இந்தப் பேட்டி பற்றி திறந்த விவாதம் இன்று அவசியமாகின்றது. தங்கள் சொந்த இனவாதம் மூலம், மற்றவற்றை எதிர் இனவாதமாக நிறுவமுனையும் போக்கில் இந்த நிகழ்ச்சியின் கேள்விகள் இழுபட்டுச் சென்றது. கேள்விகள் அனைத்தும் சுற்றிச் சுற்றி இனவாதம் சார்ந்ததாக இருந்ததால், இந்த விடையத்தைச் சுற்றிய விரிவான அரசியல் பார்வையை குறுக்கிவிட்டது. இங்கு தம்மை "மார்க்சியவாதியாக" "இடதுசாரியாக" காட்டிக் கொண்டு, சுயநிர்ணயம் தொடர்பாக குமார் குணரத்தினத்திடம் எழுப்பிய தர்க்கம் அனைத்தும் இனவாதம் சார்ந்த தேசியவாதம் தான். லெனினின் சுயநிர்ணயம் என்பது, தேசியத்தையும் இனவாதத்தையும் எதிர்த்த வர்க்கப்போராட்டம் மூலம் தீர்வு காணவே வழிகாட்டுகின்றது. இந்த வர்க்க அமைப்பில் அல்ல. இந்த வகையில் இந்தப் பேட்டியையும், இதைச் சுற்றிய நிகழ்வுகளையும் புரிந்து கொள்வதன் மூலம் தான், முன்னிலை சோசலிசக்கட்சியின் செயற்பாட்டுத் தளத்தை நாம் சரியாக இனம் காணமுடியும்.
இந்த வகையில் குமார் குணரத்தினம் இரண்டு முக்கிய விடையங்கள் குறித்துப் பேசி இருக்கின்றார்.
1. நடைமுறையில் உள்ள இனவாதத்தையும் தேசியவாதத்தையும் எதிர்த்து உடனடியாக போராடுதல்
2. கோட்பாடு ரீதியாக இனப்பிரச்சனைகளை இனம் கண்டு தீர்வு காணப் போராடுதல்
நடைமுறையில் இனவாதத்தை எதிர்த்துப் போராடுதல்
ஒலி வடிவில் கேட்க கீழேயுள்ள பட்டனை அழுத்திக் கேட்கவும்
{play}http://www.tamilcircle.net/audio/FSLP/FSLP_KUMAR.mp3{/play}
இது இன்றைய எதார்த்தம் மீதான உடனடிப் போராட்டம். இன்று சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மீதான, எந்தக் கற்பனையுமற்ற நடைமுறைச் சாத்தியமான போராட்டத்துக்கான அழைப்பு. சொந்த மக்களைச் சார்ந்த, எதார்த்தமான உண்மையான போராட்டம். இந்த இனவாதத்தை எதிர்த்த போராட்டத்தில், கோட்பாடுரீதியான வேறுபாடுகள் தடையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரும் எந்த நிபந்தனையும் இன்றி பங்குபற்ற வேண்டிய போராட்டம். தன்னை மனிதனாக கருதும் அனைவரும் பங்காற்ற வேண்டிய போராட்டம்.
இலங்கையில் இனப்பிரச்சனையாக உள்ள விடையங்கள் மீது போராடுவதற்கான இந்த அரசியல் அழைப்பை, கோட்பாட்டு வேறுபாடுகளை கொண்டு முடக்க வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரும் தம்மளவிலும் இணைந்து போராட வேண்டிய தருணம். அனைத்து இனவாதம் மற்றும் சொந்த இனத் தேசியவாதத்தை எதிர்த்து போராட வேண்டிய காலமும் இதுதான்.
பேரினவாதம் சார்ந்து உருவான இனவொடுக்குமுறையை எதிர்த்து இன்று பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் முதன் முதலாக முன்னிலை சோசலிசக்கட்சி போராட்டத்துக்கான அழைப்பை விடுத்து இருக்கின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழல். வெறும் அறிக்கைகள் மற்றும் தலைவர்களின் கூற்றுக்கு பதில், மக்களை கீழ் இருந்து அணிதிரட்டும் போராட்டத்துக்கு அழைப்பை அவர்கள் விடுத்து இருக்கின்றனர். நாம் நீண்டகாலமாக முன்வைத்த வந்த அரசியலை இன்று நடைமுறையில் பரிசீலிக்கும் தருணம். இதுதான் மார்க்சிய லெனினிய வழிமுறை கூட. இந்தத் திட்டத்தின் உள்ளடக்கம் போதாமை குறித்து எமக்கு கருத்துகள் இருந்த போதும், அவை நடைமுறைப் போராட்டம் மூலம் மேலும் செழுமைப்படுத்தப்படும்.
இந்தச் சரியான இந்த அழைப்பை, நடைமுறையில் முன்னெடுப்பது சமூக அக்கறையுள்ள அனைவரதும் கடமையாகும். சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீதான இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கமாட்டார்கள் என்று கூறி முன்வைத்த குறுந்தேசிய அரசியலும், சிங்கள மக்களுக்கு புரிய வைக்கும் போராட்டத்தை முன்வைக்காத குறுந்தேசிய அரசியலுக்கு மாறாக, அங்கு இருந்தும் குரல் வந்திருக்கின்றது. அனைவரது சொந்த சுயவிமர்சனங்களுடனான, நடைமுறையில் போராட்டத்தில் இணைய வேண்டிய காலம் இது.
இனி நொண்டிச் சாட்டுக்கு இடமில்லை. இனவாதத்துக்கு எதிராக, இன தேசியவாதத்துக்கு எதிராக போராட வேண்டிய வரலாற்று கட்டத்தில் நாம் பயணிக்கின்றோம்.
இங்கு எமது கோட்பாட்டு வேறுபாடுகள் மூலம் இதைத் தடுக்கவோ, கொச்சைப்படுத்தவோ முடியாது. இனவாதம், இனத் தேசியவாதம் இரண்டையும் எதிர்த்துப் போராடுவது இன்று அவசியமானது. இதன் மூலம்தான் இனவொடுக்குமுறையை முறியடிக்க முடியும்.
இனவொடுக்குமுறைக்கு எதிராக இந்தியா முதல் அமெரிக்கா வரை கூலிக்குழுக்களாக செயல்படும் அரசியலுக்கு பதில், குண்டுவைக்க முனையும் அரசியலுக்குப் பதில், ஒடுக்கப்பட்ட மக்களை இதற்கு எதிராக அணிதிரட்டுவதன் மூலம் தான் இதை முறியடிக்க முடியும். கடந்த 65 வருடமாக இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டாத, அதே நேரம் இனவாதத்தின் கீழ் மக்களை அணிதிரட்டிய எதிர்மறை வரலாறுதான் எம்முன் இருக்கின்றது. அதை வைத்து மக்கள் அரசியல் செய்ய முடியாது. மாறாக கூலி அரசியல் தான் செய்ய முடியும்.
இனவொடுக்குமுறை சார்ந்த இனவாதம் சார்ந்த பாராளுமன்ற வழி மூலம் அல்லது இனவாதம் சார்ந்த இனயுத்தம் மூலம் தீர்வு காணலாம் என்று முன்வைத்த அனைத்தும், இன்று தோல்வி பெற்று இருக்கின்றது. இதற்கு மாறாக மக்களை இனவாதத்தில் இருந்து விடுவிப்பதன் மூலம், இனவாத அரசியலையும் இனவொடுக்குமுறையையும் எதிர்கொள்ள முடியும் என்ற உண்மையை நோக்கி நாம் பயணித்தாக வேண்டும்.
இப்படி இருக்க இனவாதம் சார்ந்த தீர்வு மூலம் இதை தீர்க்க முடியும் என்ற தர்க்கமும், அதற்குள் முடங்கி நின்று இதை எதிர்கொள்ளும் தர்க்கங்களும் தான், காலாகாலமாக முன்வைத்து அவை புளித்துப் போனவையாக இருக்கின்றது.
அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று சுற்றிச் சுற்றி இனவாதத்துக்குள் நின்று, புளித்துப் போன கதைகள் பேசிக்கொண்டு தர்க்கம் செய்வது தொடர்ந்து இனவாதமாகும். மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாமை போல் தான், தங்களளவில் இதற்காக போராடியவர்கள் அல்ல இவர்கள். மீண்டும் அதே புளித்துப்போன தர்க்கங்களையே முன்வைக்கின்றனர்.
ஒரு வர்க்க அரசியல் என்பதும் சரி, மார்க்சியவாதி என்று கூறிக்கொள்ளும் எவரும் சரி, இடதுசாரி என்று கூறிக்கொள்ளும் எவரும் சரி, இந்த வர்க்க அமைப்பிலான தீர்வுகளை முன்வைத்துப் போராடுவது கிடையாது. இதற்கு மாறாக இந்த அமைப்பில் தீர்வைக் கோருவதும், அதை முன்வைக்குமாறும் கோரும் அரசியல் அணுகுமுறை என்பது, அவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல என்பதையும் வர்க்கப்போராட்டத்தை மறுப்பவராகவும் இருக்கின்றனர் என்ற உண்மையைதான் இங்கு அம்பலமாக்குகின்றது. லெனினின் சுயநிர்ணயம் என்பது கூட, இந்த வர்க்க அமைப்புக்குள்ளான தீர்வை அது முன்வைக்கவில்லை. மாறாக சோசலிச அமைப்பில் தீர்வு காணவே சுயநிர்ணயத்தை முன்வைத்தார். இந்த உண்மையின் அரசியல் சாரத்தை அடுத்து தெரிந்து கொள்வோம்.
தொடரும்
பி.இரயாகரன்
05.10.2012