Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை மார்க்சிய லெனினியக் கட்சிகளில் இந்தத் தவறான போக்கு காணப்படுகின்றது. இலங்கையில் 80 வருட காலமாக ஊடுருவிய திரோஸ்கியவாதத்தின் விளைவு இது. இது எந்த இடைக்கட்டமுமின்றி கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்ற கோட்பாட்டுத் தவறை பல்வேறு மட்டத்தில் வெளிப்படுத்துகின்றது. முதலாளித்துவ நாடுகளுக்கும், முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நவகாலனிய நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்க்க ரீதியான வேறுபாட்டை மறுப்பதுடன், புரட்சியின் வேறுபட்ட கட்டங்களையும் வேறுபட்ட வர்க்க அணிச்சேர்க்கைகளையும் மறுக்கின்ற போக்கு பொதுவாகக் காணப்படுகின்றது. இது தவறான அரசியல் யுத்த தந்திரத்தை உருவாக்குகின்றது.

வர்க்கப் போராட்டம் என்பது, சமூகத்தில் சதா எழுகின்ற ஜனநாயகக் கோரிக்கைகளை கைவிட்டு செல்வதல்ல. மாறாக ஜனநாயகக் கோரிக்கையை முன்னெடுப்பதன் மூலம் தான், வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும். ஆனால் ஜனநாயகக் கோரிக்கை என்பது வர்க்கக் கோரிக்கையல்ல, அது முதலாளித்துவக் கோரிக்கை தான். வர்க்க கோரிக்கை, ஜனநாயகக் கோரிக்கை இரண்டையும் உள்ளடங்கிய போராட்டம் தான், வர்க்க நடைமுறை. இங்கு இந்த வேறுபட்ட கூறுகளை புரிந்து கொள்வதும், ஒன்றில் இருந்து ஒன்றை வேறுபடுத்தாத அதே நேரம் ஒன்றிணைக்காத போராட்டமும் தவறானது. போராட்டத்தில் ஏற்ற இறக்கத்தைக் கொண்டதும், அதேநேரம் அளவுரீதியான மாற்றத்தை மட்டுமல்ல, பண்புரீதியான மாற்றத்தையும் கூட கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இங்கு இந்த நடைமுறை அரசியலை முன்னெடுக்க வடிவங்கள் அவசியமாகின்றது. அதாவது கட்சிக்கு கீழ் அணிதிரட்ட முடியாது. வடிவத்தை நிராகரிப்பது, வர்க்கப் போராட்டத்தின் தவறுகளுக்கே வழிகாட்டுகின்றது. முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு போராடுகின்றவர்கள், அதற்குரிய அரசியல் வடிவங்களைக் கூட நிராகரிக்கின்றனர். இது எப்படி சரியாகும்?

இதில் இன்னொரு தவறான அரசியல் போக்கு காணப்படுகின்றது. ஜனநாயகக் கோரிக்கைகளையும், அதற்குரிய வடிவங்களையும் ஏற்றுக்கொள்வோர், வர்க்கமற்ற சமுதாயத்தை வந்தடையும் வேறுபட்ட இடைக்காலத்தையும் அதற்குரிய வடிவங்களையும் அங்கீகரிப்பதில்லை.

இது இன்று இலங்கையில் வர்க்க கட்சியைக் கட்டுவதிலும், வர்க்க நடைமுறையை முன்னெடுப்பத்திலும் உள்ள அடிப்படை அரசியல் முரண்பாடாக இருக்கின்றது. இந்த மூன்று கூறுகளையும், வெவ்வேறு அளவில் நிராகரிக்கின்ற திரோஸ்கிய வரட்டுவாத வர்க்கக் கோட்பாடு இலங்கையில் பல்வேறு மார்க்சிய லெனினிய கட்சிகளுக்குள் தொடர்ந்து பிரதிபலிக்கின்றது.

ஜனநாயகக் கோரிக்கை என்பது முதலாளித்துவக் கோரிக்கைதான். இதன் முரணற்ற முதலாளித்துவக் கூறுகளை பாட்டாளி வர்க்கம் முன்னெடுப்பதன் மூலம் தான், தன் வர்க்க கோரிக்கையையும் பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கின்றது. இங்கு முதலாளித்துவ கோரிக்கை என்பதால், முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையை நிராகரிப்பதல்ல. இந்தப் போராட்டத்தை சுற்றித்தான் வர்க்கப் போராட்டம் மட்டுமின்றி, வர்க்க அணிச்சேர்க்கையும் கூட தொடர்ந்து நடக்கின்றது.

இதன்போது எதிரிக்கு எதிரான பல்வேறு வர்க்கங்களின் அணிசேர்க்கைகள் உருவாகின்றது. இது தனக்காக புரட்சிகர வடிவங்களை உருவாக்குகின்றது. இந்த வடிவங்கள் வேறுபட்ட வர்க்கங்களின், வேறுபட்ட காலகட்டத்துக்குரிய அரசியல் அதிகாரக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ளத் தவறின், வர்க்கப் போராட்டத்தை வெற்றி கொள்ளமுடியாது.

பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கம் மட்டும் போராடி அடைய முடியாது. பல்வேறு வர்க்கத்தின் ஒன்றிணைந்த போராட்டம் மூலம் தான் வர்க்கப் புரட்சியை நடத்த முடியும்.

பல்வேறு வர்க்கங்கள் இந்தப் புரட்சியில் பங்காற்றும் என்பது எப்படி உண்மையோ, அது போல் பல்வேறு வர்க்கங்கள் தமது வர்க்க அதிகாரத்துக்காகவும் போராடும். ஒரு வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த விதியாகும்.

பாட்டாளி வர்க்க போராட்டத்தில் பல்வேறு வர்க்கங்கள் செயலாற்றும் என்பதை நிராகரித்து, வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்த முடியாது. வடிவங்கள் முதல் புரட்சியின் வேறு காலகட்டங்களின் வர்க்க சேர்க்கைகளை அங்கீகரிக்காது புரட்சியை பாட்டாளி வர்க்கம் நடத்த முடியாது.

பல்வேறு வர்க்க அணிச்சேர்க்கை உள்ளடங்கியது தான் புரட்சி. இந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்க தலைமையை எப்படி நிறுவுவது என்பதையும், இதன் தலைமையில் பல்வேறு வர்க்கங்களை தலைமை தாங்குவது எப்படி என்பதையும்தான், பாட்டாளி வர்க்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாட்டாளி வர்க்கம் வர்க்கமற்ற சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிச சமூகத்தை இலக்காகக் கொண்டது. ஆனால் அதை ஓரே எட்டில் அடைய முடியாது. அதற்கு முன் சோசலிச சமூகக் கட்டமைப்பை முன்வைக்கின்றது. இதன் அர்த்தம் வர்க்க அமைப்பை இன்னமும் தனக்குள் கொண்டு இருக்கின்றது என்பதுதான் இதன் அரசியல் சாரம். இந்த சோசலிச சமூகம் என்பது கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை ஓரே மாதிரி இருக்காது. அதுவும் கூட அளவுரீதியான பண்புரீதியான மாற்றத்தைக் கொண்டது.

இதை நாம் புரிந்து கொண்டால் முதலாளித்துவ புரட்சியைச் சந்திக்காத வர்க்க சமூக அமைப்பில், சோசலிச சமூகத்துக்கு முந்தைய வர்க்க அதிகார வடிவம் அவசியமாக இல்லையா என்ற கேள்வியும் தர்க்கமும் இங்கு அவசியமாகின்றது. இதை வேறுபட்ட சமுதாய வடிவங்களை புறக்கணித்து நேரடியாக சோசலிசத்தை நோக்கிச் செல்வதா? இது புரட்சிக்கு ஊறு விளைவிக்காதா?

பி.இரயாகரன்

03.10.2012

1. இனவொடுக்குமுறையையும் பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -01

2. தமிழ் சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -02

3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-03

4. புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் 04

5. இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் 05

6. புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -06

7. "கோத்தாவின் யுத்தம்- ஒரு நல்வரவு சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -07

8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -08

9. இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -09

10. இனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-10

11. தமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா ? இல்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -11

12. எம்மினத்தை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாது புரட்சியை நடத்தமுடியுமா - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -12

13. சிங்கள தேசியத்தை எதிர்க்காத சிங்கள சர்வதேசியம் மார்க்சியமல்ல - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-13

14. இன ஜக்கியம் என்பது இன நல்லுறவா! அல்லது வர்க்கப் போராட்டமா!! - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 14