அண்மையில் "விடியல் சிவா" மரணம் பற்றி எமது அஞ்சலியில், நாம் அரசியல்ரீதியான தவறொன்றை இழைத்திருந்தோம். "சமூக விடுதலைக்கு உரமூட்டிய விடியல் சிவா மரணித்து விட்டார்." என்ற எமது அஞ்சலிக் குறிப்பு, மக்களை அணிதிரட்டும் நடைமுறையை நிராகரித்த ஒருவருக்கு பொருத்தமற்றது. சமூகத்துடன், அதன் வர்க்கப் போராட்ட நடைமுறையுடன் இணைத்துக் கொள்ளாத கருத்துக்கள் தொடங்கி, சமூகத்துடன் இணையாத தனிநபர் செயல்பாடுகள் வரை, புரட்சிகரமான சமூக நடைமுறையை அவை கொண்டிருப்பதில்லை.
மார்க்சிய நூல்களை அச்சிடுவதால் மட்டும், ஒருவர் சமூக விடுதலைப் போராளியாகி விட முடியாது. ஒருவர் மார்க்சிய கருத்தைக் கொண்டு இருப்பதால், தனக்கென்று கொள்கைகளைக் கொண்டு இருப்பதால், அவர் மார்க்சியவாதியாகி விடுவதில்லை. இப்படி கருத்தை கொண்டு இருப்பதால், கருத்தை அச்சிடுவதால், ஒருவர் புரட்சியாளன் ஆகிவிடுவதில்லை.
இங்கு அச்சிடும் நோக்கம், இதைத் தீர்மானிக்கின்றது. கருத்துக்கள் சந்தை சார்ந்த வியாபாரமாக உள்ள சூழலில், மார்க்சியக் கருத்தும் இலாபம் தருமென்றால் அந்த நூல்களை அச்சிடுகின்றனர். இங்கு கருத்தும் சரி, அந்தக் கருத்தை அச்சிடுவதால் அது நடைமுறையாகி விடுவதில்லை.
மேற்கில் சந்தை சார்ந்து, மார்க்சிய நூல்களை அச்சிடுவதை நாம் காணமுடியும். மேற்கில் அச்சிட்டவரை யாரும் புரட்சியாளன் என்றோ, மார்க்சியவாதியென்றோ, முற்போக்குவாதி என்றோ கூறுவதில்லை. மேற்கத்தைய பல்கலைக்கழகங்களில் மூலதனத்தின் சில பாகங்கள் கற்பிக்கப்படுவதால், அது மார்க்சிய கவ்வியாகிவிடுவதில்லை.
தென்னாசியாவில் கருத்துகள் மட்டும் கொண்டவர்களையும், வெளியீட்டாளர்களையும் புரட்சியாளராக அடையாளப்படுத்தும் பொதுப்போக்கு காணப்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத இந்த நாடுகளில், நூல் விற்பனைச் சந்தைக்கும் புரட்சிகர நடைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டை குழப்புகின்ற இந்தப் போக்கு காணப்படுகின்றது. இந்த தவறையே நாங்கள் இழைத்தோம். எம்மைச் சுற்றிய நடைமுறையை மறுத்த, கருத்து சார்ந்த செல்வாக்கு தான் எமது தவறுக்கான மற்றொரு காரணமாகும்.
நடைமுறையைக் கோராத, நடைமுறையில் ஈடுபடாத கருத்துகள், அது சார்ந்த செயல்பாடுகள், சமூகம் சார்ந்ததாகவோ புரட்சிகரமானதாகவோ இருப்பதில்லை. கருத்து கருததுக்காகவே என்ற அடிப்படையில், கருத்து தனிநபர் இருப்புக்கானதாக வெளிப்படுகின்றது. இது கருத்துக்கான நடைமுறையை மறுப்பதாகவும் இருக்கின்றது. இப்படி இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நடைமுறையைக் கொண்டதாகவே எதார்த்தத்தில் செயல்படுகின்றது.
நடைமுறையைக் கொண்ட சமூக செயல்பாடு, கருத்தை மட்டும் கொண்ட தனிநபர் சார்ந்த நடைமுறையும் முரண்பாடானது. இது ஒன்றையொன்று மறுக்கின்றது. தனித்துவமான தன் இருப்புக்காக ஒன்றையொன்று மறுத்து முன்னேறுவதில் தான், இது தனக்குள் போராட்டத்தை நடத்துகின்றது.
சமூகத்துடன் இணைந்த செயற்பாட்டை மறுப்பவர்கள், கருத்தை கருத்துக்காக முன்னிறுத்தி அதையே புரட்சிகரமானதாக காட்டுகின்றனர். இந்த செயற்பாட்டை புரட்சிக்கான தங்கள் "ஜனநாயக" உரிமையாக காட்டும் போலித்தனத்தின், தொடர்ச்சியான அரசியல் செல்வாக்கை அம்பலப்படுத்த வேண்டும்.
எம் கருத்துக்கள் நடைமுறைக்கே என்பது மட்டுமல்ல, நடைமுறை என்பது கருத்து சார்ந்த அமைப்பாகவும் இருக்க வேண்டும். இந்த அமைப்பும் கருத்தும் சமூகத்துடன் இணைந்து கொண்டு நடைமுறையில் போராடுவதும் தான், புரட்சிகரமான அரசியல் செயல்பாடாகும்.
பி.இரயாகரன்
31.08.2012