Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நம் தோழரின் கவிதை நூலுக்கு விமர்சனம். முன்கூட்டியே அவருடன் உரையாடி வந்த விடையம் தான், நூல் மீதான தர்க்கரீதியான விமர்சனமாகின்றது. செம்மையான மொழியைக்கொண்டு, "நனவெரிந்த சாம்பலில்" என்ற கவிதை நூல். மொழியை முதன்மைப்படுத்தியதால், கவிதையின் உள்ளடக்கம் முதன்மை பெறத் தவறிவிட்டது. சொந்த மண்ணின் நினைவுகள் முதல் புலம்பெயர் வாழ்வு வரையான பல்வேறு பரிணாமங்கள் முதல், வாழ்வின் முரண்கள் மீதான கவிதைகள் தான் இவை. மனித நம்பிக்கைகள் முதற் கொண்டு மனித வாழ்வின் சீரழிவு வரையான பவ்வேறு விடையங்கள் கவிதைப் பொருளாக உள்ளது. மதத்தைச் சாடவும், ஆடம்பரமான வாழ்வை சாடவும் தயங்காத கவிதைகள், மனிதனை சுட்டுக் கொன்றுவிட்டு நியாயம் பேசும் தர்க்கம் வரை இக் கவிதை கேள்வி எழுப்புகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மொழியால் பேசுவதற்கு பதில், மொழிக்குள் அடங்கிப்போகுமாறு கவிதையின் உள்ளடகத்தை அடக்கிவிடுகின்றார்.

குறிப்பாக மொழிசார் கல்விக்கு இந்தக் கவிதைகள் பயன்பாட்டுத் தன்மை கொண்டவை தான்; என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. கடந்தகால தமிழ் இலக்கியங்கள் போல். சிறிய சமூகப் பிரிவினது, கல்விக்கு உதவும். அதாவது மனித வாழ்வுடன் இணையாத பட்டப்படிப்பின் மொழி அறிவுக்கு இது உதவும். இந்த வகையில் கவிதையை எழுதியவரின் நோக்கம் நிச்சயமாக இதுவல்ல. அவரின் நோக்கம் சமூகம் சார்ந்தது. இந்த வகையில் மொழி மற்றும் உள்ளடக்கம் சமூக மேம்பாட்டுக்கு பயன்படும் வண்ணம், இந்த விமர்சனத்தை செய்ய முனைகின்றேன்.

கவிதைகளின் பேசும் பொருள்கள் ஆழமானதாக இருந்த போது, கவிதைகள் மனித உணர்வுகளோடு சங்கமிக்கின்றனவா? கவிதைக்குரிய கரு, கவிதையில் ஏன் அன்னியமாகின்றது? இதன் சமூகப் பயன்பாடு என்ன? என்ற அடிப்படையில் இதைப் பார்ப்போம்.

"நனவெரிந்த சாம்பலில்" கவிதைகளை எடுத்தால், பிரதானமாக நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது.

1. மொழியும், மொழிசார்ந்த ஆளுமையும்

2. இயற்கையும், இயற்கை பற்றியதும், இயக்கம் பற்றியதும், எதார்த்தம் பற்றியதுமான ஆளுமையும்

3. கருவும், கருவுக்குரிய பொருள் வெளிப்பாட்டுத் தன்மை

4. சமூகக் கண்ணோட்டத்தை ஒட்டிய பார்வை

இப்படி நான்கு கூறுகள் ஊடாக கவிதைகளை நாம் நோக்குவோம். மொழி சார்ந்த ஆளுமை, இயற்கை மற்றும் இயக்கம் பற்றியதும் எதார்த்தம் சார்ந்த ஆளுமை கொண்ட கவிதைகள் தான் இவை. இந்த அடிப்படையில் இவை ஆளுமை மிக்கவை. மொழி மற்றும் இயக்கம் மீதான, ஒன்றிலிருந்து ஒன்று விலகாத கவிதை வரிகள். இந்த வகையில் கவிதைக்குரிய தரத்தைக் கொண்டிருக்கின்றது. சமூக அக்கறையுள்ள எமக்கு இது மட்டும் கவிதையாகி விடாது.

இன்று மொழி அறிவு மற்றும் பொருளின் இயக்கம் பற்றிய பொது அறிவற்றவர்களாக இருக்கும் போக்கும், நுகர்வு இயந்திரங்களாக மாறி அதையே அறிவாகக் கொண்டு இயங்கும் போக்கும் காணப்படுகின்றது. இப்படித்தான் சமூகம் இருக்கின்றது. மனிதன் உழைப்பு மூலம் உருவாக்குகின்ற பொருள், மனிதனை அடிமைப்படுத்தி ஆளுமை செலுத்துகின்றது. இப்படி மனிதன் தன் வாழ்வுடன் அன்னியமாகிவிட்ட நிலையில், கவிதை இந்த வாழ்வுடன் தொடர்பற்ற மொழி மற்றும் இயக்கம் பற்றிய ஒரு எதிர்மறையில் தான் பயணிக்கின்றது. நுகர்வு மற்றும் களியாட்டம் சார்ந்த தனிமனிதம் சார்ந்த சமூக வக்கிரங்கள் ஊடாக சமூகத்தை புரிந்துகொள்ளும் தனிமனித உணர்வுகள், இந்த மொழி சார்ந்த கவிதைக்குள் சங்கமிப்பதை இயல்பாகவே மறுதளிக்கும்.

தமிழினப் போராட்டம் நடந்த ஒரு நாட்டில், மொழி ஆளுமை கொண்ட மொழியறிவையும் கூட வளர்த்தெடுக்காத போராட்டத்தின் எதிர்நிலையில், இக் கவிதை நூல் சவாலாக இருக்கின்றது. சமூகத்தின் மொழி அறிவற்ற சூழலில், கவிதையின் பயன்பாடு மொழி சார்ந்து தோல்வி பெறுகின்றது.

இந்த வகையில் மக்கள் புரியும் எல்லைக்குள், கவிதைப் பயன்பாடு என்பது சாத்தியமானது. மக்களின் வாழ்வியல் முரண்பாடுகள் மீது தான், அதை கவிதைப் பொருளாக்கவேண்டும்.

இந்த வகையில் இங்கு இரண்டாவது அம்சமாக கருவுக்குரிய பொருளின் வெளிப்பாட்டுத் தன்மை, இக் கவிதைகள் மூலம் முதன்மை பெறவில்லை. மொழி சார்ந்தும், இயற்கை மற்றும் இயக்கம் பற்றியதும் எதார்த்தம் சார்ந்தும் கொடுத்த முக்கியத்துவம், கருவை மொழிக்குள் அழுத்தி சிதைத்து விடுகின்றது. மொழி கருவை விழுங்கி விடுகின்றது. கவிதையை எழுதியவரின் நோக்கம் இதுவல்ல. கரு தான் கவிதையின் சாரம் என்பதை புரிந்தளவுக்கு, அதை வெளிப்படுத்துவதில் வெற்றி பெறவில்லை. கவிதை உள்ளடக்கத்தில் தன் கவனத்தை செலுத்துவதை விட, வெளிப்பக்கத்தை அதிகமாக அழகுபடுத்தி கவர்ச்சிப்படுத்தி விடுவதால் உள்ளடக்கம் கவிதையில் இருந்து மறைந்துவிடுகின்றது. ஏன் மயக்கத்தைக் கூட ஏற்படுத்துகின்றது.

முன்றாவது அம்சம் கரு மீதான சமூகப் பார்வை குறைபாடு கொண்டது. இது கூட கருவின் உள்ளடக்கத்தை மேலும் இல்லாததாக்குகின்றது. கரு பற்றிய சமூகப் பார்வை, முரணற்ற ஜனநாயகத்தைக் கொண்ட எல்லைக்குள் நின்றுவிடுவதால், பேசப்படும் பொருள் இந்த சமூக அமைப்பில் வெறும் சடங்காக சம்பிரதாயமாக மாறிவிடுகின்றது. மனித உணர்வுகளை அது கேள்விக்கு உள்ளாக்காது, அதை உணர்ச்சியாகத் தூண்டாது, சமூக விழிப்புணர்வை ஊட்டாத ஒன்றாகி விடுகின்றது. பட்டிமன்றம் போல் செயலுக்குரிய ஒன்றாக அல்லாது கருத்தாகி விடுகின்றது.

கவிதை உள்ளடக்கம் சரியான சமூகப் பார்வை கொண்டதாக, தன்னை செயலுள்ள இயக்கத்தினுள் தன்னை மொழியாக்க வேண்டும். இது தான் இந்தக் கவிதை எழுதியவரின் நோக்கம். இதில் சந்தேகம் கிடையாது. அவர் மொழிக்கு கொடுக்கும் அதி முக்கியத்துவம், உள்ளடக்கத்தையும், செயலையும், சமூக விழிப்புணர்வையும் இல்லாதாக்கிவிடுகின்றது.

இங்கு நான்கு விடையமும் ஒருங்கு சேர்வதும், உள்ளடங்கம் துருத்திக் கொண்டு மனித உணர்வுகளை செயலை துண்டும் வண்ணம் இருத்தல் தான், கவிதையின் வெற்றி மட்டுமல்ல சமூகரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். மொழி மொழிக்காக அல்ல. கருத்து கருத்துக்காக அல்ல. அனைத்தும் மனித செயலுக்கானது. அனைத்தும் மாற்றத்துக்கானது.

இந்த வகையில் உள்ளடகத்தையும், சமூகரீதியான அரசியல் பர்வையையும் கொண்டு கவிதைகள் படைக்க வேண்டிய வரலாற்று தேவை உள்ளது. இந்தக் கவிதை நூலை அடிப்படையாக கொண்டே, இதை விமர்சனமாக கொண்டு, இதன் சமூக விளைவு என்ன என்பதில் இருந்து கற்று, எதிர்மறையில் செயலுக்கு வழிகாட்டும் கவிதைகளைக் தொடர்ந்து கோருகின்றது வரலாறு.

நாம் கவிதையின் உள்ளே சென்று இதைப் பார்ப்போம்.

போராட்டத்தின் பெயரில் மனிதத்தை சிதைத்து நடந்தவை பற்றி தொடுகின்ற கவிதை வரிகள். கவிதையின் மொழியை புரிந்து கொள்வதில் இடைவெளி கொண்டும், இந்தக் கருவை சுற்றிய பிற வரிகள் கருவை விட்டு விலகிச் செல்வதும் பொதுவாக காணப்படுகின்றது. கருவைச் சுற்றி ஏன், எதற்கு எப்படி என்ற கேள்விகளை உள்ளடக்கிய கவிதை வரிகள் தான், கருவைச் சுற்றிய மொழியாக இருந்திருக்க வேண்டும். மொழி மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில், செம்மைப்படுத்தப்பட வேண்டும். நிகழ்வை படம்பிடித்தல் மட்டும் போதாது. அந்த நிகழ்வு ஏன் நடக்கின்றது என்பதையும், அதை மாற்றுவதை நோக்கி போராடுவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தவேண்டும்.

கவிதை வரிக்குள்ளான நிகழ்வுகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதை கவிதை மொழியாக்குவதன் மூலம், அதை மீள பதிவாக்குவதன் மூலம் மாற்றம் நிகழ்வதில்லை. பதிவு செய்வதுகூட முடியாதபோது, அதைப் பதிவு செய்வதும் சரி, பதிவு செய்யக் கூடிய விடையத்தை பதிவு செய்வதும் சரி, பொதுவான சாராம்சத்தில் எந்த விளைவையும் கொடுப்பதில்லை. எதார்த்ததை வியாக்கியானம் செய்வது வேறு, அதை மாற்றுவதற்காக போராடுவது வேறு. இது மொழியிலும் கூட வேறுபடும்.

"மயிராய் மதிபடும்" என்ற கவிதையில்

"குருதி குடித்து குடித்து

பிதுர்த்துப்போன வயல் நிலங்கள் …

நிலா முற்றமும்

மீண்டும் மீண்டும்

எதிரியாய் எம்மைப் பார்த்தும்

எவரையும் மயிராய் பசளையாய் "

 

"முடிவிலி… " என்ற கவிதையில்

 

"போனதோர் பொழுதொன்றில்

இம்மரணம் நிகழ்ந்திருக்க – தன்

மனிதத்தை மட்டுமிங்கு

விதைத்து வைத்த மனிதர்களில்

மனிதமாய் ஒன்று

இது போன்று

மீண்டும் மீண்டும்

மரணிப்பாய் வந்தடைய…"

 

"நிச விழிகளிலே… !? துரோகி…" என்ற கவிதையில்

 

"துரோகி..!?

என்றதோர் பட்டம்

!.. அவன்தோளில்

தொங்கக் கண்டு

அதிர்ச்சியில் அகண்ட விழி

அடுத்த கணம் சோர்ந்து மூட…

வன்மங்கள் பேசிய வாய்க்குள்

மீண்டுமிரு வெடிகள்…!!

 

"நதியாடும் குப்பை கூளங்கள்…" என்ற கவிதையில்

 

"சமூகநிலை எங்களதை

தகர்க்கின்ற கருத்தின்றி…

தினம் ஊர்பிரிக்கும்

கொலைக் களங்கள் வாழும் வரை …

நதியாடும் குப்பை கூளத்துள்

நானுமொன்றாய்..!!!"

பெண்ணியம், சாதியம், மதம் பற்றி கவிதைகள் உதாரணத்துக்கு

"எங்கள் தேசம் 3" என்ற கவிதையில்

 

"அடுப்பெரிக்கும் பெண்களை

எத்தனை காலத்துக்கு

எரித்திடுவீர் அடுப்பினுள்ளே…!?

நிலையிது மாற்றி

புதுநிலை அறியாவிடின்

எம் மண் விடியா…

விடிந்துமா விடியா"

 

"எங்கள் தேசம்" என்ற கவிதையில்

 

"அப் பணக் குருவி

வட்டி குட்டியாகச் சீட்டாகி

சிறகடித்து

மெல்ல மெல்ல வெளியே வர

எமது நண்பன்

என்பும் தோலுமாகி

மனம் வெந்து செத்துப்போனான்

அவன் செத்தே போனான்"

 

"தலையறுத்த சூர சம்ஹாரம்" என்ற கவிதையில்

 

கீண்டுவார் தீண்ட

தீண்டாதார் பார்த்திருக்க – ஒரு

தீண்டான் தோள் கொடுத்தான்

நிமிர்ந்து தாழ்ந்த பக்கம்…!!?

உடன்…

உருண்டது அவனின் தலை

மண்ணில் சரிந்தது தீண்டானுடல்"

 

"ஆமைக் கோது மனிதன்" என்ற கவிதையில்

 

"ஆரம்ப இடத்துக்கே மீண்டும் சென்று

எங்களை நாமே

அடித்துப் புசித்த"

சாதாரண சமூகம் செய்வதை, அதன் மனிதவிரோத நடத்தையை கவிதை மறுதளிக்க முனைகின்றது. இதுதான் கவிஞரின் நோக்கம் கூட. ஏன் மறுதளிக்க வேண்டம் என்பதை உணர்வுபூர்வமாக வாசிப்பவரை தூண்டி அதன் மூலம் மறுதளிக்காத வரை, இது சமூகத்தின் உள் ஓட்டமாக தனக்குள்ளான முரண்பாடாக அதுவே இயல்பான ஒரு உப்புச்சப்பற்ற சம்பிரதாயமாகி விடுகின்றது.

சமூகத்தை மாற்ற சரியான விடையங்களை கவிஞர் அணுகுகின்றார், ஆனால் சரியான தத்துவம் மற்றும் நடைமுறையுமின்றி வெற்றியைப் பெற முடியாது. எமது தேசியப் போராட்டம் எப்படி மக்களைச் சார்ந்து நிற்கும் சரியான தத்துவம் மற்றும் நடைமுறையுமின்றித் தோற்றதோ, அதுபோல் கவிதையாகிவிடக் கூடாது. இதுதான் கவிதை நூல் மீதான விமர்சனமாக கொண்டு படைப்பாற்றலை மக்களுக்காக வளர்த்துக் கொள்ளுமாறு தோழமையுடன் விடுக்கும் வேண்டுகோளாகும்.

பி.இரயாகரன்

15.09.2012