இலங்கையை மத மோதலுக்குள் கொண்டுவருவதன் மூலம், மதப் பெரும்பான்மை சார்ந்து மக்களை பிளந்துவிட முனைகின்றனர் பாசிட்டுகள். இன்று இன, மதப் பெரும்பான்மை சார்ந்து, மூலதனத்தின் ஆட்சியை இலங்கையில் தக்கவைக்கவும் விரிவுபடுத்தவும் முனைகின்றனர். இந்த வகையில் மூலதனத்தின் ஆட்சி வடிவங்கள், பாசிசம் மற்றும் ஜனநாயகம் என்ற இருவேறு ஆட்சி வடிவங்களைக் கொண்டது. முரணற்ற ஜனநாயகத்தை பற்றிய அதன் இரு வேறு அணுகுமுறை தான், இதை வேறுபடுத்துகின்றது. சமூகத்தை வர்க்கரீதியாக பிளந்து ஆளுவது முதலாளித்துவ ஜனநாயகம். பாசிசம் இதை மட்டும் கொண்டு ஆளுவதில்லை, மாறாக சமூகத்தை இனம் மதம், நிறம் .. என்ற வேறுபாட்டைக் கொண்டு, அவர்களுக்கு இடையில் மோதலை தூண்டி ஆளுகின்றது.
பேரினவாதம் மூலம் மக்களைப் பிரித்து ஒடுக்கிய அரசு, யுத்தத்தின் பின் மதவாதம் மூலமும் மக்களை பிளந்து ஒடுக்கத் தொடங்கியிருக்கின்றது. வழிபாட்டு முறைமை சார்ந்து, வழிபாட்டு உரிமையைக் கூட இன்று மிரட்டி மறுக்கின்றது. சிறுபான்மை மதவழிபாட்டு இடங்களை தாக்குவதும், அதை அழிப்பதும் அங்குமிங்குமாக நடந்தேறுகின்றது. மத வழிப்பாட்டு இடங்களை, அந்த வழிபாட்டுக்குரிய மக்கள் வாழாத இடங்களில் கூட நிறுவுகின்றது. ஒரு அரச இயந்திரம், இதை முன்னின்று செய்கின்றது. இஸ்ரேலிய பாணியில் சிறுபான்மை இன மத மக்கள் வாழ்ந்த பிரதேசங்களையும், அடையாளங்களையும் திட்டமிட்டு அழிக்கின்றது. இதை விட மத நிந்தனைச் சட்டத்தைக் கொண்டு, தான் அல்லாத அனைத்தையும் தண்டிக்கின்றது.
இப்படி சிறுபான்மை இனம் மற்றும் மதம் மேலான தாக்குதலை இலங்கை முழுக்க நடத்துகின்றது. மதத்தை மறுக்கும் மனிதனின் அறிவு சார்ந்த உரிமையையும், அது தொடர்பாக மக்களுக்கு கருத்துச் சொல்லும் சுதந்திரத்தையும் கூட மறுக்கின்றது. அதை மத நிந்தனைக்குரிய சட்டம் ஊடாக தண்டிக ;கின்றது. இப்படி பாசிட்டுகள் மூலதனத்தின் ஆட்சியை இன மத முரண்பாடு மூலம் இலங்கையில் முன்னிறுத்துகின்றனர்.
சிறுபான்மை மீதான இன மத தாக்குதல்கள் மூலம், அது சார்ந்த ஜனநாயக விரோத விழுமியங்களைக் கொண்டு, மக்களைப் பிரித்தாள முனைகின்றது. அரசு மட்டும் இதைச் செய்யவில்லை, பெரும்பான்மையைச் சேர்ந்த மக்களை தன் பின்னால் அணிதிரட்டிக் கொண்டு இதைச் செய்ய முனைகின்றது.
பெரும்பான்மையை அரசு இன மத ரீதியாக அணிதிரட்ட முனைவதுபோல், சிறுபான்மையை அணிதிரளுமாறு நிர்ப்பந்திக்கின்றது. மக்கள் இன மதம் கடந்து அணிதிரள்வதை தடுக்கும் அரசின் இந்த செயற்பாட்டுக்கு நோக்கத்துக்கும் ஏற்ப, சிறுபான்மை அதே அரசியல் தளத்தில் தன்னைக் குறுக்கிக் கொள்ளுகின்றது.
இப்படி அரசின் இந்தச் செயலுக்கு எதிராக
1. அரசின் அதே வழியில் தம்மையும் அணிதிரட்டிக் கொள்ளும் குறுகிய போக்கு காணப்படுகின்றது? (இது தான் அரசின் இலக்கு)
2. இன மத ஜக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு எதிராக மக்கள் தங்களை அணிதிரட்டிக்கொள்வது
இப்படி இரண்டு நேரெதிரான வழிகளில்; இது இன்று அணுகப்படுகின்றது. ஒன்று தனக்குள் தான் குறுகிக் கொள்வது. மற்றது மக்களை தம்மை முன்னிறுத்தி அணிதிரட்டுவது.
நாம் இங்கு அரசின் நோக்கத்தை இனம் காணவேண்டும்;. அரசு இன மத மோதலை தூண்டுவதன் மூலம், மூலதனத்தின் சுரண்டலைப் பாதுகாத்து அதை அதிகரிக்க வைப்பதையே அரசியல் நோக்காகக் கொண்டு செயல்படுகின்றது. இதை நாம் தடுப்பதன் மூலம் தான், இதற்காக இனம் மதம் கடந்த ஐக்கியத்தை முன்னிறுத்திக் கொள்வதன் மூலம், அரசின் நோக்கை முறியடிக்க முடியும்;.
இந்த அடிப்படையில் "வேள்வியை" தடுத்த அரசின் நோக்கத்தை நாம் இனம் காணவேண்டும்.
மிருகபலி வேள்விமுறையை எதிர்க்கும் இந்தக் கூட்டம் தான், மனித வேள்வியை நடத்தியது. மிருக வதையை எதிர்க்கும் இந்தக் கூட்டம், மனித வதையை எதிர்ப்பதில்லை. இப்படி மனிதனை தொடர்ந்து வதைக்கவும், பலியிடவும் கோருவதுதான், மிருக பலியிடலை எதிர்க்கின்ற அரசியலாகும். மிருகபலிக்கு பதில் மனித பலி, மிருகவதைக்கு பதில் மனித வதை. இதுதான் அரசின் கொள்கை. இந்து பௌத்த அடிப்படைவாதிகளின் கொள்கையும் இதுதான்.
இந்த வகையில்
1.மனித வதையையும், மனித பலியிடலையும் எதிர்த்து யார் போராhடுகின்றனரோ, அவர்கள் தான் மிருகவதையையும் மிருக பலியிடலையும் எதிர்க்கமுடியும்.
2.மிருக பலியிடல் மூட நம்பிக்கை என்றால், அனைத்து மத மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து குரல் கொடுத்துதான் போராடவேண்டும்.
3.மிருக பலியிடல் காட்டுமிராண்டித்தனம் என்றால், பணம் சம்பாதிக்கும் நவீன வழிபாட்டையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
4.வழிபாடு என்பது தனிபட்ட உரிமைக்கும் அப்பால், அரசும் மதநிறுவனங்களும் அதில் தலையிடுவதை எதிர்த்துப் போராட வேண்டும்.
5.தங்கள் வழிபாட்டு முறையை முன்னிறுத்தி, மற்றொரு வழிபாட்டு முறையை மறுப்பதை எதிர்த்துப் போராட வேண்டும்
இப்படி முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இதை இனம் கண்டு அணுகுவதும், பாசிசத்தின் அரசியல் உட்கூறுகளை இனம்கண்டு போராடுவதுமே, இன்றைய எமது அரசியலாக தெரிவாக இருக்க முடியும்.
பி.இரயாகரன்
02.09.2012