக்களுடன் உரையாடாமல், எந்தச் சூழலையும் மாற்றிவிட முடியாது. உரையாடுவதற்கு எதிராக இருந்தபடி, சுற்றுலாவுக்கு வரும் அவர்கள் "கைதிகளைப் போல பார்க்க" என்று இட்டுக்கட்டி கூறுகின்ற நீங்கள் எல்லாம் மனித அறநெறிகளைக் கூட புதைத்துவிட்டுத்தான் இதைக் கூற முடிகின்றது. இனவழிப்பு பற்றி போலியாக பக்கச்சார்பாக பேசமுடிகின்றது.

மேலும் தீபச்செல்வன் எழுதுகின்றார் "கெலும் நவரத்தினே, ஜே.வி.பியிலிருந்து பிரிந்த மக்கள் போராட்ட இயக்கத்தினைச் சேர்ந்தவர். இதழியலாளர். ஜே.வி.பி இனவாதத்தை அடிப்படையாக் கொண்டு செயற்படுகிறது என்று சொல்லியே மக்கள் போராட்ட இயக்கம் பிரிந்து வந்தது. கெலும் நவரத்தினேவை கடந்த யூன் மாதம் கொழும்பில் சந்தித்தேன். எங்கள் தேசத்தில் நடக்கும் பிரச்சினைகளைக் குறித்து அவரிடம் பேசிய பொழுது எல்லாம் அரசாங்கத்தின் செயற்பாடு என்றும் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினையின் உக்கிரத்தை தனித்துவமாகப் புரியாமல் பேசும் அவரிடம் மீண்டும் மீண்டும் பேசிய பொழுது தோல்வியே ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கை என்ற முகமூடிக்குப் பின்னால் மிகவும் இறுக்கமான இனவாதத்தையே என்னால் உணர முடிந்தது. … கெலும் நவரத்தினேவிடம் இறுதியாக ஒன்றை கேட்டேன். 2009ஆம் ஆண்டு மே வரை இலங்கையின் வடக்கில் ஒரு கொடும் யுத்தம் நடந்து லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கை ஜனாதிபதி ஈழமக்களை இனப்படுகொலை செய்தார் என்று உலகத்தின் பல்வேறு சமூகங்கள் பேசின. எனவே அப்படியொரு இனப்படுகொலை நடந்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது அது பற்றி மக்கள் போராட்ட இயக்கம் பரிசீலிக்கிறதா? அல்லது ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? என்று கேட்டேன். ஒரு இனப்படுகொலை பற்றிய கேள்விக்கு ஒரு சிங்கள இடதுசாரி இளைஞனிடம் பதில் ஏதுவும் இருக்கவில்லை." என்கின்றார் தீபச்செல்வன். அவர் எதை மறுத்தார், நீங்கள் எதைக் கோரினீர்கள் என்பது ஒருபுறம் இருக்க, உங்கள் குறுந்தேசிய அரசியல் சார்ந்த பார்வையை எந்த இடதுசாரியும் மறுப்பார்கள். மறுத்தேயாக வேண்டும்.

மறுதளத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் கீழ், இனமுரண்பாட்டை கையாள தனித்துவமான இயக்கத்தை தொடங்கி அதை பகிரங்கமாக அறிவித்தும் இருக்கின்றனர். உங்கள் கட்டுரை இதை எதிர்க்க, இதன் பின் எழுதப்பட்டது. உங்கள் எந்தக் குற்றச்சாட்டையும் மறுக்கும் வண்ணம், "சமவுரிமை" இயக்கத்தின் உள்ளடக்கம் உள்ளது. அவர்களின் நடைமுறை ரீதியான போராட்டம் உள்ளது. உங்கள் வாதங்கள், தர்க்கங்கள் அனைத்தும் இதன் முன் அபத்தமானவை.

ஜே.வி.பி உடைவு நடந்த விதம், அது அமைப்பான விதம், அதன் சுயவிமர்சனம், தொடர்ந்து அதற்குள் உள் மற்றும் வெளியரங்கில் நடக்கும் மாற்றங்கள், அதன் கோட்பாட்டு உருவாக்கம் அனைத்தையும், அதன் புரட்சிகரமான நடைமுறையில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதை மறுத்து உங்கள் தனிப்பட்ட குறுந்தேசிய உரையாடல், எதையும் தலைகீழாக்கிவிடாது.

நீங்கள் புலிக்கு பின் நின்று சிந்தித்து செயல்பட்ட மாதிரி தொடருகின்ற நிலையில், உங்கள் குறுந்தேசியக் கண்ணோட்டம் இதை மறுதளிப்பதில் குறியாக குறிப்பாக இருக்கின்றது. முன்னிலை சோசலிசக் கட்சியில் நடந்துவரும் மாற்றத்தையும், சிங்கள மக்கள் தமிழ் மக்களின் மேலான ஒடுக்குமுறையை எதிர்த்து போராடுவதை மறுதளிக்க முனைகின்றீர்கள். இதை தமிழ்மக்கள் முன் இனவாதமாக காட்ட முனைகின்றீர்கள். இதன் மூலம் நீங்கள் சிங்கள மக்களிடம் எதிர்பார்ப்பது, உங்கள் குறுந்தேசியத்தை அங்கீகரிக்கும்படி, அதற்கு பக்கப்பாட்டுபாடுவதையும் தான். இந்த குறுந்தேசிய வாதத்தை இடதுசாரிகள் எங்கும் எப்போதும் எதிர்த்து போராடுவார்கள். அதைத்தான் நாங்கள் செய்கின்றோம்.

பி.இரயாகரன்

14.10.2012

இவருடன் தொடர்புடைய கட்டுரைகள்

1. புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

2. வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

3. கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

4. தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

5. இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

6. தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

7. "சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

10. செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)

11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)

12. புலித் தலைமையின் "தியாகம்" "வீரம்" உண்மையானதா!? பொய்யானதா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12)

13. "உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்." உண்மை, ஆனால்… (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 13)

14. மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற புலிகள் விரும்பியிருந்தால்!... அதைச் செய்திருக்க முடியும் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 14)

15. அரசின் எதிரியாக புலி இருந்ததால், புலியை ஆதரிக்க முடியுமா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 15)

16. "புலிகள் உண்மையில் தோற்றார்களா…. புலிகள் தோற்கவில்லை." உண்மைகள் மேலான பொய் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 16)

17. இந்தியாவை நம்பக் கோருகின்ற சுயவிமர்சனமற்ற அரசியல் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 17)

18. ஒருபக்க கொடுமைகளைப் பேசுவதன் மூலம் மறுபக்க கொடுமைகளை மறுப்பது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 18)

19. மக்களின் கனவை அழித்தவர்கள் புலிகள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 19)

20. "மாற்றுக் கருத்து" அழிக்கும் என்றால் அழிந்து போகட்டும். (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 20)