Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்டாலின் தூற்றப்பட்டார். ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிச இயக்கமும் படிப்படியாக யூகோஸ்லாவியா நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான். டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில், மக்களின் புரட்சிகர போராட்டங்ககளிலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளிலும், அமெரிக்காவின் சார்பாக அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.

1951 இல் ஸ்டாலினை மறுத்த யூகோஸ்லாவிய கட்சி, வெறும் கழகமாக மாறியதை அடுத்து, யூகோஸ்லாவிய கழகப் பத்திரிகை ஒன்று 1954 இல் எழுதியது “ஒட்டு மொத்தமாக சோசலிசத்துக்குள் குதித்து உலகமே சோசலிசமாக மாறிவிட்டது” என்று. யூகோஸ்லாவியா அரசு வெளியிட்ட நூல் ஒன்று “சோசலிசமா முதலாளித்துவமா என்ற பிரச்சனை ஏற்கனவே உலக அளவில் தீர்க்கப்பட்டு விட்டது” என்று எழுதியது.  இப்படி கூறியபடி நடந்த முதலாளித்துவ மீட்சியை, டிராட்ஸ்சிகள் ஆதாரித்தனர். டிராட்ஸ்கிய அரசியல் கோட்பாடுகள் இதை தழுவி நின்றன. டிராட்ஸ்கிகள் முதலாளித்துவமல்லாத சோசலிச முனைப்பாக, ஸ்டாலின் மறுப்பாக  இதை காட்டியே முதலாளித்துவ மீட்சியை மறுத்தனர். ஒட்டு மொத்தத்தில் ஏகாதிபத்தியங்களின் ‘உலக த்தை’யே, சோசலிசமாக மாறிவிட்டது என பெருமையாக பேசி போற்றினர். சோசலிசமா, முதலாளித்துவமா என்பது தீர்க்கப்பட்டு விட்டது என்ற வரையறையால், கம்யூனிச இயக்கமே நஞ்சூட்டப்பட்டது. ஸ்டாலின் பாட்டாளி வர்க்க நிலை இப்படி உயிருடன் கொல்லப்பட்ட போது, ஏகாதிபத்தியங்கள் குதுகலித்தன.

உலகளவில் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்துவதை கொச்சைப்படுத்தினர். பலாத்காரம் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதையும் தூற்றினர். “பலாத்காரப் புரட்சி மூலம் சமுதாய முரண்பாடுகளை தீர்க்கும் வழி தேவையற்ற ஒன்றாக ஆகிவருகின்றது” என்று யூகோஸ்லாவியா அறிவித்து, உழைக்கும் மக்களின் முதுகில் குத்தினர். உழைக்கும் மக்களை ஆதாரிப்பதாக, அவர்களின் நலனுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட டிராட்ஸ்கிகள், யூகோஸ்லாவியாவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்து நின்றனர். முதலாளித்துவ மீட்சி அல்ல. இது ஸ்டாலின் மீதான அதிகாரத்துவ மறுப்பு என்றனர். முதலாளித்துவ மீட்பு அல்லாத சோசலிச முனைப்பு என்றனர். ஏன் இதை ‘சோசலிசம்’ என்று கூடச் சொன்னார்கள்.

டிட்டோ ‘அமைதி வழிப் போட்டியின்’ மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைபற்ற முடியும் என்று அறிவித்தான். முதலாளித்துவ உலகில் நிலவும் சூறையாடும் ஜனநாயகத்தின் நெம்புகோலை தாங்கி நிற்பதன் மூலம், தொழிலாளி வர்க்கம் தனது நலனை அடைய முடியும் என்றான். இதை ஸ்டாலின் மறுத்தால், ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்றனர். உலகில் ‘அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை’ உருவாக்குவதே பாட்டாளிவர்க்கத்தின் கடமை என்று டிட்டோ அறிவித்தான். இதற்கு மாறாக ஸ்டாலின் வர்க்க முரண்பாட்டைத் தூண்டி, அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை உலகளவில் தகர்த்த ஒரு அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரி என்றான். ஸ்டாலினும், ஸ்டாலின் வழிப்பட்ட அரசியலும் துடைதெறியப்பட வேண்டும் என்றான். இதையே குருசேவ் ‘அமைதி வழிப் பொருளாதார போட்டியின்’ ஒற்றுமையை, ஒத்துழைப்பை முதலாளி வர்க்கத்துடன் நல்க பட்டாளி வர்க்கத்தைக் கோரினான். இதை எதிர்த்த ஸ்டாலின் நிலைப்பாட்டைக் கொண்ட மார்க்சிய வாதிகள் ஈவிரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டனர். டிராட்ஸ்கிகள் குருச்சேவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்தனர். முதலாளித்துவ மீட்பை மறுத்த இவர்கள், குருச்சேவின் அரசியலுக்கு பாய்விரித்தனர். டிட்டோ அரசியல் தந்தையாக;  டிராட்ஸ்கிகள் தாயாக மாறி, கள்ளக் குழந்தையாக குருச்சேவை பெற்றுப் போட்டனர். ஸ்டாலினை தூற்றுவதில், ஸ்டாலின் அரசியலை புதைப்பதில் குடும்பமாகவே ஒன்றுபட்டு புதைகுழியை வெட்டினர்.

குருசேவ் – டிட்டோ இருவரும் மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டுயெடுத்து முன்வைத்த கோட்பாடுகளை பரஸ்பரம் “ஆக்கபூர்வமான வளாச்சி” என்ற கூறிக் கொண்டனர். இதை எதிர்த்தவர்களை வரட்டுவாதிகள் என முத்திரை குத்தினர். இதை எதிர்ப்பவார்கள் ஸ்டாலினிய அதிகாரத்துவ கொடுங்கோலர்களின் சர்வாதிகாரப் போக்குக்கு இசைவானவர்கள் என்றனர். ஸ்டாலினுக்கு மாற்றான தமது பாதையே சோசலிசப் பாதை என்றனர்.  இதை டிட்டோ கூறிய போது “உலகம் மனிதகுலம் தடுத்து நிறுத்த முடியாதபடி பல்வேறு வழிகளில் சோசலிச சகாப்தத்தினுள் பெரிய அளவில் நுழைந்து கொண்டிருக்கின்றது” என்று  முதலாளித்துவ மீட்சியை கூறினான். குருச்சேவோ புரட்சிகளை “நாடாளுமன்ற பாதையில்” நடத்த முடியும் என்றான். நாடாளுமன்ற பாதை அல்லாத வழிகளில் புரட்சியை நடத்தவும், நடத்த துண்டிய ஸ்டாலினின் மார்க்சிய வழியை, கொடுங்கோலர்களின் வழி என்றனர். “சமரச‌ற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற ஸ்டாலின் வழியை நிராகரித்து, அமைதி வழியில் சோசலிசத்தை கட்ட வேண்டும் என்பதே எமது வழி” என்று குருச்சேவ் – டிட்டோ கும்பல் உலகுக்கு அறிவித்தது. இந்த பாதையில் தடுத்த நிறுத்த முடியாத வகையில் பல்வேறு வழியில் சோசலிச சகாப்தத்துக்குள் உலகம் செல்வாதாக கூறி, முதலாளித்துவ மீட்சியை நடத்தினர். டிராட்ஸ்கிகள் புல்லரிக்க, ‘தமது கடந்தகால அரசியல் வழி சோவியத்யூனியனில் நனவாகிவிட்டது’ என்று கூறி, தமது குதுகலத்தை பிரகடனங்கள் மூலம் ஆதாரித்தனர். ஸ்டாலினை கழுவேற்றிய அந்தக் கணமே குருச்சேவ்  “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ரசியாவில் இனிமேலும் அவசியமில்லை” என்று கூறியதுடன் “மக்கள் அனைவரினதும் அரசை” பிரகடனம் செய்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாக செய்தான். ஆனால் லெனின், “ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிந்துள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்துக்கும் வர்க்கமற்ற சமுதாயத்துக்கும் அதாவது கம்யூனிசத்துக்கும் இடையிலுள்ள வரலாற்றுக் காலகட்டம் முழுவதுக்கும் அவசியம்” என்றார்.

குருச்சேவ் – டிட்டோ கும்பல் முதலாளித்துவ மீட்சியில் மேலும் முன்னேறி “அனைத்து மக்களின் அரசு” என்று கூறி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை “அனைத்து மக்களுக்குமான ஜனநாயகத்தை மறுக்கும் ஸ்டாலின் வகைப்பட்ட கொடுங்கோலர்களின் தத்துவம்” என்றனர். அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம், இதுவே சோசலிசத்தின் லட்சியம் என்றனர். மார்க்ஸ் முதல் லெனின் ஸ்டாலின் ஈறாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கொடூரமான மார்க்சிய சிந்தனை மூலம், அனைத்து மக்கள் ஜனநாயகத்தை வழங்க மறுத்தாக கூறி, அதை கம்யூனிச இயகத்தில் புகுத்தி கட்சிகளின் வர்க்க குணம்சத்தை மாற்றினர். குருச்சேவ் “அனைத்து மக்கள் கட்சி” என்ற பெயரில் கட்சியின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுத்தான். இதை டிராட்ஸ்கிகள் தாளம் போட்டு இசைமீட்டினர். உலக கம்யூனிச இயக்கமே முதலாளித்துவ கட்சியாக மாறியது.

“வட்டார அளவிலான போரே உலப் போரேன்னும் பெருந் தீயை மூட்டிவிடக் கூடும்” என்று கூறி, குறுகிய அளவிலான போராட்டங்களை கூட, உலகளவில் பிற்போக்கானவை என்றனர். வட்டார அளவிலான வர்க்கப் போராட்டங்கள் ஸ்டாலின் வகைப்பட்ட மார்க்சியம் என்றனர். அதாவது உலகளாவில் மனித போராட்டங்கள் அனைத்தும் பிற்போக்கானவை என்றனர். அவற்றுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு அதன் ஒடுக்குமுறைக்கும் பாட்டாளி வர்க்கம் தலை வணங்கவேண்டும் என்றனர். இதை மறுத்த ஸ்டாலினையும், அவரின் பாட்டாளி வர்க்க நிலையை கொடுங்கோலர்களின் அரசியல் நிலை என்றனர். இதை நாம் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து ஒடுக்கவேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதே, ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் முடிவை நிதார்சனமாக்கும் என்றனர். உலகத்தில் கொடுங்கோலன் ஸ்டாலின் என்று தூற்றியபடி, டிட்டோ அமெரிக்கா எகாதிபத்தியத்தின் தலைவiரான அய்சனோவரை “விடாப்பிடியான சமாதானக் காவலர்” என்று போற்றினான். 1961 இல் கெனடியை “சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும், நெருங்கிப் பிடிக்கும் உலகப் பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்க்கவும் உதவிகரமாய் இருக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக மனிதர்” என்றான். குருச்சேவ் அய்சனோவரை “சமாதானத்தை மனப்பூர்வமாய் விரும்புகிறவர்” என்றும், கெனடியை “சமாதானத்தைப் பாதுகாக்கும் பேராவலைக் காணமுடிகின்றது” என்றும் புகழாரம் செய்தான். பாட்டாளி வர்க்கம் சமாதானத்தை கடைபிடிக்க, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை கைவிட வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். முதலாளித்துவ மீட்சியை சோசலிசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சியாக  காட்டியபடி, உலக மக்களுக்கு எதிராக தங்கள் கரங்களை உயர்த்தினர்.

சமாதனம், அமைதி என்ற போர்வையில் வர்க்கப் போராட்டங்களை கொச்சைப்படுத்தினர். ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கூடிக்கூலாவி சமரசமாடவும், சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியை துரிதப்படுத்தவும் அணு ஆயுதத்தை மிகைப்படுத்தி, மக்களையும் மக்களின் போராட்டத்தையும் சிறுமைப்படுத்தினர். டிட்டோ அணுப் போர் மூண்டால் “மனித இனம் அழிந்து போகும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தை மறுத்து, அதை அழிவு யுத்தமாக  கொச்சைப்படுத்தினான். குருச்சேவ் தன் குருவை மிஞ்சும் வகையில் “நமது கிரகம் நோவாவின் தோணி, அணுகுண்டால் பூவுலகம் அழிந்து போகும்” என்று கூறி உலகளாவிய வர்க்கப் போராட்டத்தையே கைவிடக் கோரினான்.  அமெரிக்காவின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிந்து உலகமே அமெரிக்க காலனியாக வேண்டும் என்றான்.  சர்வாதிகார கொடுங்கோலான் ஸ்டாலின் அணுகுண்டுக்கு அடிபணியாது, உலகத்தை அழிவுக்கு இட்டுச் சென்றாதாக தூற்றினான். அமெரிக்காவினதும் எகாதிபத்தியங்களினதும் காலனித்துவகளையும், புதிய காலனித்துவ முயற்சிகளை எதிர்த்து உலகளாவில் வர்க்கப் போராட்டங்களை உற்சாகப்படுத்தி ஆதரவு வழங்கியதை, ஸ்டாலின் உலக சமாதனத்துக்கு எதிராக இருந்தாக கூறித் தூற்றினான். வர்க்க சமரசம் மூலம் உலக சமாதானத்துக்கு கைகளை உயர்த்தியவர்களை கம்யூனிஸ்ட்டுகள் என்றனர். கடந்த காலத்தில் வர்க்க விரோதிகளை ஸ்டாலின் ஒடுக்கிய போக்குகளில் இருந்து, அவர்கள் அனைவரை விடுவித்ததன் மூலம் முதலாளித்துவ மீட்சியை நடத்தினான்.

ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க போக்குகளை ஒளித்துக் கட்டிய பின், குருச்சேவ்  குரு டிட்டோ வழியில் கம்யூனிஸ்ட் கட்சியை  1961ல் “அனைத்து மக்களின் கட்சியாகி விட்டது” என்று அறிவித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே முடிவுக்கு கொண்டு வந்தான். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதை  டிட்டோ தனது கொள்கையாக கொண்டிருந்த போதே, ஸ்டாலினும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் அதற்கு எதிராக போராடியது.

யூகோஸ்லாவியா எதை தனது அரசியல் வழியாக கடைப்பிடித்தது என்பதைப் பார்த்தோம். அரசியல் ரீதியாக ஸ்டாலினை மறுத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை டிட்டோ வழியில் தொடங்கியதை மேலும் விரிவாக ஆராயு முன்பு, ஸ்டாலின் அவதூறின் அரசியல் போக்கை புரிந்து கொள்ள முனைவது அவசியம். இந்த முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். அனைத்துக்கும் ஸ்டாலின் அவதூறை அடிப்படையாக கொண்டே முதலாளித்துவ மீட்சியை அழகுபடுத்தினர்.

 

4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4

3.யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 3

2.ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி –

1.தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1