தமிழக இனவாதிகளின் இனவெறியாட்டத்தைத்தான், சிங்கள பேரினவாதமும் காலகாலமாக செய்து வருகின்றது. சுரண்டும் வர்க்கம் சார்ந்த இந்த இனவெறிக் கண்ணோட்டம், இங்கு அரசியல்ரீதியாக வேறுபடுவதில்லை. இலங்கையில் நடந்த இனவழிப்பு யுத்தத்துக்கு காரணம் சிங்கள மக்களா!? ஆளும் சுரண்டும் வர்க்கமா? கூறுங்கள்.
சிங்கள மக்களைக் குற்றவாளியாக்குகின்ற அரசியல், தமிழகத்தில் நாசிய இனவெறி அரசியலாக வெளிப்படுகின்றது. தமிழகத்துக்கு வருகை தந்த இலங்கை அரச ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும் மற்றும் இராணுவத்துக்கும் எதிரான போராட்டங்கள், இன்று அப்பாவி சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறியிருக்கின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் மீதான, தமிழினவெறியாக மாறி இருக்கின்றது. இது மக்களை இனம் சார்ந்த எதிரியாகக் காட்டுகின்றது. இது நாசிய பாசிச கொள்கையும் நடைமுறையுமாகும்.
இலங்கை ஆளும் வர்க்கம் இந்தியா சார்ந்த பொருளாதார நலனுக்கு எதிராக போராடாத இந்த இனவெறி அரசியல், அதன் பிரதிநிதிகளை குறிவைத்து அவர்களை எதிரியாக காட்டியது. இன்று சிங்கள மக்களை எதிரியாக காட்டி, அவர்களுக்கு எதிரான நாசி இனவெறியை தூண்டி வருகின்றது.
இந்த இனவெறி நடத்தையைக் காட்டி, இலங்கையில் தமினுக்கு எதிரான பேரினவாத இனவெறிப் பிரச்சாரத்தை தொடருகின்றனர். இலங்கை அரசு எதை விரும்புகின்றனரோ, அதை தமிழக இனவெறியர்கள் செய்கின்றனர். சிங்கள மக்களை இனரீதியாக சிந்திக்குமாறு, தமிழக தமிழினவாதிகள் தங்கள் நடத்தைகள் மூலம் தூண்டுகின்றனர். அதைப் பேரினவாதம் தனது பிரச்சாரத்துக்கான அரசியல் கூறாக்கிவிடுகின்றது.
பேரினவாத அரசும், ஆளும் வர்க்கமும் தான் இலங்கையில் தமிழினவழிப்பில் ஈடுபட்டதே ஓழிய, சிங்கள மக்களல்ல. தமிழினம் யுத்தம் மூலம் அழிக்கப்பட்ட போது, சிங்கள மக்கள் மௌனம் காத்தார்கள் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. இலங்கையில் யுத்தத்தை நடத்தியதே இந்தியா தான். இப்படி இருக்க, இதை எதிர்த்து தமிழகத்தில் போராடவில்லை என்று குற்றஞ்சாட்டி, தமிழக மக்களை எதிரியாக்கத்தான் முடியுமா? சொல்லுங்கள்.
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை நாசிகளுக்கு நிகராக புலிகள் இனச் சுத்திகரிப்பு செய்த போது, தமிழ் மக்கள் இதை எதிர்க்கவில்லை என்று குற்றஞ்சாட்ட முடியமா? இப்படிக் கூறி முஸ்லீம் மக்கள் தமிழ்மக்களைத் தாக்கினால் அது எப்படி நியாயமாகும்? சொல்லுங்கள்.
இது போல் சிங்கள மக்களை தமிழகத்தில் வைத்து விரட்டுவது எப்படி நியாயமாகும்? இது நாசிய இனவெறியாகும்.
இலங்கையில் தமிழ்மக்கள், மற்றைய இன ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவுடன் தான் தங்கள் மீதான இனவெறியை எதிர் கொள்ளமுடியும். தனித்து தனிமைப்பட்டு அல்ல. அதாவது இது போன்ற புலிகளின் பாசிச நாசிய இனவெறிக் கொள்கையைக் கொண்டு, தன் சொந்த இனத்தைத்தான் அழிக்கமுடியும்;.
பேரினவாதிகளின் அதே இனவெறிக் கொள்கையைக் கொண்டு, சிங்கள மக்களை எதிரியாக காட்டும் தமிழக இனவாதிகள், தங்கள் வக்கற்றுப்போன சொந்த அரசியல் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவெறியைத் தூண்டிவிடுகின்றனர்.
இதற்கு மாறாக தமிழகம் வரும் சிங்கள மக்களை வரவேற்று, அவர்களுக்கு இலங்கை அரசின் இனவெறிக் கொள்கையை தோழமையுடன் புரியவைக்க வேண்டும். மாறாக நாசிய பாணியில் நாசிய இனவெறி, எதிர்மறையாக தமிழனுக்கு எதிரான இனக் கண்ணோட்டத்தை பிஞ்சு மனங்களில் திணிக்கின்ற வக்கிரத்தை தான், தமிழகத்தில் தமிழினவாதிகள் தங்கள் அரசியலாக்குகின்றனர்.
"புரட்சி" அம்மாவும், "புரட்சி" கலைஞரும் இந்த அரசியலை சார்ந்து, இலங்கையில் இனவெறியை தூண்டும் வண்ணம், அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிரான தங்கள் நடத்தைகள் மூலம் அதைத் திணிக்கின்றனர்.
இலங்கையில் யுத்தம் நடந்த காலத்திலும் சரி, தொடர்ச்சியான பாரிய இனப்படுகொலைகள் நடந்த போதும் சரி, பரஸ்பரம் அப்பாவி மக்கள் சேர்ந்துதான் வாழ்ந்தார்கள். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தமக்கு இடையில் இனவாதம் பாராட்டி அதன் மூலம் பரஸ்பரம் ஒடுக்கவில்லை.
அரசு இயந்திரமும், ஆயுதமேந்திய குழுக்களும், கட்சிகளும் தான் இனவெறியுடன் இயங்கின. மக்கள் அங்குமிங்குமாக இனம் கடந்து சேர்ந்து தான் வாழ்ந்தார்கள், தொடர்ந்து வாழ்கின்றனர். இதை இனவாதிகள் விரும்பவில்லை என்பதை தான் தமிழக இனவாதிகள் தங்கள் நடத்தை மூலம் நிறுவுகின்றனர். இந்த இனவாதத்தை அரசியல்ரீதியாக முறியடிப்பதன் மூலம் தான், இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கமுடியும். இதைத்தான் மனித வரலாறு காட்டுகின்றது.
பி.இரயாகரன்
04.09.2012