இந்தப் பிரச்சாரத்தில் இரண்டு குறிப்பான விடையங்கள் குறித்து தற்போதைக்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
1.சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது குறித்து
சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்க மறுத்தது குறித்து பேசுகின்றனர். சரி இவர்கள் யார்? இவர்கள் வைக்கும் தீர்வு என்ன? இப்படி பல கேள்விகள் மூலமும், இவர்களைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த 30 வருடத்தில் எங்கே எப்படி இருந்தனர் என்பது தொடங்கி இன்று என்ன செய்கின்றனர் என்பது வரை, இவர்களை தெரிந்து கொள்வதன் மூலம் இவர்களின் "சுயநிர்ணயம்" என்ன என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
நிற்க நாங்கள் சுயநிர்ணயத்தை முன்வைத்து பேசும் அதே நேரம், அதை முன்வைக்காத அவர்களுடனான இணக்கத்தைக் காண முடிகின்றது. சுயநிர்ணயம் கொண்டிருக்கக்கூடிய உள்ளார்ந்த அடிப்படைக் கூறுகளை, கீழிருந்து நடைமுறைப்படுத்தும் போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்க உறுதி பூண்டு உள்ளதுடன் அதை நடைமுறையில் தொடங்கி உள்ளனர். எமது கொள்கைரீதியாக கொண்டுள்ள விடையத்தை நடைமுறையில் முன்னெடுக்கும் இணக்கப்பாடு தான், இந்த விடையத்தில் எம்மை ஐக்கியப்படுத்துகின்றது. இது மட்டுமல்ல, இலங்கையின் வர்க்கப்போராட்டம் பற்றி பல்வேறு விடையங்கள் உள்ளடங்க, அவர்களுடன் எம்மை நெருங்கி பணியாற்ற வைக்கின்றது.
இங்கு முன்னிலை சோசலிசக் கட்சி சுயநிர்ணயத்தை முன்வைக்காமை பற்றி விமர்சனம் செய்யும் எவரும், சுயநிர்ணயம் பற்றிய லெனின் வரையறையை அடிப்படையாக கொண்டு அதை அவர்கள் முன்வைக்கவில்லை. மாறாக பிரிந்து செல்லும் உரிமையை பிரிவினையாகவும் அல்லது பிரிவினையை பிரிந்து செல்லும் உரிமையாகவும் விளக்குகின்ற புள்ளியில் நின்று தான், அவர்கள் இதைக் குற்றம் சாட்டுகின்றனர்.
சுயநிர்ணயம் என்பதை வெறும் சொற்களில் ஏற்பதும் அல்லது அதை முழுமையில் கொள்ளாது தமக்கு ஏற்ப கொண்டிருப்பதை நாம் பொதுவில் காண்கின்றோம். இதை விட முன்னேறியது எதுவெனில் சுயநிர்ணயத்தை முன்வைக்காத போதும், நடைமுறையில் இலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், இனவாதத்துக்கு எதிராகவும், இனத் தேசியவாதத்துக்கு எதிராகவும் போராடுவது.
அதுவும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் போராடுவதற்கான முனைப்பான செயல்தந்திரத்தை சார்ந்து நின்று, சுயநிர்ணயத்தை கீழிருந்து நடைமுறைப்படுத்தும் போராட்டத்தை செயல்படுத்துவதே எமது செயல்தந்திரம். இதை முன்னிலை சோசலிசக் கட்சி முன்னெடுக்க உறுதி பூண்டு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதை நாம் சார்ந்து ஊக்கப்படுத்தி பங்காளியாக செயல்பட முனைகின்றோம்.
2.முன்னிலை சோசலிசக் கட்சியின் தகுதி பற்றியது
முன்னிலை சோசலிசக் கட்சிக்கு எதிரான தமிழ் இனவாதப் பிரச்சாரம் பல முனையில் வெளிவருகின்றது. ஜே.வி.பியில் இருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சிக்கு, இன்று இனவொடுக்குமுறை பற்றி கதைக்க என்ன தகுதி உண்டு என்று கேட்கின்றனர். இப்படியும் பிரச்சாரம் தொடங்கி இருக்கின்றது. மார்க்சியம் பேசும் இனவாதிகளும், மார்க்சியம் பேசா இனவாதிகளும் இப்படியும், தங்கள் எதிர் விவாதத்தை ஆரம்பித்து இருக்கின்றனர்.
முதலில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சி, இனவொடுக்குமுறைக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக, இனத் தேசியவாதத்துக்கு எதிராக போராட முற்படுவது தவறானதா? இதை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? இதன் நோக்கமென்ன? தமிழ் இனவாதம் சார்ந்து அரசியல் செய்யும் இனவாதக் கூட்டம், தங்கள் இடதுசாரிய பித்தலாட்டங்களை தொடர முடியாத சூழல் உருவாவதைக் கண்டுகொண்ட அச்சம் தான், முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜே.வி.பி க் கடந்தகாலம் பற்றி புலம்ப வைக்கின்றது. முன்னிலை சோசலிசக் கட்சியின் சுயவிமர்சனம், இனப்பிரச்சனை தொடர்பாக மட்டுமல்ல பல்வேறு விடையங்கள் உள்ளடங்கிய பல நூறு பக்கம் கொண்ட சிங்கள நூல் வெளியாகி இருகின்றது. அதன் ஆங்கில மற்றும் தமிழ் வடிவம் வெளிவர உள்ளதை நாம் அறிகின்றோம். நாமும் கூட இதை இன்னமும் படிக்கவில்லை.
ஆனால் தொடர்ச்சியான எமது பேச்சுவார்த்தைகளை கீழ் அணிகள் மற்றும் மேல் அணிகளில் நடத்திய பின்புலத்தில், அவர்களுக்குள் நடந்து வரும் மாற்றங்கள், அதை நடைமுறையில் முன்னெடுக்கும் போராட்டங்கள், அவர்களின் நேர்மையையும் தகுதியையும் சந்தேகிக்க எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. இதை எழுப்புபவர்கள் இதற்காக நடைமுறையில் போராடியபடி தகுதி குறித்து கேட்டால், இதனைக் குறைந்தபட்ச நேர்மையாகக் கொள்ள முடியும்.
சரி நீங்கள் யார்? உங்கள் கடந்த காலம் என்ன? புலிப் பாசிசம் நிலவிய காலத்தில் உங்கள் செயற்பாட்டுத் தளம் என்ன? புலித் தேசியத்தின் பின் வால் பிடித்தது முதல் பாசிசத்தை எதிர்த்த வர்க்க அரசியலில் செயற்படாதவர்கள் இன்று, ஜே.வி.பி ஊடாக முன்னிலை சோசலிசக் கட்சிக்கு வால் கட்டிக் காட்ட முனைவது இனவாதத்தின் தொடர் வெளிப்பாடாகும்.
ஜே.வி.பிக்குள் நீண்ட நாட்களாக நடந்த போராட்டம் தான், அதன் விளைவு தான் இன்று அரசியல்ரீதியான உடைவாகும். எப்படி தமிழ் தேசியத்தில் கீழ் அணிகளில் இன்று மாற்றங்கள் நிகழ்கின்றதோ, அவ்வாறே உயர்ந்தபட்ச அரசியல் தளத்தில் குறிப்பாக ஜே.வி.பியின் உடைவுடன் நடந்து இருக்கின்றது.
இப்படித் தான் மாற்றங்கள் நிகழ்கின்றது. இதை நிராகரிப்பது, இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது, இந்த மாற்றங்கள் உருவாகிவிடக் கூடாது என்ற அரசியல் அடித்தளத்தில் இருந்து எழுவதாகும்.
அவர்கள் நடைமுறையில் செயல்படாது வெறும் வார்த்தைகள் மூலம் பேசுவதுடன் நின்று கொண்டால், அதை கேள்வி கேட்க முடியும், சந்தேகிக்க முடியும். அவர்கள் இப்போது தான் தொடங்கி இருக்கின்றார்கள். தகுதி உண்டா இல்லையா என்பதை நடைமுறையில் நிறுவ வேண்டிய புரட்சிகர நடைமுறையில் இறங்கியுள்ளனர். இந்த அடிப்படையில் நாங்களும் கூட சேர்ந்து பயணிக்க உறுதிபூண்டுள்ளோம். அனைத்தும் நடைமுறையில் தான் பரிசோதிக்க முடியும். வெறும் கருத்து தர்க்கங்களால் அல்ல என்பதே எமது நடைமுறைக் கோட்பாடாகும்.
பி.இரயாகரன்
08.10.2012